Monday, May 13, 2013

அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?



இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள அறிவுத் திருக்கோவில் ஏற்பாடு செய்தது .

அறிவுத் திருக்கோவில், மகரிஷி வேதாத்திரி அவர்களின்  ஞான மரபைப் பின்பற்றி, போற்றி வாழும் அன்பர்களின் சங்கமம்.

அந்தத் தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வைத் துவங்கி வைக்கும் மகத்தான, பெரும் பேறு எனக்கு அமைந்தது.

முதல் அமர்வில், எனது ஞான குருவும், மகாகவியுமான சுப்ரமணிபாரதியைப் பற்றி பேசப் பணித்தார்கள் ,

ஒரு ஹிந்துவுக்கு காசியைப் போல், ஒரு முஹம்மதியனுக்கு மெக்காவைப்  போல், ஒரு கிருஸ்தவனுக்கு ஜெருசலேம் போல் எனக்கு எட்டயபுரம்.

 என் உயிரை உருக்கி, மனம் கசிந்து , காதலாகிக் கண்ணீர் மல்கி என் ஆசானைப் பற்றி 29.11.2009 ஆம் நாள் நடந்த முதல் அமர்வில் பேசினேன் .ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் பங்கு பெற்று , தங்கள் பங்கேற் பால் நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தார்கள் .

ஒரு தவம் போல உரையை அவதானித்தார்கள் . அப்படியான ஒரு சபையில் பேசுவது ஒரு சிறந்த அனுபவப் பொக்கிஷம் .

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில்,தமிழகத்தின் பெருமை மிக்க, அறிவிற் சிறந்த சான்றோர் பெருமக்களாகிய திருவாளர்கள் தமிழருவி மணியன்,  அறிவொளி, சுப. வீரபாண்டியன், கு.ஞானசம்பந்தன், நீலகண்டன், கனகசுப்புரத்தினம் எனப் பலரும் பேசிப் பெருமை சேர்த்தனர்.

முதல் அமர்வைத் தொடர்ந்து ஆறாவது அமர்வில் இந்தியத் தத்துவ  ஞான மரபின் மாபெரும் சிந்தனையாளன் சித்தார்த்த புத்தனைப் பற்றிப் பேச அழைத்தார்கள் . மீண்டும் ஒரு மகத்தான அனுபவம். இம்முறை கூட்டம் இரண்டாயிரத்தைத் தாண்டி இருந்தது .

 எனினும் அதே போலத் தவமிருந்த மேன் மக்கள் .இரண்டு தளத்திலும் நிரம்பி இருந்தார்கள் . ஒரு சிலர் தவிர எல்லோரும் குறித்த நேரத்தில் அரங்கில் இருந்தார்கள். சற்றே தாமதமாக வந்தவர்கள், வந்த தடம் தெரியாமல் கூட்டத்தில் கரைந்து கொண்டார்கள் .

புத்தனின் பூரண ஞானத்தை, அவன் பாமர மக்களின் மொழியில் பேசியதை, அவன் கடவுளை மறுத்ததை, தவத்தை, தேடலை அவைக்கு எடுத்து வைத்து, அவர்கள் புத்தனைக் காணச் செய்தேன்.

மீண்டும் வந்ததுஒரு வாய்ப்பு . அது இறுதியானதும், பதின்மூன்றாவதுமான நிகழ்வு . இம்முறை மகரிஷி வேதாத்திரி அவர்கள் முன் மொழிந்த பதினான்கு முக்கிய கோட்பாடுகளில் ஒன்றான "போரில்லா நல்லுலகு" என்கிற ஒன்றை மட்டும் முன் வைத்துப் பேசுவது எனப் பரஸ்பரம் பேசித் தீர்மானம் செய்தோம்.

இம்முறை முந்தைய நிகழ்வுகளையும் மிஞ்சி இருந்தது நிகழ்வு . அரங்கின் வெளியில் கூட அமர்ந்து , ஒரு சலசலப்பும் , சந்தடியும் இல்லாமல் பேசுவதை அவதானித்தார்கள் .

உலகில் நடைபெறும் அனைத்து வகையான போர்களையும் மகரிஷி எதிர்க்கிறார். அமைதி மட்டுமே மனிதனுக்கான வாழ் நெறி என்று தெளிவுற முழங்குகிறார் . ஆயுத வியாபாரமும், ஆயுத வியாபாரிகளுமே போர்களைப் பிரசவிக்கும் சாத்தான்கள் என்பதை மகரிஷி அறிந்திருந்தார். அதைத் தனது மொழியில் நேர்படச் சொன்னார். அதை விரிவாக, மேலும் வரலாற்றுச் செய்திகளோடு எனது பாங்கில் எடுத்து உரைத்தேன்.

ரொம்ப முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட மாட்டேன். ஒவ்வொருமுறையும் நிகழ்வு முடிந்ததும் அமைப்பாளர்களில் ஒருவர் மேடைக்கு வந்து நமக்கு நன்றி சொல்லும் தருணம் ...

 அவர் மேடைக்கு வந்து நமது பெயர் , நமது குடும்பம் ,நமது செயல்பாடு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சொன்னதும், அரங்கில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள்  ஒன்று சேர்ந்து , பிசிறின்றி , மனமுருக "வாழ்க வளமுடன்" என்று சொல்லும் விதம்.

 நீங்கள் ஆசீர்வதிக்கப்படும் தருணம் அது . மனம் , வெயிலில் வைத்த சாக்லேட் போல ஆகி விடும். அந்த மூன்று முறையும் , அந்தக்  குறிப்பிட்ட தருணத்தில் இறந்து போன அம்மாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. இதைப் பார்க்கவும், கேட்கவும் அவள் இல்லாது போன துயரம் காரணமாக இருக்கலாம்.

எதையோ எழுத வந்து எங்கோ தன் போக்கில் , நினைவின் பெரு  வெள்ளம் இழுக்கிற பாதையில் ஓடுகிறது எனது  எழுத்து. லகான் இல்லாத குதிரையை எதை வைத்து இழுத்து நிறுத்துவது  ... அது தானாகத் தான்  ஓடி நிற்க வேணும் . நிற்கிறது.

அந்தப் பதின்மூன்று அமர்வுகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளை  ஒலிக் குறுந்தகடாகப் {AUDIO CD } பதிவு செய்து  வைத்திருக்கிறார்கள். அதனைப் பெற விரும்புகிறவர்கள் எனது அருமை நண்பர் திருமிகு . அர்ஜுனன்  ( 99444 12888 )அவர்களைத் தொடர்பு கொண்டால் , அவர் உங்களுக்கு வழி வகை செய்து தருவார் .

 எனக்கும், அதன் தொகுப்பொன்றை தருமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன் . அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?

  

Wednesday, May 8, 2013

உரையின் சாரத்தை உணர்ந்து . . .


மே மாதம் முதல் நாள் ஈரோட்டில் உள்ள ஈ . பி  .ஈ .டி கல்வி நிறுவனத்தின் நிறுவனர்கள் தின விழாவில் பங்கு பெரும் வாய்ப்பு அமைந்தது .

ERODE BUILDERS EDUCATIONAL TRUST
 என்பதே    ஈ . பி  .ஈ .டி விரிவாக்கம் .

கட்டுமானத் தொழிலில் இயங்கும் நண்பர்களின் கூட்டுறவில் துவங்கப்பட்டு , நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது அங்கு இயங்கி வரும் பொறியியல் கல்லூரி .

உயர் கல்வி நிறுவனத்தை நடத்தும் அவர்களே , அதே வளாகத்திற்குள் பள்ளிக் கல்விக்கான பணிகளையும் துவங்க வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை சொன்னேன் . எனது ஆலோசனையைக் கடைப்பிடித்தால் அவர்களது எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும் .

அன்றைய விழாவில் பேசிய காத்திரமான கருத்துக்களைப் பிரசுரித்த தினமலர் நாளிதழுக்கு எனது நன்றி .

எனது உரையின் சாரத்தை உணர்ந்து அதனைச் செய்தியாக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த நிருபருக்கு என் மனமார்ந்த தனித்த நன்றி .  

Sunday, May 5, 2013

மஸ்கட் பெரிய பள்ளிவாசல் - வெளிப்புறம்




Add caption





இன்ஷா அல்லாஹ் . . .

அரபிக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஓமன்  நாட்டின் தலைநகரம் மஸ்கட் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை .

 பிரம்மாண்டம் , பேரழகு , தூய்மை அவைகளே அந்தப் புனிதமான வழிபாட்டுத் தளம் .

உலகின் ஆகச் சிறந்த வேலைப்பாடுகள் மின்னும் , சுத்தத்தின் தனித்த அடையாளம் . ஒரே சமயத்தில் பத்தாயிரம் பேர் வழிபாடு செய்யத்தக்க விதத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட அற்புதம் . பேரழகும் , பிரமிக்கத் தக்க வேலைப்பாடுகளும் கொண்ட அந்தத் தரை விரிப்பு இணைப்புகளே இல்லாத ஒரே விரிப்பு ஒற்றை விரிப்பு  . எந்த ஊரில் பாவு கட்டி, எப்படி நெய்து , எப்படிச் சுருட்டி.... இம்மி பிசகாத , மாறாத செய் நேர்த்தி . அதை உருவாக்கிய  கலைஞர்களை வியக்கிறேன் .


போன வேலைகள் எல்லாம் முடிந்த ஒரு நாளில் அருமைச் சகோதரர் ஜனாப் . முஹம்மது பஷீர் என்னை அங்கு அழைத்துப் போனார் . பஷீர் அன்பும் , அறிவும் நிறைந்த பண்பாளர் . பாலைப் பூக்கள் என்னும் சிறந்த கவிதை நூலின் ஆசிரியர் . மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மதிப்பு மிக்க நிர்வாகிகளில் ஒருவர் .


வெயில் ஏறிக் கொண்டிருந்த ஒரு காலையில் இந்தப் பள்ளி வாசலுக்கு என்னை அழைத்துப் போனார் . எத்தனை ஆயிரம் கார்கள் வந்தாலும் நிறுத்த ஏதுவாக இட வசதி. நிழல் தரும் மரங்களோடு அந்த இடம் முழுவதும் குளிர்ந்து இருந்தது . அத்தனையும் நன்கு வளர்ந்த வேப்ப மரங்கள் . வளாகம் முழுவதும் காய்ந்த சருகுகள் கூட இல்லாமல் தூய்மை, ஒரு நறுமணம் போலப் பரவிக் கிடந்தது . காரை விட்டு இறங்கும் வரை ஏதோ படித்துக் கொண்டிருந்த நான் , இறங்குகிற வரை  அந்தச் சுற்றுப்புறத்தைப்  பார்க்கவேயில்லை.


இறங்கி அந்தப் பள்ளிவாசலின் முகப்பில் நின்று அதனைப் பார்த்த நொடியில் எனது உடலெங்கும் , உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பெரும் சிலிர்ப்பு பரவியது . அதை இப்போதும் என்னால் உணரத்தான் முடிகிறதே தவிர , எழுதி முடியாது . பள்ளிவாசலை முழுவதுமாகப்  பார்த்து விட்டு வெளியேறுகிற வரை அந்தச் சிலிர்ப்பு தொடர்ந்தும் , விட்டு விட்டும் என் மீது பரவிக் கொண்டே  இருந்தது .


அப்படித் தாள முடியாத பரவசம் எதனால் எனக்கு நிகழ்ந்தது என்பதை என்னால் இப்போதும் கண்டறிய முடியவில்லை . உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டே இருந்தது மட்டுமல்ல ; கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டும் இருந்தது .  சகோதரர் பஷீர் வியப்போடும் , புன்னகையோடும் என் கைகளைப் பற்றிக் கொண்டார் . அப்போது பஷீர் தனது அலைபேசியில் பள்ளிவாசலின் மைய மண்டபத்தில்  எடுத்த புகைப்படங்களே இவை .


என்னைச் சிலிர்க்க வைத்த அந்தப் பள்ளிவாசலை, நான் எடுத்த புகைப்படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன் . இதே போல மேலும் இரண்டு அனுபவங்கள் எனக்கு இதற்கு முன்பும்  நேர்ந்து இருப்பதை நான் அந்தக் கணம் நினைத்துக் கொண்டேன் . பின் எப்போதாவது நான் அதை சொல்லக் கூடும் . இன்ஷா அல்லாஹ்.

Thursday, May 2, 2013

உங்களைப் போன்ற ஆசான்கள் இருந்தால்...

உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி நான் இயக்கிய நான்காவது ஆவணத் திரைப்படம் . இதனைத் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமே தயாரித்தது . சிறப்புற அதனை 30.09.2012 அன்று  வெளியீட்டும் எங்களைப் பெருமைப்படுத்தியது  . இது பற்றி எனது முந்தைய பதிவுகளில் நான் எழுதி இருக்கிறேன் .

இந்த ஆண்டு ஜனவரி மாத இதழில் அதற்கு ஒரு விமர்சனத்தைப் பிரசுரித்து எங்கள் பணியை அங்கீகரித்து , மேலும் பெருமை சேர்த்தது " செம்மலர் " இலக்கிய மாத இதழ் . செம்மலர் ஆசிரியருக்கும் , ஆசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி .

அந்த விமர்சனத்தை எழுதி இருந்தார் எப்போதும் என் மதிப்பிற்குரிய பேராசிரியர்  பி . விஜயகுமார் .அவருக்கும் எங்களது தனித்த நன்றி

பேராசிரியர் விஜயகுமாரை ஒரு உறுதி மிக்க தொழிற் சங்கத் தலைவராக நான் அறிவேன் . ஒரு ஆங்கில மொழிப் பேராசிரியராகப் பணி  புரிந்த அவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆசிரியர்கள் மன்றத்தின் பொதுச் செயலாளராகத் திறம்படச் செயல் புரிந்தவர் .

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குப் போராடிய அவர் ஒட்டு மொத்த கல்வித் துறையின் மேம்பாடு குறித்து விரிவாக , ஆழமாகச் சிந்தித்தவர் . ஒரு கல்லூரியில் , உயர் கல்வித் துறையில் வேலை பார்த்த போதும் அடிப்படையான ஆரம்பக் கல்வி குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் .

ஆரம்பக் கல்வியின் அடிப்படைகளைத் தகர்த்து விட்டு , சிறப்பான உயர் கல்வி  அமைப்பை உருவாக்க இயலாது என்கிற அறிவார்ந்த புரிதலும் , தெளிவும் கொண்ட சிந்தனையாளர் .

எல்லாவற்றிற்கும் மேலாக  அனைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் எந்த விதமான பாகுபாடுமின்றி தரமான , சமமான , கட்டணமற்ற கல்வி தரப் பட வேண்டும் என்கிற கோரிக்கையில் , முழக்கத்தில் , கொள்கையில் சமரசமில்லாத பிடிப்புக் கொண்டவர் .

தமிழகத்தில்  பள்ளிக் கல்வியின் நிலை , தரம் , தேவைகள் , உரிமைகள் என பல அம்சங்களை ஆராய்ந்த  "எனக்கு இல்லையா கல்வி ?' என்னும் எனது முந்தைய ஆவணப்படத்திற்காக அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. எந்த "பந்தாவும்" இல்லாமல் பேட்டிக்கு ஒப்புக் கொண்டார் . குறித்த நேரத்தில் தயாராக இருந்தார் .

.அனைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற கோரிக்கையின் நூறாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை , அதன் ஏற்ற இறக்கங்களை , அதனை முன்மொழிந்தவர்களை , எதிர்த்தவர்களை , அரசுகளின் அணுகுமுறைகளை , மோசடிகளை என எல்லாவற்றையும் கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் மடை திறந்த வெள்ளமென ஒரு மணி நேரம் சாட்சியமளித்து எங்களுக்கு ஒரு சேர வியப்பும் , அறிவும் ஊட்டினார் .

அவரது சாட்சியம் மட்டுமே ஒரு தனித்த ஆவணப் படமாகும் அளவு வரலாறும் , தரவுகளும் , செய்திகளும் கொண்டதாக இருந்தது .  இன்றைய பள்ளிக் கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை அவர் விவரித்த விதமே தனிச் சிறப்புடையது . ஆவணப் படத்தை இறுதிப் படுத்துகிற சமயம் அவரது சாட்சியத்தின் சில பகுதிகளைத்தான் படத்தில் சேர்க்க முடிந்தது .

மெல்லிய , உறுதியான , தெளிவான , குரலில் அவர் அதனை எங்களுக்கு அளித்தார் . நிறை குடம் அவர் . அப்போது அவரிடம் "நன்றி" என்ற ஒரு வார்த்தை தவிர எதுவும் நான் சொல்லவில்லை.

அத்தகைய மதிப்பு மிக்க மனிதர் வாச்சாத்தி ஆவணப் படத்தைப் பார்த்து விட்டு , ஒரு அரை மணி நேரத்திற்கும் மேலாக என்னோடு அலைபேசியில் பேசினார் . கண்கள் கலங்க , கண்ணீர் பெருக அதனைப் பார்த்ததாகச் சொன்னார் . அதன் உருவாக்கத்திற்காக எங்களை  மனசார வாழ்த்தினார் . சில வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அவைகளையும் நீங்கள் படமாக்க வேண்டும் . அது உங்களால் முடியும் என்றார் .

அறிவும், தெளிவும், சிந்தனையும், செயலும் மிக்க உங்களைப்  போன்ற ஆசான்கள் இருந்தால்... அவர்களது வழிகாட்டுதலும் வாழ்த்தும் இருந்தால் எங்களால் எதுவும் முடியும் ப்ரொபசர் விஜயகுமார் .