Saturday, September 29, 2012

ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...





நாளை வெளியாக உள்ள வாச்சாத்தி நிகழ்வு பற்றிய ஆவணத் திரைப்படம் குறித்த ஹிந்து நாளிதழின் முன்னோட்டம்.
ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...

Wednesday, September 19, 2012

பாரதி கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா




புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி போகிற வழியில் , புதுக்கோட்டை நகரத்துக்கு அருகில் இருக்கிறது கைக் குறிச்சி கிராமமும் , பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியும் . போன மார்ச் மாதம் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவுக்குப் போனேன் . விழா சிறப்பாக இருந்தது . எளிய , நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பயிலும் கல்லூரி . நன்கு , ஆழ்ந்து கேட்கும் ஆற்றலை மாணவிகளிடத்தில் உருவாக்கி இருந்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் ..கல்லூரியின் நிறுவனரும் .தாளாளருமான திரு. தனசேகரன் மனம் கனிந்த அன்புடன் உபசரித்தார் . அவருக்கு தனித்த நன்றி சொல்ல வேண்டும் . விழாவிற்கு  புதுகை இளங்கோ,
கவிஞர் இரா .தனிக்கொடி , ரமா. ராமநாதன், ஒளிப்பதிவாளர் செல்வா என  நீண்ட நாள் நண்பர்கள் வந்து மேலும் களிப்பூட்டினார்கள் .

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் ஒரு குறை இருந்தது .... மகளிர் தின விழா மேடையில் ஏகதேசமாக ஒரு பெண் கூட இல்லை . ஆண்கள் இன்னும் திருந்த வேண்டியதிருக்கிறது . என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன் .

இந்த ஆண்டில்கலந்து கொண்ட எல்லா நிகழ்வுகள் குறித்தும் எழுதணும் என்று ஆசை . ஆசைக்கா பஞ்சம் ?...

Wednesday, September 12, 2012

தினமணிக்கு நன்றி

மகாகவி பாரதியின் நினைவைப் போற்றும் பொருட்டு, மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் இலக்கிய நிகழ்வில் விழா பேருரை ஆற்றும் பெரும் பேறு கிட்டியது.

மாணவர்கள் விழாவில் பங்கேற்ற விதமும், அவர்களது கேட்கும் திறனும் பாராட்டுதலுக்குரியவை.















விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாகத் தரும் பாக்கியமும் கிட்டியது.

பாரதி பற்றி மதுரையில் பேசியது மகிழ்ச்சிக்குரியது.

ஒரு  பள்ளியில் பேசியது அதனினும் மகிழ்ச்சிக்குரியது.


நிகழ்வில் பேசியதில் இரண்டு ஆதாரமான குறிப்புகளை
தினமணியின் மதுரைப் பதிப்பு வெளியிட்டு,
மேலும் பெருமை சேர்த்தது.

தினமணிக்கு நன்றி.
 எல்லாப் புகழும் பாரதிக்கு...

Tuesday, September 11, 2012

முன்னுரை




லகின் எந்த மொழியிலும் இன்னும் எவராலும் எழுதிமுடிக்கப்படாத
பேருணர்வே காதல். எல்லாக் காலத்திலும்,எல்லா மொழிக்கும் எழுதுவதற்குக் குறைவின்றி அள்ளி, அள்ளித்தரும் அருட்கொடையும் காதல்தான். 
காதலை "எழுதிமுடித்த" மொழிகள்தான் காணாமல்போன மொழிகளின் பட்டியலில்,இடம்பெற்ற மொழிகள் என்பதை, எந்த ஆய்வாளனின் உதவியுமின்றி அறிந்துகொள்ளுதல் இயலும்.

நீதி நூல்களின் வரிசையில் எப்போதும் தனித்த முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும்,திருக்குறளில்,வள்ளுவன் காமத்துப் பாலைச் சேர்த்துப் பாடியதன் பின்னே இருக்கும் நீதி அதுதான். தன் படைப்புக்கும் சாகாவரம் வேண்டித்தான் காமத்துப்பாலையும் வள்ளுவன் எழுதினான்.

ன்றைக்கும் "விலங்கின்" பிரிவுகளில் ஒன்றாகத்தான் நம்மை விஞ்ஞானம் வகைப்படுத்துகிறது.விஞ்ஞானத்தின் இந்த விபரீதமான பகுப்பாய்வைத் தகர்த்து நாம் மனிதர்களாக மனுஷிகளாகத் தரம் 'உயர்ந்தது' காதல் நமக்குத் தந்த உயர்வினாலே தான்.விலங்கிற்குப் பிறந்து விலங்காகப் பிறந்து, விலங்கெனவே வாழ்ந்து, விலங்காகவே மடிந்து போய் விடுகிற நமது வாழ்வில் நமக்கு மனிதத்தன்மை தரும் பேருணர்வு காதல் மட்டுமே.
இந்தப் "பேருணர்விலே" இருந்துதான் மனிதன் இதர அனைத்து வகையான அறங்களையும்,பண்புகளையும் குணநலங்களையும் ஒழுக்கங்களையும்
உருவாக்கி இருக்கிறான்.காதலில் இருந்து தான் தனக்கான அனைத்து மேன்மைகளையும் ஆற்றல்களையும் மனிதன் உருவாக்க முடியும். 'உயிர்ப்பிக்கும்' உறவாக காதல் மட்டுமே களத்தில் இருக்கிறது. மற்றதெல்லாம் காதல் பிறப்பித்த,புலப்படுத்திய உப-பொருட்களேயன்றி வேறல்ல.
ராமன் மனிதனாகப் பிறந்த கடவுளா?அல்லது கடவுள் மனித உருவில் வந்தாரா என்பதையெல்லாம் பட்டிமண்டபங்களின் முன்னாள் பெருச்சாளிகளுக்கும், இந்நாள் சுண்டெலிகளுக்கும் பேசுபொருளாக விட்டுவிடலாம். ராமன் அமரத் தன்மை பெற்றது மிதிலையில் சீதையைக் கண்டு, காதல் கொண்டபிறகு தான்.பத்தாயிரம் பேர் சுமந்து வந்த, யாராலும் எடுத்து நிறுத்த இயலாத சிவதனுசை, இராமன் மட்டும் எப்படி முறித்தான்?. "எடுத்தது கண்டார்;இற்றது கேட்டார்" என்று கூடியிருந்த எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிடுகிற விரைவோடு, வலிமையோடு இராமனால் மட்டும் எப்படி முறித்தெறிய முடிந்தது..?
அவன் கடவுள் மனிதன் என்பதெல்லாம் இதற்குப் பொருத்தமான விடைகளே அல்ல;சுயம்வரத்திற்கு வந்தவர்களிலேயே சீதையைக் கண்டதும் காதல் கொண்டதும் ராமன் ஒருவனே. அவளும் கண்டு, காதல் கொண்டதால் தான்  அத்தகைய ஆற்றல் அவனுக்கு வாய்த்தது. மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகும் அற்புதத்தை எது தருகிறதோ, அது காதல், அதுவே காதல்.
விசுவாமித்திரன் வேறு பாதையில் அழைத்துப் போயிருந்தால் கதையும் வேறு பாதைக்குத் தான் போய் இருக்கும்.உலகின் வேறு எந்த மொழி ராமாயணப் பிரதியிலும் சொல்லாது விட்டதை தமிழில் தான் மட்டுமே பாடி "கவிச்சக்கரவர்த்தி" ஆனான் கம்பன்.

கப்பட்ட 'காதல்' தொகுப்புகள் தமிழில் வந்துவிட்டன. மிகப் பெரும்பான்மையான முதல் தொகுப்புகள் 'காதலை' மையம் கொண்டே
உருவாகி இருக்கின்றன என்ற போதும் என் வாசிப்பின் எல்லைக்குள் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்னும் தொகுப்பும் பரிணாமனின் காதல் முதல் காதல் வரை என்னும் தொகுப்புமே மனம் கவர்ந்தவைகளாக இருந்திருக்கின்றன. இந்தச் சிறிய பட்டியலில் இப்போது மூன்றாவதாக ஆத்மார்த்தியின் "108" காதல் கவிதைகள்" என்னும் இந்தத் தொகுப்பையும் நான் சேர்த்துக் கொண்டேன்.
108 என்கிற எண் தன்னை வசீகரிப்பதாகத் துவங்குகிறார் ஆத்மார்த்தி. இந்துச்சமய மரபில், பெரிதும் புனிதமாக்கப்பட்டுவிட்ட எண் 108. அர்ச்சனை
ஆராதனை தியானம் திருத்தலங்கள் என்று விதம்விதமாய் அந்த எண்ணை உருவேற்றி வைத்திருக்கிறது சமயம்.இத்தனை காலம் சமயம் உருவேற்றிய எண்ணுக்கு, இந்தத் தொகுப்பால் மேலும் வசீகரம் கூடுகிறது.
சாதாரண மனிதர்களின் மனதில் கேட்டவுடன்,வழிபாட்டு உணர்ச்சியை உண்டாக்குகிற எண் 108.அந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,
காதலின் மீதான தனது வழிபாட்டுணர்வை கவிஞன் சொல்லாமல் சொல்லுகிறான். உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களை அழைப்பதற்கு அந்த எண் பயன்படுகிறதென்றால், காதலைப் பாட மிகப் பொருத்தமான தேர்வாக அந்த எண் துலங்குகிறது.

ந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,சமயம் உருவாக்கிய புனிதத்தை,நூற்றாண்டுகளாக உருவாக்கிப் பாதுகாத்த புனிதத்தை,சட்டென்று
காதலுக்குக் கைமாற்றித் தந்ததற்காக "கடவுள்" ,ஆத்மார்த்திக்கு நன்றி சொல்லக்கூடும். வழக்கம் போலவே, ஆஷாடபூதிகள் எதிர்க்கவும் கூடும். எது நடந்தாலென்ன?எல்லாவற்றையும் காதலும்,கவிதையும் பார்த்துக் கொள்ளும்.

"காதல் மிக அற்பமானது; அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதுமானது ஆனால் அது மேன்மையுறுவதற்கு சம்மந்தப்பட்டவர்களின் வேறு சில குண நலன்களே காரணமாய் இருக்கின்றன" என்று தனது நாவல் ஒன்றின் முன்னுரையைத் துவக்கி இருப்பார் திரு.ஜெயகாந்தன். அத்தகைய சிறப்புடைய குணநலன்கள் குறித்து
அதிகம் பேசுவது இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.
எப்போதுமே கவிதைகளின் மீது தீராத காதல் கொண்ட, படைப்பு மனம் மிக்கவர்களுக்கு,மேலும் கிளர்ச்சியூட்டுகின்றன காதல் கவிதைகள். இந்தத் தொகுப்பில் புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிப் பிரயோகிப்பதிலும்,புதிய கற்பனை மொட்டுக்களைப் பிரயாசையின்றி மலர்த்தி விடுவதிலும்,வெற்றி கண்டு மகிழ்ச்சி கொள்ள வைக்கிறார் ஆத்மார்த்தி. மொழியின் சாகசம் நிறைந்த பாதைகளின் வழியே,காதலைக் கைப் பிடித்து அழைத்துப் போவதிலும் அலுப்பற்ற பயணம் சாத்தியமாயிருக்கிறது ஆத்மார்த்திக்கு.
இந்தத் தொகுப்பு உருவாக்கும் வசீகரங்களில் மிக முக்கியமானது இதன் எளிமையும்,சிக்கனமும்.இந்தக் "கட்டுமானம்" தனித்த அழகோடிருக்கிறது.நெருக்கிக் கட்டப்பட்ட இந்த இறுக்கம் கூட இளமையின் முறுக்கேயன்றி, முதுமையின் இறுக்கமன்று; இந்த சொற்சிக்கனம்,வாசிப்பின் போதே கவிதையின் முழுப்பொருளையும் அப்போதே உணர்ந்து விடுகிற அனுபவத்தைத் தருகிறது.அது வாசிப்பில் ஒரு பரவசமான விரைவுத்தன்மையை ஏற்றுகிறது. அந்த விரைவு, இரண்டு இழைகளுக்கு இடையில், நெசவில், பாய்ந்தோடும் எறிகுழலைப் போல விரைந்தோடி, இழைகளை, தனித்த இழைகளை, இணைத்து ஆடையாக்கி விடுகிறது.

ணையத்தில் இந்தக் கவிதைகள் அன்றாடம் எழுதப்பட்டப்போது, தொடர்ந்து படிக்க இயலாது அவ்வப்போது படித்த தருணங்களிலேயே
இவைகள் என் மனம் கவர்ந்து இன்று தொகுப்பாகிக் கைகளில் கிடக்கிறது.
               "வாங்கிச் செல்கிறவருக்கு
                வாசிக்கத் தெரியுமோவென
                ஏங்கிச்செல்லுமாம் வீணை;
                மடியினில் ஏந்தி
                மீட்டத் துவங்குகையில்
                வழியத் தொடங்குமாம்
                நாண இசை"
"காமம்" என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதை,காமம் என்கிற சொல்லை நம் முன்னோர்கள் கையாண்ட "காதல் என்கிற முன்னைப் பழம்பொருளிலேயே எடுத்தாள்கிறது. இந்தக் கவிதை காதலுக்கும் கவிதைக்கும் பொதுவான பாடுபொருளாகப் படுகிறது எனக்கு... தன்னை எடுத்து  எழுதப் புகுந்தவனிடமும் இதே ஏக்கத்துடன் காத்திருக்கிறது 'மொழி' என்றே நான் கருதுகிறேன்.மொழியும் அவளும் அறிவார்கள்... இசை எப்போதும் வாத்தியத்தில் இல்லை; அது வாசிக்கிறவன் இடத்திலே தான் இருக்கிறதென்பதை." இந்தப் பேருண்மையை எளிய சொற்களில் தருகிறது இந்தக் கவிதை.
'கலவி' என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் உட்பொருள் மிக,மிக நுட்பமான உடலியல் உண்மையை உணர்த்துகிறது.எல்லாமும் இசைந்து இருக்கிற எல்லாமும் கலந்து இருக்கிற எல்லாமும்... எல்லாமும் இணைந்து இருக்கிற ஆகச்சிறந்த கலவி தரும் பேரின்பத்தைப் பேசுகிறது இந்தக் கவிதை.
'அறியாதவர்'களே இதனைச்சிற்றின்பம் என்று சொல்லித் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொண்டார்கள். அறியாதவர்களுக்கு அது சிற்றின்பம் தான். அறிந்தவர்கள் அறிவார்கள் அது பேரின்பம் என்பதையும். மழையை நிலம் புணர்ந்தது என்பதையும்.அதுதானே "செம்புலப் பெயல் நீர்".... நிலம் புணர்ந்து மழைக்குத் தன் நிறம் தருவதே கூடல்,
இந்தப் பேரின்பத்தின் அந்தரங்கத்தை, எல்லோரும் பயன்பெற மொழிகிறது இந்தக் கவிதை.மோட்சத்திற்குப் போகிற பாதையை,கோபுரத்தின் மீதேறி நின்று,ஊரைக் கூட்டிச் சொல்வதற்கு எவ்வளவு பரந்தமனம் வேண்டுமென்பதை, இப்போது உணர முடிகிறது. அந்தரங்கத்தின் நுட்பங்களையும், ரசனைக் கூர்மையையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் காதலை எல்லோருக்குமானதாக மாற்றி விடக் கூடும்.

ல்லோரும் காதலிக்க வேண்டுமென்பது என் கட்சி. அதனை எல்லா அழகுடனும், அற்புதத்துடனும், மனிதர்கள் நிகழ்த்த வேண்டுமென்பது என் பெருவிருப்பங்களில் ஒன்று. என் பெருவிருப்பத்தை, இத் தொகுப்பு நிறைவேற்றுவதால், இது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்த முன்னுரை கூட ஆத்மார்த்திக்காக எழுதப்பட்டதல்ல. காதலுக்கு என எழுதப்பட்டதே. அந்த உவப்பில்,களிப்பில் என் ஆசான் மகாகவி பாரதி சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். "ஆதலினால் காதல் செய்வீர்.."

"குளத்து மீன்கள்
 கடிக்கும் என்றபடி
 கரையில் நின்றேன்
 "பேசும்" என்று
 கால் நனைத்தாய்.
இந்தக் கவிதையைப் படித்ததும் முகமறியாத அந்த மனுஷியின் மீது மதிப்புண்டாகிறது.இப்படிப் பேசுவதால் காதலிக்கப் பட்டாளா..அன்றி காதல்
வயப்பட்டதால் இப்படிப் பேசுகிறாளா என்று ஊகித்து உணரமுடியாமல் பிரமிப்புத் தட்டுகிறது. கவிதையில் உருவாக்கப்பட்ட மென்மையுணர்ச்சியும், அழகுணர்ச்சியும் மிகுந்த களிப்பூட்டுகிறது. அந்தக் கணம்,அந்தக் குளத்து மீனாகி விட வேண்டுமென்று கூடத் தோன்றுகிறது.
மேலும் மேலும் இத்தொகுப்பில் உள்ள மனம் கவர்ந்த கவிதைகளைப் பற்றி எழுதி இதை ஒரு வழமையான முன்னுரையாக மாற்றிவிட எனக்கு
விருப்பமில்லை.; காதலின் பேரின்பத்தை இந்தக் கவிதைகளை வாசித்து இன்புறுங்கள். பிரிவின் துயரத்தையும் இந்தக் கவிதைகள் உணர்த்திவிடக் கூடும்.இன்பம் துன்பம் இரண்டுமே ஒன்றாகி, ஒரு சேரத் தருவது தான் காதலின், நூதனமான தனிப் பண்பாகி இருக்கிறது. அதனாலேயே தான் நெருங்கினால் குளிர்கிற நீங்கினால் சுடுகிற நெருப்பென்று அதைச் சொன்னான் வள்ளுவப் பேராசான்.

பாரதி எழுதினான் "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாகப் பிற.மனிதனானால் காதல் செய்..." ஏனெனில் காதல் தான் சாதிகளை ஒழிக்க வல்லது. காதல் தான் மதங்களைக் கடக்க வல்லது.காதல் தான் எல்லாப் பேதங்களையும் எடுத்தெறியக் கூடியது.
காதல் தான் விலங்காயிருந்த நம்மை மனிதனாக்கியது.
காதல் தான் மனிதர்களாய் இருந்த நம்மை அமரனாக்கியது.
காதல் 'தன்' வயப்பட்டவனையும்,தன்னைப் பாடுகிறவனையும், தன்னை வாசிக்கிறவனையும் கூட அமரனாக்கும் ஆற்றல் கொண்டது.
அத்தகைய அமரத்தன்மை, நம் எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01.08.2012

ஆத்மார்த்தியின் 108 காதல் கவிதைகள் தொகுப்புக்குத் தந்த முன்னுரை...