Wednesday, May 14, 2014

அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை

முந்தைய பதிவில் , ஆனந்த விகடன் வாசகர்களுக்குச் சொன்ன ஒரு கதையை அடுத்த சந்திப்பில் சொல்லுவதாக எழுதி இருந்தேன் . இதோ அந்தக் கதை .
என் சொந்தக் கதையில்லை . எங்கோ படித்தது .என் மொழியில் உங்களுக்குச் சொல்லுகிறேன் 

அழகிய தோற்றமுடைய  ஒரு பச்சைக்கிளி , கரிய நிறங் கொண்ட ஒரு காகத்தைக் கண்டதும் கேலி பேசத் துவங்கியது .

" என்னைப் பார் ...என் அழகைப் பார் ... என் வண்ணங்களைப் பார் ...இந்தக் கழுத்தில் கூட ஒரு அழகிய வண்ணமான வட்டம் ஒளிர்வதைப் பார் ...நீயேன் இப்படிக் கருப்பாய் , காணச் சகிக்காமல் இருக்கிறாய் " என்று மனம் புண்படப் பேசியது ,

எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தது காகம் .

சில நாட்கள் சென்றன .

காட்டுக்குள் வந்த வேடன் அந்தக் கிளியைப் பிடித்துக்கொண்டு  போய் ஒரு கிளி ஜோசியக்காரனிடம்
விற்றான் .

ஜோசியக்காரன் கிளியின் நாக்கில் வசம்பைத் தேய்த்து , மனிதர்களின் மொழியைப் பேசப் பழக்கினான் . "வாங்க ,,, வணக்கம் " என்று மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , மனிதர்களின் தரும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது கிளி . உணவு கொண்டு வந்த ஜோசியக்காரனின் மனைவி , கொஞ்சம் உணவை எடுத்து , "கா... கா " என்று  உணவை ஏற்குமாறு காகத்தை அழைத்தாள் .

காகம் வந்தது . உணவை உண்டது .கிளியைப் பார்த்து கனிவுடனும் , பரிவுடனும் சொன்னது ...

" ஒரு கூண்டில் அடைபட்டு , உன் மொழியை மறந்து மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , அவர்கள் தரும் உணவை உண்டு வாழ்கிறாய் .நான் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கிறேன் . மனிதர்கள் எனது மொழியைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் .

உன்னை ஒருவன் சிறைப் பிடித்த போது , உன் இனத்தவர்கள் உன்னைப் காப்பாற்றாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள் . ஒரு காகத்தை ஒருவன் சிறைப் பிடிக்க வந்தால் பிற காகங்கள் அதை அனுமதிப்பதில்லை . கத்திக் கூக்குரல் எழுப்பி , பிடிக்க வந்தவனைக் கொத்தி விரட்டி விடும் . அதையும் மீறி ,  அகப்பட்ட ஒரு காகம் எந்தக் கூண்டிலும் மனிதர்கள் தரும் உணவை உண்டு , மனிதர்களின் மொழி பேசி உயிர் வாழ்வதில்லை . வடக்கிருந்து இறந்து போகும் காக்கை .

அதனால் தான் காக்கைகள் தங்கள் மொழி பேசிக் கொண்டிருக்கின்றன .அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை "

Tuesday, May 13, 2014

மீண்டும் ஆனந்த விகடனில் ...

 ஆனந்த விகடன்  வழங்கும்  இன்று ஒன்று நன்று  என்னும் சிறப்பு நிகழ்ச்சியில், மூன்றாம் முறையாகப் பேசும் வாய்ப்பு அமைந்தது .

ஏப்ரல் பதினேழாம் தேதி முதல் இருபத்திமூன்றாம் தேதி வரை ஒலிபரப்பானது . நிறைய நண்பர்கள் கேட்டு விட்டுப் பாராட்டினார்கள் .

ஒரு கூட்டத்துக்குப் பேச அழைத்த போது வின்சென்ட் சர்ச்சில் சொன்னாராம் ."ஒரு மணி நேரம் பேச வேண்டுமென்றால் இப்போதே வருகிறேன் . ஐந்து நிமிடம் பேச வேண்டுமென்றால் அடுத்த வாரம் வருகிறேன் " என்று .

அனுபவ உண்மை . செறிவாக , தெளிவாகக் குறைந்த நேரம் பேசுவது கடினமான காரியம் தான் . அதிலும் விகடனில் மூன்று நிமிடம் தான் பேச அனுமதிப்பார்கள் . ஏழு நாட்களுக்குப் பேச வேண்டும் .

சவாலான பணி தான் எனக்கு . மற்றவர்களுக்கு எப்படியோ , எனக்கு அது கடினமான பணி தான் . கடினமான பணிகளைச் செய்து பார்க்கும் விருப்பம் எப்போதும் இருப்பதால் , ஒப்புக் கொள்ளுகிறேன் .

இந்த முறை பேசியதில் ஒரு காகமும் , கிளியும் பேசிக் கொண்ட , நான் படித்த கதை ஒன்றை , விகடன் வாசகர்களுக்குச் சொன்னேன் .
அந்தக் கதையை உங்களுக்கும் சொல்லுகிறேன் ... அடுத்த சந்திப்பில் .

Wednesday, May 7, 2014

நான் என்பதே பன்மை

28.12.2013
சனிக்கிழமை
சென்னை .

கவிக்கோ .அப்துல் ரஹ்மான் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழாவும் , கவிக்கோ அவர்களின் முழுமையான கவிதைத்தொகுப்பு வெளியிடும் நிகழ்வும் ஒரு சேர நடந்தது .

அவரது கவிதைகள் குறித்துப் பேசும் பாக்கியம் எனக்கு .

மிக நேர்த்தியாகப் புத்தகத்தை வடிவமைத்து , அச்சிட்டு , அழகுறக் கொண்டு வந்திருந்தார் நேஷனல் பதிப்பக உரிமையாளர் , நான் ஷாஜி என்று பிரியமுடன் அழைக்கும் ஜனாப் . ஷாஜஹான் .

ஒரு குழந்தையின் குதூகலம் , கோபக்கார இளைஞனின் சீற்றம் , மனமுருகும் காதலனின் தவிப்பு , முதிர்ந்த ஞானியின் மேதமை என்று எல்லாம் காணக் கிடைக்கிற பொக்கிஷம் அந்தத் தொகுப்பு .

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் ஒப்பற்ற இடம் கவிக்கோவுக்கு உண்டு .குறைந்த சொற்களில் மிக விரிந்த பொருள் பேசும் ஆற்றல் கொண்டவை அவரது கவிதைகள் மட்டுமே  . "கூறியது கூறல் " என்னும் குற்றம் கடந்த படைப்புகள் .
இருண்மையான சொற்கள் இன்றி எழுதப்பட்ட போதும் , தூய்மையான பக்தனுக்கு மட்டும் காட்சி தரும் கடவுள் தன்மை கொண்டது அவரது எழுத்துக்கள் .

வாழ்வை , காதலை , மானுடத்தை நேசிக்காத ஒருவருக்கு அவரது படைப்புகளை உணர்ந்து கொள்ளுவது கடினம் . மாசற்ற ஒரு வாசகனுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தரும் வல்லமையும்  அவைகளுக்கு உண்டு .

நான் அவரிடம் கற்றுக் கொண்டவன் . எனது  படைப்புலக ஆசான்களில் ஒருவராக கவிக்கோ எப்போதும் இருக்கிறார் . நன்றி வாப்பா .

எல்லையற்ற தமிழ்க்கவிதையின் எல்லைகளை அறிந்து கொள்ள விரும்புகிற எவராயினும் , கவிக்கோவை வாசிக்கத்தான் வேண்டும்

தேர்தல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதினார்

"புறத்திணைச் சுயம்வர 
மண்டபத்தில் 
போலி நளன்களின் கூட்டம் 
கையில் மாலையுடன் 
குருட்டுத் தமயந்தி "

இரண்டு காதல் கவிதைகள்

"உன்னைக் காதலித்ததற்க்குப் பதிலாக 
மரணத்தைக் காதலித்திருக்கலாம் .
அது 
வாக்குத் தவறுவதேயில்லை "

"உன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் 
பாதையும் உன்னையே அடைகிறது "

இன்னும் ஒன்றிரண்டு கவிதைகள்


"புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் "

" தினங்களைக் கொண்டாடுவதை விட்டு 
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?"

"வந்த போது 
உடலோடு வந்தோம் 
போகும் போது 
அதையும் விட்டு விட்டுப் 
போக வேண்டும் ."

"நான் என்பதே பன்மை " 

இதற்கு மேலும் வாழ விரும்புகிறவர்கள் , வாங்கிப் படித்துப் பயனுற வேண்டும் .

நேஷனல் பப்ளிஷர்ஸ் ,
2.வடக்கு உஸ்மான் சாலை
தி . நகர் , சென்னை 600 017
044 28343385
94440 47786Tuesday, May 6, 2014

வள்ளுவனின் வானுயர் சிறப்புபுதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவியல் துறையும் , சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய "உலகமயமாக்கல் சூழலில் திருக்குறளின் பொருத்தப்பாடு குறித்த தேசியக் கருத்தரங்கில, நிறைவு விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பு அமைந்தது .

இந்தக் காலத்திற்கும் வள்ளுவன் வழி காட்டுவதை , உலகமயமாக்கல்  என்னும் சர்வதேச வர்த்தகச் சூழலை ,வள்ளுவன் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பதை , ஒன்றரை மணி நேர உரையில் விவரித்தேன் .

விடுமுறை நாளாக இருந்தும் அரங்கம் நிறைந்து இருந்தார்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் . நன்கு ஆழ்ந்து , கவனித்துக் கேட்டார்கள் .

பேசியதை எல்லாம் இங்கு எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது ..ஆனால் ,
அதற்குரிய வாய்ப்பு இப்போது எனக்கில்லை .ஒரு சிறு நூலாக எழுதும் அளவுக்குச் செய்திகள் இருப்பதாக எல்லோரும் சொன்னதும் ஒரு காரணமாக இருக்கலாம் .

மறு வாசிப்பில் , வள்ளுவனின் வானுயர் சிறப்பை நான் உணர்ந்தேன் என்பதைச் சொன்னால் போதும் ... இப்போதைக்கு .


Thursday, January 9, 2014

விகடனுக்கு நன்றி

ஆனந்த விகடன் வழங்கும் "இன்று ஒன்று நன்று " என்னும் நிகழ்வில் இரண்டாம் முறையாகப் பேசி இருக்கிறேன் .

இன்றைய ஒலிபரப்பில், அண்மையில் அமரரான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்துப் பேசி இருக்கிறேன் .வாய்ப்பு இருக்கிறவர்கள் கேளுங்கள் .

நான் எப்போதும் இதனைக் கேட்கிற வழக்கம் உடையவன் .
நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புள்ள பகுதி .

மூன்று நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டுமென்பது அசலான சவால் . எனவே அது பெரும்பாலும் சுண்டக் காய்ச்சிய பால் போல செறிவாக , சுவையாக அமைந்து விடுகிறது .

விகடனுக்கு நன்றி .


Monday, December 23, 2013

வெண்மணி நினைவேந்தல்

நாற்பத்தி ஐந்து  ஆண்டுகள் ஆகி விட்டன . இன்னும் கலையாத கண்ணீரும் , துயரமும் அந்தப் பூமியில் புகை போல மூடிக் கிடக்கிறது .

எந்த வடிவத்திலும் சொல்லி விட முடியாத , அளவிட முடியாத இழப்பிற்குப் பின்னும் வீறு கொண்டு , போராடியவர்கள் அந்த  மக்கள்

அவர்களது போர்க்குணமும் , பற்றுறுதியும் , நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகள்.

இன்னும் சொல்லப்பட வேண்டிய பல தரவுகளும் , ஆவணங்களும் , செய்திகளும் என் சேகரிப்பில் உள்ளது .

எனினும் ஒரு எழுபது நிமிட ஆவணப் படமாக மட்டுமே அதை இறுதிப் படுத்த நேர்ந்தது .

அதன் வெளியீட்டு விழாவில்   ஏற்புரையாக .நான் சொன்னேன் . " இது இரண்டு அல்லது மூன்று மணி நேர ஆவணப்படமாக வந்திருக்க வேண்டும் . ஆனால் எனக்கிருக்கிற  பொருளாதாரத் தடைகள் காரணமாக நான் இதை எழுபது நிமிடத்தில் முடிக்க நேர்ந்தது . என் சொந்த உடலின் உறுப்புகளை நானே வெட்டிக் கொள்வது போன்ற துயரத்துடன் நான் இதனைச் செய்திருக்கிறேன். "

இன்னும் சொல்லப் பட வேண்டியவைகளைத் தொகுத்து இன்னுமொரு ஆவணப்படத்தை இரண்டாம் பகுதியாக செய்ய வேண்டும் என்கிற கனவும் , விருப்பமும் இருக்கிறது .

எல்லாம் இசைவாக வந்தால் அதை விட உன்னதமான பணி எதுவுமில்லை .

இந்தத் தலைமுறையில் , பாடப் புத்தகத்தில் இணைக்க வேண்டிய வரலாறு இது . அது வரை  நாம் தான் எல்லோருக்கும் இதனை உரக்கச் சொல்ல வேண்டும் . அந்த வகையில் , நிகழ்வை நடத்தும் சமூக ஆய்வு மையம் வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் உரியது .

ஊனும் , உயிரும் உருக உருக ...

எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறேன் . எனது ஆவணத் திரைப்படங்களுக்காக ... எனது புத்தகங்களுக்காக ...

ஆனால் , குறிப்பிட்ட படைப்புக்கென  இல்லாமல் இத்தனை நாள் பேசிய தமிழுக்காக "தமிழ் நிதி " விருது பெறுகிறேன் .அம்பத்தூர் கம்பன் கழகம் இந்த விருதினை வழங்குகிறது .

அம்பத்தூர் கம்பன் கழகம் தகைமை சான்ற மனிதர்களால் நடத்தப் பெறுகிறது . அதன் தலைவர் "பள்ளத்தூர் " திரு . பழ . பழனியப்பன் கம்ப ராமாயண உரை ஆசிரியர் .

அவர் என்னை அழைத்து இந்த விருது பற்றி சொன்னதும் , மனமார ஒப்புக் கொண்டேன்.

இத்தகைய விருதுகளுக்கு தகுதி உடையவனாக என்னை ஆளாக்கியது என் அன்னையே . அவளை நான் மிக அதிகமாக நினைத்துக் கொள்ளுவதுண்டு .இருபத்தி நான்கு மணி நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பதாகச் சொன்னால் அது மிகையான பொய் .

யாரும் , யாரையும் இருபத்திநாலு மணி நேரமும் நினைத்திருக்க இயலாது .எந்த பக்தனுக்கும் ,  காதலனுக்கும் , காதலிக்கும் , நண்பனுக்கும் ,எதிரிக்கும் ... கூட  அது சாத்தியமில்லை .

நினைக்கிற தருணத்தில் , அந்த நொடியில், மனதின் அடியாழம் வரை ஊனும் , உயிரும் உருக உருக நினைத்துக் கொண்டால் போதுமானது .

அம்மா ... உன்னைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் ஊனும் , உயிரும் உருக , உருகித் ததும்ப நினைத்துக் கொள்ளுகிறேன் .

அம்மா ... நீ ... இருந்திருக்கலாம் . எதனால் இத்தனை விரைவாக விடை பெற்றுக் கொண்டாய் ? உன் உயிர் பிரிந்த கணத்தில் உன் அருகில் தானே இருந்தேன் ... ஏதும் சொல்லாமல் போனாய் . நினைந்து , நினைந்து மகன் உருகட்டும் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய் . ஆனாலும் , தனியே விட்டு விட்டுப் போனாய் .

வாழ்வில் தனிமை என்பதை முதன் முறை அறிந்ததும் , உணர்ந்ததும் அன்றைக்குத் தான் . அது இன்றும் , இப்போதும் என்னைச் சூழ்ந்தே இருக்கிறது .
உன்னை எரியூட்டினோம் . சொந்த நிலத்தில் புதைத்திருக்க வேண்டும் . புதைப்பது தான் திராவிடர்களின் பழக்கம் , பண்பாடு .
நிலமில்லாத நாடோடிகளின் பழக்கமே எரியூட்டுவது .

உன்  கல்லறை இல்லாத போதும் எல்லாவற்றையும் உன் காலடியில் தான் சமர்ப்பணம் செய்கிறேன் .