Tuesday, March 13, 2012

அப்பத்தா- ஒரு சீரிய சிறுகதைத் தொகுப்பு.



ந்த சிறுகதைத் தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்தபோது, முன்னுரையில் நீர் கட்ட ஆரம்பித்த விழித்திரை, தொகுப்பின் கடைசிக் கதையான கல்பனாவின் கடைசி ஐந்து புள்ளிக்கு வரும்வரை விலகவே இல்லை.
ஆனாலும் மனது, கண்களை மீறி படித்தது.

ரு கதையை உணர்தல் எவ்வளவு பெரிய பேரனுபவம்! இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது வாய்க்கிறது.

லியை முறியடிக்க, வலிக்குள்ளாகவே பயணித்து, வலி மறக்க செய்யும் ஒரு வித மனோதத்துவ போதனை தொகுப்பில் நெடுக வருகிறது.

தீக்குள் விரலை வைத்து நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கண்டவனின் வாரிசுகளுக்கு மட்டுமே இது சாத்தியம்.

பதேசிகள் நம் மீது நிகழ்த்தும் வன்முறையினை நூலாசிரியர் சொல்லும் விதம் சுந்தரமாக இருக்கிறது.
" நாம் உணர்ந்த உண்மைகளையே, உபதேசங்களாக நமக்குச் சொல்லப்படும் தருணங்கள் சாபம் மிக்கவை. மூளையெங்கும் கசப்பின் வீர்யம் பரவி தலை தெறிக்க ஆரம்பிக்கும். கசப்பின் துகளோ கீழிறங்கி உள் தொண்டைக்குள் சொட்டும். அது தெறித்த இடங்களில் தோல் தடிமனாகிப் பருத்து, தொண்டை கசந்து,குரல் சிதறும். வாயெங்கும், வயிறெங்கும், பூச்சி மருந்தின் வாசம் குமட்டும்."

மின் விளக்கைப் போடுவதும் அணைப்பதும் போலத்தான் மனிதர்கள் போகித்துக் கொண்டிருகிறார்கள் . அதன் உள் மின்சாரத்தை ஒருவரும் உணர்வதில்லை என்றார் ஓசோ.
" ஒன்றை ஒன்று அவிக்காது , ஒன்றை ஒன்று வீழ்த்தாது , இரட்டை நாதஸ்வர இசை அருவியாய் பயணித்து சம கால சம்போகத்தின் போது அறையை நிறைக்கும் நறுமணம்"  தம்பதிகள் இருவரும் ஒத்திசைவாய் ஒரு புள்ளியில் குவியும் போது மட்டுமே சாத்தியம் என்றும் அப்படி இல்லாத ஒரு கூடலில், "பலாத்காரத்தின் துர் நாற்றம் மட்டுமே உயிர்ப் பாதையில் வேட்டை நாயென விரைந்து செல்லும்" என்று வெகு அற்புதமாக ஒரு கதையில் குறிப்பிடுகிறார்.
உறவுகளையும் , சொந்தங்களையும் குழந்தைகளாக நாம் பார்த்தபோது வந்த உணர்வுகளை வெகு அழகாக சில வரிகள் ஞாபகப் படுத்துகிறது.

" துள்ள துடிக்க மீன்களை அறுத்து சுடுசாம்பலில் புரட்டியவாறே பிள்ளகளுக்கு பாடம் சொல்லித்தரும் அம்மா"

" உள்ளங்கையளவு நார்த்தைகளும், நெல்லியளவு பூத்த அருநெல்லிகளும், பெரியம்மாவின் கன்னம் போல் செழித்த எலுமிச்சைகளும் "

" பர்மாவிலிருந்து வந்த பீங்கான் ஜாடிகளில் மணத்துக் கிடக்கும் புதுப் புளி"

" பச்சைப் பனைமட்டைக் கூம்புக்குள் , குவிந்து வரும் இளம் நுங்குகளை நிறுத்தி வைத்த இடத்தில் சுற்றி வரும் பனஞ் சாற்றின் மணம் ஞாபகப்படுத்தும் தாத்தாவின் பழைய புத்தக வாசனை"

" ஒருவரை ஒருவர் தவறிக் கூட தொட்டு விடாமலும் , மோகத் தீ அணைந்து விடாமலும் கவனமாக இருந்த அப்பாவும் பெரியம்மாவும்"

" ஒரு விலங்கின் தவிப்போடும் , பறவையின் பதற்றத்தோடும் , மூர்க்கங்களின் பின் நிறைந்த குழந்தைத் தனத்தோடும், நிதானத்தின் பின் இருக்கும் பசித்த ஒரு விலங்குத் தனத்தோடும் இருக்கும் அப்பா"

வெளியில் இருந்து கொண்டு , வெளி விஷயங்களை மட்டுமே போதிக்காமல் , உள் இறங்கி, உள் வாங்கி, ஒவ்வொருவரின் உள்ளேயும் போய் உட்கார்ந்து கொள்கிறார் இந்த நூலாசிரியர்.,

ம்மாவும்,அத்தையும், அப்பாவும், தாத்தாவும், அப்பத்தாவும், சிநேகிதியும் என்று சீதாராமையர் காம்பவுண்டில் இருந்து ஆரம்பிக்கும் இவரின் முதல் தொகுப்பே மிரளச் செய்கிறது. அன்னைத்தமிழ் தன்னிடம் உள்ள வசீகர வார்த்தைகளை எல்லாம் இவருக்கு தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள் 

நூலாசிரியர் பன் முகம் கொண்ட ஒரு கநோசியர் (connoisseur) என்பதை நான் அறிவேன் . மேடைஅனுபவங்கள், அறிவொளி அனுபவங்கள், அரசியல் முகாம்கள், வங்கி தொழிற்சங்க அனுபவங்கள், கல்லூரிக்  கலாட்டாக்கள், கலை இரவுகள், இலக்கிய வட்டம், இனியர் வட்டம், திரை அனுபவங்கள், குறும்பட அனுபவங்கள் என்று பரந்து கிடக்கும் அனுபவங்களுடன் ...இவர் தொடர்ந்து தமிழுக்கு அணி செய்வார் என்பது எனது விருப்பமும் . நம்பிக்கையுமாகும் .


- சுதா. இளங்கோவன் 

னது அருமை நண்பன் இளங்கோவின் இந்த விமர்சனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ,ஆற்றலையும் எனக்கு அளிக்கிறது. 

ரண்டொரு நாட்களுக்கு முன் , என்னோடு பேசிக்கொண்டிருந்த என் தோழி சொன்னாள் . 'நம் நலம் நாடுகிறவர்கள், எப்போதும் நம்மை சுற்றி இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் . ஏனெனில், நம்மை வீழ்த்த விரும்புகிறவர்கள் எப்போதும் சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள்"
அன்றாடம் இப்படி ஏதேனும் ஒன்றை, எங்கிருந்தேனும் திரட்டி , எனக்குப் புகட்டி எனக்கு அறிவூட்டிக் கொண்டே இருக்கிறாள் அவள் .இந்தக் கணத்தில், அவளுக்கு நன்றி சொல்கிறேன் .

ந்த வகையில் இளங்கோவின் எழுத்து என்னைச் சுற்றி நிற்கும் நலன் ... மாசற்ற நன்மை .அதனை நான் உணர்ந்ததன் அடையாளமாக , எனது தொகுப்பின் பின் அட்டையில் என் தொகுப்பு குறித்த சிறு குறிப்பினை (blurb) அவன் தான் எழுத வேண்டுமென விரும்பினேன் . அவ்வாறே அது நிகழ்ந்தது .. நன்றி இளங்கோ... நன்றி.

Blurb எனப்படும் அந்த சிறு குறிப்பு:
பாரதி கிருஷ்ணகுமாரின் படைப்புலகம் அக உணர்வுகளின் மாண்பை உன்னதமாகச் சித்தரிக்கிறது. கபடமில்லாத மனிதர்கள் கதைகளில் நெடுக வலம் வருகிறார்கள்.ஒவ்வொரு கதையும், நமக்குள்ளே பல்லாண்டுகளாக உறைந்து கிடக்கும் பேரன்பை உருக்கிக் கண் வழி நீராக்கும் வல்லமை கொண்டவை. பாசாங்கற்ற கதைக் களங்களும், இயல்பான செய்நேர்த்தியும் வசீகரமானவை.

Saturday, March 10, 2012

ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ...

ணக்கம்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு நாளில் , நானும் தொலைக்காட்சியில் நடக்கும் TALK SHOW ஒன்றில் பேசினேன்.
எதற்கு என்று கேட்கிறீர்களா ?

ல்லோராலும் பார்க்கப்படுவதற்கு அதை விடச்  சிறந்த வழி எதுவுமில்லை. 
அதில் பார்த்ததும், கூப்பிட்டு ... நீங்க பேசுறீங்க !!! என்று வியக்கும் குரல்களைக் கேட்கலாம்.
விவாதப்பொருள் நமக்கு இசைவானதாக இருக்கலாம்.
தொலைக்காட்சியில் தோன்றினால் தான் இயங்குகிறோம் என்று நம்புகிறவர்களை சந்தோஷப் படுத்தலாம்.
இது எல்லாமும் சேர்ந்த ஒரு மன நிலை கூடக் காரணமாக இருக்கலாம் .....

னால், எனக்கு அந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரி நண்பர் ANTONY இன் அழைப்பை நீண்ட நாட்களுக்கு நிராகரிக்க இயலாமல் போனது தான் காரணம் .....



நாளை ,11.03.2012 ஞாயிறு இரவு ஒன்பதரை மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நானும் பேசுகிறேன் ..... முடிந்தால் கேளுங்கள் .. அல்லது பாருங்கள் ....
நன்றி .