Friday, March 29, 2013

வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு எனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவானது கீழவெண்மணி குறித்த ஆவணத் திரைப்படம் .

கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டுமெனப் போராடிய எளிய , ஏழை விவசாயக் கூலிகளை ஒடுக்க எல்லா வகையான அடக்குமுறைகளையும் ஏவி விட்டது அரசும் , போலீஸ்காரர்களும் , நிலப் பிரபுக்களும் இணைந்த, புனிதமற்ற, கள்ளக் கூட்டணி .

அதன் உச்சமாக , நாற்பத்தி நான்கு பேரை  தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கொலைகாரக் கும்பல் . இருபது பெண்கள் , பத்தொன்பது குழந்தைகள் , ஐந்து முதியவர்கள் என நாற்பத்தி நான்கு உயிர்கள்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் நடைபெற்ற படுகொலை அது . அவர்கள் அஞ்சி ஒடுங்கி இருந்த குடிசை ராமையா என்பவருக்குச் சொந்தமானது . அது பற்றியே ஆவணத் திரைப்படத்திற்கு "ராமையாவின் குடிசை" எனப் பெயர் இட்டேன் .

அந்த ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொருட்டு , இரண்டு ஆண்டுகள் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தேன் . போகாத கிராமமில்லை . சந்திக்காத மனிதர்கள் இல்லை . ஒரு பெரும் தேடல் அது . அந்த அனுபவங்கள் தனியே எழுதத் தக்கவை .

அந்தத் தேடலின் ஊடே , ஒரு நாள் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலையில் , மாவூர் என்ற சிறிய கிராமத்தின் எல்லையில் , இடது புறம் போகிற ஒரு சிறிய பாதையின் உள்ளே இந்த அய்யனார் இருந்தார் .

அந்த மாவட்டத்தில் முன்பு நிலவி இருந்த அதிகாரத்தின் , அடக்குமுறையின் வடிவமாக எனக்கு அந்த அய்யனார் தென்பட்டார் . தரையில் அமர்ந்து, மேல் நோக்கிய கோணத்தில் அவரைப் படம் பிடித்தேன் . இந்த வண்ணத்தில் அவர் இருக்கவில்லை . வடிவமைப்பில் இந்த வண்ணத்தை அவருக்குத் தந்தோம் .

ஆவணத் திரைப்படம் வருவதை முன்னறிவிக்கும் பிரசுரத்தில் அய்யனார் இடம் பெற்றார் . மிகுந்த பாராட்டைப் பெற்றார் அய்யனார் . அதற்குப் பிறகு, எங்கள் அனுமதியின்றி பலர் அவரைப் பயன் படுத்திக் கொண்டதையும் நான் பார்த்திருக்கிறேன் .

அதற்குப் பிறகு, அதே சாலையில் பல முறை பயணம் செய்தும், அவரைப் பார்க்கப் போக வாய்க்கவில்லை . எனக்கு அது ஒரு மனக் குறை  தான் . அந்த வருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும் . அடுத்த முறை அந்தப் பாதையில் பயணித்தால்அவசியம் வருகிறேன் அய்யனாரே .... அது வரை பொறுத்தருளும் .

Tuesday, March 19, 2013

மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம்

எனது தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவான "என்று தணியும் ?" ஆவணத் திரைப்படம் குறித்து தினமணி நாளிதழ் ஒரு முழுப் பக்கத் திறனாய்வைப் பிரசுரித்தது .

 கும்பகோணத்தில்,  இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் தேதி ஒரு தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் தொண்ணூற்று நான்கு குழந்தைகள் பலியான நிகழ்வுக்குப் பின்னே இருக்கும் உண்மைகள் குறித்துப் பேசும் ஆவணத் திரைப்படம் .

ஆவணப் படத்தின் துவக்கத்தில்  ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது இந்த மலர் வளையம் . ஆனால் .இதை வடிவமைக்க இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது .

அந்தத் திரைப்படத்தின் டிசைனரும் , சிறந்த ஓவியனும் , எனது நண்பனுமான ஈரோடு சிவா எனக்கு நானூறுக்கும் அதிகமான மலர் வளையங்களை எனக்குக் காட்டினார் . நான் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டே இருந்தேன் . அவர் சலிப்பின்றி மேலும் , மேலும் காட்டிக் கொண்டே இருந்தார் .ஒரு கட்டத்தில் "சார் ... வாங்க ... எவ்வளவு பணம் செலவானாலும் சரி . கடைக்குச் சென்று நீங்க விரும்புற மாதிரி ஒரு மலர் வளையம் கட்டி , அதைப் புகைப்படம் எடுத்து அதைப் பயன்படுத்தலாம் என்றார் .  நான் அதற்கும் சம்மதிக்கவில்லை . எனது உள் மனது எதையோ தேடிக் கொண்டு இருந்தது . சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை .

மூன்றாம் நாள் அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன் . மனதில் இருந்தது சொற்களாகப் பீறிட்டது . " சிவா ...  மலர்களைப் போன்ற  தொண்ணூற்று நான்கு குழந்தைகள் இறந்த இடத்தில் வைக்க எனக்கு மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம் வேண்டும் " என்றேன் .

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இதை வடிவமைத்தார் சிவா . அந்த இரண்டு நாட்களும் மனது முழுவதும் நிறைந்து கிடந்தது இந்த மலர் வளையம் தான் . அதனால் தான் பார்த்த பல நூறு மலர் வளையங்களையும் மனது நிராகரித்தது என்பது பிறகு புரிந்தது .                  

Saturday, March 9, 2013

மருத்துவத்திற்க்கே மருத்துவம்

அரசு தேனீ மருத்துவக் கல்லூரியில் "தழல் 2012" எனப் பெயரிடப்பட்ட, தமிழ் மன்ற விழாவின் முதல் நாள் நிகழ்வில் பங்கேற்று , கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு , விழாவைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினேன் .

தாய் மொழியான தமிழின் தனிப் பெருமைகளையும் ,சிறப்புகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன் . மருந்துகளை விட, குணப்படுத்தும் ஆற்றல் மொழிக்கு உண்டு என்பதை அனுபவ உண்மைகளால் விளக்கினேன் .

வட கிழக்கு சீனாவில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான சீனர்களும் , ஆப்பிரிக்கக் கறுப்பின நீக்ரோப் பழங்குடி மக்களும், அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் ஆதிவாசிகளும் , தமிழ் நாட்டில் வாழும் பளியர் இனத்தைச் சேர்ந்த மலை வாழ் மக்களும் என உலகின் மக்கள் தொகையில் எழுபது சதவிகிதத்திற்க்கும் அதிகமான மக்கள் தங்கள் மண் சார்ந்த மருத்துவ முறைகளையும் , மருந்துகளையும் தான் இன்றைக்கும் பயன் படுத்துகிறார்கள் . அவர்களுக்கும் அலோபதி மருத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது . தங்கள் உடல் நலக்குறைவிற்காக அவர்கள் ஒரு "பேரா சிட்டமால்" மாத்திரை கூடச் சாப்பிட்டது இல்லை .

அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்தோடும் , ஆயுளோடும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . எனவே மருத்துவர்கள் இல்லாமல் மக்களால் வாழ முடியும்.
மக்கள் இல்லாமல் மருத்துவர்களால் வாழ முடியாது என்றும் அவர்களுக்குச் சொன்னேன் .

அதிலும் , சிறப்பு மருத்துவம் என்கிற பெயரில் மனித உடலைக் கூறு போட்டு சிகிச்சை செய்யும் முறை உலகின் மிகப் பெரிய மருத்துவ மேதைகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்கிற உண்மையையும் எனது உரையில் குறிப்பிட்டேன் . இப்படியே போனால் வலது காதுக்கு ஒரு மருத்துவரும் , இடது காதுக்கு ஒரு மருத்துவரும் என்கிற அளவுக்கு மருத்துவம் வணிகமாகி வருவதையும் எடுத்துரைத்தேன் .

மனித உயிரின் விலையை விடவும் , மருந்தின் விலை அதிகமாகி விட்ட இன்றைய உலகச் சூழ்நிலைமையில் மருத்துவத்திற்க்கே மருத்துவம் தேவைப்படுகிறது என்றும் அவர்களுக்குச் சொன்னேன் .

Friday, March 8, 2013

ஊர் கூடி இழுத்த தேர் அது

தமிழ்நாட்டில் இன்றைக்கு சமச்சீர் கல்வி அமலில் இருக்கிறதென்றால் அதற்கு தமிழக அரசு ஒரு போதும் காரணமல்ல .

சமச்சீர் கல்வி உருவாக வேண்டுமென மிக நீண்ட காலமாகப் போராடிய சில கல்வியாளர்களும், சில மனித உரிமைப் போராளிகளும், அவர்களது இயக்கங்களுமே அந்தப் பெருமைக்கு உரியவர்கள் .

அந்த மகத்தான இயக்கத்திற்குப் பங்களித்தவர்களில் பத்திரிகையாளர் திரு . சாவித்திரி கண்ணனுக்கும் காத்திரமான பங்குண்டு .கல்வி குறித்த அசலான அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதியவர் .

சமச்சீர் கல்வி அமலாக்கத்தில் தடைகளும் , தடுமாற்றங்களும் பெருகி இருந்த சமயத்தில் ,காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புத்தகத்தை எழுதிப்பிரசுரித்து சமச்சீர் கல்வி வருவதற்கான பொதுக் கருத்தை உருவாக்கப் பங்களித்த பெருமையும் அவர்க்குண்டு .அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்துச் சிறப்பித்தார் .




 " எனக்கு இல்லையா கல்வி ?" என்னும் ஆவணப் படத்தை  அந்தத் தருணத்தில்  இயக்கியதன் மூலம் எனக்கும் அந்த மகத்தான திருப்பணியில் பங்குண்டு

ஊர் கூடி இழுத்த தேர் அது . அதில் எனது கைகளும் இணைந்து  இருக்கிறது என்பது என் வாழ்நாள் பெருமிதங்களில் ஒன்று .


Thursday, March 7, 2013

" பழக்கத்தின் தடத்தில் இருந்து ". . .

 எனது முதல் சிறுகதைத் தொகுப்பான
"அப்பத்தா " வில் இடம் பெற்றுள்ள
 "லுங்கி '' என்னும் சிறுகதையை
 மறு பிரசுரம் செய்துள்ளது
மலேசியாவில் இருந்து
வெளியாகும் "நம்பிக்கை" என்னும் இதழ் .

அந்த இதழுக்கு எனது நன்றி . இது பிரசுரம் காண்பதற்குப் பொறுப்பான சகோதரர் ஜனாப்.
பியாதுல்லாவுக்கு எனது சிறப்பான நன்றி .

இந்த சிறுகதையை முதலில் பிரசுரித்த
"சண்டே இந்தியன் " வார இதழுக்கும் , அதன் பொறுப்பாசிரியர் நண்பர் சுந்தரபுத்தனுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லுகிறேன் .

இந்தக் கதையைப் படித்து விட்டு நான் மிக மிக மதிக்கும் பேராசிரியர் ச . மாடசாமி என்னிடத்தில் சொன்னார் . " பழக்கத்தின் தடத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு கதை . விடுவிக்கிற ஆள் நீங்கள் " என்றார் . இது போன்ற சொற்கள் தாயின் முலைப் பாலுக்கு நிகரானவை . அவர் பேசப் பேச நான் குழந்தையானேன் . அவர் எப்போதும் தாயுமானவர் .



Tuesday, March 5, 2013

அது ஒரு சந்தோசமான துயரம் .

 இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் , சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் .

எனது இயக்கத்தில் வெளியான "எனக்கு இல்லையா கல்வி ? " என்னும் ஆவணப் படம் மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றது .

அது ஒரு சந்தோசமான துயரம் .
விருது பெற்றது சந்தோசம் .
 ஆனால் , விருது மிக இளம் வயதில் காலமான என் மிக நெருங்கிய நண்பனும் , தோழனும் ஆன பா . ராமச்சந்திரன் நினைவு விருது .

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலகில் , உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே பேசிய கபடமற்ற மனிதன் .
மலர்ந்த புன்னகை ததும்பும் முகம் . கொஞ்சம் கனத்த சாரீரம் .
 வட சென்னைக் கலை இரவுகளில் பங்கு பெறப் போன தருணங்களில் , வரவேற்கும் அவனது கனிவை , அன்பை , தோழமையை இனி யாராலும் தர இயலாது . எப்போது தொலைபேசியில் பேசினாலும் காலக் கணக்கின்றி பேசிக் கொண்டே இருக்கும் அளவுக்கு செய்திகளும் , சிந்தனைகளும் கொண்டிருந்தான் .

என்ன இருந்தாலும் , நீ இவ்வளவுவிரைவாக விடைபெற்றுக் கொண்ட இருக்கக் கூடாது ராமச்சந்திரன் .அதிலும் , உன் நினைவாகத் தரப்படும் விருதை நான் வாங்கும் துயரத்தை எனக்கு நீ தந்து இருக்கவே கூடாது என் நண்பனே ....

மரணம் பெருமைக்குரியது என்கிறான் வள்ளுவன் .
உன் விசயத்தில் அது சிறுமையாகத் தான் நடந்து கொண்டது .

கனவு மெய்ப்பட வேண்டும் .

 எனது முதல் ஆவணத் திரைப்படமான ராமையாவின் குடிசை கீழ வெண்மணி குறித்த வரலாறு .

அது குறித்த ஒரு விமர்சனத்தை தான் நடத்தி வந்த "திரை " மாத இதழில் பிரசுரித்து என்னைச் சிறப்பித்தார் கவிஞரும் , அன்புத் தோழியுமான லீனா மணிமேகலை .

காத்திரமான ஒரு விமர்சனத்தை எழுதி இருந்தார் பேராசிரியரும் , தோழருமான அ. மார்க்ஸ் .

இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி . 

இந்த ஆவணத் திரைப்படம் தொடர்பாக எழுதப்பட்ட , பேசப்பட்ட அனைத்து வகையான விமர்சனங்களுக்கும் , பாராட்டுதல்களுக்கும் , வசவுகளுக்கும் , நான் இது வரை எந்த பதிலும் சொல்லவில்லை .

ஆனால் ,அவைகளுக்கு விடை சொல்லும் முகத்தான் கீழ வெண்மணி குறித்த ஆவணப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் . அதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் , தரவுகளும் என்னிடம் உள்ளன . ஆவணப் படத்தில் காட்சிப் படுத்த இயலாதவற்றை ஒரு புத்தகமாக எழுதி , அதனுடன் ஆவணப் படத்தை இணைத்துத் தர வேண்டும் என்பதும் எனது திட்டம் .

மிகுந்த நேரமும், உழைப்பும் , பொருளும் தேவைப்படுகிற காரியம் அது . எனது பெருங் கனவுகளில் இதுவும் ஒன்று ,
கனவு மெய்ப்பட வேண்டும் . கனவுகள் மெய்ப்படுகிற காலம் வரை, அவைகளின் வெப்பம் குறையாது மனசுக்குள் அடை  காக்கத்தான் வேண்டும்