Thursday, February 9, 2017

இது நியாயமுல்ல வன்முறை - குங்குமும் வார இதழுக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்லுகிறோம்

http://buff.ly/1M6G4Xj

கீழ்வெண்மணி, கும்பகோணம் தீ விபத்து, வாச்சாத்தி வழக்கு என ஆவணப் படங்கள் மூலம் சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர், பாரதி கிருஷ்ணகுமார். இன்னல்களும் இடர்பாடுகளும் பட்ட மனிதர்களுக்காக தளராத நம்பிக்கையோடு போராடும் மனிதர். 

முதன்முறையாக தமிழ் சினிமாவில் இயக்குநராகி ‘என்று தணியும்...’ என எடுத்துக் காட்டியிருக்கிறார். தன் கலைவாழ்வின் உன்னதமான அனுபவத்தில் இருக்கும் அவரிடம் நடந்தது இந்த உரையாடல்.

‘‘வெறுப்புணர்வு உருவாக்கும் பேச்சுக்களும், பகைமையும், மோதல்களும், கௌரவக்கொலைகளும் மிகுந்திருக்கிற நேரம் இது. இளைஞர்களும், பெண்களுமாக கிட்டத்தட்ட 78 பேர் இந்த உரையாடல் நிகழும் நேரம் வரை பலியாகியிருக்கிறார்கள். ரத்த உறவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், இல்லாத சாதியைக் காப்பாற்றுவதற்காக, இருக்கிற காதலை அழிக்கிறார்கள். இதை வன்மையாக, அழுத்தமாகச் சொல்ல விரும்பினேன். இது உண்மைக்கதை மட்டுமல்ல... உண்மைகளின் கதை!’’

‘‘ ‘என்று தணியும்’ படத்தை எந்த மனநிலையோடு பார்க்கலாம்?’’‘‘இது எளிய கிராமத்துக் கதைதான். அக்கா, ஒரு தம்பி... கிராமங்களில் கைப்பிள்ளையைப் பார்த்துக்கொள்வதற்கு மூத்த பெண் குழந்தையை இறக்கிவிடுவார்கள். 

தம்பியை வளர்த்து படிக்க அனுப்புகிற அக்கா... அதுவரைக்கும் அவருக்கு இந்த உலகத்தில் ஆண்கள் இருப்பதுகூட தெரியாது. அக்காவா, ஆத்தாவா என்கிற அளவுக்கு தம்பியை வளர்க்கிற அவருக்கு பதின்பருவத்தில் ஒருவருடன் காதல் வருகிறது. அவனது நல்லியல்புகள் கண்டுதான் இந்தக் காதல். 

அந்தக் காதலுக்கு அந்த கிராமமும், மனிதர்களும் சேர்ந்து எதிரியாகி, சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள். ஊர் திரும்பும் தம்பி அதை அறிகிறார். அதற்கு எந்தத் தடயங்களும் இல்லாமல் பழிவாங்கி முடிக்கிறார். 

‘தர்மம் வெல்லும்... அநீதி தோற்கும்!’ என்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலாதான். ஆனாலும் அதை வேறுபடுத்திச் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் இரண்டு வகையான வன்முறைகள் இருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்ற சாதியை ஏந்தி வன்முறை நடத்துபவர்கள் ஒரு வகை; அதற்கு நீதி கேட்டு எதிர்வினையாற்றுபவர்கள் இன்னொரு வகை. 

இதுவும் வன்முறைதான். ஆனால், இரண்டும் ஒன்று அல்ல. இரண்டையும் தராசில் போட்டு நிறுக்க
முடியாது. முதல் வன்முறைக்கு நியாயம் இல்லை. எதிர் விளைவுக்கு நியாயம் இருக்கிறது. பழி வாங்குவதற்குரிய உரிமையை இவர்கள்தான் தருகிறார்கள். பழிவாங்குதல் தொடர்கிறது. 

இங்கே வன்முறை என்பது வளர்ந்துகொண்டே இருக்கிறது. இவர்கள் யாருக்கும் சாவு கூட நிம்மதியாக அமையாது. பத்து வருஷத்திற்குப் பிறகு கூட எங்கோ இருந்து ஒருவன் பழி வாங்க முளைத்து வருவான். உடம்பில் ஓடுகிற ரத்தம் வீதியில் ஓடக்கூடாது, உயிர் மலிவானதல்ல என சொல்லியிருக்கிறேன்!’’‘‘சினிமாவுக்கு உங்கள் மனம் பொருந்தி வருகிறதா..?’’

‘‘இங்கே நூறு நாள் சினிமா இல்லை. அதை 100 தியேட்டர்களில் ஆறு நாள் ஓடுகிற படமாக மாற்றிவிட்டார்கள். எல்லாமே மாறிப் போச்சு. மிகப் பெரிய வர்த்தக சூதாட்டம் இங்கே நடக்கிறது. ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிற ஹீரோக்களுக்காகவே இங்கே சினிமா நடக்கிறது. 700 படங்களுக்கு மேல் திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி அதில் 3000 கோடி ரூபாய் போய் முடங்கிக் கிடக்கிறது. 

ஆனால், கவனித்துப் பார்த்தால் சின்ன முயற்சிகள்தான் தமிழ் சினிமா நடையையே மாற்றிப் போட்டு இருக்கின்றன. ‘செட்’களை உதறிவிட்டுப் புறப்பட்ட பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ நம்மை மலர்த்தியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது, ‘உதிரிப்பூக்கள்’ நம்மை உயிர்ப்பித்ததும் அவ்விதம்தான். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு விழாவில் ஈரான் இயக்குநர் அவரிடம் கேட்டதாக ஒரு விஷயம் சொன்னார்... ‘ஏன் உங்கள் படங்களில் உங்களின் கலாசாரம், பண்பாடு, நன்மை, தீமை, குறை, நிறை என எதுவுமே இல்லை? நீங்கள் யாரைக் காட்டுகிறீர்கள்?’ என அவரிடம் கேட்டதாகச் சொல்லியிருந்தார். 

இதுதான் நிஜம். இங்கே அசல் தமிழ்ப் பெண்ணைப் பார்க்க முடியாது. ஹீரோக்கள் விதவிதமான துப்பாக்கிகளோடு வீதிகளில் அலைகிறார்கள். நான் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்ட விரும்பினேன்.

சமூகத்தின் அழுக்குகளை உரித்துக் காட்டவும் நினைத்தேன். அந்தக் கோபத்தையே ஒரு ஜல்லிக்கட்டு காளை மாதிரி பூமியைக் கீறி, மண்ணை வாரியிறைத்து முன்னே நகரும் மூர்க்கத்தோடு, கோபத்தோடு சொல்லியிருக்கிறேன். தமிழுக்கான ஒரு பொதுமொழியை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். பந்தக்கால் நடுகிற வயதில் பாடை கட்டிப் போவதை உரத்த குரலில் கண்டித்து இருக்கிறேன். 

உண்மையை உண்மையாகச் சொல்லும்போது ஒப்பனைகள் தேவையில்லை. உண்மை பேரழகு. எவ்வளவு ஒப்பனையோடு வந்தாலும் பொய் அருவருப்புதான். அருவருப்புக்கும், உண்மைக்குமான வேற்றுமையை இந்தப் படம் முன்வைக்கும். இப்போதெல்லாம் எந்தப் படமென்றாலும் மூன்று நாட்களுக்குள் பார்த்தால்தான் உண்டு. அதனால் மக்களே, தமிழ் சினிமாவின் புதிய விதியை அறிந்துகொண்டு சீக்கிரமே படத்தைப் பார்த்துவிடுங்கள்!’’
‘‘எல்லோரும் புதுமுகங்கள் போல?’’

‘‘அதுதான் நல்லது. மேலும் அவர்களுக்கு மேக்கப் கிடையாது. ஒரு கிராமத்தில் நீங்கள் காணக்கூடிய அதே முகங்கள்தான். யுவன் மயில்சாமி, சந்தனா, ராஜேஷ் பாலச்சந்திரன், ஜீவிதா என அவர்கள் கேரக்டர்களாகவே மாறியிருக்கிறார்கள். என் உள் உணர்வுகளைப் புரிந்தாலன்றி இந்த நடிப்பு சாத்தியமில்லை. 

இந்தப் படத்தை பார்த்துவிட்டு குழந்தைகள் தூக்கத்தில் அலற மாட்டார்கள். இளைஞர்கள் கொடுங்கனவு கண்டு விழிக்கமாட்டார்கள். இப்படியெல்லாம் நடக்கிறதா எனப் பல கேள்விகள் எழுந்து, இளைஞர்களின் மனதைத் தொடும். யதார்த்தத்தைக் கொண்டு வந்து முன்நிறுத்தும். எந்த ஒரு படைப்பும் குறை இல்லாமல் இருக்காது. அப்படி இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. உருவாக்கத்தில், கதையில், ஒரு குற்றமும் இல்லை. 

குறைகள் இருக்கலாம்... தத்தித் தத்தி நடக்கிற குழந்தை ஒரு தடவையாவது கீழே விழாமல் இருப்பது இல்லை. அந்த இடறலைக் கண்டு யாரும் சிரிக்க மாட்டார்கள். எங்கள் முதல் நடையை நீங்கள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். 

செழியனின் உதவியாளர் எஸ்.பி.மணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நா.முத்துக்குமார், யுகபாரதி, தனிக்கொடி என பொருத்தமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள். என் ஆவணப் படங்களுக்கு தகுதியான இசையளித்த இரா.ப்ரபாகர்தான் இதற்கும் இசை. தயாரிப்பாளர் பழனிச்சாமி, திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் உரிமையாளர்.

 ‘ஆபாசமோ, கவர்ச்சியோ, அருவருப்பு காமெடியோ இல்லாமல் நம்ம குடும்பத்தில் பெண்களும், இளைஞர்களும் பார்க்கிற மாதிரி, மிகை இல்லாமல், தரமாக எடுங்கள்’ என்றார். இப்படியொரு தயாரிப்பாளர் கிடைத்தது அபூர்வம். அவர் கனவுக்கு வடிவம் கொடுத்தது மட்டுமே நான் செய்து முடித்த வேலை!’’