Monday, December 23, 2013

வெண்மணி நினைவேந்தல்

நாற்பத்தி ஐந்து  ஆண்டுகள் ஆகி விட்டன . இன்னும் கலையாத கண்ணீரும் , துயரமும் அந்தப் பூமியில் புகை போல மூடிக் கிடக்கிறது .

எந்த வடிவத்திலும் சொல்லி விட முடியாத , அளவிட முடியாத இழப்பிற்குப் பின்னும் வீறு கொண்டு , போராடியவர்கள் அந்த  மக்கள்

அவர்களது போர்க்குணமும் , பற்றுறுதியும் , நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகள்.

இன்னும் சொல்லப்பட வேண்டிய பல தரவுகளும் , ஆவணங்களும் , செய்திகளும் என் சேகரிப்பில் உள்ளது .

எனினும் ஒரு எழுபது நிமிட ஆவணப் படமாக மட்டுமே அதை இறுதிப் படுத்த நேர்ந்தது .

அதன் வெளியீட்டு விழாவில்   ஏற்புரையாக .நான் சொன்னேன் . " இது இரண்டு அல்லது மூன்று மணி நேர ஆவணப்படமாக வந்திருக்க வேண்டும் . ஆனால் எனக்கிருக்கிற  பொருளாதாரத் தடைகள் காரணமாக நான் இதை எழுபது நிமிடத்தில் முடிக்க நேர்ந்தது . என் சொந்த உடலின் உறுப்புகளை நானே வெட்டிக் கொள்வது போன்ற துயரத்துடன் நான் இதனைச் செய்திருக்கிறேன். "

இன்னும் சொல்லப் பட வேண்டியவைகளைத் தொகுத்து இன்னுமொரு ஆவணப்படத்தை இரண்டாம் பகுதியாக செய்ய வேண்டும் என்கிற கனவும் , விருப்பமும் இருக்கிறது .

எல்லாம் இசைவாக வந்தால் அதை விட உன்னதமான பணி எதுவுமில்லை .

இந்தத் தலைமுறையில் , பாடப் புத்தகத்தில் இணைக்க வேண்டிய வரலாறு இது . அது வரை  நாம் தான் எல்லோருக்கும் இதனை உரக்கச் சொல்ல வேண்டும் . அந்த வகையில் , நிகழ்வை நடத்தும் சமூக ஆய்வு மையம் வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் உரியது .

ஊனும் , உயிரும் உருக உருக ...

எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறேன் . எனது ஆவணத் திரைப்படங்களுக்காக ... எனது புத்தகங்களுக்காக ...

ஆனால் , குறிப்பிட்ட படைப்புக்கென  இல்லாமல் இத்தனை நாள் பேசிய தமிழுக்காக "தமிழ் நிதி " விருது பெறுகிறேன் .அம்பத்தூர் கம்பன் கழகம் இந்த விருதினை வழங்குகிறது .

அம்பத்தூர் கம்பன் கழகம் தகைமை சான்ற மனிதர்களால் நடத்தப் பெறுகிறது . அதன் தலைவர் "பள்ளத்தூர் " திரு . பழ . பழனியப்பன் கம்ப ராமாயண உரை ஆசிரியர் .

அவர் என்னை அழைத்து இந்த விருது பற்றி சொன்னதும் , மனமார ஒப்புக் கொண்டேன்.

இத்தகைய விருதுகளுக்கு தகுதி உடையவனாக என்னை ஆளாக்கியது என் அன்னையே . அவளை நான் மிக அதிகமாக நினைத்துக் கொள்ளுவதுண்டு .இருபத்தி நான்கு மணி நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பதாகச் சொன்னால் அது மிகையான பொய் .

யாரும் , யாரையும் இருபத்திநாலு மணி நேரமும் நினைத்திருக்க இயலாது .எந்த பக்தனுக்கும் ,  காதலனுக்கும் , காதலிக்கும் , நண்பனுக்கும் ,எதிரிக்கும் ... கூட  அது சாத்தியமில்லை .

நினைக்கிற தருணத்தில் , அந்த நொடியில், மனதின் அடியாழம் வரை ஊனும் , உயிரும் உருக உருக நினைத்துக் கொண்டால் போதுமானது .

அம்மா ... உன்னைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் ஊனும் , உயிரும் உருக , உருகித் ததும்ப நினைத்துக் கொள்ளுகிறேன் .

அம்மா ... நீ ... இருந்திருக்கலாம் . எதனால் இத்தனை விரைவாக விடை பெற்றுக் கொண்டாய் ? உன் உயிர் பிரிந்த கணத்தில் உன் அருகில் தானே இருந்தேன் ... ஏதும் சொல்லாமல் போனாய் . நினைந்து , நினைந்து மகன் உருகட்டும் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய் . ஆனாலும் , தனியே விட்டு விட்டுப் போனாய் .

வாழ்வில் தனிமை என்பதை முதன் முறை அறிந்ததும் , உணர்ந்ததும் அன்றைக்குத் தான் . அது இன்றும் , இப்போதும் என்னைச் சூழ்ந்தே இருக்கிறது .
உன்னை எரியூட்டினோம் . சொந்த நிலத்தில் புதைத்திருக்க வேண்டும் . புதைப்பது தான் திராவிடர்களின் பழக்கம் , பண்பாடு .
நிலமில்லாத நாடோடிகளின் பழக்கமே எரியூட்டுவது .

உன்  கல்லறை இல்லாத போதும் எல்லாவற்றையும் உன் காலடியில் தான் சமர்ப்பணம் செய்கிறேன் .

Thursday, December 5, 2013

சென்னைக் கம்பன் கழகத்தில் ...

 அக்டோபர் பதினான்காம் தேதி சென்னைக் கம்பன் கழகம் ஏற்பாடு செய்த ஆத்தி சூடி வரிசை தொடர் சொற்பொழிவில் பேசும் வாய்ப்பு அமைந்தது .

அரங்கம் நிறைந்த கூட்டம் .

சான்றோர்கள் நிறைந்த சபை .

அன்றைய எனது உரையை சிறந்த ஆய்வுரை என்று பார்வையாளர்கள் பலரும் பாராட்டினார்கள் .

அன்று பேசியதை ஒரு நூலாக எழுதலாம் என்று ஒருவர் ஆலோசனை சொன்னார் . ஒப்புக் கொண்டேன் . பாரதியின் அடுத்த பிறந்த நாளுக்குள் எழுதி விட வேண்டும் என்று திட்டம் .

எல்லாக் கனவுகளும் மெய்ப்பட வேண்டும் .


புகைப்படத்தில் இடமிருந்து வலமாக ... திருமதி .பேரா . சாரதா நம்பிஆரூரன் , திரு .இலக்கியவீதி இனியவன் , பாரதி கிருஷ்ணகுமார் , திரு . இராம .வீரப்பன் , திருமதி பேரா . நசீமா பானு , திரு .பேரா .சாயபு மரைக்காயர் .

Wednesday, December 4, 2013

போலச் செய்தது ...






எல்லாம் சரியாக அமைந்து இருக்கிறதா என்று பார்க்க , நட்சத்திரம் அமர வேண்டிய இடத்தில் , படப்பிடிப்புக் குழுவில் இருக்கிற யாராவது ஒருவரை அந்த இடத்தில் அமர வைத்து MONITOR எடுத்துப் பார்த்துக் கொள்ளுவது சினிமாவில் எப்போதும் இருக்கிற ஒரு நடைமுறை 
அதற்குப் போய் அமர்கிறவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டால் போதுமானது .முக பாவங்களை மாற்றுவதோ , உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோ , நடிப்பதோ MONITOR க்குப் போய் உட்காருகிறவர்கள் செய்ய வேண்டியதே இல்லை 

.எப்போதாவது MONITOR பார்க்க நம்மை அழைக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும் . அது சினிமாவில் வேலைக்குச் சேர்ந்த புதிது . பெரும்பாலும் காமிராத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் தான் போய் அமர்ந்து கொள்ளுவார்கள் .
ஒரு முறை என்னை அழைத்தார்கள் . படமாக்கப்படும் காட்சி எதுவென்று தெரிந்ததால் கொஞ்சம் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்ட படி போய் அமர்ந்தேன் .எல்லோரும் சிரித்துக் கேலி செய்தார்கள் . எதற்குச் சிரிக்கிறார்கள் என்பது புரியவே கொஞ்ச நேரமாகி விட்டது . எனக்கு அந்தக் காட்சிக்கு ஏற்ப போலச் செய்தது தவறாகப் படவில்லை 



.இந்தப் புகைப்படங்களை தமிழ் சினிமாவின் மாபெரும் நிழற் படக் கலைஞர் நண்பர் கே .வி . ,மணி எடுத்தார் என்பது கூடுதல் பெருமை  



Tuesday, December 3, 2013

வாதாபி குடைவரைக்கோயில்

 வட கர்நாடகத்தில் உள்ள வாதாபி .
இரண்டாம் புலிகேசி காலத்திய குடைவரைக்கோயில்.
பேரழகும் , கலைத் திறனும் மிக்கது . ஒரு திரைப்படத்திற்காக , லொக்கேஷன் தேடித் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் .இந்தப் புகைப்படத்தின் தனிச்சிறப்பு ... இதை எடுத்தது இயக்குனர் இமயம் .