Friday, February 3, 2017

Aathira Mullai

Aathira Mullai 
என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
********************************************************************
சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.
என் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.
ஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.
ஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.
இது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar

No comments:

Post a Comment