Thursday, February 9, 2017

Priyadarshini Rajasekar

Priyadarshini Rajasekar
பாரதி கிருஷ்ணகுமாரின் 'அப்பத்தா' சிறுகதை தொகுப்பில் 'அம்மாவும், அந்தோன் சேக்கவும்' வாசிக்க ஆரம்பித்ததும் முதல் வரியே பல நிகழ்வுகளை நினைவூட்டியது. "அம்மா ஒருமுறை கூட, தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது." என்னும் வரி தந்த தாக்கம் தான் அது.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்திருந்த சமயம் அது. அதற்கு ஒரு வாரம் முன்னரே அம்மாவுக்கு இடக்கையைத் தூக்க முடியாத அளவிற்கு வலி. வலி முதுகுப்புறமும் வலக்கையின் மேலேயும் கூட ஆக்கிரமித்து இருந்தது. அதுவரை எல்லா வேலைகளையுமே செய்யும் அம்மாவுக்கு, கத்தியைக் கூட பாறாங்கல்லை எடுப்பது போல் சிரமமாகிவிட்டது. சித்தா மருத்துவமனையில் அட்மிட் ஆக சொல்லியும் வேண்டாமென வந்துவிட்டாள்.
அந்த சமயங்களில் நான், தீனா, அப்பா என மாற்றி மாற்றி சமையல் வேலைகளைப் பங்கிட்டு செய்வோம். "எல்லா வேலையும் நான் தான் செய்ய வேண்டியிருக்கு.." என புலம்பும் அம்மாவுக்கு, "அப்பாடி!" என்றே நியாயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மாறாக உடல் வலியை விட, "இவங்க எல்லாம் வேல செஞ்சு நான் சாப்பிடுற நிலைமை வந்துருச்சே!" என்னும் மனவலி தான் அவளுக்கு அதிகமாக இருந்தது.
"கிட்சனுக்குள் வந்தா தானா எது எது எந்த இடத்துல இருக்குனு தெரியும்" என சொல்லும் அம்மா கிட்சனில் நுழைய அனுமதி தருவதே இல்லை. தந்தாலும், "நானே செஞ்சுக்குறேன். என்னைய தொந்தரவு செய்யாதே!" என பல சமயங்களில் விரட்டிவிடப்பட்டிருக்கிறேன்.
என் அம்மா மட்டுமல்ல, இந்திய அம்மாக்கள் எல்லோருமே கதையில் சொல்வதைப் போல அப்பாவின் அதிகாரத்தின் அச்சாகவே இருக்கிறார்கள்; சில சமயங்களில் குடும்பத்திலுள்ள அனைவர் அதிகாரத்தின் அச்சாகவும் வலம் வருகிறார்கள்.
"கதை முடிந்ததும், எல்லோரும் மௌனமாக கலைந்து போனார்கள். நான் மீண்டும் அம்மாவிடம் வந்தேன். இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம்."
-Bharathi Krishnakumar

No comments:

Post a Comment