Thursday, October 10, 2013

ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை ...

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கானக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. .எப்போது சாலையில் என்ன மாற்றங்கள் நடக்குமென்று அவதானிக்கவே முடியாது .சில இடங்கள் பகலில் ஒரு வழிப் பாதையாக இருப்பதும் , அதே சாலை இரவில் இரு வழிப் பாதையாக மாறுவதும் அன்றாடம் நடக்கும் .

சமயத்தில் வழக்கமான பாதையை அடைத்து வேறு பாதைக்குத் திருப்பி விட்டு விடுவார்கள் . சில இடங்களில் நூறு அடிச்சாலை இருபது அடிச்சாலை ஆகச் சிறுத்திருக்கும் .தலைக்கு மேலும் , தரைக்குக் கீழும் ஓடப் போகிற ரயிலுக்காக மகா ஜனங்கள் இந்த மாற்றங்களை சபித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ளுகிறார்கள் .

வடபழனியில் இருந்து இட வலமாகப் போகிற நூறு அடிச்சாலையும் சில இடங்களில் சிறுத்து , இரை கிடைக்காத விலங்கின் வயிற்றைப் போல ஒடுங்கிப் பின் , இரை எடுத்த மலைப் பாம்பாக விரிந்து கிடக்கும்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு தான் மெட்ரோ ரயில் திட்டம் நடக்கிறதாம் . இவர்கள் கட்டி முடிப்பதற்குள் மக்கள் தொகையும் , வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்து விடும் . திட்டங்களுக்கான கால வரையறையும் , துல்லியமான நடைமுறைப்படுத்தலும் இல்லாத ஒரு நாட்டில் எந்தத் திட்டமும் உரிய பயனை மக்களுக்கு வழங்காது .

நகரம் உருவாகிறபோதே உரிய அகலமான சாலைகளும் , வழித்தடங்களும் இணைத்தே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நகரின் எல்லா நீர் நிலைகளையும் விழுங்கி விட்டார்கள் .

சென்னையில் பல இடங்களில் லேக் வியூ சாலைகள் இருக்கின்றன . ஆனால் ஏரிகளைக் காணோம் . நீர் நிலைகளைக் காப்பாற்றாமல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் நடத்துவதை சொல்லிப் பெருமை கொள்ளுகிறது அரசு. குதிரை காணாமல் போன பிறகு, அது இருந்த லாயத்தைப் பூட்டும் அறிவுடைமை அரசுக்கே உரியது .

சென்னையின் நெரிசலான, நகரின் மையமான  பகுதிகளில் உள்ள பல தெருக்களுக்குள் ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்சோ , தீயணைப்பு வண்டிகளோ எளிதில்  வரவே இயலாது . எல்லாத் தெருக்களிலும் நான்கு சக்கர , இரு சக்கர வாகனங்களைத்  தெருவின் இரண்டு புறத்திலும் எந்த ஒழுங்குமின்றி நிறுத்தி வைத்திருப்பார்கள்.

எதையோ சொல்ல வந்து ... எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன் .
சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் .

அக்டோபர் நான்காம் தேதி பிற்பகல் மதிய உணவுக்காக எனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வடபழனி நூறு அடிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன் .

போக்குவரத்து அதிகம்  இல்லாது இருந்தது . சாலையில் எனக்கு வலது புறத்தில் ஒருவர் சீரில்லாமால் , ஒழுங்கின்றி காரோட்டிக் கொண்டு வந்ததைக் கவனித்தேன் . அவரிடமிருந்து விலகி , இடது புறமாக விலகிப் போனேன் .

சாலை அகலமாக இருந்த அந்த இடத்தில் , அவரை விட்டு விலகி விட இடம் இருந்தது . நல்ல பசி எடுத்ததால் விரைந்து வண்டியைச் செலுத்தினேன் . அந்தக் காரோட்டியை மறந்து போனேன் .

சாலை குறுகலான இடத்திற்கு வந்த போது , கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி மெதுவாகப் போக நேர்ந்தது . அந்தக் கார் இப்போது மீண்டும் எனக்கு வலது புறத்தில் வந்தது . அந்தக் காரைப் பார்த்ததும் மீண்டும் விலகினேன் . அவர் மேலும் இடது பக்கமாக ஏற ஆரம்பித்தார் .

நான் மேலும் விலகினேன் . அவர் முழுக்க , சட்டென இடது புறம் காரை ஏற்றி என் மீது மோதுவது போல  வந்தார் . மிக முயன்றும் அவரது காரின் பின் பக்கத்தில் , எனது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன் .

இடது முழங்காலில் பலத்த காயம் . குருதி கசிந்தது . போட்டிருந்த ஜீன்ஸ் கிழிந்து தொங்கியது . இடது முழங்கால் , கையில் பிடிக்க முடியாத ஒரு பந்து போல வீங்கியது . அதற்குப் பந்துக்கிண்ண மூட்டு என்று பெயர் வைத்ததற்கான காரணம் உடனே புரிந்தது .

பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் டிரைவர் பெருத்த ஓசையோடு பேருந்தை நிறுத்தினார் . தரையில் கிடந்த படியே பார்த்த போது , இதுவரை பார்க்காத பெரிதாக இருந்தது பேருந்து . எழுந்து நிற்பது கடினமாக இருந்தது . ஒருவர் உதவினார் . எழுந்து சாலை ஓரத்திற்கு வந்து சேர்ந்தேன் . தன் நிலைக்கு வர ஒன்றிரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது .

பிறகு, நானே வண்டியை ஒட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் போனேன் . அழுத்தித் துடைத்து , எதையோ ஊற்றி , வெட்டி ஒட்டி , ஊசி போட்டு , மாத்திரை கொடுத்து , ஐந்து நாள் ஓய்வெடுக்கச் சொன்னார் அந்த டாக்டர் .ரொம்ப நடக்காதீங்க, படி ஏறாதீங்க என்றும் சொன்னார் .

ஓய்வெடுக்க வாய்க்கவில்லை . ஐந்தாம் தேதி காலை  புதுச்சேரியில் ஜூனியர் விகடன் ஏற்பாடு செய்த தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்வு ...அங்கிருந்து திருவாரூர் சென்று த .மு .எ .க .சங்கம் நடத்திய கலை இரவு முடித்து மீண்டும் புதுச்சேரி வந்து புதுச்சேரி அரசு நடத்தும் புத்தகத் திருவிழாவில் உரையாற்றி விட்டு வந்தேன் .

எல்லா இடங்களிலும் படியேற நேர்ந்தது . வீக்கமும் , வலியும் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற போதும் , இரண்டு நாட்களாக இளங் காய்ச்சலும் அடிக்கிறது .கால் இப்போது , கால் வாசி குணமாகி இருக்கிறது .


கனிவோடும் , பரிவோடும் , பாசத்தோடும் எல்லோரும் கேட்கிறார்கள் " பாத்து ஓட்டக் கூடாதா ?" என்று . நான் அல்லது நாம் மட்டும் பார்த்து ஒட்டி என்ன செய்ய ? எல்லோரும் பார்த்து ஓட்டினால் தான் விபத்தின்றி வாழலாம் . எப்படிப் பார்த்தாலும் அந்தக் காரோட்டியைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் ?

அப்புறம் பார்த்து நலம் விசாரிக்கிற எல்லோரும் " என்ன ஆச்சு , எப்படி ஆச்சு  ?" என்று கேட்கத் தான் செய்கிறார்கள் .அதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது என்பதும் அனுபவமாகி விட்டது ."இனிமே பாத்துப் போங்க" என்பதும் இலவச இணைப்பாகச்  சொல்லப்படுகிறது .

" ஏதோ இந்த மட்டில் தப்பித்தது புண்ணியம்" என்ற வார்த்தைகளையும் , ஆறுதல் வார்த்தைகளாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

விபத்தை விடவும் கடினமானது விபத்துக்குப் பிந்தைய விசாரணைகள். நமக்குத் தெரிந்த யாருக்காவது இப்படி நடந்தால் நாமும் இந்த விசாரணைகளைச் செய்யாமல் இருப்பதில்லை . நாம்  என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கும் திருப்பித் தரப்படுகிறது .

நாளை மறுநாள் மீண்டும் வெளியூர் போகணும் . வலியைப் பொறுத்துக் கொண்டு போகத்தான் வேண்டும் . வேலை இல்லாமல் ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை .