Saturday, February 22, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நிறைவு நாள்


 கோலகலமான நாள் .

அரங்கம் நிரம்பி வழிய , அரங்கிற்கு வெளியிலும் அதே அளவு மக்கள் கூட்டம் .

இலங்கையின் பொது வாழ்வில் பங்களித்த பெரு  மக்களுக்கு விருதும் பாராட்டும் வழங்கப்பெற்றது .

வாழ்நாள்  சாதனைக்கான கம்பன் புகழ் விருது பெற்றார் திரு எஸ் . பி . பாலசுப்ரமணியம் .

ஏற்புரையில் எஸ். பி .பி சொன்னார் . " எனது இசையின் மீது ஆணை . இதனை விட மதிப்பும் சிறப்பும் வாய்ந்த பாராட்டு எனக்கு எப்போதும் , என் வாழ்நாளில் கிடைத்ததில்லை ."

இருந்த நாட்கள் எல்லாம் கம்பனோடு ... கம்பனை நேசிக்கிறவர்களோடு, கம்பனை வாசிக்கிறவர்களோடு, கம்பனைக் கேட்கிறவர்களோடு இன்பமாய்க் கழிந்தது .

ஐந்து நாட்களும் இனிய சுவையான உணவு தந்தார்கள் .
ஒரு கோப்பைத் தேநீர் கூடக் கடைக்குச் சென்று குடிக்கிற தேவை இல்லை என்னும் அளவுக்கு பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள் .

உணவு சுவை பெறுவது உப்பு இனிப்பு கசப்பு புளிப்பு  என்பதான அறுசுவைகளால் அல்ல .

அன்பு , உபசரிப்பு என்னும் இரண்டே சுவைகளால் தான் உயிர் பெறுகிறது .

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் .

சில நாட்களில் கம்பவாரிதியே உணவு  பரிமாறிய  அழகும் வாய்த்தது .


நிறைவாகச் சொல்ல விரும்புகிறேன் .

எல்லாம் கம்பவாரிதியின் செயல் திறன் . எல்லோரையும் இசைவாக
இயக்கும் ஆளுமை . எப்போதும் அரங்கத்தின் ஓரத்தில் , ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , தன்னைத்தானே மறைத்துக்கொண்டு , மற்றவர்களுக்கு மேடை அமைத்து அழகு பார்த்துக் கொண்டே இருந்தார் .
அபாரமான துறவு நிலை .

பாராட்டுவதும் , போற்றுவதும் நமது பண்பு .

இத்தனைக்கும் நடுவில், அவரை ஈன்ற அருமை அன்னை மறைந்து பன்னிரண்டு நாட்களே ஆகி இருந்தது .
துறவியே ஆனாலும் தாய் மறைந்த துயரத்தைக் கடக்க இயலுமா ? .... ஒருபோதும் ஆகாது .

துன்பம் தொண்டைக்குழியில் இருக்க , செய்யவேண்டிய பணிகள் பற்றி மட்டுமே பேசுவது துறவு நிலை தான் .

அங்கு விழாவில் இது பற்றி எல்லாம் பேச இயலவில்லை .
நேரிலும் அதிகம் பேசிக்கொள்ள  வாய்க்கவில்லை .

இந்தியா புறப்படும்போது தான் இரண்டு நிமிடங்கள் துக்கம் விசாரித்துக் கொண்டேன் . மரபாக அல்ல . மனமார .

இதை நீங்கள் படிப்பீர்களா இல்லையா எனக்குத் தெரியாது கம்பவாரிதி .

ஆனால், உங்கள் அறிவு, புலமை, கல்வி ,மேதமை, இவைகளை விடவும் நான் வியந்து போற்ற விரும்புவது மனிதர்களை ஒருங்கிணைக்கும் உங்கள் ஆற்றல் .

கம்பனை அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றிக் கொடுத்த கொடை .


வணங்குகிறேன் ஜெயராஜ் .

Thursday, February 20, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நான்காம் நாள்

திங்கட்கிழமை . வேலை நாள் .

என்றபோதும் அரங்கம் நிறைந்தது .

அறத்தின் ஆறு என்பது பொதுத் தலைப்பு .

அறுவர் பேசினோம் .

அது கம்பன் காலத்து அறம் மட்டுமல்ல , என்றைக்கும் மாறாத , இன்றைக்கும் பயனளிக்கும் அறங்கள் .

எனக்களித்த தலைப்பில் என் பங்களிப்பைச் செய்தேன் .

கற்றறிந்த சபை களிப்புடன் வாழ்த்தியது .

மாலை அமர்வுகள் மேலும் பொலிவுடன் , திறம்பட நடந்தன .

அறிந்து உணர்ந்து ரசிக்கும் பார்வையாளர்கள் நம்மை மேலும் திறன் கொள்ளச் செய்கிறார்கள் .

நமது பொறுப்பை நமக்கு உணர்த்துகிறார்கள் .



....ஐந்தாம் நாள்



Wednesday, February 19, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... மூன்றாம் நாள்

இனிதே துவங்கியது மூன்றாம் நாள் நிகழ்வுகள் .

காலை ஒன்பதரை மணிக்கே அரங்கம் நிறைந்து இருந்தது .

ஒரு  ஞாயிறு காலை குறித்த நேரத்தில் விழா துவங்குவதையும் , கேட்போர் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே குழுமி இருந்ததும் வியப்பு அளிக்கும் உண்மைகள் என்பதை தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன் .

இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பதைத் தனியே சொல்லுவது அவசியமில்லை .

கவிநய அரங்கிற்குத் தலைமை ஏற்று , சிறந்ததொரு உரை நிகழ்த்தினார் திருமதி . பாரதி பாஸ்கர் .

தொடர்ந்து நான்கு ஆளுமைகள் , அழகிய விதத்தில் தங்கள் தலைப்புகளில் கம்பனைச் சாறு பிழிந்து சுவை சேர்த்தார்கள் .

இறுதியாக என் முறை வந்தது .

ஏறக்குறைய உணவு இடைவேளை நெருங்கிக்கொண்டு இருந்தது .

கம்பனில் காதல் என்பது தலைப்பு ...

கம்பனே காதலால் தான் காப்பியம் படைத்தான் என்று துவங்கினேன் .

ஆசை பற்றி அறையலுற்றேன் என்று கம்பன் அவையடக்கத்தில் பாடுவதும் அது தானே ....

உணவு இடைவேளை கடந்தும் பேசும் அனுமதி கிடைத்தது .

எமது மொழியின் மீதும் , கம்பனின் மீதும் கொண்ட காதலால் அரங்கம் கசிந்துருகி நின்றது .

எல்லோரும் காதலாகி இருந்தோம் .

வேறு பணிகள் காரணமாக நான் மாலை நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை .


... நான்காம் நாள்


Tuesday, February 18, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... இரண்டாம் நாள்

இரண்டாம்  நாள் நிகழ்வுகள் , குறித்த நேரத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கியது . நடுவராகப் பொறுப்பேற்று திறம்பட அவையை வழி நடத்தினார் வழக்கறிஞர் திருமதி .கே . சுமதி .

சுழலும் சொற்போரில் பங்கேற்ற பெரும்பான்மையோர் இளைஞர்கள் .
அடுத்த தலைமுறைக்குக் கம்பனைக் கைமாற்றிக் கொடுத்தது தான் இலங்கைக் கம்பன் கழகம் செய்த மகத்தான சாதனை .

அந்த சாதனை ,தமிழ் மணம் ததும்பிக் கிடைத்த நாள் .

இரண்டாம் நாள் எனக்கு ஏதும் உரையாற்றும் பணிகள் இல்லை .
ஆனாலும் , நான் எங்கும் ஊர் சுற்றப் போகாமல் அனைவரது உரைகளையும் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தேன் .

எப்போதும் கற்றலிற் கேட்டலே நன்று .



.... மூன்றாம் நாள் 

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... முதல் நாள்



 அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகள் ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது .

விழா நான்கு நாட்கள் நடைபெற்றது .

ஜனவரி முப்பத்தொன்றாம் நாள் மாலை விழா மங்கலத்துடன் விழா துவங்கியது .

இலங்கையின் சமூக வாழ்வில் , பல்வேறு துறைகளில் பங்களித்த பெருமக்களுக்கு விருது வழங்கிச் சிறப்புச் செய்தார்கள் .

ஏற்றமிகு இளைஞர் விருது பெற்றார் தம்பி தீபச்செல்வன் .
விழா மேடையில் அவருக்கு அருகில் அமரும் இனிய வாய்ப்பு அமைந்தது .

நிறைவாக முதல் நூலும் முதன்மை நூலும் என்கிற தலைப்பில் எழிலுரை நிகழ்த்தும் பெரும்பேறு வாய்த்தது .

மிகப்பெரிய அரங்கம் . நிரம்பி இருந்தது .

ஒவ்வொரு சொல்லையும் கேட்டு ,உணர்ந்து ,அறிந்து ... ஆரவாரம் செய்து அங்கீகாரம் செய்தார்கள் .

இலங்கைத் தமிழர்கள் உரையாடுவதில் மட்டுமல்ல .... உணர்ந்து கொண்டாடுவதிலும் தமிழ் மொழிக்குப் பெருமிதம் சேர்க்கிறார்கள் .

அரங்கத்தில் சரிக்கு சமமாகப் பெண்களும் , அதனிலும் சிறப்பாக இளையோரும் திரண்டிருந்தார்கள் .

விழா மேடையில் , அரங்கப் பணிகளைச் செய்து கொண்டிருந்தது முற்றிலும்  முப்பது வயதிற்கும் குறைவான இளையோரே ...

அவர்கள் அனைவருமே கம்பனை வாசிக்கிறவர்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது . நாம் பேசுகிற போது அவர்கள் அதனை அவதானிக்கும் முறை நமக்கு , நமது பொறுப்பை உணர்த்துகிறது .


... இரண்டாம் நாள்



Thursday, February 13, 2020

வடகரை நாவல் வெளியீட்டின் போது ....


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை புத்தகக் கண்காட்சியில் .... திரு . இராஜேந்திரன் இ.ஆ.ப எழுதிய வடகரை நாவல்  வெளியீட்டு நிகழ்வில் ..

Wednesday, February 12, 2020

பேராசிரியர் .பாரதி புத்திரன்


கோவையில் இயங்கி வரும் " பாரதி பாசறை " 2019 ஆம் ஆண்டிற்கான பாரதி விருதுக்கு உரியவராக பேராசிரியர் . பாரதி புத்திரன் அவர்களைத் தேர்வு செய்தது .

மகாகவியை ஒரு தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுத்த பெருந்தகை . விருதால் பெருமையும் , விருதுக்குப் பெருமையும் தந்தவர் .
தகுதி மிக்க பண்பாளர் .

உலகமெங்கும் இயங்கும் பாரதிக்கான இலக்கிய அமைப்புகள் , அவரை அழைத்து மகாகவி பாரதி பற்றி அவர் குழைந்து காதலாகிக் கசிந்து உருகுவதைத் தரிசிக்க வேண்டும் . 

விருது பெறும் நிகழ்வுக்காக கோவை வந்த பாரதி புத்திரனுடன் பாரதி அன்பர்கள் .




ஒரு முன்கதை

2003 ஆம் ஆண்டு அவர் எழுதிய " தம்பி நான் எது செய்வேனடா " என்னும் நூலை ஒரு பின்னிரவில் முழுமையாக வாசித்தேன் .


வாசித்து முடித்ததும் , அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் .


"மகாகவி பாரதிக்கு  ஆண் வாரிசு இல்லை என்ற குறை உன்னால் தீர்ந்தது" என்ற வரிகளோடு அந்தக் கடிதம் நிறைவுறும் .