Tuesday, July 23, 2013

புகைப்படங்களும் பிரிவும் . . .

அது "கடல்  பூக்கள்" திரைப்படத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் .திரு கே . வி . மணி தான் எடுத்தார் .
ஒரு பத்து நாட்கள் எங்களோடு இருந்தார் திரு . ஜனகராஜ் .
அபூர்வமான கலைஞன் .பத்தே நாட்களில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்
படம் இறுதியான போது அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம் பெறவில்லை .அது வேறு தனிக் கதை .

இந்த புகைப்படம் நாங்கள் இருவரும் விரும்பி எடுத்தது .
இதை எடுத்ததும் ," நல்ல பிரண்ட்ஸ் போட்டோ எடுத்தா பிரிஞ்சுருவாங்களா BK " என்று கேட்டார் ஜனகராஜ் . அதைத் தொடர்ந்து தனது வழக்கமான பெரும் சிரிப்பை மேற்க்குக் கரையெங்கும் காற்றில் படர விட்டார் .

"அப்படிஇருக்காது ஜனா ... அதை விட ஒரு போட்டோவுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் இருந்தா என்ன போனா என்ன " என்றேன் .
மீண்டும் பெரும் குரலெடுத்துச் சிரித்தார் . கடல் அலைகளும் அவரோடு சேர்ந்து சிரித்தன ... சட்டென மௌனமானார் .
"அதானே ... அதுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் என்னாத்துக்கு ... சூப்பராச் சொன்னீங்க BK" என்றார் .

இந்தப் படம் எடுத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன . இது அவரது பங்குக்கு உரிய  படப்பிடிப்பு வேலைகள்  முடிந்த இறுதி நாளில் எடுக்கப்பட்டது . அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சென்னையிலேயே இருந்தும் இன்று வரை சந்தித்துக் கொள்ளவே இல்லை . தொலைபேசியிலும் உரையாடவில்லை . எனினும் நாங்கள் இன்னும் , இப்போதும் சிறந்த நண்பர்கள் தான் என்று நான் கருதுகிறேன் ...

" சரி தானே ஜனா ? அப்படிச் சொல்லலாம் தானே ? எப்போதாவது இதைப் பார்த்தால் , அப்போது நீங்கள் சொன்னால் போதும் ஜனா ...எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லலாம் . அது தானே நாகரீகமான நட்பு .

   

கடிதமல்ல . . . கல்வெட்டு

திரைப்படத் துறையில் என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் நான் மிக மதிக்கும்  மனிதர் கே. வி. மணி .
மகத்தான புகைப்படக் கலைஞர் ..
 தீவிரமான வாசகர் .
அசலான தமிழ்ப் பற்றாளர் .
ஆனந்த விகடன் இதழில் பிரசுரமான எனது "அப்பாவின் வாசனை "
சிறுகதை குறித்து அவர் எனக்கு எழுதின கடிதம் இது .



ஒரு படைப்பாளி தனது படைப்புக்கான ஆகச்சிறந்த
அங்கீகாரமாக இது போன்ற கடிதங்களையே சுவீகரிக்கிறான் .
அது அவன் எழுத அமரும் தருணங்களில் ஆசனமாய்
அவனுக்கு இடமளிக்கிறது . எழுதுகோலுக் குள் உயிர் மையாய்ப் பெருகுகிறது.

Friday, July 19, 2013

"அப்பாவின் வாசனை "

ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத வாய்த்தது.
ஆனந்த விகடன் அதனைப் பிரசுரித்துச் சிறப்பித்தது .
என் மனதுக்குள் இருந்த அந்தக் கதையின் நாயகியை வண்ணத்தில் வடித்து இருந்தார் ஓவியர் ம. செ.
இதழைப் பிரித்ததும் ,வியப்பும் ,ஏனோ வேதனையும் ஒருங்கே மனதில் வந்தது







Thursday, July 18, 2013

உறவுகள் ... பாட்டி 02

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் அப்போது மதுரையில் இருந்தேன் . போக்குவரத்து வசதிகளும் , தகவல் தொடர்பு சாதனங்களும் இப்போது போலப் பெருகி இராத அந்த நாளில் , மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டேன் . பகல் நேர ரயில்கள் எதுவும் இல்லை . ஆடி அசைந்து போகும் ஒரு அரசுப் பேருந்து அகப்பட்டது .அப்போதெல்லாம் மதுரைக்கும் சென்னைக்கும் பன்னிரண்டு மணி நேரப் பயணம் போக வேண்டும் .பேருந்து சென்னையை  நெருங்கும்போது ,பொழுது சரியத் தொடங்கி இருந்தது . தாம்பரம் தாண்டியதும் , மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் இறக்கி விடச் சொன்னேன் . நிறுத்தம் இல்லாத இடத்தில் கருணையோடு இறக்கி விட்டார்கள் . இறக்கி விடுகிற போது ,"இந்த கலை இலக்கிய இரவுல பேசுற கிருஷ்ணகுமார் தான நீங்க ? "என்று நடத்துனர் கேட்டார் . அவ்வளவு துயரத்திலும் ஏனோ ஒரு சின்ன சந்தோசம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப்  போலக் கடந்து போனது .

சாலையைக் கடந்து , மீனம்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்கிற போது நன்றாக இருட்டி விட்டது . இடது புறம் ஜெயின் கல்லூரியும் , வலது புறம் பின்னி நிறுவனமும் என் துயரத்தில் பங்கு பெறுவதுபோல இருளில் அமைதியாக நின்றன . அந்தப் பாதையெங்கும் காற்றைப் போல மௌனம் கலந்து கிடந்தது . அந்த மௌனத்தின் ஊடே , தனித்து நடந்து போனேன் .இரண்டு , மூன்று ஒற்றையடிப்பாதைகள் ஒன்று சேர்ந்த அகலத்தில் இருந்த பாதை அது . பாதை நேரே சென்று இடது புறம் ஒரு முறையும் , வலது புறம் ஒரு முறையும் தானே திரும்பி நங்கநல்லூருக்குள் நுழைகிறது . அப்போது , மாமா அங்கே தான் குடி இருந்தார் .

பாதை இடது புறமாகத் திரும்புகிற இடத்தில் , வலது கைப் பக்கத்தில் இருந்த மயானத்தில் எல்லோரும் நின்றுகொண்டு இருந்தார்கள் . வீடு வரை போக வேண்டிய அவசியம் இல்லாது போனது . எல்லோரையும் விலக்கிக்கொண்டு , சிதையில் ஏற்றப்பட்டப் பாட்டியைப் பார்த்தேன் . என்னைப் பார்த்ததும் மாமா சொன்னார் " பாத்தியா... இந்தப் பய வந்துட்டாம் பாரு .. அவ வச்சுருந்த பிரியம் அவனக் கொண்டாந்து சேத்துருச்சு ... பாத்துக்கடா " . அதற்கு மேலும் பேச முடியாமல் மாமா கலங்குவது உணர்ந்தேன் .

இறந்தவர்களின் முகங்களிலும் கூட , அவர்களது இறுதி நொடியின் போதான உணர்ச்சிகள் உறைந்து போய் விடுவதாக சிலர் சொன்னதுண்டு .
"சாந்தமா , அமைதியா , தூங்குறாப்புல இருக்கு "
"அடடா ... சிரிச்ச முகமால்ல இருக்கு "
இப்படி வார்த்தைகளை நிறைய இழவு வீடுகளில் கேட்டிருக்கிறேன் . பாட்டியின் முகத்தில்  தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும் அனுபவித்த பாவனை இருந்தது .இதே முகத் தோற்றத்துடன் இதற்கு முன்னும் , அவள் உயிரோடு இருந்த காலத்தில் ஒரு முறை பாட்டியைப் பார்த்த நினைவு வந்தது . மேலும் எதுவும் சிந்திக்க வழி இல்லாமல் , பாட்டியின் முகத்தை மறைத்து  எருவாட்டிகளை அடுக்கினார்கள் .மாமா சிதைக்குத் தீ இட்டார் . 

எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் . பெட்ரோமாக்ஸ்  ஒன்றின் அடர்ந்த திட்டு வெளிச்சம் முன்னும் , பின்னும்  ஆடிய படியே எங்களுக்கு வழி காட்டியது .அதன் ஒளியும் , அது உருவாக்கிய நிழல்களும் என் நினைவுகளைப் போலவே முன் பின்னாகப் புரண்டது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் , பாட்டி இதே போல ஒரு முன்னிரவில் மதுரைக்குப்  பஸ்ஸில் வந்து இறங்கினாள். தல்லாகுளம் பெருமாள் கோவில் வாசலில் பஸ்ஸை நிறுத்தி , வீட்டுக்கு அழைத்துப் போகாமல் , நேரே மதுரை தத்தனேரி பெரிய மயானத்துக்கு அழைத்து வந்தார்கள் . பாட்டியின் வருகைக்காக இறந்து போன அம்மாவின் உடலோடு நாங்கள் மயானத்தில் காத்திருந்தோம் . சிதையில் கிடத்தப்பட்டிருந்த தன்  மகளின் முகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு , கொஞ்ச நேரம் மெளனமாக நின்றாள் பாட்டி . அவளது முகம் தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும்  சுமந்திருந்தது . நெற்றியில் அவளது வழக்கமான திருமண் கலைந்து இருந்தது . முகம் மரணமடைந்தவர்களின் முகம் போல இறுகிக் கிடந்தது . கொஞ்ச நேரத்தில் , அடி வயிற்றில் அடித்துக்கொண்டு , "ராஜாத்தி ... ராஜாத்தி ..." என்று தன் மகளின் முகம் தொட்டுக் கதறி , மயானமே திகைக்கப் பெருங் குரலெடுத்து அழுதாள் பாட்டி . அவள் அடி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதது , அவள் மகளைச் சுமந்த இடத்தைப்  பழிப்பதாக இருந்தது .

இரண்டு நாளைக்குப்பிறகு, மாமா வேலை பார்த்த பிரபலமான ஆங்கில நாளிதழில் , பாட்டியின் மரணம் நான்கு வரிகளில் செய்தியாக வந்திருந்தது .எவ்வளவு பெரிய வாழ்க்கையையும்  நான்கே வரிகளில் சுருக்கி விடுகிற ஆற்றல் நமக்கு இருக்கத்தான் செய்கிறது .


                                                                                                           பாரதி கிருஷ்ணகுமார் 

Wednesday, July 17, 2013

உறவுகள் . . . பாட்டி - 01

அது  மனம் மயங்கிச் சரிந்து கிடந்த மாலை நேரம் .
என் தனிமைக்குள் நான் இணைந்திருந்த தருணம் .
அலுவலக அழைப்பு மணி ஒலித்தது .
அன்பு நண்பர்கள் அதிஷ்டாவும் , யுவ கிருஷ்ணாவும் வந்தார்கள் .
நீண்ட நேரம் பேசி சிரித்துக் கழிந்தது பொழுது .
இறுதியில் , புதிய தலைமுறைக்கு  "உறவுகள்" என்ற பொதுத் தலைப்பில் பாட்டி பற்றி ஒரு கட்டுரை கேட்டார்கள் . அன்றைக்கு இருந்த மன நிலையில் சம்மதித்தேன் . சிறப்பாக அதனைப் பிரசுரம் செய்தது புதிய தலைமுறை .
அந்த இதழ் எடுத்து வைத்தது எங்கோ இடிபாடுகளில் கிடக்கிறது .
அதன் கையெழுத்துப் பிரதி இன்று கண்ணில் பட்டது .
அதனால் அதை உங்களுக்கும் பார்க்கத் தருகிறேன்


பாட்டி 

"அம்பாளுக்கு " ஒவ்வொரு ஊரிலும் ,ஒரு பெயர் இட்டு வழங்குவது  போலத்தான் பாட்டிக்கும் .ஆயா , ஆச்சி ,அம்மாயி ,அம்மாச்சி ,அம்மம்மா ,அம்மாத்தா , என்று  வட்டாரத்திற்கு ஒரு விதமாய்க் கூப்பிட்டுக் கொள்ளுகிறார்கள் . பாட்டி என்பது எங்குமான பொதுப் பெயராகி இருக்கிறது . தனது தாய் அழைப்பதைப் போலவே , பாட்டியையும்  "அம்மா" என்று அழைக்கிற பேரக் குழந்தைகளும் உண்டு .எந்த ஊரில்  , எங்கு , எப்படிக் கூப்பிட்டாலும்  , அவள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி உருவாகி , வார்ப்பாக நிற்கிறாள் .

தங்கள் குழந்தைகளிடம் , தாங்கள் காட்டிய  கண்டிப்பையும் அதிகாரத்தையும் கொண்ட ஒரு கரு நிழல்  தங்கள்  பேரக்குழந்தைகளின் மீது படிந்து விடக்கூடாது என்பதால் , எல்லாத் தாத்தாக்களும் , பாட்டிகளும் தங்கள்  பேரக் குழந்தைகளிடம்  பேரன்பைப் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள் . இளமையில் தாங்கள் செய்த தவறை , முதுமையில் , பிறர் செய்யாமல் தவிர்க்கும் , தடுக்கும் அனுபவத்தின் முதிர்ச்சியில் இருந்து தான் இந்த அன்பு ஊற்றெடுக்கிறது .

அம்மாவைப் பெற்ற அம்மாவை " அம்மம்மா " என்று தான் நாங்கள் எல்லோரும் கூப்பிடுவோம் . அம்மம்மாவுக்கு ஒரு மகள் , ஒரு மகன்  என இரண்டு குழந்தைகள் . நான் மகள் வழிப் பேரன் . ஒரே பேரன் . மூன்று பேத்திகள் . மகன் வழியில் இரண்டு பேரன்கள் , ஒரு பேத்தி என , பாட்டி ஏழு பேரக் குழந்தைகளுக்குச் சொந்தக்காரி .எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகப்  பாவித்திருந்தாள்.

திருமணமான ஐந்தே ஆண்டுகளில் , இரண்டு  குழந்தைகளைக் கையில் தந்து விட்டு , கடும் வயிற்றுப்போக்கு நோய்க்கு ஆளாகி , எந்த வைத்தியமும் பலன் தராது , தாத்தா செத்துப் போய் இருக்கிறார் .தாத்தா செத்த பிறகு , நெற்றியில் செந்நிறத்தில் திருமண்ணும் , மூக்குத் தண்டின் மேல் பகுதியில் இரண்டு புருவங்களையும் இணைத்தொரு வெண்ணிறத் திருமண்ணும் பாட்டி இட்டுக் கொள்ளுவாள் .சிறிய , கூர்மையான அவளது அழகிய நாசிக்கும் , முகத்திற்கும் அது எப்போதும் மங்களகரமாகவே  இருந்தது .

நாங்கள் மதுரையில் இருந்தோம் . பாட்டி , சென்னையில் தனது  மகன் வீட்டில் இருந்தாள் . எண் 7, வேதகிரி மேஸ்திரி வீதி , சிந்தாதிரிபேட்டை , சென்னை என்ற முகவரியில் தான் பாட்டி குடி இருந்தாள். அந்த முகவரியில் இருந்து , அம்மாவுக்கு அவள் எழுதின கடிதங்கள் கணக்கில் அடங்காதவை . பெரும்பாலும் பென்சிலால் எழுதப்பட்டு , பேனாவால் முகவரி எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் ஒன்றைக்கூட பாதுகாத்து வைக்காமல் போனோம் . பகல் வேளைகள் முழுவதும் புத்தகம் படிப்பது பாட்டிக்குப் பிரியமான நேரம் . படிப்பது அவளுக்குப் பெரும் விருப்பம் .

1940 களிலேயே  , தனது மகளை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிப்  படிக்க வைத்த பெருமை பாட்டிக்கு உண்டு . பின்னாளில் , ஆசிரியப் பணி புரிந்த அம்மா , தனது சம்பளத்தில் இருந்து , என்னைத் தவிர யாருக்கும்தெரியாது பாட்டிக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தாள் . ஒவ்வொருமுறை பணம்  அனுப்புகிற போதும் ," எங்க அம்மா தான என்னைப் படிக்க வைச்சா... " என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளுவாள் அம்மா .

பாட்டியும் , நாங்களும் வேறு  வேறு ஊர்களில் வாழ்ந்தது அழியாத நினைவுகளையும் ,வற்றாத பேரன்பையும் உருவாக்கியது . ஒவ்வொருமுறையும் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகிற போதெல்லாம் , சீர் கொண்டு  வருவது மாதிரி பத்துப் பன்னிரண்டு பெரும் பைகளோடு தான் வருவாள் . மதுரையில் இருந்து புறப்படுகிற போதும் , அதே போலச் சீர் கொண்டு போவாள் .அவள் மதுரைக்கு வருகிற போதும் . சென்னைக்குப் புறப்பட்டுப் போகிற போதும் , நாங்கள் ரயில்வே  ஸ்டேஷன் போகாமல் இருந்ததில்லை . எல்லோரும் பார்க்க , எதைப்பற்றியும் , யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாச் சந்திப்புகளையும் ,எல்லாப் பிரிவுகளையும் பெருகிய கண்ணீரால்  நிறைத்து விடுவாள் பாட்டி .ஒப்பனையற்ற , களங்கமற்ற அந்த அன்பை வேறு எந்த உறவிலும் கண்டடைய முடியாது .

இதனை எழுதுவதற்கு முன்பு , ஒரு முறை வேதகிரி மேஸ்திரித் தெருவில் நடந்து போக விரும்பினேன் . போனேன் .
அந்தத் தெருவும் , அதற்குப் போகிற பாதைகளும் , சுற்றி இருந்த வீடுகளும் முகம் தெரியாதபடி முற்றாக மாறி விட்ட சென்னையில் , ஏழாம் எண் கொண்ட பாட்டி வாழ்ந்த அந்த வீடு இன்னும் அப்படியே பெரிய திண்ணைகளுடன், அழிக் கம்பிகளுடன் அப்படியே என் நினைவுகளைப் போல அழியாமல் , மாறாமல் இருந்தது .மிக மிக மெதுவாக அந்த வீட்டைக் கடந்தேன் .

பாட்டியின் உரத்த குரலும் , அவளது தனித்துவமான சமையலின் மணமும் , பித்தளையில் செய்யப்பட சிற்றுரலில் அவள் வெற்றிலை இடிக்கிற சத்தமும் கேட்கத் தான் , உணரத்தான் செய்கிறது  மனது . சிற்றுரலில் இருந்து வெற்றிலையைச் சுழற்றி கையில் எடுத்து உருட்டுகிற லாகவமும்,இடித்துக் கொடுத்தால் அதிலிருந்து கிள்ளிக் கொடுக்கும் கருணையும்.... இப்போது நினைக்க உள்நாக்கு சிவக்கிறது அந்தப் பழைய வீட்டில் படியேறி உள்ளே போனதும் ,முதலில் வருகிற இடைகழியை அடுத்த முற்றத்தில் , இரண்டு மரத் தூண்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிற துணி காயப் போடுகிற கொடியில் அவளது  தூய வெள்ளை வாயில் ரவிக்கையும் , அரக்கு வண்ணத்தில் கருஞ் சிவப்புக் கட்டமிட்ட சின்னாளப் பட்டுப்  புடவையும் , அதே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது .

வளையாத முதுகு அவளுக்கு . எங்கேயும் , எப்போதும் நிமிர்ந்து தான் உட்காருவாள் . முதுமையின் தடங்கள் அவள் தோற்றத்தில் இருந்ததே அன்றி , ஒரு போதும் அவளது இயக்கத்தில் இருந்ததில்லை . எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள் . சளைக்கவோ, சலிக்கவோ அவளுக்குத் தெரியாது . உழைப்பின் பரவசத்தை ஜீவ சுபாவமாகக் கொண்டிருந்தாள் பாட்டி . எந்த வேலையானாலும் சுத்தம் அவள் இயல்பாகவே  இருந்தது ...

ஒரு சிறிய தவறு நடந்தாலும் , பெருங் குரலெடுத்துச் சண்டை போடும் அவளது குணத்தை யாருமே பாராட்டியதில்லை ."சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் ஊரைக்கூட்டுவாளே " என்கிற பேர் அவளுக்கு எப்போதும் இருந்தது . மிக மோசமான முன் கோபக்காரி என்பது தான் , அவளைப் பற்றிய அறிமுகமாக எப்போதும் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது . அம்மாவே கூட இதனைச் சமயங்களில் சொல்லி இருக்கிறாள் . எனக்கும் அப்போது அப்படித் தெரிந்திருக்கிறது .

ஆனால் , அடைபடாத அவளது கோபத்தின் நியாயங்கள் இப்போது  தான் எனக்குத் தட்டுப்படுகிறது . தன் காலம் முழுவதும் எந்த விதமான பொய், களவு , சூது , அழுக்காறு , அவதூறு , என எந்த இழி குணத்தையும்  ஒருபோதும் அறிந்திராத , உணர்ந்திராத பாட்டியால்  எந்த மிகச் சிறிய தவறையும் சகித்துக்கொள்ள இயலவில்லை . தன் கூடு நோக்கி வரும் ஒரு பசித்த பாம்பைக் கண்ட தாய்ப் பறவை போல சிறகு துடித்துப்  படபடத்திருக்கிறாள் . அந்தப்  படபடப்பைத்தான் தான் கோபமென் று  நாம்  குறைபாட்டுடன்  புரிந்து கொண்டிருக்கிறோம் .எல்லாக் குற்றங்களையும் , தவறுகளையும் பெருந்தன்மை , நாகரிகம் , பொறுமை என்னும் பாவனையில் சகித்துக்கொள்ள பழகி விட்ட நமக்கு  ஒரு தாய்ப் பறவையின் பரிதவிப்பு  புரிவது  சிரமமானது தான் .

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் மதுரையில் இருந்தேன் . . . 



                                                                                                         (இன்னும் இருக்கிறது )