Friday, June 24, 2011

சொல்லின் வசீகரம்


வரைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும் .அச்சக உரிமையாளர் . பதிப்பாளர். பரந்த வாசிப்பாளர். அதிர்ந்து பேசாத மென்மையாளர் ."வேனில்" என்பது நான் அறிந்த அவரது பெயர். இயற்பெயரா ,புனைப்பெயரா என்பது தெரியவில்லை. கோவையில் வாழ்கிறார். எட்டுப் பத்து ஆண்டுகளாகத் தான் அறிமுகம். மிக மென்மையாக, மரியாதையாகப், பிரியமாகப் பேசுகிற மனிதர். எப்போதும், எந்தத்தருணத்திலும் அப்படித்தான் பேசுவார். "நல்லாஇருக்கீங்களா?" எப்பிடி இருக்கீங்க ?"என்று அவர் கேட்கிறபொழுது உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால் குணமாகிவிடும்.

ப்படியாப்பட்டமனிதர் போன மாதம் ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். "என்னடா .... கதை இது ? ஏண்டா .. இப்பிடி எழுதுறீங்க ?" என்று தான் பேசவே ஆரம்பித்தார் . எனக்குத் தெரியும் . அந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை குறித்துப் பேசுகிறார் என்பது , முதல் சொல்லில் புலப்பட்டு விட்டது .

தை குறித்து அந்தரங்கமாகப் பேசிப் பகிர்ந்து கொண்டதை எல்லாம் எழுத இயலாது . என் கதையைப் புகழ்ந்தார் என்பதை "உலகத்திற்குச் " சொல்வதற்காகவும் நான் இதனை எழுதவில்லை . ஒரு கதை வெளியானதும், அதைப் பாராட்டுகிறவர்களும் , பழிக்கிறவர்களும் ஒரு சேர உருவாகி விடுவார்கள் . குறைந்த கதைகள் எழுதின எனக்கே இது தெரிந்திருக்கிறது. நிறைய எழுதுகிறவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கும் .

ருவரைக் கவர்ந்து இழுக்கிற கதை , இன்னொருவருக்கு எதுவுமேயில்லை. ஒருவர் ஒன்றுமே இல்லையென்று நிராகரித்த கதையைப் பிறிதொருவர் கொண்டாடித் தீர்க்கிறார். புரிந்து ஏற்றுக்கொள்ளத்தக்க , தகாத , என்றெல்லாம் பொது உண்மைகள் எப்போதுமில்லை கதைகளின்,மனிதர்களின் உலகத்தில்.

னிதர்களைப் போலவே தான் கதைகள். கதைகள்போல் தான் மனிதர்கள். ஒன்று போல் மற்றொன்று இருப்பதேயில்லை. இருப்பது போலத் தோன்றினாலும் அது தோற்றம் மட்டுமே. நான் அறிவேன்.

ப்போதும் சொல்கிறேன். நான் எழுத வந்தது அவரது பாராட்டுதல்கள் குறித்தல்ல. மாறாக ,அவர் பாராட்டிய விதம் பற்றித் தான். பத்துப் பதினைந்து நிமிடங்கள் பேசினார். ஒரே "போடா... வாடா " தான். ஒவ்வொரு வாக்கியத்தையும் "டேய் " என்று துவங்கி "என்னடா " ..."எதுக்குடா " என்று வித விதமான"டா" க்களால் நிரம்பி இருந்தது அவரது உரையாடல்.

ந்தக் கணத்தில் , அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளும் , குறிப்புகளும் , என் சந்தோஷத்தைப் பெருக விடாமல், ஊடறுத்துக்கொண்டே இருந்தன . அவர் பேசி முடிக்கிற வரை , அடக்கமாய் நடந்து கொண்டேன். "நன்றி ... வேனில் .. நன்றி ... ரொம்ப நன்றி " என்று மிகக் குறைவான சொற்களுடன் , பணிவாகப் பேசி முடித்தேன் .

ரையாடல் முடிந்ததும் , என் சந்தோஷமும் , உற்சாகமும் , மகிழ்ச்சியும் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது . அவர் போட்ட எல்லா "டா "க்களும் என்னை உயரத் தூக்கிச்சென்றன. பறப்பதல்ல அது ; அதுவல்லாத வேறு ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருந்தது . கால்கள்தரையிலேயே இல்லை. வானத்திலும் இல்லை .

த்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ,வாய் நிறைய ஒருவர் "டா" போட்டுப் பேசியிருக்கிறார் .வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, வாழ்க்கை நம் மீது உருவாக்கும், அல்லது நாமே உருவாக்கிக்கொள்ளும் கற்பிதங்கள் காரணமாக ,உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கவே ஆளில்லாமல் போய் விடுகிறது .பள்ளிப் பருவத்து நண்பர்களே கூட நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கிற போது "வாங்க " "போங்க "என்று வார்த்தையாடி விடுகிறார்கள் .அதிலும் பள்ளித்தோழன் எவனாவது "சார் " என்று கூப்பிட்டால், அது கெட்ட வார்த்தையாகி விடுகிறது.

ப்போதும், உரிமையோடும், பிரியத்தோடும் "என்னடா... "வாடா""போடா" என்று கூப்பிடுவதற்கு நண்பர்கள் இருப்பது மகத்தான வரம் . மிக, நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு வேனில் அப்படி அழைத்த போது, என் குழந்தைமை முழுவதும் திரண்டு, திரும்பக் கையில் கிடைத்து விட்டது. ஒரே சொல் தான் . "டா ". நம் இறந்த காலத்தின் வசீகரத்தை உடன் அழைத்து வருகிற ஆற்றல் உடைய ஒரே சொல். மந்திரம் போல இயங்கியது அந்தச் சொல் . இனி , எப்போதும் அப்படிக் கூப்பிடுங்கள் என்று வேனிலைப் பார்க்கிற போது கேட்டுக் கொள்ள வேண்டும்.

Tuesday, June 14, 2011

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் (2008) வெளியான சிறுகதை

அப்பத்தா

ப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக மல்லுக்கட்டுகிறது அப்பத்தா. காய்ச்சல், தலைவலி என்று ஒரு நாள் படுத்ததில்லை. அப்பத்தா படுத்தா, வைத்தியம் பார்க்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் கட்டிலைச் சுற்றி நின்றார்கள். பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள். பால் இறங்கிக் கொண்டே இருந்தது. குரல்வளை அறுந்து போகிற மாதிரி, சத்தம் கூடியதே தவிர குறையவில்லை. ஆஸ்பத்திரிக்கு வேண்டாமென்று சுப்பையா டாக்டர் சொல்லிவிட்டார். நாடி படுத்துவிட்டது. முழுசாக அடங்கவில்லை.
தாத்தா தலைமாட்டிலேயே இருந்தார். உயிர் பிரியும்போது, பக்கத்தில் ஆள் இருந்தா, ஆன்மா அலையாது என்று நம்பினார். காப்பியோ, பலகாரமோ யாராவது கூப்பிட்டுக் கொடுத்தால் சாப்பிட்டார். கண்ணெல்லாம் சிவந்து, இரண்டு கைகளையும் கூப்பியபடியே, “கஷ்டப்படாம போயிரணும்“ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தார். கல்யாணமான நாளில் இருந்து இன்றுவரை கண்ணீர் சிந்தாமல் காப்பாற்றி இருக்கிறார். இருவருக்கும் இடையிலான நெருக்கமும், இணக்கமும் ஊரே அறிந்த ரகசியம். இன்றைக்கும், பகலிலும் இரவிலும் தனித்து இருந்தால் கதவைப் பூட்டிக் கொண்டு தான் இருவரும் பொழுதைக் கழிப்பார்கள். குளிக்கப் போனால், சேர்ந்துதான் குளிக்கப்போவார்கள். ஒருவருக்கொருவர் முதுகு தேய்த்து விட்டுக் கொண்டு, சிரிப்பும் கேலியுமாகக் குளித்தால்தான் குளித்தது மாதிரி இருக்கும். கல்யாணமான நாளில் இருந்து, அப்பத்தா படுக்கையில் விழுகிறவரை அதுவே நடைமுறை. 
ரோரு வருஷம் இடைவெளி விட்டு மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என்று ஐந்து குழந்தைகள் அப்பத்தாவுக்கு. ஐந்தும், ஒரு கை விரல் மாதிரி ஒற்றுமையான பிள்ளைகள். எல்லோரும் படித்து, வேலைக்குப் போய் மனசாரச் சம்பாதிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த மருமகள்களும், மருமகன்களும் கூட ஒத்தாசையான பிள்ளைகள். எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் என்றாகி விட்டாலும், அப்பத்தாவும், தாத்தாவும் இன்றைக்கும் படுப்பது தனி அறையில்தான். பர்மாத் தேக்கில் செய்த ரெட்டைக் கட்டில். அப்பத்தாவை, அதில்தான் படுக்கப் போட்டிருந்தது. இந்தக் குடும்பத்துக்கு குத்தகை பார்க்கிற செவனம்மா நாச்சிகுளத்தில் இருந்து விழுந்தடித்துக் கொண்டு வந்தது. கட்டிலை விட்டு இறக்கித் தரையில் போட்டால், கஷ்டப்படுத்தாம ஆறு நாழிகைக்குள் அடங்கி விடும் என்றது. வீட்டுக்குள் நுழைந்ததும், கிழக்குப் பார்த்த வாசல் இருந்த அறையில் பாய் விரித்து, மெத்தை போடக்கூடாது, பாய் மட்டும் போதும் என்று செவனம்மா தாத்தாவிடம் உரிமையாகச் சொல்லி விட்டது. ஆறு நாழிகை, ஆறு நாளாகியும் அப்பத்தா மல்லுக் கட்டிக் கொண்டே இருந்தது.
செல்லூர் சித்தாப்பாவுக்கு  ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. காட்டுப்பட்டியில் இருந்து சாமியாடியையும், ஜோசியனையும் கூட்டிக் கொண்டு வந்தார். முத அமாவாசைக்கு முடிந்து போகுமென்றான் ஜோசியன். சாமியாடி திருநீறு கொடுத்து அதைத் தண்ணீரில் கலந்து மூணு தரம் கொடுக்கச் சொன்னான். “எது வேணும்னாலும் செய்யுங்க“ என்று தாத்தா சொல்லிவிட்டார். “கண்ண மூடுனாலும் பரவாயில்ல, கஷ்டப்படக்கூடாது“ என்பது தான் தாத்தா திரும்பத் திரும்பச் சொன்னது
“முட்டைக் கரண்டியில் மூணு கரண்டி நல்லெண்ணெய் கொடுத்தா அடங்கும்“ என்று யாரோ சொன்னதும் நடந்தது. இரைப்பு அதிகமானதே தவிர, குறையவில்லை. குடித்த எண்ணெய், கொடுத்த பால் என்று எதுவுமே வெளியேறாமல், உள்ளுக்குள்ளேயே நின்றது, இன்னும் ஆச்சர்யமாகி விட்டது. கண்ணைத் திறந்து பார்க்கவேயில்லை. கை, கால் எதிலும் அசைவே இல்லை. ஒரு சொல், ஏதாவது உளறல் எதுவுமில்லை. வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக்காற்று, உள்ளிருந்து தொண்டைக் குழிக்குள் மோதித் திரும்பிக் கொண்டே இருந்தது. அளவற்ற வேகத்துடன் நெஞ்சுக்குழியில் போய் முட்டித் திரும்பியது. வெளியேறத் துடிக்கும் அந்த ஒற்றைக் காற்றின் விசையும், ஓசையும் உயர்ந்து கொண்டே இருந்தது. “யோசிக்காம தலையில நல்லெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண மூணும் சேத்துக் குளிப்பாட்டுனா“ ஒரு முடிவு வரும் என்று ஒரு கிழவி சொன்னது. குளிப்பாட்டி, உடை மாற்றிப் படுக்க வைத்ததும் அப்பத்தா முகத்துக்கு கூடுதல் பொலிவு வந்ததே தவிர, “எதிர்பார்த்த“ வேறு எதுவும் நடக்கவில்லை. 
ரவில் ஆளுக்கொரு திசையில் களைத்துப் படுத்திருக்க தாத்தா அப்பத்தாவின் தலைமாட்டிலேயே படுத்துக் கிடந்தார். தனக்கும் அப்பத்தாவுக்குமான தனிமைகளுக்குள், தாத்தாவின் நினைவு நடைபோட்டது. கலகலவென்ற சிரிப்பும், கதம்ப வாசனையும் அப்பத்தாவின் பிறந்த வீட்டுச் சீதனம். அம்பது பேருக்குச் சமைச்சாலும், அப்பதான் குளிச்சு வந்த மாதிரி பந்தி பரிமாறும் அப்பத்தா. இலையை மறைக்க அப்பத்தா அள்ளி அள்ளிச் சோறு வைத்தாலும் முகத்தில் அடிக்காது. ஊர் உலகத்தில் புருஷனுக்குப் போட்டது போக, மிச்ச மீதி சாப்பிடுவது பெண்களின் வழக்கமென்றால், அப்பத்தா அதற்கு நேர் எதிர். அப்பத்தா சாப்பிட்ட பிறகு தான் தாத்தா சாப்பிடும். இத்தனை வருஷத்தில் ஒரு வேளை கூட கடையில் சாப்பிட்டதில்லை. வீட்டுச் சாப்பாடுதான்.
தான் சாப்பிட்டுப் பார்த்து எதைப் பரிமாறலாம், எதைப் பரிமாறக்கூடாது, உப்பு, உறைப்பு எதில் எவ்வளவு சேக்கணும் குறைக்கணும் - எல்லாம் அப்பத்தா தீர்மானிக்கும். அப்பத்தா கண்ணசைந்த பிறகு தான் தாத்தா சாப்பிட உட்காருவார். “ரெண்டும் ரொம்பத்தான் பண்ணிக்குதுங்க“ என்று அறிந்தும், அறியாமலும் மற்றவர்கள் பேசுவதைத் தாத்தா கூட சமயங்களில் பொருட்படுத்துவார். அப்பத்தா ஒப்புக் கொள்ளாது. “கண்டதச் சாப்பிட்டு அரை நாளு அவுக முடியாமப் படுத்தா எவ வந்து பாப்பா“ என்று உரக்கச் சொல்லிவிடும். தாத்தா தலைவலி என்று படுத்தால் போதும் ஊரையே ஊமையாக்கி விடும் அப்பத்தா. வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம். 
பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு. கறி வறுத்த சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து, சுடு சாதத்தைப் போட்டுப் பெரட்டி, உருண்டை வைத்து எல்லோருக்கும் சமமாகப் பங்கு போடும். எவ்வளவு சூடும் பொறுக்கிற கைகள் அப்பத்தாவுக்கு. ஊறுகாய் ஜாடிக்குள் கை போட்டால் ஊசிப் போகும் என்பது மற்றவர்களுக்குத்தான். அப்பத்தா எதையும் கையில் தான் எடுக்கும். எந்தப் பண்டமும் ஊசிப் போகாது. காலையில், அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி, இரவுவரை மணம் மாறாமல் இருக்கும். எல்லாம் அப்பத்தா கைப் பக்குவம். அந்தக் கைகள் குளிர்ந்து போய் வெளுத்துக் கிடந்தன. 
பின்னிரவில் கூட, தாத்தாவும் அப்பத்தாவும் பேசிச் சிரித்து மகிழ்கிற சத்தம் கேட்ட வீடு இது. அறைக்குள்ளேயே, பல்லாங்குழி, பரமபதம், சீட்டுக்கட்டு, சதுரங்கம், தாயம் என்று வகைவகையான விளையாட்டுக்களுக்கும் குறைவிருக்காது. கறிச்சோறு சாப்பிடுகிற அன்றைக்கு வெற்றிலை போடுவது வழக்கம். தாத்தா மடித்துக் கொடுப்பார். “ஆம்பிளைங்க மடிச்சுக் கொடுத்தா, வீட்டுக்கு ஆகாது“ என்று யாரோ சொன்னதற்கு, ரெண்டுபேரும் புரையேறச் சிரித்திருக்கிறார்கள். மடித்துக் கொடுத்த வெத்திலையைச் சுவைத்து மணம் ஏறிய பிறகு, நாக்கை நீட்டி “எப்படி சிவந்திருக்கு?“ என்ற பாவனையில் அப்பத்தா கேட்பதும், தாத்தா கண்கள் விரிய ஆமோதிப்பதும் வீடே பார்க்கும் உற்சாகங்கள். ஓயாமல் பேசிச் சிரிக்கும் அந்த வாய் வறண்டு, காய்ந்து கிடக்கிறது. 
ல்யாணமான போது, அப்பத்தாவுக்குப் பத்தொன்பது வயசு. தாத்தாவுக்கு இருபத்தி ஏழு. எட்டு வருட வித்தியாசம். பார்த்தால் சொல்ல முடியாது. கல்யாணமாகி, மூணாவது நாள் இந்த வீட்டுக்கு வந்த அப்பத்தா, திரும்ப ஒரு முறை கூட பொறந்த வீட்டுக்குப் போகவில்லை. இந்த வீட்டுக்கு வந்த அன்னிக்கு ஆனி முப்பத்தி ஒண்ணு. மறுநாள், ஆடிக்குப் பெண் தாய் வீடு போக வேண்டுமென்று பேச்சாக இருந்தது. தாத்தா சம்மதிக்கவில்லை. இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, பெரிய பிரச்சனையான போதும் தாத்தா ஒப்புக் கொள்ளவில்லை. “ஆடி மாசம் சேந்து இருந்தா, சித்திர மாசம் புள்ள பொறக்கும். கோடையில புள்ள பொறந்தா குழந்தைக்கும் ஆகாது, குடும்பத்துக்கும் ஆகாது“ என்றார்கள். “சித்திர மாசம் புள்ள பொறக்காமப் பாத்துக்குறது எம் பொறுப்பு“ என்று எல்லார் முன்பும் தாத்தா சொன்னதை, இப்போதும் அப்பத்தா சொல்லிச் சொல்லிச் சிரிக்கும். 
ன்னைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பவே வேண்டாமென்று, அப்பத்தா கேட்டுக் கொண்டதை தாத்தா யாருக்கும் சொல்லவேயில்லை. அந்தக் கோபத்தின் பின்னே என்ன இருந்ததென்று யாருக்கும் தெரியாது. அப்பத்தா பொறந்த வீட்டில் ஒத்தப் பொறப்பு. கூடப் பொறந்தவங்க யாரும் கிடையாது. அப்பத்தாவுக்குப் பதினைந்து வயசாக இருக்கிறபோதே, நெருங்கிய சொந்தத்தில் கண்ணுச்சாமியைப் பேசி முடித்திருந்தார்கள். கண்ணுச்சாமி படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்பது இரு வீட்டுச் சம்மதம். கண்ணுசாமிக்கு அப்பத்தாவின் மீது தீராத, மாளாத, குறையாத காதல். அப்பத்தாவுக்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திராத வளர்ப்பு அப்பத்தாவுடையது.
நாலு வருஷத்துக்குள், ஓஹோவென்றிருந்த கண்ணுச்சாமி குடும்பம் பெரும் பள்ளத்தில் போய் விழுந்து விட்டது. அந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று, தாத்தாவைப் பேசி முடித்தார்கள். அப்பத்தாவுக்கு எதுவும் விளங்கவில்லை. தாயும், தகப்பனும் சொன்னதற்குத் தலையாட்டி விட்டது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்தபோது, கண்ணுச்சாமியைக் காணோம் என்று ஊரே தேடியது. பழனிக்குப் பாதயாத்திரை போனதாகவும், கல்யாணத்தன்று அதே முகூர்த்த நேரத்தில் முடி இறக்கி மொட்டை போட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்தபோது, எல்லாம் முடிந்து இரண்டு நாளாகி இருந்தது. இனி ஜன்மத்துக்கும் கல்யாணம் செய்யப் போவதில்லை என்று, ஊரறிய கண்ணுச்சாமி செய்த சத்தியம் அப்பத்தாவை அதிரச் செய்தது. காசு பணத்துக்காகத் தாயும், தந்தையும் செய்த படுகொலை அப்பத்தாவின் ஈரக்குலையைக் கலக்கிவிட்டது. 
பொன்னைத் தேய்த்து ஊற்றச் சொன்னார்கள். செம்பு கலக்காத பசும்பொன். காசு கொடுத்தார் தாத்தா. மருந்து அரைக்கும் கல்லில் பொறுக்கத் தேய்த்து ஊற்றினார்கள். செல்லத்தம்மன் கோவில் குருக்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமிரச் சொம்பில் அடைத்து வைத்திருந்த காசித் தண்ணீரைக் கொடுத்தார்கள். காசித் தண்ணீர் கொடுத்தால் மூச்சடங்கும் என்பதோடு மோட்சமும் கிடைக்கும் என்றார்கள். மூச்சிரைப்பு கூடியதே தவிர குறையவில்லை. முன்வாசல்மண், புறவாசல் மண், வயக்காட்டு மண் என்று விதவிதமாய்க் கரைத்து ஊற்றியும் அப்பத்தா அசைந்து கொடுக்கவில்லை. அமாவாசை என்பது கனத்தநாள். அதிலும் மூச்சிரைத்து படுத்துக் கிடந்தால் மூணாவது அமாவாசையும் தாண்டாது என்பது நம்பிக்கை. அப்பத்தா மூணாவது அமாவாசையும் தாண்டியது.
மூச்சிறைப்பு அதிகமானது. நினைவு திரும்பவில்லையென்றாலும், அப்பத்தா படுகிற பாடு தாங்க முடியாததாக இருந்தது. முன்னிரவில், அப்பத்தாவுக்கு வலிப்பு மாதிரி வந்து வெட்டி, வெட்டி இழுத்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. பத்து நிமிஷம் படாதபாடு பட்டு விட்டது. இத்தனை நாளும் பொறுத்துக் கொண்ட தாத்தா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “இந்தக் கண்றாவியக் கண்ணால பாக்காம, நாம் முதல்ல போயிரணும்“ என்று தாத்தா கதறியதும் எல்லோரும் பதைத்துப் போனார்கள். எல்லோரும் உறங்கப் போகும்போது மணி இரண்டரை ஆகி விட்டது. அன்றைய இரவு களைப்பும், கண்ணீரும், துயரும் மிக்கதாக இருந்தது. 
விடியற்காலையில், வீடு முழுக்கத் தேடியும் தாத்தாவைக் காணோம். தாத்தா எதற்கும், எப்போதும் மனசு விடாத ஆள் தான். என்றாலும் கிணறு, குளம், கம்மாய் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள். தாத்தாவைக் காணோம். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் ஆள்விட்டார்கள். திசைக்கு எட்டுப்பேர், பத்துப்பேர் என்று ஊரில் இருந்த எல்லா வாடகை சைக்கிள்களையும் எடுத்துக் கொண்டு இளவட்டங்கள் தேடினார்கள். ஒரு நாள் முழுசாகக் கழிந்தது. தாத்தா தட்டுப்படவில்லை. “எப்போ முடியும்" என்று காத்திருந்த எல்லோரும் தாத்தா இல்லாதபோது அப்பத்தாவுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று சாமி கும்பிட்டுக் கொண்டார்கள்.
வீடு முழுக்க துயரம் நெறி கட்டிக் கிடந்தது. அப்பத்தாளுக்கு மூக்கு நிமிர்ந்திருப்பதாகவும், விடியும் வரை தாங்காது என்றும் கருப்பூரில் இருந்து வந்த அத்தை சொன்னது. தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழி உயிர் பிரிவது பாவமென்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். எந்த உறவில் யார் யாருக்கெல்லாம் எப்படி சாவு வந்தது என்று விஸ்தாரமாகப் பேசி வீட்டின் அழுத்தத்தை அதிகரித்தாள். அவளது சொற்கள் ஈரம் சுமந்த, கனத்த பஞ்சுப் பொதி மாதிரி வீடெங்கும் பறந்து கொண்டிருந்தது. தாத்தாவைத் தேடிப்போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பிக் கொண்டே இருந்தார்கள். 
றுநாள் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. யாரோ தாத்தா வருவதாகச் சொன்னார்கள். வீடே ஓடி வந்து வாசலில் நின்றது. கைத்தாங்கலாக, ஒருவர் தாத்தாவை அழைத்து வந்து கொண்டிருந்தார். கூட வந்தவருக்கும் தாத்தா வயதுதான் இருக்கும். பிள்ளைகள் எல்லோரும் தாத்தாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். தாத்தாவும் குனிந்த தலை நிமிராமல் அழுது கொண்டே இருந்தார். குன்னூர் சந்தை விலக்கு ரோட்டில் தாத்தா நின்று கொண்டிருந்ததாகவும், தற்செயலாகப் பார்த்துப் பேச்சுக் கொடுத்து, விவரம் தெரிந்து அழைத்து வந்ததாகவும் கூட வந்தவர் சொன்னார். வந்தவர் சொல்லித்தான் தாத்தா அவ்வளவு தூரம் போனது தெரிந்தது. தாத்தாவுக்கும், வந்தவருக்கும் அத்தை சாப்பிட கொடுத்தது. இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு தாத்தா, அப்பத்தா இருந்த அறையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டார். வந்தவர் வாசலில் இருந்து, எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஒரு பாயும் தலையணையும் வாங்கிக் கொண்டு உள்ளறைக்குப் போய் தாத்தாவுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டார். காலையில் முத பஸ்ஸுக்குத் தான் போகவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். 
முத பஸ்ஸுக்கு அரை மணி முன்னதாக, தாத்தாவே வந்தவரைத் தொட்டார். தொட்டதும் அவர் எழுந்து கொண்டு விட்டார். இருவருமே உறங்கவில்லை என்பது கண்களில் தெரிந்தது. அவரை, அப்பத்தாவுக்கு அருகில் தாத்தாவே அழைத்துப் போனார். இரண்டு கைகளையும் கூப்பியபடி வந்தவர் அப்பத்தாவைப் பார்த்தபடியே நின்றார். குடிப்பதற்குத் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து, அவர் கையில் கொடுத்து அப்பத்தாவுக்கு ஊற்றச் சொல்லி சைகை காட்டினார் தாத்தா. அப்பத்தாவின் மீது விரல்படாமல் வந்தவரும் ஸ்பூனில் தண்ணீரை ஊற்றியதும், “புளக்“ என்கிற ஓசையுடன் தொண்டை குழியிலேயே மோதி இற்றுக் கிடந்த கையளவு காற்று அப்பத்தாவிடம் இருந்து தெறித்து வெளியேறியது. வந்தவர் கொடுத்த தண்ணீர் கடைவாயில் இருந்து வழிந்து, சரிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. வந்தவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட தாத்தா “என் செல்லமே“ என்று அப்பத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத குரல், அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மூச்சுக்காற்றோடு சேர்ந்து கலந்தது. காலடித்தடம் தேய்ந்து மறைய, கலங்கிய கண்களுடன், முத பஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தார் கண்ணுச்சாமி.

-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com) (bkkumar.theroots@gmail.com)

Tuesday, June 7, 2011

18.05.2011 ஆனந்த விகடனில் வெளியான "கோடி" சிறுகதை


கோடி        

ங்கும் மீன்கள் செத்துக் கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாக கட்டிச் சுமந்து திரிந்த பொய் மூட்டை அவிழ்ந்து, வீடெங்கும் பொசுங்கிய ரோமத்தின் துர்நாற்றம், முற்றத்தில் நின்ற தூண்களைப் போல நிலை கொண்டு நின்றது. தரைக்குள் முகம் புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழி போல, முகத்தைத் தொண்டைக்கும், மார்புக்கும் நடுவில் புதைத்துக் கொண்டார் தாத்தா. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு தேடி வந்திருந்த அத்தையையும் மாமாவையும்,தாத்தாவும் அப்பாவும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தாத்தா உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு நேர் எதிரில் கிடந்த நாற்காலியின் விளிம்பில், மாமா உட்கார்ந்து கொண்டார். யாரும் உட்காரச் சொல்லாததால், அத்தையே அவரை அதில் உட்காரச் சொன்னதாக சுமதி பிற்பாடு சொன்னாள். நல்ல கருப்பாக, லட்சணமாக, தீர்க்கமான கண்களுடன், மாமா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். கட்டிலுக்கு இடது புறம் இருந்த பழைய ஸ்டீல் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, வாசலைத் தாண்டி,அதையும் தாண்டி எங்கோ பார்த்த படி உட்கார்ந்து கொண்டார் அப்பா. நடுக்கூடத்தில்,இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில், இருவருக்கும் சேர்த்துப் பொதுவாகத்  தரையில் விழுந்து கும்பிட்டது அத்தை. ஆதரவாகத் தொட்டுத் தூக்கப் போன அம்மாவின் கையைப் பிடித்து வெடுக்கென இழுத்து, தனக்கு அருகில் தரையில் உட்கார வைத்துக் கொண்டார் அப்பா. கொஞ்ச நேரம் அப்படியே கிடந்து விட்டுக் கூப்பிய கரங்களுடனும், சிவந்து கலங்கிய கண்களுடனும், எழுந்த அத்தை, அங்கேயே மாமாவின் காலடியிலேயே அமர்ந்து கொண்டது.

ல்லாம்... மறந்து... எங்கள...  ஏத்துக்கணும்... ஒரே... மகளுக்குக்... கல்யாணம் வச்சுருக்கேன்... எல்லாரும்... வந்துரணும்...” அத்தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே, கடந்து போன ஆண்டுகளின் இடைவெளி கனத்துப் படிந்திருந்தது. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு முகமாகப் பார்த்துச் சொன்னது அத்தை. எங்களுக்கு அத்தை என்று ஒருத்தி இருப்பதும், அப்பா தனியாகப்பிறந்தவர் இல்லையென்பதும், தெரியவந்த அதிர்ச்சியில் இருந்து, குழந்தைகளாகிய நாங்கள் மீளவேயில்லை. நான், தம்பி சதீஷ், தங்கை சுமதி மூன்று பேரும் அம்மாவுக்குப் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டோம். தாத்தா, அப்பா, அம்மா, மூவருமாகச் சேர்ந்து, கட்டிக்காத்த பொய் மூட்டை அவிழ்ந்து, அத்தையாக வெளிப்பட்டு நின்றது. கருகருவென்று சுருட்டையான தலை முடி, திருத்தமான முகவெட்டு, கன்றிப் போனத் தக்காளிச் சிவப்பில் பேரழகாக இருந்தாள் அத்தை. “எங்கள ஏத்துக்கிடணும்... எல்லோரும் வந்துரணும்என்று சொல்லி விட்டு இரண்டாவது முறையும் விழுந்து கும்பிட்டது அத்தை. “எதுக்கு இப்பிடித் திரும்பத்திரும்ப... “என்று சொல்ல வந்த அம்மாவை, தனது உதடுகளில் விரல் வைத்து மெளனமாக்கினார் அப்பா. யாரும் எதுவும் பேசவில்லை  திறந்திராத வீட்டுக்குள் அலை அலையாய் மௌனம் நுழைந்து கொண்டேயிருந்தது... மெளனம் மளமளவென்று நீர் மட்டம் போல ஏறி எல்லோரையும் மூச்சுத்திணற வைத்தது.

ப்பா... அண்ணே... ஏத்துக்குங்க... ஏதாவது பேசுங்க ... எதுக்கு வந்தேன்னாவது கேளுங்கண்ணே... அப்பா... அண்ணே... “என்று குரல்வளை அறுந்து போகிற மாதிரி தீனமான குரலில், அத்தை சொன்னதெல்லாம், தண்ணீருக்குள் இருந்து கூப்பிட்டது போலாகியது. கரையேறி நின்ற தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் நின்று தளும்பிக்கொண்டே இருந்த மௌனத்தின் அலைகள், வெளியேறிய போது, அத்தையையும் மாமாவையும் அடித்துக்கொண்டு போய் இருந்தது. மௌனத்தின் கசடுகள் சேறு போல வீட்டுக்குள் படிந்து விட, யார் பேசுவதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. சிறிய சத்தம் வந்தால் கூட, தாத்தா திடுக்கிட்டுத் திடுக்கிட்டு  சுற்றுமுற்றும் மலங்க மலங்கப் பார்த்துக்  கொண்டேயிருந்தார். முற்றத்துக்குப் போகிற நடை பாதையில் பாய் விரித்துப் படுத்துக்கொண்ட அப்பா, உறங்குவது போல், கண்களை மூடிக்கொண்டு, எல்லோரும் மௌனமாக இருக்க வேண்டுமென்ற உத்தரவைத் தனது உடலில் இருந்து வெளியேற்றிக் கொண்டே இருந்தார். எப்போதும் சட்டையுரிக்காத அழுக்குப் பிடித்த பாம்பாக மௌனம வீட்டை விழுங்கிக்கொண்டே இருந்தது.

டுத்தடுத்த நாட்களில், கொல்லைப்புறத்தில், கிணற்றடியில், சமையல்கட்டில், மொட்டைமாடியில் என  வேறு வேறு தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அம்மா தான் அத்தையைப் பற்றிய எல்லாச் சேதிகளையும் சொல்லிக்கொண்டே இருந்தாள். தங்கை தான் எப்போதும் அத்தையைப் பற்றி, அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் இது பற்றியெல்லாம் குழந்தைகளுக்கு ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்கிற உறுதியானகொள்கைஇருந்தது. “வளந்து ஆளான புள்ளைங்ககிட்ட எத்தன நாளைக்குப் பொய்யும் புரட்டும்... அவங்களுக்கு எல்லாம் தெரியணும்என்று தீர்க்கமாக அப்பாவிடம் சொன்னாலும், அப்பா வீட்டில் இல்லாத நேரமும், தாத்தா தூங்குகிற நேரமும் பார்த்து எல்லாவற்றையும் ரகசியமான குரலில் தான் பேச முடிந்தது அம்மாவால்.

காவல் துறையின், உளவுப் பிரிவில், தலைமைப்பொறுப்பில் இருந்த தாத்தாவைத்தான், ஊரில் நடக்கிற எல்லாவற்றிற்கும் அரசாங்கமே நம்பி இருந்தது. அவருக்குத் தெரியாமல் ஒட்டு மொத்த மாநிலத்திலும், ஒருத்தனும் ஒண்ணுக்குக் கூடப் போக முடியாது என்கிற அளவுக்கு, அவரது ஆட்கள்எல்லாரையும்” “எல்லாவற்றையும்கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் உள் வீட்டில் ஒரே மகள், பக்கத்தில் இருந்த வேதக் கோவிலில் மணியடித்துக் கொண்டிருந்தகோயில் பிள்ளையின்ஒரே மகனான சாமுவேல் எட்வர்ட் ராஜகுமாரைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்காக, ஒரு விடியற்காலையில் வீட்டை விட்டு ஓடிப் போன போதுகூட, மகளை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று தான் பதறினார். அதிகாலையில், வாசல் தெளிக்கக் கொண்டு போன ஒரு வாளித் தண்ணீரும், வெளக்கமாரும், கோலப்போடி போட்டு வைத்திருந்த டப்பாவும் அப்படியே வாசலில் இருக்க, மகள் காணாமல் போனது அவரைக் கலங்கடித்தது. தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ இதைச் செய்திருக்கக் கூடும் என்று தான் அவரது போலீஸ் புத்தி கணித்தது. அவரது ஆட்கள் மாநிலமெங்கும் தேடத் துவங்கியிருந்தார்கள். மகள் காணாமல் போனதை விடவும். மனைவி பதட்டமாகி, வயிறு கலங்கிக் கலங்கி, அடிக்கொரு தரம் கழிப்பறைக்குப் போவதும், கழிப்பறைக்குள் குமுறிக் குமுறி அழுவதும், சமையல் கட்டிலேயே பாய் கூடப் போட்டுக்கொள்ளாமல் தரையில் படுத்து அழுவதும் அவரைப் பெரிதும் நோக வைத்தது.

துயரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, மகன் கனக சபாபதியை மட்டும் மகளின் நண்பர்களது வீட்டில் தேடச் சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்து கொண்டார். ஆடர்லி வாங்கி வந்த காப்பியையும், பலகாரத்தையும் சாப்பிட மறுத்த மனைவியை கடிந்து கொண்டு, ஏலே... உனக்கு எம்  பேர்ல நம்பிக்கையில்ல... பொழுது சாயுறதுக்குள்ள புள்ளயக் கொண்டாந்து உங் கண்ணு முன்னால நிறுத்துறேன்... இப்பம் சாப்புடுதியா இல்லையா?...என்றதும், அவரின் அதிகாரத்தின் அருமை பெருமைகளை அறிந்த்ததினால், கொடுத்ததை சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டாள். “நீங்க சாப்புடலையா?என்று  கேட்டதும்குளிச்சுட்டு, சாமி கும்புட்டுட்டுச் சாப்புடுறேன்என்றபடி எழுந்து கிணற்றடிக்குப் போனார் கல்யாண சுந்தரம் .பி.எஸ்.

குளித்து முடித்து ஈரத் துணியோடு பூஜையறைக்கு வந்துநெல்லையப்பரைமனமார வழிபட்டால், எந்த வழக்கிலும் அவன் துப்புக்கொடுப்பான் என்பது அவரது நம்பிக்கை. அடியும், முடியும் அறியப்படாத எம்பெருமானுக்கு எல்லாத்  திசைகளிலும் என்ன நடக்கிறதென்று தெரியுமென்பதால், எந்த வழக்கை எந்த திசையில் எப்படி செலுத்துவதென்று, பூஜை நேரத்தில் அவருக்குள் தோன்றுவதை, நெல்லையப்பரே தனக்குக் காட்டுகிற பாதையாகத் தான் இன்று வரை கருதிக் கொண்டிருக்கிறார். குளித்து முடித்து பூஜையறைக்குள் போகிற வரை வழக்குகள் குறித்தோ, வேலை குறித்தோ எதையும் நினைக்க மாட்டார். குளிக்காமல், சுத்த பத்தமில்லாமல்அவனைப்பற்றி நினைப்பது தகாது என்று கருதுகிற அளவு சுத்தம் பார்க்கிற பழக்கம் இருந்தது. இன்றைக்கோ, குளிக்கப் போகிற போதே, நெல்லையப்பரே !... வழிகாட்டுமய்யா... பொம்பளப் புள்ளயப்  பத்திரமா பொழுது சாயறதுக்குள்ள வீட்டுக்கு கொண்டாந்து சேத்துருமைய்யா... நீரு கேக்குற காணிக்கைய உம்ம காலடியிலேயே கொண்டாந்து சேக்குறேன்என்று மனசுக்குள் கரைந்து, உருகி வேண்டிக் கொண்டார்.

நெல்லையப்பர் அவரை முழுவதுமாகக் கைவிட்டு விடவில்லை... பூசைஅறையில், நெல்லையப்பர் படத்துக்குக் கீழே, மகள் எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் கிடந்தது. எல்லாம் தெளிவாகி விட்டது. மகளைத் தேடுவதை நிறுத்துமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். மகனைத் திரும்ப வரச்சொல்லி வேலைக்குப்  போய் விடச்சொன்னார்... மகளின் கடிதத்தை, மனைவியின் கையில் வாசிக்கக் கொடுத்து விட்டு, உம் மவ செத்துப்போயிட்டா" என்று சொல்லி விட்டு ஆபீஸுக்குப் புறப்படத் தயாரானார்... மத்தியானம் எப்பவும் போல சாப்பிடவர்றேன்... எதையாவதுஆக்கிவைஎன்றார். கல்யாணியம்மாள் தயங்கித்  தயங்கி, “...அறியாத புள்ள... அதுக்காகச் செத்துருச்சுன்னா சொல்லறது... எங்கன இருந்தாலும் தேடிக் கூட்டிக்கிட்டு வாங்கஎன்றாள். “இப்பிடியொரு சாதி கெட்ட, ஓடுகாலி முண்டயப் பெத்ததுக்கு இந்த வயத்துல கொள்ளிய வச்சுரலாம்என்று மனைவியின் வயிற்றுக்கு நேரே ஐந்து விரல்களையும் ஆயுதம் போல நீட்டினார். ஓசையே எழாமல் அழுதுகொண்டே, மீண்டும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிப்பறைக்கு ஓடினாள் கல்யாணியம்மாள். பெத்த வயிறு பேதலித்தது. அடி வயிறெங்கும், அவரது சொற்களும், விரல்களும் பாதாளக்கரண்டி போலப் புரண்டது. உஷ்ணமாய்க் குருதி பெருக்கெடுத்துக் கால்களை நனைத்துத் தரையெங்கும் ஓடியது. அறுந்து போவதற்கே இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்பு போல் கால்கள் விறைத்துக்கொண்டு நீண்டது. கழிவறையிலேயே சவமானாள் கல்யாணியம்மாள். கழிவறைக் கதவை உடைத்து, மாலையிலேயே இறுதிச்சடங்குகளை முடித்துக்கொண்டார் கல்யாணசுந்தரம்மனைவி செத்ததை விடவும், மகள் ஓடிப்போனத்தை விடவும், ஊரெல்லாம் உளவு பார்த்துச் சொன்ன தனது அதிகாரத்தின் மீது மண் விழுந்தது, அவரை உடுப்பைக்  கழற்றித் தூரப் போட வைத்தது. அன்றைக்குத் தலையைத் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் நடுவில் புதைத்தவர் தான்நிமிரவேயில்லை. அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து, ஓடிப் போனவளதுஉடைமைகள், நினைவுகள் என எல்லாவற்றையும் தடயமின்றி அழித்தார்கள். அப்படியொரு பெண் பிறக்கவில்லை என்கிற பொய்யைப் பிறப்பித்து அதைப் பேணி வளர்த்தார்கள். அப்பாவுக்குக் கல்யாணமாகி வீட்டுக்கு வந்த அம்மாவும் அதைச் சேர்த்துக்  காப்பாற்றியிருக்கிறாள். பிறந்துவளர்ந்த வீடு தேடி, அத்தையே வருகிற வரை, அந்தப்  பொய் மூட்டை அவிழாமல் இருந்தது. இப்போது எல்லாமே அவிழ்ந்து, உடைந்து தெறித்துக் கிடந்தது. இந்தக் கதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் ரகசியமாக அம்மா சொல்லித் தீர்த்துக் கொண்டாள். வீடு தன்னிலை திரும்பப் பல வாரங்களாகி விட்டது. ஓடுகிற காலம், தன் காலடியில் அகப்பட்ட எல்லாவற்றையும் அரைத்துத் தேய்த்துக் கூழாக்கி, உருமாற்றி, உருட்டிப் புரட்டி எங்கெங்கோ கொண்டு சேர்த்து விடுகிறது.. அதற்குப் பிறகு, யாரும் எதுவும் அத்தையைப் பற்றிப் பேசக் கூடாது என்று உத்தரவாகி இருந்தது. தங்கை சுமதி மட்டும் எப்போதாவது அத்தையை விட மாமா தான் அழகு என்பாள். “நிறம் தான் வேற வேற... ரெண்டு பேருமே அழகுதான்என்பாள்  இன்னொரு சமயம். அதுவும் மறந்து,  பின் எப்போதும்  யாரும், எதுவும் அத்தையைப்  பற்றியோ, மாமாவைப் பற்றியோ பேசிக்கொண்டதேயில்லை.

ன்பது வருடம் கழித்து இன்றைக்குத்தான், வள்ளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தங்கை சுமதி போன் செய்தாள். “அண்ணே ... மாமா செத்துப் போயிருச்சாம்...அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு...இங்க யாரும் போறதாத் தெரியல .யாராவது போயி, அவளுக்குப் பொறந்த வூட்டுக் கோடி எடுத்துப் போடணும்னு அம்மா சொன்னதுக்கு, எம் பொண்டாட்டி செத்ததுக்குக் காரணமானவ வீட்டு எழவுக்கு நாம் போக மாட்டேன்... கனகு நீ வேணா போய்க்கப்பான்னு தாத்தா சொன்னதுமே, உங்களுக்கே மக இல்லன்னா, எனக்கு எங்க இருந்து உடம்பொறப்பு வரும்ன்னு சொல்லீட்டு, அப்பா ஆபீசுக்குப் போயிட்டாருண்ணே ... அங்க இருந்து கயத்தாறு பக்கமா இருந்தா நீ போயிட்டு வாண்ணேஎன்று ஒரே மூச்சாகச் சொல்லி விட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் போனைத் துண்டித்தாள் தங்கை. போகணும் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு, டாக்ஸி ஸ்டாண்ட் போய், வழக்கமாக ஆபீசுக்கு வண்டியோட்டும் குருநாதன் அண்ணாச்சியைப் பார்த்து வண்டி பிடித்தேன்.எங்க போகணும், எப்ப திரும்புவோம் என்று கேட்க ஆரம்பித்து, எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட அண்ணாச்சி சொன்னார். “அடப்பாவமே... ஒரு மனுஷம் மேல ஒரு மனுஷி ஆசப்பட்டதுக்கா இம்புட்டுத் துயரம் ...அப்பம் ,அத்தைக்குப் பொறந்த வூட்டுல இருந்து தம்பி மட்டும்தான் போறீங்கண்ணா, வெறுங் கையோட போக்கூடாது. பொறந்த வூட்டுக் கோடின்னு ஒரு புடவை வாங்கிட்டுத் தான் போகணும்என்று, பாளையங்கோட்டையில் ஒரு பெரிய துணிக்கடை வாசலில் வண்டியை நிறுத்தினார். முதன் முறை வீட்டுக்கு வந்தபோது அடர்ந்த செம்மண் நிறத்தில், வெள்ளைப் பூப் போட்ட, உடம்போடு ஒட்டிய ஒரு சேலையை அத்தை கட்டியிருந்தது நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய அதே வண்ணத்தில், ஏதேதோ கோடுகளும், வட்டங்களுமாகப் போட்ட ஒரு புடவை அத்தைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. புடவை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறும் போது அண்ணாச்சி கேட்டார். “தம்பி... நீங்க போனது நாளைக்குத் தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ தெரிஞ்சா என்ன செய்வீக?”... “தெரிஞ்சப்புறம் பார்த்துக்கலாம்என்றேன்... மலர்ந்து சிரித்துஇது தான் மனுஷங்குறதுஎன்றார் அண்ணாச்சி.

யத்தாற்றில், வீடு கண்டுப் பிடிப்பதில்  சிரமமேதும் இல்லை. மாமா பூர்வீகமாக அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஊரே திரண்டிருந்தது. உள்ளூரில் பள்ளிக்கூடமேல்லாம் லீவு விட்டு, பஜாரெல்லாம் அடைத்திருந்தார்கள். நாங்கள் போய்ச சேர்ந்த போது தான்எடுக்கநேரம் குறித்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மாமா வீடு விசாலமாக இருக்க, நடுக் கூடத்தில், தரையில் மாமாவைக்  கிடத்தி இருந்தது. வீட்டுக்குள் கூட்டம் நெருக்கி நின்று கொண்டிருந்தது. மாமாவின் தலைமாட்டில் தரையைப் பார்த்து குனிந்தபடி உட்கார்ந்திருந்தது அத்தை. அத்தைக்குப் பக்கத்தில் மெளனமாகக் கண்ணீர் விட்டபடி இருந்தது தான் கட்டிக் கொடுத்த மகளாக இருக்க வேண்டும். என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர்எடுப்பதற்கானஎல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்து கொண்டிருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த  நடைமுறைகளை ஒரு வயசாளியே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மரணத்தை எதிர் கொள்ளப் போகும் துணிச்சலா, அச்சமா அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதா எனபது புலப்படவில்லை. ஈவு இரக்கமில்லாத ஆள் மாதிரித் தான் பெரிசு பேசிக் கொண்டும், நடந்து கொண்டுமிருந்தார் .

மாமாவின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு, எல்லாரையும் ஒரு சுற்று பார்த்துவிட்டுப்  பெரிசு சத்தமாக கேட்டதுஅந்த அம்மாவுக்குப் பொறந்த வூட்டுக் கோடி யாரு போடுறா? ”... அவர் குரல் முடிவதற்குள்ளேயே, பத்து முப்பது  வருஷமாக அவுக யாரும் போக்குவரத்துக் கிடையாதுஎன்றது ஒரு குரல். சொன்னது யாரென்று கண்டறிவதற்குள், அப்ப சம்பந்தி வீட்டுல கோடி போடுறாங்களாஎன்றார் பெரிசு. குருநாதன் அண்ணாச்சி என்  காதருகே வந்து, பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்துருக்கமின்னு சொல்லுங்கப்பாஎன்றார். சொல்ல விரும்பியும் சொல்ல இயலாது திகைத்து நின்ற தருணத்தில் அன்னாச்சியே பெருங்குரலெடுத்து, தம்பி... பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்திருக்குஎன்றார்.

றையெங்கும் பரவிக்கொண்டிருந்த சின்னச் சின்ன ஓசைகள்  அடங்கி, கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி,உருவாக்கிய வழிக்கு நேரே எதிரில், அத்தை  நிமிர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டதான பாவனையில், மெல்லத்  தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில் ஏதோ ஒரு கை பையை என்னிடமிருந்து ஆதரவாக வாங்கிக்கொண்டது. இரண்டு கைகளாலும் கனத்த புத்தகம் போல புடவையை ஏந்திக் கொண்டு, குனிந்து அத்தைக்கு முன்பாக  நீட்டினேன். இழந்த அன்பை முழுவதுமாக அன்றே யாசித்துப்  பெறுவது போல, இரண்டு கைகளையும் நீட்டிப் புடவையை வாங்கியது அத்தை. ஈரமின்றிக்  குளிர்ந்து கிடந்தது அத்தையின் கைகள்புடவையைத்  தன் மார்பில் ஒத்தி எடுத்து, மடியில் போட்டுக் கொண்டது. இரண்டடி தள்ளி நின்ற என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து இன்னும் அருகே வருமாறு தலையசைத்து அழைத்தது அத்தை. நெருங்கிய கணத்தில், என்  இரண்டு கால்களையும் கட்டி, இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எல்லோரும் திகைத்துக் கண்கலங்கக் பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண்ணே”....

-பாரதி கிருஷ்ணகுமார்