Thursday, February 2, 2012

பாரதி கிருஷ்ணகுமாரும் அப்பத்தாவும்

பெப்ரவரி 1, 2012
பாரதி கிருஷ்ணகுமாரும் அப்பத்தாவும் விழியன்

பாரதி கிருஷணகுமார் என்றால் எனக்கு எவ்வளவு ப்ரியம் என்று உடைந்துபோன அந்த டேப்ரிக்கார்டரை கேட்டால் அது சரியாக சொல்லலாம். அல்லது தேய்ந்து போய் அறுந்த அந்த கேசட்டுகள் சொல்லலாம். என் பள்ளிக்கால நாளொன்றில் ஏதோ ஒரு கூட்டத்தில் முதல்முறையாக பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சினை நேரடியாக கேட்டேன். கேட்டேன் கேட்டேன் மயங்கினேன். உருகினேன். அது நடுசாமத்திற்கும் பிந்தைய நேரம். விடியலுக்கு இன்னும் சில மணி நேரமே இருந்த பொழுது. உறக்கம் கண்களை தழுவ இருந்த சமயம் அவர் மேடையேறினார். உலுக்கி எடுத்தார். அந்த வயதில் புரியாத விஷயங்கள் என்றாலும் தன் வசீகர குரலாலும் தன் பேச்சாலும் தனக்குள் இழுத்துக்கொண்டார் BK.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கு அவர் பேச வந்தாலும் அப்பாவுடன் நானும் ஆஜர். கலை இரவுகளில் அவர் பேசிய பேச்சு கேசட்டாக வாங்கி அவை தேயும் வரை கேட்டபடியே இருந்த நாட்கள் அவை. அந்த ஏற்ற இறக்கம். காய்ந்த குரல். அழுகை வரவழைக்கும் அழுத்தம். சமூகம் மேல் இருக்கும் கோபம் என நீண்ட நாட்கள் வாட்டி எடுத்தது. மேடைப்பேச்சாளனாக சில போட்டிகளில் இவரையே முன்மாதிரியாக கொண்டு எதுவும் எழுதி வைத்துக்கொள்ளாமல் கைதட்டுக்கள் வாங்கிய சத்தங்கள் இன்னும் கேட்கின்றன. மேடைப்பேச்சாளர்களில் இன்று வரை அவரே எனக்கு சிறந்த பேச்சாளராக தோன்றுகிறார்.
2005ல் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு. எங்கெங்கோ அலைந்துவிட்டு மேடையின் பின்புறம் வழியாக கடந்தபோது சிகரெட் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார் பாரதி கிருஷ்ணகுமார். இந்த தயக்கம் எத்தனை உறவுகளை இழக்க செய்துவிடுகிறது, எத்தனை அரிய சந்தர்பங்களை நழுவ விட்டுவிடுகிறது, எத்தனை அரிய மனிதர்களை நெருக்கமாக காணக்கிடைக்காமல செய்துவிடுகிறது. பெருத்த முயற்சி செய்து அவரிடம் சென்று “நீங்கள் பாரதி கிருஷ்ணகுமார் தானே?” என்றேன். என்ன ஒரு மொக்கை தனமான கேள்வி. அவர்தான் என தெரியும். எப்படி பேச்சினை ஆரம்பிப்பது என்று இன்று கூட தெரியாது. ஆமாம் என்றபடி இன்னொரு இழு இழுத்தார். கல்லூரி காலங்களில் அவரை எங்கும் காணவில்லை கேட்கவில்லை. குரல் மாறி இருந்தது. அப்பாவின் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன். நல்லா இருக்காரா , கேட்டதாக சொல்லு என கடைசியாக ஊதிவிட்டு மேடைக்கு சென்றுவிட்டார் . அன்று என்னுடன் வந்திருந்த கந்தபழனியிடம் ‘நான் அவரிடம் பேசிவிட்டேன் பேசிவிட்டேன்’ என பெருமைப்பட்டுக் கொண்டேன்.
காலம் உருண்டோடியது. பாரதி கிருஷ்ணகுமாரின் சீடி ஒன்றினை அப்பா கொடுத்தார். “என்று தணியும்” என்று தலைப்பிட்டு கும்பகோண பள்ளிசம்பவத்தை முன்னிருந்தி கல்வி/பள்ளிகள் குறித்தான ஆவணப்படம் அது. அந்த முதல் பாடலை இப்போது நினைக்கும் போதும் தொண்டை வரண்டு தழுதழுக்கின்றது. அந்த பாடலை தட்டச்சி எப்படியேனும் இணையத்தில் ஏற்றிவிடவேண்டும் என முயற்சித்து ரீவைண்ட் செய்து செய்து அழுதுகொண்டே அறையில் இருந்த காட்சி இன்னும் பசுமையாக நிற்கின்றது. அந்த குரல் இன்னும் என்னை எதோ செய்துகொண்டு தான் இருக்கின்றது. சென்னை வந்த பிறகு வம்சியின் நிகழ்ச்சியில் மீண்டும் அறிமுகம் செய்துகொண்டேன். ‘விழியன்’ என்ற பெயரில் எழுதிவருகின்றேன் என்றேன். பலே என்றார். மீண்டும் அவர் மேடைபேச்சினை கேட்டமாட்டேனா என்றபோது அவரின் ‘அப்பத்தா’ புத்தககண்காட்சியில் கிடைத்தது.

‘அப்பத்தா’ – பாரதி கிருஷ்ணகுமாரின் முதல் சிறுகதை தொகுப்பு. நான் நிச்சயமாக சொல்வேன், கதைகளை அவர் வாசித்து காட்டியது போலவே இருந்தது. அப்பத்தா கதை அதில் உச்சம். கதைகள் முழுக்க சொல்ல சொல்ல தீராத மனிதர்களின் அன்பு, நேசம், பேரன்பு, பாசம் இவையே தொடர்கிறது. கல்பனாவின் கைகளை நாயகன் பிடித்தவுடன் அதன் வழியே பால்யத்திற்கு சென்று தொலைத்த அத்தனை தோழிகள்/தோழகள் வந்து சென்றார்கள். எப்போதும் உண்மையினை பேசும் ஒருவன் தன் மகளின் மேல் இருக்கும் ப்ரியத்தின் பால் முதல் முறை பொய்சொல்வதில் முடியும் கதை அழகு. ‘கோடி’ கதையில் அண்ணே என்ற அலறல் அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறது. ஒவ்வொரு கதையும் வேறுவேறு தளத்தில் நகர்ந்தாலும் அன்பினையே சுற்றி சுற்றி வருகின்றது. அது நிச்சய்ம் மக்களின் பாலும், இந்த இயற்கையின் பாலும் கொண்ட நேசத்தின் வெளிப்பாடே. ‘துறவு’ கதை மட்டும் ஏனோ பிடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக வாசிக்க நல்ல ஒரு சிறுகதை தொகுப்பு.
நூலின் விலை நூறு ரூபாய் என்பது தான் புத்தகத்தில் நெருடலாக இருந்த விஷயம். லேஅவுட்டில் இன்னும் சிக்கனமாக செயல்பட்டு இருக்கலாம். தலைப்பிற்கு ஒரு பக்கம் ஒதுக்கியது பக்கங்களை நிரப்புவதற்கா என தெரியவில்லை.
நிச்சயமாக பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் சொல்ல இன்னும் ஏராஆஆஆளமான கதைகள் இருக்கின்றன. மேலும் மேலும் தொடப்படாத உணர்ச்சிகள், சொல்லப்படாத அன்பு ஆகியவற்றை உள்ளடக்கி பற்பல கதைகள் வரவேண்டும் என்பது கேட்க காத்துக்கிடக்கும் என்னைப்போன்றோரின் ஆவலாக இருக்கும். எல்லா ஊடகத்துறையும் வெற்றி பெற ஒரு தீவிர ரசிகனின் வாழ்த்துகள்.
தலைப்பு : அப்பத்தா
வகை   : சிறுகதைகள்
வெளியீடு: The Roots
பக்கங்கள் : 96
விலை    : ரூ 100 /-

- விழியன்
(இது விழியன் பக்கத்தின் 500வது பதிவு. இதே பிப்ரவரி மாதம் 2006ல் சித்தார்த் பரிந்துரையில் இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றியும் ப்ரியங்களும்)