Friday, December 31, 2010

அம்மாவுக்கு சொன்ன கடைசிக் கதை

அம்மா இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது . அம்மா இறந்த அன்று மாலையே , மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்வது என்று முடிவு . சென்னையில் இருந்து அக்கா வருகிற வரை வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால் மயானத்தில் காத்திருப்பதென்று தீர்மானமாகி இருந்தது . மயானத்தில் காத்திருந்தோம் . இரண்டு அல்லது மூன்று மணி நேரமாகும் என்றார்கள் . அப்பா , அவரது நண்பர்கள் , உறவினர்களுடன் ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார் . நான் அம்மாவுக்கு பக்கத்தில் இருந்தேன் . கொஞ்ச நேரம் கழித்து , நண்பர்கள் என்னைத் தனியே அழைத்துப் போய் புகைக்க ஒரு சிகரெட் கொடுத்தார்கள் . சௌபா@ சௌந்தரபாண்டியன் , தர்மா,முரளி,தங்கமாரி,ரவி,எழிலரசன்,ராஜாராம்,குணசேகரபாண்டியன்,சுந்தரமூர்த்தி , சங்கரநாராயணன் என்று பத்துப் பதினைந்து நண்பர்கள் சுற்றி இருந்தார்கள் .. யாரோ என்னைக் கதை சொல்ல சொன்னார்கள் . யாரோ அதெல்லாம் வேண்டாம் என்றார்கள் . நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் . எல்லோரும் மௌனமாகக் கதை கேட்டார்கள் , அந்தோன செகாவ்வின் "ஆறாவது வார்டு " கதையைச் சொன்னேன் . கொஞ்சம் பெரிய கதை .கதை எல்லா அம்மாக்களின் வாழ்வோடும் ஒரு வகையில் தொடர்புடையது தான் .கதை சொல்லி முடித்த அரை மணி நேரத்தில் அக்கா வந்து சேர எல்லாம் முடிந்தது.

போன வாரத்தில் இந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது சௌபா சொன்னான் . "அது நீங்க எங்களுக்குச் சொன்ன கதையில்ல BK....கதைகள் சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை " என்று . இருவரும் பிறகு பேசிக் கொள்ள முடியவில்லை . அவன் அழுதது எனக்குக் கேட்டது . நான் அழுதது அவனுக்கும் கேட்டிருக்கும் .

Thursday, December 30, 2010

யாசகம்

எதையும் , எதன் பொருட்டும் , யாரிடமும் யாசிக்காதீர்கள் .
யாசிப்பு மேலும் தரித்திரத்தைக் கொண்டு வரும்.

பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

கூடு

வெறும் குச்சி ,முள் , கம்பு ,இவைகளைக் கொண்டு தான் ஒரு பறவை கூடு கட்டுகிறது . உடலில் ரோமமற்ற அதன் குஞ்சுகளுக்கு அது பட்டு மெத்தையாக இருக்கிறது . ஏனெனில் அது அன்பினால் ஆக்கப்பட்டிருக்கிறது .
விலை உயர்ந்த பட்டு மெத்தையில் உறக்கம் வராமல் தவிக்கிறான் மனிதன் .

பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

Wednesday, December 29, 2010

நீ சொன்னது தான் நடந்தது அம்மா

பொறுப்பற்றவனாக 
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக
சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,
போதையில் திரிபவனாக
தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக
பெண் பித்தனாக
சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக
எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக
நான் ஆவேன் என்று
மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து
நீ சொன்னது தான் நடந்தது அம்மா.
-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

லுங்கி

அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்தபோது, சித்திக் பாய் தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால், அப்பா மல்லுக்கு நிற்பார். அல்லது அப்போதைக்கு மௌனமாக இருந்து விட்டுப் பிற்பாடு தனது “ஆட்களிடம்“ சொல்லி நியாயம் கேட்ட ஆளை ஒரு வழி பண்ணி விடுவார். சித்திக் பாய் அப்படி ஏதுவும் செய்ய இயலாத தோற்றத்தில் இருந்தார். அவரது உடையும், தாடியும் வெண்மையில் ஒன்றோடொன்று போட்டி இட்டது. இளஞ்சிவப்பு நிறமும், கருணை ததும்பும் கண்களும், கன்னங்கரிய கூட்டுப் புருவங்களும், நெற்றியில் தொழுகை தந்த தடமும் அப்பாவை அடக்கி விட்டது. தொழுகை செய்த தடம் பிறை போல இருந்தது பேரழகு இதையெல்லாம் விட, சித்திக் பாய் அப்பாவை விடப் பணக்காரர் என்கிற காரணமே அப்பா அடங்கி விடப் போதுமானதாக இருந்தது. 
தன் வஞ்சகமெல்லாம் சாதுர்யமென்றும், பொய்களெல்லாம் உபாயங்களென்றும் பொருத்திக் கொண்டார் அப்பா. அவருக்குள்ளேயே பொய்களை உருவாக்குவதில் நடந்த போட்டிதான் அவரை வாழ்வில் வெற்றி பெற வைத்திருக்கிறது என்று திடமாக நம்பினார். எங்களைத் தேடி நண்பர்கள் யார் வீட்டுக்கு வந்தாலும், அவர்களைப் பற்றிய முழுமையான ஆய்வை அப்பாவே செய்வார். “உங்க வீடு எங்க இருக்கு?“ “சொந்த வீடா, வாடகை வீடா?“ “உங்கப்பா என்ன வேலை பாக்குறாரு“ “மொத்தம் எத்தனை குழந்தைங்க?“ “என்ன ஆளுங்க?“ “சொந்த ஊரு எது?“ கேள்விக்கான விடையில் தான் நட்பு தீர்மானிக்கப்படும். நண்பர்கள் ஏழைகளாக இருந்து விட்டால், “பத்துப்பைசா பெறாத நாதாரிங்க கூடல்லாம் இது சேருது பாரு“? என்று அம்மா மீது விழுந்து புடுங்குவார். வசதியான குடும்பத்துப் பையன்களுக்கு உபசரிப்பும், கரிசனையும் வீடே மலைத்துப் போகும். எங்கள் நண்பர்கள் யாரும் முஸ்லீமாக இருக்கக் கூடாது. வீட்டில் யாரும் லுங்கி கட்டக் கூடாது. இதில் அப்பா சமரசமே செய்து கொண்டதில்லை. சித்திக் பாய் மீதான அவரது கோபம், முஸ்லீம்களின் மீதான கோபமாகத் திரிந்திருந்தது. முஸ்லீம்களின் மீதான கோபமோ, லுங்கியின் மீதான கோபமாகச் சிதைந்திருந்தது. 
அப்பா, அண்ணா, தம்பி என மூன்று பேருமே நாலு முழ வேட்டிக்குப் பழகி இருந்தார்கள். எனக்கோ, அது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்தது. இரவெல்லாம் அது விலகாமல் கவனமாக இழுத்து விட்டுக் கொண்டே இருப்பதும், விடியற்காலையில் அது ஒரு புறமும், நான் ஒரு புறமுமாகக் கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. என் உறுதிமொழிகளை ஒருநாலு முழ வேஷ்டி பொருட்படுத்தவேயில்லை. அண்ணனும், தம்பியும் போட்ட இடத்தில், போட்டபடி படுத்துக்கிடப்பார்கள். அம்மா இன்னும் விசேஷம். ஒட்டுகிற பொட்டு அல்ல வைத்த பொட்டு வைத்தது மாதிரி எழுந்திருக்கிற மகாலட்சுமி. அப்பா சொல்லி வைத்தது மாதிரி இரண்டு முறை புரண்டு படுப்பார். இதுவும் போதாதென்று, எந்தக் கோடையிலும் ஒரு போர்வையை மார்புவரை போர்த்திக் கொள்கிற பழக்கமும் வீட்டில் எல்லோருக்கும் இருந்தது.
எனக்குப் போர்வை ஆகாது. வியர்த்துக் கொட்டிவிடும். மொத்தத்தில், லுங்கியைப் போல மானம் காக்கிற ஆடை எதுவுமில்லை. இஸ்லாம் இந்தியாவுக்குக் கொண்ட வந்த அற்புதங்களில் லுங்கியும் ஒன்று. பாவாடைக்கும், லுங்கிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெண்களின் கற்புக்குக் காட்டிய தீவிரத்தை தமிழர்கள் ஆண்களின் கற்புக்குத் தரவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்படத்தான் வேண்டும். லேசாக அழுக்குப் பட்டாலும் வேஷ்டி காட்டிக் கொடுத்துவிடும். லுங்கி அப்படியில்லை. இரண்டொரு நாள் காப்பாற்றும். தண்ணீர்ப்பஞ்சம் தலை விரித்தாடுகிற ஊரில் இருந்தால் தான் இதன் அருமை தெரியும். 
பகலில், காலேஜ் ஹாஸ்டலில் நண்பர்களின் அறையில் ஓரிரு முறை லுங்கி கட்டிக் கொள்ளக் கிடைத்திருக்கிறது. அதெல்லாம் போதுமானதாக இல்லை. ஒரு இரவு முழுவதும் கட்டிக் கொண்டு உருளுவதற்கு மனசு ஏங்கிக் கிடந்தது. இரவில், வெளியில் தங்குவதற்கு அப்பா ஒரு நாளும் அனுமதிப்பதேயில்லை. பொழுது சாயத் துவங்கியதும், பிள்ளைகள் மூன்று பேரும் வீடு திரும்பி விட வேண்டும். ஒரு விலங்கின் தவிப்பும், பறவையின் பதற்றமும் அவருக்குள் மீதமிருந்தது. எல்லாக் குற்றங்களும் இரவில் மட்டுமே நிகழ்வதாக அப்பா நம்பினார். அப்பாவின் மூர்க்கங்களுக்குப் பின்னே ஒரு குழந்தைத்தனமும், நிதானங்களுக்குப் பின்னே ஒரு பசித்த விலங்கும் இருந்தது புரிந்து கொள்ளவே இயலாத முரண். சாப்பிடுகிற போது கூட்டையோ, பொறியலையோ சோற்றுக்குள் வைத்துப் புதைத்து மறைத்துச் சாப்பிடுகிற பழக்கம் அப்பாவுக்கு இருந்தது. அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியவே முடியாது, என்பதற்கு அம்மா அதைத் தான் உதாரணமாகக் காட்டுவாள். ஒரு இரவு கூட, எங்களைப் பிரிந்து அப்பா இருந்ததேயில்லை. 
வேலை கிடைத்து, சாத்தூரில் போய் வேலைக்குச் சேருகிற வரை இந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றமே இல்லை. சாத்தூருக்கு வந்த முதல் மூணு நாளும் நிஜாம் லாட்ஜில் கூடத் தங்கி இருந்து, தங்க வைப்பதற்கு இடம் தேடி, ஊரெல்லாம் விசாரித்து விட்டு, மணி சங்கர் பவனில் தங்க வைத்தார் அப்பா. வீடு என்றும் ஒப்புக் கொள்ள முடியாத, லாட்ஜ் என்றும் நிராகரிக்க முடியாத அமைப்பில் இருந்தது மணி சங்கர் பவன். எதிர் எதிரே முகம் பார்த்தது மாதிரி கிழக்குப் பார்த்து ஆறும், மேற்கு பார்த்து ஆறுமாக பன்னிரெண்டு குட்டி வீடுகள். வேறு வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கிற, எல்லா வயது ஆண்களும் குடியிருந்தார்கள்.
தெற்கு வடக்காக நடந்தால், எல்லா வாசலுக்கும் அழிக்கம்பிகள் போட்டு, சின்னச் சிறைச்சாலை போல இருந்தது தான் அப்பாவைக் கவர்ந்திருக்க வேண்டும். மூணு நாளும், அப்பா புத்திமதிகள் சொல்லிக் கொண்டேயிருந்தார். சாயங்காலம் ஆபீஸ் முடிந்ததும் அறைக்குத் திரும்பி விட வேண்டும். இரவில் எங்கும் திரியக்கூடாது என்பதை, முதலிலும் கடைசியிலும் மறக்காமல் சேர்த்துக் கொள்வார். முதல் சம்பளத்திற்கு இன்னும் இருபத்தி மூன்று நாட்கள் இருந்ததால் கைச் செலவுக்கு காசும் கொடுத்தார். “நீ சம்பாதிச்சு என்னைக் காப்பாத்த வேணாம், உன்னைக் காப்பாத்திக் கிட்டாபோதும்“ என்று எல்லா அப்பாக்களும் சொல்லும் வார்த்தையைக் கடைசியாகக் கண் கலங்க சொல்லி விட்டு, ஊருக்குப் போனார். 
முதல் சம்பளம் வாங்கியதும் அம்மா அப்பாவுக்கு அனுப்புவது, குல தெய்வத்திற்குக் காணிக்கை போடுவது போன்று ஒவ்வொருவருக்கும் ஒரு நேர்த்திக் கடன் இருக்கவே செய்யும். எனக்கானால், ஒரு லுங்கி வாங்க வேண்டும். அப்பா கொடுத்த காசில் லுங்கி வாங்க ஒப்பவில்லை. சம்பளம் வாங்கியதும், வெளிநாட்டுச் சாமான்கள் விற்கிற அந்தோணி கடையில், தொண்ணூறு ரூபாய்க்குப் பாலியஸ்டர் லுங்கி வாங்கி, இந்தியன் டெய்லரிடம் கொடுத்து மூட்டி, அறைக்கு வந்து குளித்து விட்டு லுங்கி கட்டிக்கொண்ட சுகத்தை, எழுத்தில் கொண்டு வர முடியாது.
கோழி முட்டையின் ஓட்டை ஓட்டினாற்போல இருக்கும் மெல்லிய சவ்வாக லுங்கி வழுக்கியது. வெளிநாட்டு சோப்புகள், வாசனைத் திரவியங்கள் பட்டதால், லுங்கிக்கு ஒரு வசீகரமான மணம் வேறு இருந்தது. இரண்டு நாளும் ஆபீஸ் நேரம் போக, மீதி நேரமெல்லாம் லுங்கிக்குள் தான் இருந்தேன். துவைக்க மனமில்லை. மெஸ்ஸுக்குச் சாப்பிடப் போகிறபோதெல்லாம் எல்லோரும் அதைப் பார்ப்பதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றிரண்டு பேர் தொட்டுப் பார்த்து, விலையும் கேட்டது ரொம்ப நிறைவளித்தது. லுங்கிக்குள் படுத்திருந்ததும், அது விலகும் என்கிற கவலையின்றி உருண்டு படுத்து உறங்கியதும் சுயசரிதையில் எழுத வேண்டிய செய்திகள். எவ்வளவு உருண்டு படுத்தும், மானம் காத்தது லுங்கி. வேட்டிய கட்டிய நினைப்பில், கைகள் அதை இழுத்து விடப் போவதும், பிறகு மெல்லிய புன்னகையுடன் விரும்பிய திசைக்கு உருண்டு படுத்துக் கொண்டதும், இரண்டு இரவுகளிலும் நடந்தது. 
மூன்றாவது நாள் காலை லுங்கியைத் துவைத்தேன். முறுக்கிப் பிழியவில்லை. பாலியஸ்டர் துணிகளை முறுக்கிப் பிழியக் கூடாது என்கிற நடைமுறை  விஞ்ஞான அறிவு எனக்கும் இருந்தது. அதிகம் வெயில் படாத இடமாகத் தேர்ந்தெடுத்து, காயப்போட்டேன். மூன்று கிளிப்புகளைச் சரியாக இடைவெளி கொடுத்து மாட்டினேன்.          ஆபீஸில் இருந்த போது, காற்றிலாடியபடி அது காய்ந்து கொண்டிருக்கும் காட்சி இரண்டொரு முறை கண்ணில் தெரிந்தது. மாலையில் அறைக்குத் திரும்பியதும் மொட்டைமாடிக்குத் தான் போனேன். போட்ட இடத்தில் லுங்கி இல்லை. எல்லா இடத்தில் தேடியும், எல்லோரிடமும் கேட்டும் லுங்கி கிடைக்கவேயில்லை. மணி சங்கர் பவனில் இருக்கிற எல்லோர் மீதும் சந்தேகம் வந்தது. தொலைந்தது நமது பொருளாக இருந்தால், யாரையும் சந்தேகிக்கிற அளவு புத்தி தாழ்ந்து போய் விடுகிறது. லுங்கி தொலைந்ததை விடவும், இந்த எண்ணம் மிகுந்த துயரமளித்தது. மறுநாள் வேறு ஒரு லுங்கி வாங்கினாலும், அந்த லுங்கியை மறக்கவே முடியவில்லை. 
சாத்தூருக்கு வந்த புதிதில், பெருமாள் வாத்தியார் தான் மணி சங்கர் பவனில் இடம் பிடித்துக் கொடுத்தார். அப்பாவுக்கு யார் மூலமாகவோ அறிமுகம். வாத்தியாரிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என்று அப்பா சொல்லியிருந்தார். ஏதாவது அவசரம், தேவை என்றால் மட்டும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அப்பா சொன்ன ஆலோசனை. நல்ல உயரத்தில், கம்பீரமாய், செதுக்கப்பட்ட மாதிரியான முகவெட்டுடன், வித்தியாசமான புன்னகையுடன் இருந்தார் பெருமாள் வாத்தியார். அரசியல், இலக்கியம், தத்துவம், பூகோளம், பொருளாதாரம், மதம், சாதி என்று எதைப் பற்றியும் விரிவாக, ஆழமாக, முற்றிலும் புதியதாகப் பேசினார் வாத்தியார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கிடைக்கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு தாய்க்கோழி எட்டு பத்து குஞ்சுகளுடன் இரை தேடிப் போவது மாதிரி தான் வாத்தியார் வருவதும் போவதும் நடக்கும். அப்பா “சொன்னதற்காகவே“ அவரிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். உண்மை ஒளிரும் அவரது சொற்களால், அவர் விதைத்ததெல்லாம் வியப்பட்டும் சித்திரங்கள். ஊருக்கே பொதுவாக ஆறு ஓடினாலும், ஆற்றுக்குள் குளிப்பதற்கு சாதிவாரியாக உறைகள் (ஊற்றுக்கண்) போடப்பட்டிருப்பதை அவரே காட்டினார். தான் சாதி கெட்டவர்களுக்கென்று தனி உறை போட்டிருப்பதையும், “புத்திக்குள்ள சாதி இல்லாதவங்க“ அதுல குளிக்கலாமென்றும் சொன்னார். அந்த ஊரில் மட்டுமே இருந்த நிப்புத் தொழில் பற்றி நிறையப் பேசினார்.
நூற்றுக்கணக்கான நிப்புத் தொழிலாளிகளின் தலைவிதியை பால் பாயிணட் பேனாக்களின் வருகை மாற்றி எழுதி விட்டதையும், ஆறே மாதத்திற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட நிப்புப் பட்டறைகள் மூடப்பட்டதையும் மெஸ்ஸுக்குப் போகிறபோது காண்பித்தார். போதாக்குறைக்கு, முழுக்க முழுக்க இயந்திரத்தால் செய்யப்படும் மெழுகுத் தீப்பெட்டிகளின் வருகை வீடுதோறும் கையால் தீக்குச்சிகளை அடுக்கி, மருந்து முக்கித் தரும் சிறு தொழிலை பிரித்துப் போட்டதும் ஊரில் நிலவும் வறுமைக்குக் காரணம் என்றார். மழை அறியாத அந்தக் கந்தக பூமியில், ஒரே வருடத்திற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து, மாற்று வேலையும் கிடைக்காது வீதிக்கு வந்து விட்டதை, அவ்வப்போது நடக்கும் சிறு திருட்டுக்கள் உறுதி செய்வதாக, கண்கள் பனிக்க வாத்தியார் பேசிக் கொண்டேயிருந்தார். லுங்கி காணாமல் போனது கூட இதன் தொடர்ச்சியே என்றும், துணிகள் திருடுகிற அளவு வறுமை வலுத்திருப்பது துயரமளிக்கிறது என்றும் திருகிய குரலில் சொன்னார் பெருமாள் வாத்தியார்.
பதினைந்து நாளாகிறது லுங்கி தொலைந்து. தொடர்ந்த எனது துப்பறியும் வேலைகள் எந்தப் பலனும் தரவில்லை. உலகில் எத்தனையோ சமூக பிரச்சனைகள் இருந்தபோதும், என் லுங்கி தான் எப்போதும் என் புத்தியில் நின்றது. லுங்கியை மறப்பது என் அறிவை விசாலப்படுத்தும் என்பது தெரிந்தும், நினைப்பு நீங்கவேயில்லை. இரவு மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதற்குக் கூட வழியில்லாத, வகையில்லாத ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டுமென்று பெருமாள் வாத்தியார் சொன்ன கணத்தில், புத்தி மடை மாறி ஓடியது. “எடுத்துக் கொண்டவனே அதை சந்தோஷமாக அணிந்து கொள்ளட்டும்“ என்று ஒரு குரல் எனக்குள் கேட்டது. என் வளர்ப்பிற்கு, வாழ்க்கை முறைக்கு எனக்குள் இருந்து, இப்படியொரு குரல் வந்தது எனக்கே திகைப்பளித்தது. மனதை லேசாக்கி  இருந்தது. இரவு உறங்கிப்போன போது லுங்கியின் நினைப்பில்லை. காலையிலும் கூடத்தான். ஆற்றுக்குக் குளிக்கப் புறப்பட்ட போது, பதினைந்து நாட்களுக்குப் பிறகு பாரமின்றி, ஊசலாடாமல், சமநிலைக்கு வந்து நின்றது புத்தி. உடம்பின் கனம் குறைந்து போனது போலத் தெரிந்தது.
ஆற்றுக்குள் இறங்குகிற பாதைக்குப் போன போது, எதிரே மேடேறி வந்து கொண்டிருந்த என் வயதொத்த பையனின் இடுப்பில் மடித்துக் கட்டியிருந்த லுங்கி...  என்னுடையது தான். இருவருமே, ஒருவரையொருவர் பார்த்து திகைத்து நின்றோம். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு மடித்துக் கட்டியிருந்த லுங்கியைக் கீழே இறக்கிவிட்டு, தலை குனிந்து அங்கேயே நின்றான் அவன். லுங்கி என்னுடையதே தான். கோபம் தலைக்கேற அவனை நோக்கி விரைந்தேன். வாத்தியார் சொன்னது நினைவில் புரண்டது. அருகில் போய், குனிந்து வாளியை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, அவனது மெலிந்த தோளை மென்மையாகத் தொட்டு, “லுங்கி உனக்கு நல்லா இருக்கு...“ என்று சொல்லிவிட்டு வேகமாக ஆற்றுக்குள் இறங்கினேன். ஆற்றுக்குள் போகிற பாதை இறக்கமாக இருந்து மேலும் இழுத்தது. எனினும் ஊற்றுக்குப் போகிற பாதை.

-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

தெய்வநாயகம் சார்

அரசாங்க வேலை போல சீக்குப் பிடித்த வேலை உலகத்தில் இல்லை. மூணு ரூபா இங்க் பாட்டில் வாங்க ஏழு ரூபா பேப்பர் செலவாகும். ஆறுபேர் கையெழுத்துப் போட வேண்டும். ஐந்து பேர் முழுக் கையெழுத்துப் போடவேண்டியதில்லை. இனிஷியல் மாத்திரம் சின்னதாக மூட்டைப்பூச்சிமாதிரி வைக்கவேண்டும். பெரிய அதிகாரிகள் படித்தெல்லாம் பார்க்கமாட்டார்கள். மூட்டைபூச்சிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதாவென்று எண்ணிப்பார்ப்பார்கள். ஒன்று குறைந்தாலும், முழுக் கையெழுத்தும் போட்டுத் திருப்பி அனுப்பி விடுவார்கள். வேகமாகப் பைல் பார்க்கிறவர் என்கிற புகழும் அப்படி அதிகாரிகளுக்கு உண்டு.
அதிலும், அது அரசுக் கருவூலம். லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் சில அரசு அதிகாரிகளின் பில்கள் இங்கு தான் வந்தாக வேண்டும். இங்கும் சிலருக்குத் தந்தாக வேண்டும். சில்லறை புழங்குகிற ஆபிஸ் என்பது சிறப்புத் தகுதி அப்படியாப்பட்ட ஆபீஸில் தான் தெய்வ நாயகம் சார் வேலை பார்த்தார். அவருக்கு சத்தியமூர்த்தி என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். பெயர் வைப்பதில், பெயரளவு கூட பழக்கமற்ற சமுகத்தில் வாழ்வது சாருக்குத் தெரியும். எல்லாத் தலைமுறைகளுக்கும் ஒரே பெயர்தான் வைக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்ட சாதிய இழிவுகளை அவர் அறிவார். 
திராவிட, இடதுசாரி இயக்கங்களின் வருகை தான் பெயர்களின் அரசியலைத் தகர்த்தது. அதனாலேயே சாருக்கு, அவர்கள் எல்லோர் மீதும் பெருமிதம் கலந்த மரியாதை இருந்தது. அவர் காலத்தில் வாழ்ந்த படைப்பாளிகளும் தங்களது புனைபெயர்களால் மகத்தான பங்களித்தார்கள். பலரது பெயர்களே படைப்பின் பேரழகுடன் மிளிர்வதை அவர் அறிந்திருந்தார். அவருக்குத் தான் பொருத்தமான பெயர் வைக்கப்படவில்லை. 
தலைவர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் அவருக்கு அவ்வளவாக விருப்பமில்லை. ஒரு தலைவரின் பெயர் வைக்கப்பட்ட இளைஞன், குற்ற வழக்கில் கைதானதாகப் பத்திரிக்கைச் செய்தி பார்த்தபோது, சார் பரிதவித்துப்போனார். “அன்பினால் இழைக்கப்படும் அநீதி“ என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். தெய்வநாயகம் சார் வண்ண வண்ண ஆடைகள் அணிந்த போதும், அவரை அறிந்தவர்களின் கண்களுக்கு தூய வெள்ளையாகத்தான் தெரிந்தார். நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் ஒரு கனத்த, கருத்த புத்தகத்தின் மீது கை வைத்து “சொல்லுவதெல்லாம் உண்மை“  என்று சொல்ல வேண்டுமாம். அதெல்லாம் சுத்த ஹம்பக். சாரின் உள்ளங்கையில் கை வைத்துச் சொன்னால் போதும்.
தூய கைகள். கைகளாக வடிவம் கொண்ட தூய்மை. அந்தக் கை நிறைய இளஞ்சூடான நல்லெண்ணெயை, கொல்லையில், வாழை மரத்தடியில் மகள் சைதன்யாவின் உடம்பெல்லாம் பூசிக் கொண்டிருந்தார் தெய்வநாயகம் சார். எண்ணையின் இளஞ்சூடும், அப்பாவின் தொடுதலும் சேர, நெளிந்து ஆடிக் கொண்டேயிருந்தாள் சைதன்யா. மகளின் அசைவுக்கு ஏற்ற பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார் சார். அவர் வீட்டம்மா காந்திமதி. சாருக்கு வாய்த்த களஞ்சியம். தலைக்குக் குளித்து நெஞ்சுக்கறி சாப்பிட்டா ரெண்டு பேருக்கும் சளி மட்டுப்படுமென்று இடியாப்பத்திற்கு நெஞ்சுக்கறிக் குழம்பு தயாரித்தபடி, சாருடன் சேர்ந்து அதே பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.
மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு எலிவேட்டை. எலிகள் நோய்களைப் பரப்புவதால், அவைகளை வெளியேற்றி விட வேண்டுமென்பார் தெய்வநாயகம் சார். வீட்டின் முகப்பு அறையும், சமையல் அறையும் சமதளத்தில் இருக்கவில்லை. சமையலறை ஒருபடி இறங்கித்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்த இடத்தில் கிடக்கிற பருக்கைகளையெல்லாம் ஒன்றாகக் கூட்டிக் குவித்து விடுவார் தெய்வ நாயகம் சார். பெரிய இரும்புச் சல்லடையை அதன் மீது கவிழ்த்து, ஒரு பக்கம் சிறிய ஊசி மருந்து பாட்டிலின் மீது நிறுத்தி விடுவார். பாட்டிலின் தலையில் கட்டிய நூலின் மறு நுனியை சார் பிடித்துக் கொள்வார். மூவரும், வரிசையாகக் குப்புறப் படுத்தபடி கண்காணிப்பார்கள். பெரும்பாலும் குஞ்சுகள்தான் அகப்படும்.
சல்லடைக்கு அருகே வந்து திரும்புவதும் சரியாக வளையத்தின் நுழை நிழலில் நின்று கொண்டு எல்லாத் திசையும் பார்க்கவும் செய்யும் குஞ்சு எலிகள். ஓசையின்றி கவனிப்பதும், குழந்தை உற்சாகத்தில் “அய்யோ வருதுப்பா“ என்று கூவுவதும், அவைகள் அஞ்சிப் பின்னோடுவதும், பின் அகப்படுவதும் நடக்கும். தெய்வநாயகம் சார் அவைகளைக் கொல்லமாட்டார். செல்லமாக, சல்லடையால் தட்டுவார் மூர்ச்சையாகிவிடும் வாலைப்பிடித்துக் கொல்லைப்புறம் கொண்டு போவார். கீழே போடுமுன் ஒரு முறை சிலுப்புவார், காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப்பக்கம், அது நினைவு தெளிந்து ஓடுவதைப் பார்த்த பிறகு, வேட்டை தொடரும்.
தான் வளர்த்த நாய்களெல்லாம் வரிசையாகச் செத்துப் போனது தெய்வநாயகம் சாருக்கு புரிந்து கொள்ள முடியாத துயரம் என்றாலும், வீட்டு வாசலில் ஒன்றிரண்டு நாய்கள் எப்போதும் நிற்கும். “வளக்க வேண்டாம் நிக்கட்டும்” என்று சொல்லி வளர்ப்பார். வீட்டிற்கு முன் இருந்த குளக்கரை படிக்கட்டுகளில், காக்கைகளுக்கு தினசரி மிக்ஸர் போடுவார் சார். இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே அது நடக்கிறது. தெய்வ நாயகம் சார் வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய் வருகிற சில நாட்கள், அந்த படித்துறையில் காகங்கள் பரிதவிப்பது சொல்லிமாளாது. அதனாலேயே அவர் வீட்டில் அதிகம் வெளியூர் போக மாட்டார்கள்.
எலிவேட்டை முடிந்து சின்னத் தூக்கம். சாயங்காலம் அஞ்சு மணிக்கு டீ போட்டார் தெய்வநாயகம் சார். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சார்தான் செய்வார். காந்திமதிக்கும், சைதன்யாவுக்கும் டீ தந்தார். வாசலில் அமர்ந்து டீ குடித்தார்கள். குளக்கரையில் இருந்த ஒற்றை வீடு. கோவில் வீடு. சார் வாடகைக்குக் குடியிருந்தார். குளக்கரைக்கும், வாசலுக்கும் இடையே தேரோடும் பாதை. அளவான, அகலமான சாலை. டீ குடித்து முடித்திருந்த போது அந்த அதிசயம் வீட்டுக்குள் தாழப் பறந்து வந்தது. பொன்மஞ்சள் நிறம். சிறகின் மையத்தில் இருபுறமும் வெவ்வேறு அளவுள்ள கருநீல வளையங்கள் கொண்ட, சற்றுப் பெரியதானதொரு வண்ணத்துப்பூச்சி. அறையின், இடது பக்கச் சுவரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது போய் உட்கார்ந்தது. ஓடிச் சென்று, மின்சார விசிறியை நிறுத்தினார் சார். குழந்தை மிகுந்த குதூகலம் கொண்டாள். மேற்கூரையில் இருந்த உத்திரப் பலகைக்கு இடம் மாறியது வண்ணத்துப்பூச்சி. சாரும் சைதன்யாவும் சேர்ந்து அதற்குப் “பட்டு“ என்று பெயர் வைத்தார்கள், மறுநாள், சைதன்யா பள்ளிக்குப் போகிற வரை, பட்டு ஹாலிலேயே இடம் மாறி, இடம் மாறி நின்று பறந்து சுதந்திரமாய் இருந்தது. இரவெல்லாம் மின்சார விசிறி ஓடவேயில்லை.
சைதன்யா ஞானக் குழந்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது செய்த குறும்புகளை சார் அவளிடம் சொல்கிற தருணங்கள் வானவில்லுக்கு ஒப்பானவை. “நா அப்பிடியில்லாம் செஞசேனாப்பா“ என்று சைதன்யா வியக்கிற அழகு எந்த வகைக் கலைஞனும் பிரதி செய்ய இயலாதது. கேள்விகளின் ஊற்றுக்கண்களாய் இருந்தாள் சைதன்யா... பள்ளிக்குப் புறப்படுகிற போது குழந்தை கேட்டாள்
“அதுக்குப் பசிச்சா என்ன சாப்பிடும்?“
“தேன் சாப்பிடும்“
“அப்பம் தேன் வாங்கி வச்சுரலாம்“
“வாங்கி வைக்குற தேனக் குடிக்காது. பூவுல இருக்குற தேனத்தான் குடிக்கும்“
“அப்பம் பூ வாங்கி வச்சுரலாம்“
“அந்தப் பூவுல இல்லடா; வெளியில, செடியில உயிரோட இருக்குற பூவுல தான் தேன் குடிக்கும்“
“அப்பப் பசிச்சா போயிருமாப்பா“
“ஆமாடா“
“பசிச்சா போகட்டும், அது வரைக்கும் பாத்துக்கோப்பா“....
சைதன்யா பள்ளிக்கும், காந்திமதி ஆபீசுக்கும் போன பிறகு தெய்வநாயகம் சாரின் தனிமையைக் கெடுத்தது வண்ணத்துப்பூச்சி. சாருக்கு ஒரு வாரம் லீவு கிடைத்திருக்கிறது. வேறு ஊருக்கு சாரை மாற்றி இருப்பதால் தான் அந்த லீவு. கடைசியாக வேலை பார்த்த ஆபீஸில் இருந்த பெரிய அதிகாரி, ஒரு நாள் எல்லோரையும் கூப்பிட்டு விசாரித்தார் “நான் வெளியூர் போற அன்னிக்கில்லாம் A2 ஏன் லீவு போடுறாரு?“ என்று. ஆபீஸே தெய்வநாயகம் சாரைக் கை காட்டியது. “நீங்க வெளியூர் போனதும் உங்க வீட்டம்மா வந்து அவரக் கூட்டிக்கிட்டுப் போயிர்றாங்க” என்றார் சார். எப்படியும், இரண்டு நாளைக்குள் A2 வை வேறு ஊருக்குத் தூக்கிவிடுவார்கள் என்று ஆபீசே சந்தோஷத்துடன் காத்திருந்தது. அரசாங்க ரகசியங்கள் அறிந்திருந்ததால் தெய்வநாயகம் சாருக்குத் தான் மாற்றல் வந்தது. “பொய் சொல்ல வேண்டாம் உண்மையைச் சொல்லாம இருக்கலாமில்ல?” என்று காந்திமதி கேட்டபோது சார் சிரித்துக் கொண்டார்.
உண்மை, பொய் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு. அறிந்தது, அறியாதது என்பது மட்டுமே சாருக்குத் தெரிந்தது. வீட்டின் தனிமை நிறைய அந்தரங்கங்களும், அடுக்குகளும் கொண்டதாக இருந்தது. பட்டு உத்திரத்தில் இருந்து இறங்கி கண்ணாடிக்குப் பக்கத்தில் இருந்த மரச்சம்படத்தின் மீது வந்தமர்ந்தது. மரச்சம்படத்தின் நிறத்துக்கு பட்டு மேலும் ஒளிர்ந்து மின்னியது. இரண்டு சிறகுகளையும் சீரான கால இடைவெளிகளில் திறந்து மூடிக் கொண்டிருந்தது பட்டு. சமயங்களில் ஏதும் அசைவற்று துறவி போலத் தவமிருந்தது. ஒரு சமயம் சிறகுகளை விரித்து வைத்துக்கொள்வதும், பிறிதொரு சமயம் சேர்த்து உயர்த்தி நிறுத்திக் கொள்வதும் ஏதேதோ யோசனைகளை எழுப்பியது. ஒவ்வொரு அசைவிலும் நுண்ணிய உணர்வுகளை அந்தச் சிறிய உயிர் அறையெங்கும் பரப்பிக் கொண்டே இருந்தது. தெய்வநாயகம் சார், அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரமாக இடம் மாறாத அதன் தவமும், வீட்டின் தனிமையும் தெற்கே கொல்லையில் இருந்து வடக்கு நோக்கி வீட்டுக்குள் நடமாடித் திரிந்த காற்றும், உறக்கத்தின் கண்களைத் திறக்க வைத்தது. சார் தூங்கிப் போனார்.
ஆட்டோ சத்தம் கேட்டுத் தான் விழித்துக் கொண்டார். மதியம் மணி ஒன்றரை. சைதன்யா ஆட்டோவில் இருந்து இறங்கி தன் நண்பர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். தெய்வநாயகம் சார் பட்டுவைத் தான் தேடினார். அறையில் இல்லை. வெளித் திண்ணை நடையிலும் இல்லை. சமையலறையில் தேடினார். சாம்பலும் புகையும் பூத்த உத்திரத்தில் உட்கார்ந்து சிறகுகளைத் திறந்து மூடிக்கொண்டிருந்தது பட்டு. ஆட்டோ அரை வட்டமடித்துத் திரும்பிப் போக, குழந்தை வாசலில் அமர்ந்து ஷூவைக்  கழற்றிக் கொண்டிருந்தாள். அவள் வந்து கேட்கு முன்னரே, அவளுக்குக் காட்ட வேண்டுமென்பதற்காக, மீண்டும் ஒரு முறை பட்டுவைப் பார்த்துக் கொண்டார். அப்பொழுது, உயிரின் சுழற்சியைத் தன் வாலால் உணர்த்தியபடி, கனத்த மரப் பல்லியொன்று பட்டுவைச் சடாரெனக் கவ்வி மென்று விழுங்கியது.
“அப்புக் குட்டீ“ என்றபடியே, சைதன்யா ஓடி வந்து தெய்வநாயகம் சாரைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா.... எங்கப்பா பட்டு?“ என்றாள் குழந்தை.
“பசிக்குதுன்னு இப்பத்தாம் வெளியில போச்சு“ என்றார் சார்.
தெய்வநாயகம் சாரின் உள்ளங்கைகள் வியர்த்திருந்தன.

-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

அப்பத்தா

உப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக மல்லுக்கட்டுகிறது அப்பத்தா. காய்ச்சல், தலைவலி என்று ஒரு நாள் படுத்ததில்லை. அப்பத்தா படுத்தா, வைத்தியம் பார்க்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் கட்டிலைச் சுற்றி நின்றார்கள். பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள். பால் இறங்கிக் கொண்டே இருந்தது. குரல்வளை அறுந்து போகிற மாதிரி, சத்தம் கூடியதே தவிர குறையவில்லை. ஆஸ்பத்திரிக்கு வேண்டாமென்று சுப்பையா டாக்டர் சொல்லிவிட்டார். நாடி படுத்துவிட்டது. முழுசாக அடங்கவில்லை.
தாத்தா தலைமாட்டிலேயே இருந்தார். உயிர் பிரியும்போது, பக்கத்தில் ஆள் இருந்தா, ஆன்மா அலையாது என்று நம்பினார். காப்பியோ, பலகாரமோ யாராவது கூப்பிட்டுக் கொடுத்தால் சாப்பிட்டார். கண்ணெல்லாம் சிவந்து, இரண்டு கைகளையும் கூப்பியபடியே, “கஷ்டப்படாம போயிரணும்“ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தார். கல்யாணமான நாளில் இருந்து இன்றுவரை கண்ணீர் சிந்தாமல் காப்பாற்றி இருக்கிறார். இருவருக்கும் இடையிலான நெருக்கமும், இணக்கமும் ஊரே அறிந்த ரகசியம். இன்றைக்கும், பகலிலும் இரவிலும் தனித்து இருந்தால் கதவைப் பூட்டிக் கொண்டு தான் இருவரும் பொழுதைக் கழிப்பார்கள். குளிக்கப் போனால், சேர்ந்துதான் குளிக்கப்போவார்கள். ஒருவருக்கொருவர் முதுகு தேய்த்து விட்டுக் கொண்டு, சிரிப்பும் கேலியுமாகக் குளித்தால்தான் குளித்தது மாதிரி இருக்கும். கல்யாணமான நாளில் இருந்து, அப்பத்தா படுக்கையில் விழுகிறவரை அதுவே நடைமுறை. 
ஓரோரு வருஷம் இடைவெளி விட்டு மூன்று ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என்று ஐந்து குழந்தைகள் அப்பத்தாவுக்கு. ஐந்தும், ஒரு கை விரல் மாதிரி ஒற்றுமையான பிள்ளைகள். எல்லோரும் படித்து, வேலைக்குப் போய் மனசாரச் சம்பாதிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த மருமகள்களும், மருமகன்களும் கூட ஒத்தாசையான பிள்ளைகள். எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் என்றாகி விட்டாலும், அப்பத்தாவும், தாத்தாவும் இன்றைக்கும் படுப்பது தனி அறையில்தான். பர்மாத் தேக்கில் செய்த ரெட்டைக் கட்டில். அப்பத்தாவை, அதில்தான் படுக்கப் போட்டிருந்தது. இந்தக் குடும்பத்துக்கு குத்தகை பார்க்கிற செவனம்மா நாச்சிகுளத்தில் இருந்து விழுந்தடித்துக் கொண்டு வந்தது. கட்டிலை விட்டு இறக்கித் தரையில் போட்டால், கஷ்டப்படுத்தாம ஆறு நாழிகைக்குள் அடங்கி விடும் என்றது. வீட்டுக்குள் நுழைந்ததும், கிழக்குப் பார்த்த வாசல் இருந்த அறையில் பாய் விரித்து, மெத்தை போடக்கூடாது, பாய் மட்டும் போதும் என்று செவனம்மா தாத்தாவிடம் உரிமையாகச் சொல்லி விட்டது. ஆறு நாழிகை, ஆறு நாளாகியும் அப்பத்தா மல்லுக் கட்டிக் கொண்டே இருந்தது.
செல்லூர் சித்தாப்பாவுக்கு  ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. காட்டுப்பட்டியில் இருந்து சாமியாடியையும், ஜோசியனையும் கூட்டிக் கொண்டு வந்தார். முத அமாவாசைக்கு முடிந்து போகுமென்றான் ஜோசியன். சாமியாடி திருநீறு கொடுத்து அதைத் தண்ணீரில் கலந்து மூணு தரம் கொடுக்கச் சொன்னான். “எது வேணும்னாலும் செய்யுங்க“ என்று தாத்தா சொல்லிவிட்டார். “கண்ண மூடுனாலும் பரவாயில்ல, கஷ்டப்படக்கூடாது“ என்பது தான் தாத்தா திரும்பத் திரும்பச் சொன்னது. 
“முட்டைக் கரண்டியில் மூணு கரண்டி நல்லெண்ணெய் கொடுத்தா அடங்கும்“ என்று யாரோ சொன்னதும் நடந்தது. இரைப்பு அதிகமானதே தவிர, குறையவில்லை. குடித்த எண்ணெய், கொடுத்த பால் என்று எதுவுமே வெளியேறாமல், உள்ளுக்குள்ளேயே நின்றது, இன்னும் ஆச்சர்யமாகி விட்டது. கண்ணைத் திறந்து பார்க்கவேயில்லை. கை, கால் எதிலும் அசைவே இல்லை. ஒரு சொல், ஏதாவது உளறல் எதுவுமில்லை. வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக்காற்று, உள்ளிருந்து தொண்டைக் குழிக்குள் மோதித் திரும்பிக் கொண்டே இருந்தது. அளவற்ற வேகத்துடன் நெஞ்சுக்குழியில் போய் முட்டித் திரும்பியது. வெளியேறத் துடிக்கும் அந்த ஒற்றைக் காற்றின் விசையும், ஓசையும் உயர்ந்து கொண்டே இருந்தது. “யோசிக்காம தலையில நல்லெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண மூணும் சேத்துக் குளிப்பாட்டுனா“ ஒரு முடிவு வரும் என்று ஒரு கிழவி சொன்னது. குளிப்பாட்டி, உடை மாற்றிப் படுக்க வைத்ததும் அப்பத்தா முகத்துக்கு கூடுதல் பொலிவு வந்ததே தவிர, “எதிர்பார்த்த“ வேறு எதுவும் நடக்கவில்லை. 
இரவில் ஆளுக்கொரு திசையில் களைத்துப் படுத்திருக்க தாத்தா அப்பத்தாவின் தலைமாட்டிலேயே படுத்துக் கிடந்தார். தனக்கும் அப்பத்தாவுக்குமான தனிமைகளுக்குள், தாத்தாவின் நினைவு நடைபோட்டது. கலகலவென்ற சிரிப்பும், கதம்ப வாசனையும் அப்பத்தாவின் பிறந்த வீட்டுச் சீதனம். அம்பது பேருக்குச் சமைச்சாலும், அப்பதான் குளிச்சு வந்த மாதிரி பந்தி பரிமாறும் அப்பத்தா. இலையை மறைக்க அப்பத்தா அள்ளி அள்ளிச் சோறு வைத்தாலும் முகத்தில் அடிக்காது. ஊர் உலகத்தில் புருஷனுக்குப் போட்டது போக, மிச்ச மீதி சாப்பிடுவது பெண்களின் வழக்கமென்றால், அப்பத்தா அதற்கு நேர் எதிர். அப்பத்தா சாப்பிட்ட பிறகு தான் தாத்தா சாப்பிடும். இத்தனை வருஷத்தில் ஒரு வேளை கூட கடையில் சாப்பிட்டதில்லை. வீட்டுச் சாப்பாடுதான்.
தான் சாப்பிட்டுப் பார்த்து எதைப் பரிமாறலாம், எதைப் பரிமாறக்கூடாது, உப்பு, உறைப்பு எதில் எவ்வளவு சேக்கணும் குறைக்கணும் - எல்லாம் அப்பத்தா தீர்மானிக்கும். அப்பத்தா கண்ணசைந்த பிறகு தான் தாத்தா சாப்பிட உட்காருவார். “ரெண்டும் ரொம்பத்தான் பண்ணிக்குதுங்க“ என்று அறிந்தும், அறியாமலும் மற்றவர்கள் பேசுவதைத் தாத்தா கூட சமயங்களில் பொருட்படுத்துவார். அப்பத்தா ஒப்புக் கொள்ளாது. “கண்டதச் சாப்பிட்டு அரை நாளு அவுக முடியாமப் படுத்தா எவ வந்து பாப்பா“ என்று உரக்கச் சொல்லிவிடும். தாத்தா தலைவலி என்று படுத்தால் போதும் ஊரையே ஊமையாக்கி விடும் அப்பத்தா. வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம். 
பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு. கறி வறுத்த சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து, சுடு சாதத்தைப் போட்டுப் பெரட்டி, உருண்டை வைத்து எல்லோருக்கும் சமமாகப் பங்கு போடும். எவ்வளவு சூடும் பொறுக்கிற கைகள் அப்பத்தாவுக்கு. ஊறுகாய் ஜாடிக்குள் கை போட்டால் ஊசிப் போகும் என்பது மற்றவர்களுக்குத்தான். அப்பத்தா எதையும் கையில் தான் எடுக்கும். எந்தப் பண்டமும் ஊசிப் போகாது. காலையில், அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி, இரவுவரை மணம் மாறாமல் இருக்கும். எல்லாம் அப்பத்தா கைப் பக்குவம். அந்தக் கைகள் குளிர்ந்து போய் வெளுத்துக் கிடந்தன. 
பின்னிரவில் கூட, தாத்தாவும் அப்பத்தாவும் பேசிச் சிரித்து மகிழ்கிற சத்தம் கேட்ட வீடு இது. அறைக்குள்ளேயே, பல்லாங்குழி, பரமபதம், சீட்டுக்கட்டு, சதுரங்கம், தாயம் என்று வகைவகையான விளையாட்டுக்களுக்கும் குறைவிருக்காது. கறிச்சோறு சாப்பிடுகிற அன்றைக்கு வெற்றிலை போடுவது வழக்கம். தாத்தா மடித்துக் கொடுப்பார். “ஆம்பிளைங்க மடிச்சுக் கொடுத்தா, வீட்டுக்கு ஆகாது“ என்று யாரோ சொன்னதற்கு, ரெண்டுபேரும் புரையேறச் சிரித்திருக்கிறார்கள். மடித்துக் கொடுத்த வெத்திலையைச் சுவைத்து மணம் ஏறிய பிறகு, நாக்கை நீட்டி “எப்படி சிவந்திருக்கு?“ என்ற பாவனையில் அப்பத்தா கேட்பதும், தாத்தா கண்கள் விரிய ஆமோதிப்பதும் வீடே பார்க்கும் உற்சாகங்கள். ஓயாமல் பேசிச் சிரிக்கும் அந்த வாய் வறண்டு, காய்ந்து கிடக்கிறது. 
கல்யாணமான போது, அப்பத்தாவுக்குப் பத்தொன்பது வயசு. தாத்தாவுக்கு இருபத்தி ஏழு. எட்டு வருட வித்தியாசம். பார்த்தால் சொல்ல முடியாது. கல்யாணமாகி, மூணாவது நாள் இந்த வீட்டுக்கு வந்த அப்பத்தா, திரும்ப ஒரு முறை கூட பொறந்த வீட்டுக்குப் போகவில்லை. இந்த வீட்டுக்கு வந்த அன்னிக்கு ஆனி முப்பத்தி ஒண்ணு. மறுநாள், ஆடிக்குப் பெண் தாய் வீடு போக வேண்டுமென்று பேச்சாக இருந்தது. தாத்தா சம்மதிக்கவில்லை. இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, பெரிய பிரச்சனையான போதும் தாத்தா ஒப்புக் கொள்ளவில்லை. “ஆடி மாசம் சேந்து இருந்தா, சித்திர மாசம் புள்ள பொறக்கும். கோடையில புள்ள பொறந்தா குழந்தைக்கும் ஆகாது, குடும்பத்துக்கும் ஆகாது“ என்றார்கள். “சித்திர மாசம் புள்ள பொறக்காமப் பாத்துக்குறது எம் பொறுப்பு“ என்று எல்லார் முன்பும் தாத்தா சொன்னதை, இப்போதும் அப்பத்தா சொல்லிச் சொல்லிச் சிரிக்கும். 
தன்னைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பவே வேண்டாமென்று, அப்பத்தா கேட்டுக் கொண்டதை தாத்தா யாருக்கும் சொல்லவேயில்லை. அந்தக் கோபத்தின் பின்னே என்ன இருந்ததென்று யாருக்கும் தெரியாது. அப்பத்தா பொறந்த வீட்டில் ஒத்தப் பொறப்பு. கூடப் பொறந்தவங்க யாரும் கிடையாது. அப்பத்தாவுக்குப் பதினைந்து வயசாக இருக்கிறபோதே, நெருங்கிய சொந்தத்தில் கண்ணுச்சாமியைப் பேசி முடித்திருந்தார்கள். கண்ணுச்சாமி படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்பது இரு வீட்டுச் சம்மதம். கண்ணுசாமிக்கு அப்பத்தாவின் மீது தீராத, மாளாத, குறையாத காதல். அப்பத்தாவுக்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திராத வளர்ப்பு அப்பத்தாவுடையது.
நாலு வருஷத்துக்குள், ஓஹோவென்றிருந்த கண்ணுச்சாமி குடும்பம் பெரும் பள்ளத்தில் போய் விழுந்து விட்டது. அந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று, தாத்தாவைப் பேசி முடித்தார்கள். அப்பத்தாவுக்கு எதுவும் விளங்கவில்லை. தாயும், தகப்பனும் சொன்னதற்குத் தலையாட்டி விட்டது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்தபோது, கண்ணுச்சாமியைக் காணோம் என்று ஊரே தேடியது. பழனிக்குப் பாதயாத்திரை போனதாகவும், கல்யாணத்தன்று அதே முகூர்த்த நேரத்தில் முடி இறக்கி மொட்டை போட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்தபோது, எல்லாம் முடிந்து இரண்டு நாளாகி இருந்தது. இனி ஜன்மத்துக்கும் கல்யாணம் செய்யப் போவதில்லை என்று, ஊரறிய கண்ணுச்சாமி செய்த சத்தியம் அப்பத்தாவை அதிரச் செய்தது. காசு பணத்துக்காகத் தாயும், தந்தையும் செய்த படுகொலை அப்பத்தாவின் ஈரக்குலையைக் கலக்கிவிட்டது. 
பொன்னைத் தேய்த்து ஊற்றச் சொன்னார்கள். செம்பு கலக்காத பசும்பொன். காசு கொடுத்தார் தாத்தா. மருந்து அரைக்கும் கல்லில் பொறுக்கத் தேய்த்து ஊற்றினார்கள். செல்லத்தம்மன் கோவில் குருக்கள் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமிரச் சொம்பில் அடைத்து வைத்திருந்த காசித் தண்ணீரைக் கொடுத்தார்கள். காசித் தண்ணீர் கொடுத்தால் மூச்சடங்கும் என்பதோடு மோட்சமும் கிடைக்கும் என்றார்கள். மூச்சிரைப்பு கூடியதே தவிர குறையவில்லை. முன்வாசல்மண், புறவாசல் மண், வயக்காட்டு மண் என்று விதவிதமாய்க் கரைத்து ஊற்றியும் அப்பத்தா அசைந்து கொடுக்கவில்லை. அமாவாசை என்பது கனத்தநாள். அதிலும் மூச்சிரைத்து படுத்துக் கிடந்தால் மூணாவது அமாவாசையும் தாண்டாது என்பது நம்பிக்கை. அப்பத்தா மூணாவது அமாவாசையும் தாண்டியது.
மூச்சிறைப்பு அதிகமானது. நினைவு திரும்பவில்லையென்றாலும், அப்பத்தா படுகிற பாடு தாங்க முடியாததாக இருந்தது. முன்னிரவில், அப்பத்தாவுக்கு வலிப்பு மாதிரி வந்து வெட்டி, வெட்டி இழுத்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. பத்து நிமிஷம் படாதபாடு பட்டு விட்டது. இத்தனை நாளும் பொறுத்துக் கொண்ட தாத்தா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “இந்தக் கண்றாவியக் கண்ணால பாக்காம, நாம் முதல்ல போயிரணும்“ என்று தாத்தா கதறியதும் எல்லோரும் பதைத்துப் போனார்கள். எல்லோரும் உறங்கப் போகும்போது மணி இரண்டரை ஆகி விட்டது. அன்றைய இரவு களைப்பும், கண்ணீரும், துயரும் மிக்கதாக இருந்தது. 
விடியற்காலையில், வீடு முழுக்கத் தேடியும் தாத்தாவைக் காணோம். தாத்தா எதற்கும், எப்போதும் மனசு விடாத ஆள் தான். என்றாலும் கிணறு, குளம், கம்மாய் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள். தாத்தாவைக் காணோம். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் ஆள்விட்டார்கள். திசைக்கு எட்டுப்பேர், பத்துப்பேர் என்று ஊரில் இருந்த எல்லா வாடகை சைக்கிள்களையும் எடுத்துக் கொண்டு இளவட்டங்கள் தேடினார்கள். ஒரு நாள் முழுசாகக் கழிந்தது. தாத்தா தட்டுப்படவில்லை. “எப்போ முடியும்" என்று காத்திருந்த எல்லோரும் தாத்தா இல்லாதபோது அப்பத்தாவுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று சாமி கும்பிட்டுக் கொண்டார்கள்.
வீடு முழுக்க துயரம் நெறி கட்டிக் கிடந்தது. அப்பத்தாளுக்கு மூக்கு நிமிர்ந்திருப்பதாகவும், விடியும் வரை தாங்காது என்றும் கருப்பூரில் இருந்து வந்த அத்தை சொன்னது. தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழி உயிர் பிரிவது பாவமென்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். எந்த உறவில் யார் யாருக்கெல்லாம் எப்படி சாவு வந்தது என்று விஸ்தாரமாகப் பேசி வீட்டின் அழுத்தத்தை அதிகரித்தாள். அவளது சொற்கள் ஈரம் சுமந்த, கனத்த பஞ்சுப் பொதி மாதிரி வீடெங்கும் பறந்து கொண்டிருந்தது. தாத்தாவைத் தேடிப்போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பிக் கொண்டே இருந்தார்கள். 
மறுநாள் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. யாரோ தாத்தா வருவதாகச் சொன்னார்கள். வீடே ஓடி வந்து வாசலில் நின்றது. கைத்தாங்கலாக, ஒருவர் தாத்தாவை அழைத்து வந்து கொண்டிருந்தார். கூட வந்தவருக்கும் தாத்தா வயதுதான் இருக்கும். பிள்ளைகள் எல்லோரும் தாத்தாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். தாத்தாவும் குனிந்த தலை நிமிராமல் அழுது கொண்டே இருந்தார். குன்னூர் சந்தை விலக்கு ரோட்டில் தாத்தா நின்று கொண்டிருந்ததாகவும், தற்செயலாகப் பார்த்துப் பேச்சுக் கொடுத்து, விவரம் தெரிந்து அழைத்து வந்ததாகவும் கூட வந்தவர் சொன்னார். வந்தவர் சொல்லித்தான் தாத்தா அவ்வளவு தூரம் போனது தெரிந்தது. தாத்தாவுக்கும், வந்தவருக்கும் அத்தை சாப்பிட கொடுத்தது. இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு தாத்தா, அப்பத்தா இருந்த அறையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டார். வந்தவர் வாசலில் இருந்து, எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஒரு பாயும் தலையணையும் வாங்கிக் கொண்டு உள்ளறைக்குப் போய் தாத்தாவுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டார். காலையில் முத பஸ்ஸுக்குத் தான் போகவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். 
முத பஸ்ஸுக்கு அரை மணி முன்னதாக, தாத்தாவே வந்தவரைத் தொட்டார். தொட்டதும் அவர் எழுந்து கொண்டு விட்டார். இருவருமே உறங்கவில்லை என்பது கண்களில் தெரிந்தது. அவரை, அப்பத்தாவுக்கு அருகில் தாத்தாவே அழைத்துப் போனார். இரண்டு கைகளையும் கூப்பியபடி வந்தவர் அப்பத்தாவைப் பார்த்தபடியே நின்றார். குடிப்பதற்குத் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து, அவர் கையில் கொடுத்து அப்பத்தாவுக்கு ஊற்றச் சொல்லி சைகை காட்டினார் தாத்தா. அப்பத்தாவின் மீது விரல்படாமல் வந்தவரும் ஸ்பூனில் தண்ணீரை ஊற்றியதும், “புளக்“ என்கிற ஓசையுடன் தொண்டை குழியிலேயே மோதி இற்றுக் கிடந்த கையளவு காற்று அப்பத்தாவிடம் இருந்து தெறித்து வெளியேறியது. வந்தவர் கொடுத்த தண்ணீர் கடைவாயில் இருந்து வழிந்து, சரிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. வந்தவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட தாத்தா “என் செல்லமே“ என்று அப்பத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத குரல், அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மூச்சுக்காற்றோடு சேர்ந்து கலந்தது. காலடித்தடம் தேய்ந்து மறைய, கலங்கிய கண்களுடன், முத பஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தார் கண்ணுச்சாமி.

-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)