பாரதி கிருஷ்ணகுமார்
ஆறடி ஆஜானுபாகு சரீரம். உடல்வாகுவைப் போலவே உள்ளமும் உயர்ந்த, ஆணவமில்லாத ஆவணப்பட இயக்குனர் இவர்.
வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை அன்றாடம் நாம் சந்திக்கின்றோம். எல்லோரும் இவரைப்போல் கன்னக்கோலிட்டுக் குடைந்து உள்ளத்தில் கூடுகட்டி நிரந்தரமாய் வாசம் செய்வதில்லை.
ரெளத்திரம் பழக எனக்கு கற்றுத்தந்த இவர் பழகுவதற்கு இனிமையானவர்.
இவரது “லுங்கி” சிறுகதையை என்றோ ஒருநாள் படிக்க நேர்ந்தது. அதன் தாக்கம் என் மனதில் “லுங்கி டான்ஸ்… லுங்கி டான்ஸ்….” என்று குத்தாட்டமே போட வைத்தது.
“Down-to-earth person“ என்ற ஆங்கிலப் பதத்தின் அர்த்தம் இவரைக் கண்ட பின்புதான் எனக்கே விளங்கியது.
பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி மட்டுமே இவரிடம் இருந்ததே தவிர, திமிர்ந்த ஞானச் செருக்கு இவரிடத்தில் அறவே இல்லாதது பெர்முடா ஆச்சரியம்.
சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிகு உழன்று, வேடிக்கை மனிதரைப்போல வீழுகின்ற ஜாதியல்ல இவர் என்பது இவரிடம் பழகிப் பார்த்தால் புரியும். இவர் கூறும் கதைகள் புராண இதிகாசங்கள் அல்ல. சமூக அவலங்களின் வெறும் பரிகாசங்கள் அல்ல, மாறாக, அவலங்களைப் போக்க அறிவுறுத்தும் பரிகாரங்கள்.
நெஞ்சைக் கொதிக்க வைக்கும் கீழ்வெண்மணி சம்பவத்தை விளக்கும் “இராமையாவின் குடிசை”, கும்பகோணம் தீ விபத்தில் தீக்கிரையான பள்ளிக் குழந்தைகளின் அவலத்தை எடுத்துரைக்கும் “என்று தணியும்?”, தமிழகத்தின் கல்வி நிலை பற்றியும், கல்வியாளர்களின் குமுறல்களையும் சித்தரிக்கும் “எனக்கு இல்லையா கல்வி” போன்ற ஆவணப் படங்கள் இவருடைய சமூகப் பொறுப்புணர்வை நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டும்.
கண்ணனைக் காதலித்த கண்ணதாசன் போல, சுப்புரத்தின தாசனைக் காதலித்த சுரதாவைப்போல, பாரதியைக் காதலித்த பாரதி தாசன்களில் இவரும் ஒரு தலையாய தாசன். ஆம். அந்த ஆசுகவியின் நேசன்.
இவரைச் சந்தித்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கரைந்து விட்டன, இவரிடம் அரை மணி நேரம் உரையாடினால் அறுபது புத்தகங்களை அலசி ஆராய்ந்த திருப்தி. அலாவுத்தீனின் அற்புத ஜாடியைப் போன்று அவ்வளவு விடயங்களை ஆழ்மனதில் அடக்கி வைத்துள்ளார்.
எனக்குள் அப்பப்பா..! எப்பப்பாத்தாலும் அவரெழுதிய “அப்பத்தா” நினைப்பு.
திப்பு சுல்தானின் வாள் வீச்சும் பாரதி கிருஷ்ண குமாரின் உரைவிச்சும் எனக்கு ஒருபோலத்தான் தோன்றும்.
ஒரு ஆவேசத்தை அமைதியான பேச்சால் உருவாக்க இவரால்தான் முடியும். அலட்டிக் கொள்லாத ஆக்ரோஷம் இவருடையது. இவரது படைப்பான "அருந்தவப்பன்றி - சுப்பிரமணிய பாரதி" என்ற நூலைப் படித்தபின்தான் பாரதி உரைத்த “அக்னி குஞ்சு” வேறு யாருமல்ல இவர்தான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அவர் பஹ்ரைன் வந்தபோது பார்க்க விழைந்த இடம் இங்கிருந்த பெரிய மசூதி. காலை வேளையில் மதிய தொழுகைக்கு முன்பாக மாற்று மத சகோதரர்கள் வந்து பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுற்றிக் காண்பித்த வழிகாட்டி அராபியரிடத்தில் மசூதியின் கலையம்சம் பொருந்திய கட்டிட நுணுக்கங்கள் முதல், முஸ்லீம்கள் ஒரே திசையை நோக்கி வழிபாடும் காரணம், வழிபாட்டு முறை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் துருவித் துருவி கவனமாக கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
இங்கு வந்ததன் நினைவாக, பள்ளிவாசலினுள் “இமாம்” நின்று தொழுகை நடத்தும் “மிம்பரு”க்கு பக்கவாட்டில் என்னருகில் பவ்யமாக அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அருங்காட்சியகம், சவூதி பாலம் முதலான இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தேன்.
ஒரு படைப்பாளிக்கே உரித்தான இயல்பான தேடுதலை அவரிடம் நான் காண முடிந்தது. இப்படிப்பட்ட தேடல்தான் ஒரு சாமானிய மனிதனை அறிவுஜீவியாக ஆக்குகின்றது என்ற உண்மையை விளங்கிக் கொண்டேன்.
சமுதாயத்தின் அவலங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அதனைச் சாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
நம் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து போகிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இவரைப்போல் தடம் பதிக்கும் பாத அச்சுக்களை நம்மில் விட்டுச் செல்கிறார்கள்.


No comments:
Post a Comment