Thursday, February 9, 2017

ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

கொலைவாளுக்கு எதிரான கலைவாளாய் ஒரு திரைப்படம்
-----------------------------------------------------------------------------------------------------
ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
மார்ச் 12 அன்று தோழர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள `என்று தணியும்‘ படம் குறித்து எழுதத் துவங்குகிற போது கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் 80 சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளன என்று எழுதினேன். ஆனால் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் சங்கர் என்ற இளைஞர் வெட்டி வீழ்த்தப்பட்ட கொடூரத்துடன் சேர்ந்து ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை 81 ஆகிவிட்டது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அண்மையில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. “கௌரவக் கொலைகள்” என்று சொல்லப்பட்டு வந்ததை “ஆணவக் கொலைகள்” என்று மாற்றி அழைத்தவர்கள் நாம்தான். ஒன்றைப் பற்றி எழுதும் போதோ, பேசும்போதோ பொருத்தமற்ற தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அதனை முழுமையாகப் புரிந்து கொள்வதைத் தடுக்கிறது. சாதிவெறி ஆணவம் தவிர இந்தப் படுகொலைகளுக்கு எந்த நியாயமும் இல்லை; காரணமும் இல்லை.வழக்கம் போல, அரசும், காவல்துறையும் ஆதிக்க வாதிகளிடம் சமரசம் செய்து கொண்டு, மண்டியிட்டு விட்டு இந்த உண்மைகளை மறைக்கின்றன; ஒப்புக் கொள்ளத் தவறுகின்றன. அரசும், காவல்துறையும் ஒப்புக் கொள்ளாததால் இந்தக் குற்றங்களை மறைத்து விட முடியாது.
தண்ணீருக்கு அடியில் காற்றுக் குமிழ்களை கட்டிப் போட்டு வைக்கவே முடியாது.எல்லாவிதமான அதிகாரப்பூர்வமான பொய்களையும் தகர்த்தெறிந்து விட்டு, இயக்கத்தின் செயல்பாடுகளால் நாம் இந்தக் குற்றங்களை ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். நீதிக்கான நெடிய போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறோம்.இயக்கம் ஆவணப்படுத்துவது போலவே, சம கால இலக்கியமும் இந்தப் படுகொலைகளை, ஆணவக் கொலைகளை ஆவணப் படுத்திக் கொண்டே இருக்கிறது. அவற்றுள் மிக குறிப்பிடத்தக்கது எழுத்தாளர் இமையம் எழுதிய “பெத்தவன்” என்கிற சிறுகதை. ஆணவக் கொலைகளுக்கு எதிராக நிற்க இயலாத ஒரு தகப்பன், தனது வழியில் தன்னைத் தான் மாய்த்துக் கொள்ளும் துயரம் படிந்த கதை எல்லோரையும் கண் கலங்கச் செய்தது. இமையத்தின் அனுமதி பெற்று அந்தக் கதையைப் பல்லாயிரம் பிரதிகள் அச்சிட்டுத் தமிழகமெங்கும் நமது இயக்கத் தோழர்கள் கொண்டு சேர்த்தனர்.
இதே பிரச்சனையை மையமாக வைத்து “எரிதழல் கொண்டு வா” என்றொரு உணர்வுப்பூர்வமான கதையை கவிஞர் வைரமுத்து அவர்களும் எழுதி இருந்தார். அவரது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றிருக்கிறது.எழுத்துலகில், ஆணவக் கொலைகள் பற்றிய கனல் தெறிக்கும் கவிதைகளையும் நமது தோழர்கள் அறச் சீற்றத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், மாபெரும் ஊடகமான திரைப்படத்துறை இதுகுறித்து பெருமளவு கண்டுகொள்வதில்லை. அது மட்டுமல்ல; தமிழகத்தின் அசலான சமூகச் சூழ்நிலையை யதார்த்த நிலைமைகளைப் பிரதிபலிக்க சினிமா தொடர்ந்து தவறிக் கொண்டே இருக்கிறது. தமிழில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் காதல் படங்கள்தான். ஆனால் அந்த காதல் படங்கள் பொழுதுபோக்கு படங்களாக மட்டுமே, சிக்கல் இல்லாத காதலை சித்தரிப்பதாக மட்டுமே எடுக்கப்படுகிறது.
ஆனால் காதலர்கள் சாதி ஆதிக்க வெறியர்களால் வெட்டி வீழ்த்தப்படுவதை கதைக் களமாக்கும் துணிச்சல் ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே உள்ளது.மிகப்பெரிய நிறுவனங்களும், மிகப்பெரிய நடிகர்களும் நேரடியாக, துணிச்சலாக சமூக முன்னேற்றத்திற்கான, சமூகப் பிரச்சனைகளை முன் வைத்த திரைப்படங்களை உருவாக்குவதேயில்லை.ஆவணப் படங்களின் மூலம் கீழ்வெண்மணி படுகொலை, கும்பகோணம் பள்ளித் தீ விபத்து, தமிழகத்தின் பள்ளிக் கல்விச் சூழல், வாச்சாத்தி வழக்கு ஆகியவற்றை முழுமையாகப் பதிவு செய்தவர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் இரண்டு மாபெரும் நிகழ்வுகள் கீழ்வெண்மணியும், வாச்சாத்தியும் ஆகும். இந்த இரண்டும் இன்றி தமிழகத்தின் இடதுசாரி இயக்க வரலாறு எழுதப்படவே முடியாது. அத்தகைய தனித்துவம் பெற்ற இரண்டு நிகழ்வுகளையும் முழுமையாகப் பிழையின்றி, ஆவணப்படுத்தியவர் பாரதி கிருஷ்ணகுமார்.அந்த வழியே, இப்போது ஒரு முழு நீள திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.என்று தணியும்... எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், ஆணவக் கொலைகளுக்கு எதிராக, ஆழமாகவும் கூர்மையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக், கருத்தாழம் மிக்க விதத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குடியால் ஒருவர் எப்படி அழிந்தார் என்பதும் ஒரு பாத்திரத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதில் நடித்த கலைஞர்களுக்கு எந்த விதமான ஒப்பனையும் சிகை அலங்காரமும் செய்யப்படவில்லை. இயற்கையான சூரிய ஒளி தவிர வேறு செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் உண்மைகளின் கதையைச் சொல்லும் போது எந்தப் புனைவும் இருக்க வேண்டாம் என முடிவெடுத்து இயக்கி இருக்கிறார் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. முற்றிலும் ஒரு வாழ்க்கையை அச்சு அசலாகப் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர்.திரை உலகில் இப்போதுள்ள வணிகச் சூழலை எல்லாம் கடந்து இத்திரைப்படம் மார்ச் 18ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. நம்முடைய தோழர்கள் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இத்தகைய வித்தியாசமான திரைப்படங்களை திரையரங்குகள் எத்தனை நாள் அனுமதிக்கும் என்று கூற முடியாத நிலையில் படம் வெளிவந்த உடனேயே பார்ப்பதும், தோழர்கள், நண்பர்களை பார்க்கச் செய்வதும் அவசியமானது. இத்தகைய திரைப்படங்கள் வெற்றிபெறுவதன் மூலமே, துணிச்சலாக சமூகத்தை படம்பிடிக்க நினைக்கும் படைப்பாளிகள் ஊக்கம்பெறுவார்கள்.
இத்தகைய திரைப்படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள். கவிஞர்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, தனிக்கொடி ஆகியோர் எழுதியுள்ள பாடல்கள் மனதை உருக்குவதாக உள்ளது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் முத்திரைப்பதித்துள்ளார் இசையமைப்பாளர் இரா.பிரபாகர்.ஒரு நல்ல திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த கே.பழனிச்சாமியும் பாராட்டுக்குரியவர்.குறிஞ்சிப் பூ போல பூக்கிற ` என்று தணியும்‘ போன்ற திரைப்படங்கள் வெற்றிபெறுவதன் மூலம் திரைப்படைத்துறையில் மேலும் மேலும் இடதுசாரி முற்போக்கு எண்ணம் கொண்ட படைப்புகள் உருவாக வழிவகுக்கும். அது எதிர்காலத்தில் திரைப்படத்துறையில் ஒரு சில பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தையும் தகர்க்கும்.

No comments:

Post a Comment