Thursday, April 30, 2020

இதே நாளில் ...முப்பது ஆண்டுகளுக்கு முன்பு


இன்றைக்குச் சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் நான் ஹைதராபாத்தில் இருந்தேன்.
நான் அப்போதுபாண்டியன் கிராமவங்கி ஊழியன் . பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் . நாடெங்கிலும் இருந்த 196 கிராமவங்கிகளில் இருந்த 80000 க்கும் மேற்பட்ட கிராமவங்கிகளில் பணியாற்றிய அனைத்துத் தரப்பு ஊழியர்களின் நலன் காக்கும், AIRRBRA என்று அழைக்கப்பட்ட அகில இந்திய கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் .
பாண்டியன் கிராமவங்கியின் தலைமை அலுவலகம் அப்போது சாத்தூரில் இருந்து இயங்கி வந்தது.

நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் மாநிலத்தில் , அந்த மாநில அரசு ஊழியர்கள் என்ன ஊதியம் பெற்றார்களோ அதைத்தான் பெற்று வந்தார்கள் . ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் . குளறுபடிகள் . நாங்கள் பார்த்ததோ வங்கிப் பணி . ஆனால் பெற்றதோ மாநில அரசுப் பணிக்கான ஊதியம் .

இந்த முரண்பாடுகளை எதிர்த்து எங்கள் சங்கம் நடத்திய நீண்ட கடினமான சட்டப் போராட்டத்தில் , ஒரு கட்டத்தில் ஒரு முழுமையான தீர்ப்பாயத்தை (TRIBUNAL)அமைக்குமாறு உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தது . 1987 நவம்பர் 26 டிரிப்யூனலை இந்திய அரசு நியமித்தது . முப்பது மாத சட்டப் போராட்டத்தை AIRRBEA நடத்தியது . எங்கள் வழக்கறிஞராக புகழ்மிக்க மனித உரிமைப் போராளி திரு.கே.ஜி.கண்ணபிரான் மகத்தான பணியாற்றினார் .


முப்பதுமாத சட்டப் போராட்டம் முடிவுக்குவந்து, 1990 ஏப்ரல் 30 நீதியரசர் ஓபுல் ரெட்டி தீர்ப்பளித்த நாள் இன்று .

1990 ஏப்ரல் 30 ஆம் தேதி காலை பதினோரு மணிஅளவில் நீதியரசர் ஓபுல்ரெட்டி கிராமவங்கி ஊழியர்களுக்கும் வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்தபோது அந்த அறையில் கூடியிருந்த நூற்றுக்கும் குறைவான AIRRBEA தலைவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் . பிற்பகல் உணவுக்கு முன்னதாக சாத்தூரில் இருந்த சங்க முகவரிக்கு இந்த வெற்றிச் செய்தியை ஒரு தந்தி மூலம் தெரிவித்தேன் . அந்தத் தந்தி பல ஆண்டுகள் சங்க அலுவலகத்தில் பத்திரமாக இருந்ததும் எனக்குத் தெரியும்.

வரலாற்று சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பின் 438 ஆம் பக்கத்தில் பத்தி 4.362 இல் கடைநிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (Letter No GS|326|84 Dated 28.04.1986)உச்சநீதி மன்றத்திற்கு எழுதிய கடிதம் குறித்து விரிவாகப் பேசி இருக்கிறார் நீதியரசர் திரு ஓபுல்ரெட்டி . அந்தக் கடிதமே கடைநிலை ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்குப் பெரும் பங்காற்றியது .

AIRRBEA வின் வழிகாட்டுதலுடனும் NIT தீர்ப்பின் அடிப்படையிலும் பணியில் சேர்ந்த நாள் முதல் அனைத்துக்கடைநிலை ஊழியர்களும் பணிநிரந்தரம் பெற்றது, இந்தியாவிலேயே தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கியில் தான் முதலில் நடைபெற்றது . அதைப் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமே சாத்தியமாக்கியது . அதற்குப்பின் தான் இதர கிராமவங்கிகளில் PGB நிர்வாகம் வெளியிட்ட உத்தரவைப் பயன்படுத்திப் பயன் பெற்றார்கள் .

PGB நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின் 300 ஜெராக்ஸ் பிரதிகளை AIRRBEA தலைமைக்கு அனுப்பி வைத்தது PGBEA .(Pandyan Grama Bank Employees Association )

இரண்டு நாட்களாக அந்த நினைவில்தான் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.

இப்போது என் மேசையில் NIT AWARD புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

என் நினைவுகளைப் போல...
AIRRBEA CC meeting held at Bengaluru on 13.05.2018 to celebrate ...



Wednesday, April 29, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 07


இரவு ஊரே திரண்டிருந்தது.

அதற்குமுன்னதாக எங்களை ஒரு அழகான விடுதியில் தங்க வைத்தார்கள் . அடர்ந்த குளிர்ந்த ஒரு மாந்தோப்புக்கு எங்களை அழைத்துப் போனார்கள். அதன் நிழலில் நல்ல பிரம்புக்கட்டில்கள் போட்டார்கள் . மணக்கும் மாங்காய்களைப் பறித்து உண்ணக் கொடுத்தார்கள் . அந்தத் தோப்பின் நிழலும் , மாங்காய்களின் மணமும் இந்தக் கணம் என் எழுது மேசையைச் சுற்றுவதை உங்களால் உணர முடிந்தால் நீங்களும் இயற்கையின் நேசர்களே.

பட்டிமண்டபம் துவங்கியது . கோவிலில் திருவிழா.ஒரு ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட கூட்டம். அம்புட்டுக் கூட்டம் அதுவரை நாங்கள் பார்த்ததில்லை . எல்லாம் தோழர் பரமசிவம் செய்த வேலை. ஒரு சிறிய முன்னுரை தந்தார் பரமசிவம். அவ்வளவு உயரத்தில் எங்களை யாரும் அதுவரை கொண்டாடியதில்லை. ரொம்பப் பரவசமாகவும் உற்சாகமாகவும் இருந்தார்.

அவர் உருவாக்கிய பிம்பத்தைக் காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருந்தது . இப்போதும் , இன்றைக்கும் நம்மைப்பேச அழைக்கிறவர்கள் அளவாக அறிமுகம் செய்யவேண்டும் என்ற பதட்டம் எனக்கு எப்போதும் உண்டு . மிகையான அன்பினாலோ அல்லது பதட்டத்திலோ சிலர் அறிமுகம் செய்வதைப் பற்றி தனிப் புத்தகமே எழுதலாம் .

அண்மையில் ரொம்பப் படித்தவர்கள் நிறைந்த சபையில் ஒருவர் என்னை அறிமுகம் செய்கிறபோது பத்து சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர் என்றார். எனக்கு விரல்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஒரு தொகுப்பு தானே எழுதி இருக்கிறோம் , அதிலும் பத்து சிறுகதைகள் தானே வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே எனது பத்துத் தொகுப்புகளின் பெயரை அவர் வாசிக்க ஆரம்பித்தார். எனது பத்துக் கதைகளையும் பத்துத் தொகுப்புகளாகத் தரம் உயர்த்தினார்.அந்த அதிர்ச்சியில் இருந்து விலகுவதற்கு முன்பே அவர் அடுத்த ஆயுதத்தைக் குறிபார்த்து என் மீது எறிந்தார். கீழவெண்மணி குறித்த அவரது ரம்யாவின் குடிசை என்னும் ஆவணப்படம் அமெரிக்காவில் பல இடங்களில் பலமுறை திரையிடப் பட்டிருக்கிறது என்றதும் கூட்டம் அடங்காமல் கைதட்டிக்கொண்டே இருந்தது . அவர் ரம்யா என்றபோதே கூட்டம் கைதட்டத் துவங்கி விட்டது. ராமையாவின் குடிசை ரம்யாவின் குடிசை ஆனதில் நானே எரிந்து சாம்பல் ஆனேன் .

பரமசிவம் அப்படி எந்தப் பிழையும் செய்யவில்லை ."நான் விருதுநகரில் கேட்டேன். அதை இந்த ஊர் மக்களும் கேட்கவேண்டும் என்று விரும்பினேன். அதிலும் மாணவர்கள் , இளைஞர்கள் இப்படி சமூகப்பொறுப்புடனும் , அக்கறையுடனும் பேசுவது என் மனத்தைக் கவர்ந்தது"என்றார்.பரமசிவம் பேசியதில் மிகையாக ஒரு சொல் கூட இல்லை என்று நான் பெருமிதமாகச் சொல்லுவேன் .
அத்தனை உயர்ந்த தரத்தில் நாங்கள் பட்டிமன்றங்களை நடத்திக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையைச் சுற்றி தென் மாவட்டங்களில் இயங்கிய பட்டிமன்றக் குழுக்களில் உயர்ந்த தரத்தில் எங்கள் சிந்தனையும் பேச்சும் இருந்தது .

நான் சுருக்கமான ஒரு முன்னுரை நிகழ்த்தி மொத்தக் கூட்டத்தையும் கவனப்படுத்தினேன் . சிறிய சலசலப்புகள் முற்றாக அடங்கி எங்களை மட்டுமே கேட்கும் மௌனம் காற்றைப்போல் பரவி நின்றது. அந்த மௌனத்தை என்னால் எப்போதும் ஸ்தூலமாகக் காண முடியும். அணித் தலைவராக பாலா தனது உரையைத் துவங்கினான் . கூட்டம் வசியமுற்றது . மெலிந்த இளைத்த சின்னப் பயலுகள் வரிசைகட்டி ஆடினார்கள். எல்லோரும் வென்றார்கள் . சௌபா மிக நன்றாகத் தனதுபேச்சைத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தான் . எப்போதாவது சில சமயங்களில் அவனது பேச்சில் காணப்படும் வல்லின மெல்லின உச்சரிப்புப் பிழை கூட அன்றைக்குத் தலை காட்டவில்லை. கோபம் , கேலி , கிண்டல் , அளவான தரமான நகைச்சுவை, வரலாறு , இலக்கியம் , மேற்கோள்கள் என்று அறிவின் ஆற்றலோடு பேசினார்கள். 

இறுதியாக நான் தீர்ப்புச்சொல்ல வேண்டும் . எப்படித் தீர்ப்புச் சொல்லுவது என்பதை நான் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் இருந்து  கற்றுக் கொண்டிருந்தேன்  . தீர்ப்பு என்பதை தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பாகத்தான் இன்றைக்கும் பல நடுவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பட்டிமண்டபமே நடுவரால் தான் நடக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள் . நடுவர் இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எதுவுமேயில்லை என்பதாகவும் , அணியில் பேசுகிறவர்கள் நடுவரின் தயவில் தான் வாய் திறக்கவேண்டும் என்றும் , நடுவரோடு அனுசரித்து அடக்கமாக நடந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும் என்றும் ஆக்கி இருக்கிறார்கள்.நடுவருக்குக் கூடுதல் சம்பளம் , அணியில் யாருக்கு என்ன சம்பளம் என்பதை நடுவரே தீர்மானிப்பார் என்பதும் , இப்போதும் இருக்கிற நடைமுறை . ஒரு "செட்" மாதிரி மொத்தமாக ஊதியம் வாங்கிக்கொண்டு , பேசுகிறவர்களுக்குப் பிச்சுக் கொடுக்கும் நடுவர்கள் சமூகநீதி பற்றி தீர்ப்புச் சொல்லுவது நகைமுரண் .இன்றைக்குப் பட்டிமன்றங்கள் தமது தரத்தில் தாழ்ந்து கிடக்கின்றன என்பது கசப்பான உண்மை . விதிவிலக்குகள் இருக்கலாம்.ஆனால் பொதுவில் இருக்கிற நிலைமை அவமானகரமானது. அதிலும் நகைச்சுவைப் பட்டிமன்றம் என்றே தலைப்பும் வைக்கிறார்கள். பிறகு சோகப் பட்டிமன்றம், காதல் பட்டிமன்றம் , சிருங்காரப் பட்டிமன்றம் என்று வகை பிரிப்பார்கள் போலிருக்கிறது . பேச்சில் நகைச்சுவை என்பது எனக்குப் புரிகிறது . பேச்சே நகைச்சுவை என்பதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? 

பட்டிமண்டபம் ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதை உணர்ந்த காரணத்தால் , நான் நடுவராகப் பணிபுரிந்த காலம் முழுவதும் கிடைத்த சன்மானத்தை எல்லோரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுவது என்கிற நடைமுறையை நான் பின்பற்றினேன் .என்னோடு பட்டிமன்றங்களில் பணியாற்றிய எல்லோரும் இதனை அறிவார்கள். 

1990 ஆம் ஆண்டு மே தினத்தன்று அவினாசியில் நடந்த ஒரு பட்டிமன்றத்திற்குப் பிறகு பட்டிமன்றங்களில் பேசுவதில்லை என்று நான் முடிவு செய்தேன். அதற்குப் பிறகான இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு நான்கைந்து பட்டிமன்றகளில் பேசும் தவிர்க்க இயலாத சூழலும் வாய்த்திருக்கிறது.

அவ்வப்போது பீறிடும் இந்த நினைவோட்டத்தைத் தடுக்க முடியவில்லை. வாசகர்கள் இவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதென் விருப்பம் . ஏனெனில் இதைத் தனியாக இன்னொருமுறை சொல்லுவது எனக்கும் வாய்க்காது. உங்களுக்கும் உவக்காது .

சரி ...  

செங்கோட்டைக்குத் திரும்பலாம் . நடுவர் நீண்டதொரு தீர்ப்பை வழங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான உரை . பட்டிமன்றத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையையும் ஆய்வு செய்து அவர்களைப் பாராட்டி , கொண்டாடி , உச்சிமுகர்ந்து மகிழ்ந்த தீர்ப்பு . 


தலைப்பு என்னவென்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் ... 

மனிதகுல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏற்ற வழிமுறை மென்முறையா வன்முறையா?

அந்தத் தீர்ப்பின் இறுதியில் நான் பேசிய வார்த்தைகளை , எப்போது அந்த செங்கோட்டைப் பயணம் பற்றிப் பேசினாலும் சௌபா அப்படியே திரும்பச் சொல்லுவான். சொல்லுகிற கணத்தில் அந்த நாளுக்கு , அந்த ஊருக்கு, அந்தக் கணத்திற்குத் திரும்பி விடுவான் .அவனது உடல்மொழியும் , குரலும் , கண்களும் காலத்தில் பின்னோக்கிப் போவதை நான் தரிசித்து இருக்கிறேன் .

ஏனெனில் தன்னோடு என்னையும் அழைத்துக்கொண்டு போவான் சௌபா... மெலிந்த உடலோடு ,உயரமான தோற்றத்தில், அடர்ந்த சுருண்ட தலைமுடியோடு, சிவந்தபெரியமுட்டைக் கண்களோடு , பெருகிவழியும் வியர்வையோடு நான் பேசுவதை எனக்கு அவன் திரும்பக் காட்டி இருக்கிறான் .

கள்ளம் கபடமில்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறான்.

இறந்தகாலம் என்பது கல்வெட்டு. அதை யாரும் மாற்றி எழுத முடியாது . மாற்றி வாசிக்கலாம் . மாற்றிப் பொருள் சொல்லலாம் . சிலர் மாற்றிச் சிதைக்க முயற்சிக்கலாம்.ஒரு சிலர் ஒளித்து/ஒழித்து விடவும் கூடும். சிலர் புதிய கல்வெட்டுக்களைத் தயார் செய்துகொண்டு அதுவே பழையது என்று நிறுவ முயற்சிக்கலாம் .எது வேண்டுமானாலும் நடக்கலாம் .

ஆனால் கல்வெட்டுப் போல உறைந்து கிடக்கும் நம் இறந்த காலத்தின் மீது , மறதியின் புழுதி படிந்துகொண்டே இருக்கிறது. அல்லது காலம் சுருட்டிக்கொண்டு வரும் குப்பைகளும் கூளங்களும் அதன் மீது குவிந்துகொண்டே ... குவிந்துகொண்டே இருக்கிறது.

எப்போதாவது நம்மோடிருந்த ஒருவரோ , ஒரு பொருளோ , ஒரு நினைவோ , ஒரு உரையாடலோ ... ஏதொவொன்றோ அந்தக் குப்பை கூளம் புழுதி எல்லாவற்றையும் விலக்கிக் கல்வெட்டைக் கண்ணில் காட்டுகிற தருணம் ஆயிரம்கோடி சூரியப்பிரகாசம் கொண்டது .

அந்தக் கணத்தில் மனது , பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுப் பூசணிப்பூச் சூடிய மார்கழி மாதத்து வாசல் தான் . 

சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை வன்முறையே என்று தீர்ப்புச் சொன்னேன். அதெப்படி வன்முறையை நியாயப்படுத்த முடியும்?
என்ன சொன்னேன்? 

சௌபா அதை எனக்கு எத்தனை விதமாகச் சொல்லி இருக்கிறான் ?


அப்புறம் சொல்லுகிறேன்... 


- பாரதி கிருஷ்ணகுமார் . 


  

Monday, April 27, 2020

இன்று பிரபஞ்சன் பிறந்தநாள்



இந்த இணைப்பில் பிரபஞ்சன் 55 இல் நான் நிகழ்த்திய உரை:

https://youtu.be/jrsftSiLP4g

தாய்ப் புத்தகம்



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினமாகக் கொண்டாடப்படுகிறது(World Earth Day).

ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது(World Book Day).

உண்மையில் பூமியே புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம்.

அதுதான் தாய்ப் புத்தகம்.

அதிலிருந்து தான் உலகின் எல்லா மொழிப் புத்தகங்களுக்குமான காகிதமும்,மசியும்,கருத்தும் கிடைக்கிறது.

மனிதன் எப்போதும் பாதுகாக்க வேண்டிய,படித்துக்கொண்டே இருக்க வேண்டிய,படித்து முடிக்கவே முடியாத ஒரே புத்தகம் இந்த பூமி மட்டுமே.

பிரபஞ்சம் என்னும் பெரும் நூலகத்தில் நாம் வாழவும் வாசிக்கவும் வசிக்கவும் அனுமதிக்கப்பட்ட ஒரே புத்தகமும் இந்த பூமி மட்டுமே.

-பாரதி கிருஷ்ணகுமார்.   


சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 06


என்னோடு வந்தது யார் ?

பள்ளிகூடத்தில் நடந்தது என்ன ? 


எங்களோடு நிகழ்ச்சியில் பேசும் பாலாவைப் போய்  நான் அழைத்ததும் அவன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்தான் . சௌபாவுக்குத் தகவல் சொல்லப் போகிறேன் என்றதும், தானும் என்னுடன் வருவதாகச் சொன்னான் பாலா .என் சைக்கிளில் பாலா முன்புறம் அமர்ந்துகொள்ள சௌபாவைப் பார்க்கப்போனோம். 

சௌபா அப்போது நகராட்சிப் பள்ளி ஒன்றில் எஸ் எஸ் எல் சி மாணவன் .அப்போதெல்லாம் பள்ளிக்குள் நண்பர்களைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் . பாலா அண்ணன் ஆனான் . நான் தாய்மாமன் ஆனேன். 



நாங்கள் போய்த் தலைமைஆசிரியரைப் பார்த்து அனுமதிபெற்று அவனது வருகைக்காகக் காத்திருந்தோம் . பள்ளியின் வாசலைக் கடந்ததும் இருக்கிற திறந்தவெளியில் , கொதிக்கிற வெயிலில் நானும் பாலாவும் காத்திருந்தோம். காக்கி அரைக்கால் டவுசரோடும் , வெள்ளைச் சட்டையோடும் வாயெல்லாம் பல்லாக , அவனது வழக்கமான இளம் நாட்டிய நடையோடு சௌபா வந்தான் .


செங்கோட்டை நிகழ்ச்சி பற்றிச் சொன்னோம் . எங்கே எப்போது எத்தனை மணிக்கு வருவது என்பதெல்லாம் பாலா அவனுக்குக் குழந்தைக்குச் சொல்லுவது மாதிரி சொன்னான். செங்கோட்டைக்கு எதில போறோம் என்று கேட்டான் . இரயிலில் என்றேன் . சொல்ல முடியாத மகிழ்ச்சி அவனுக்கு ...


தலைப்பு என்னவென்று கேட்டான் . " மனித குல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏற்ற வழிமுறை வன்முறையா ? மென்முறையா ? " 

சூப்பர் என்றான் . நான் எந்தத் தலைப்பில் பேசுகிறேன் என்று கேட்டான். வன்முறையே என்கிற அணியில் பேசவேண்டும் என்றேன்.


இப்ப நான் உங்ககூட வந்துறவா என்றான் . இல்ல நாங்க வேற இடத்துக்குப் போறோம், நீ திரும்ப கிளாசுக்குப் போ என்றேன் . நீங்க எங்க வேணா போங்க என்னைய இப்ப கூட்டிட்டுப் போயிருங்க என்று கெஞ்ச ஆரம்பித்தான் . பாலாவுக்கு அதில் சம்மதமில்லை . நானும் ஒப்புக்கொள்ளவில்லை. 


செங்கோட்டைக்குப் போவதை விடவும் , அப்போதைக்குத் திரும்ப வகுப்புக்குப் போவது அவனுக்குப் பெரும் துன்பமாகி விட்டது. எப்படி எப்படியோ பேசிப் பார்த்தான். நாங்கள் இருவரும் சம்மதிக்கவில்லை." இந்தா நீ கிளாசுக்குப்போ... அண்ணே நம்ம போவோம்ணே" என்றான் பாலா.நாங்கள் புறப்பட்டோம். மிகுந்த கவலையோடு திரும்பிப் போனான் சௌபா. 


பிறகான நாட்களில் அதைப்பற்றி பேசுகிறபோது சௌபா புன்னகையோடும் பொய்யான கோபத்தோடும் சொல்லுவான் " நீங்க வந்து கூப்புட்டதும் அவ்வளவு சந்தோசமாயிருச்சு ...ஆஹா நம்மளைக் கூட்டிட்டு போயிருவானுங்கன்னு தெம்பா வந்தேன்  நீச்ச தெரியாதவனக் கரை ஏத்தீட்டு அவன் மூச்சு வாங்கிட்டு இருக்கும்போதே , திரும்பத் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுப்போன மாதிரித் திரும்ப போகச் சொன்னதும் உசுரே போயுருச்சு ... நொந்து போய் கிளாஸுக்குப் போனா அந்த வாத்தியார் நீ வீட்டுக்குப் போகலையான்னு கேக்குறான் ... அவன் நம்பிக்கையும் போயி என் நம்பிக்கையும் போயி" சொல்லிவிட்டு அதிரச் சிரித்துக்கொண்டே இருப்பான்.


அதவிட போனவங்க மறுபடியும் திரும்ப வந்தீங்க .. அது நினைவுல இருக்கா " என்று கேட்டான் சௌபா. 


நல்லா நெனவுல இருக்கு என்பேன் நான் சிரித்தபடியே  


இதைப் பலமுறை பேசிச் சிரித்து மகிழ்ந்தோம் என்பதால் அப்படியே சித்திரமாக நினைவில் வரையப்பட்டு விட்டது. 


அவன் சொன்னது போலவே நாங்கள் மறுபடியும் திரும்பப் போனோம். ஏனெனில்  ...வெளியில் வந்ததும் பாலா என்னிடத்தில் அண்ணே அவன் கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லாம வந்துட்டோண்ணே என்றான் . என்ன பாலா என்று திகைப்புடன் நான் கேட்டேன் . அவன் செங்கோட்டைக்கு வரும்போது அரை டவுசர் போடாமப் பேண்ட் போட்டுட்டு வரணும்ல ... அதச் சொல்லாம வந்துட்டோம் என்றான் . 


திரும்பவும் போய் அவனை அழைத்தோம் .. சௌபாவுக்கோ நாங்கள் மனம் மாறி அவனை அழைத்துப் போக வந்திருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் உள்ளே போனதும் பாலா விவரம் சொன்னதும் சௌபாவின் முகம் மாறிவிட்டது . 


என்கிட்டே பேண்ட்ஸ் இல்லையே என்றான் .


அதெல்லாம் தெரியாது .. யார் கிட்டயாவது கடன் வாங்கிட்டு வா .. இல்ல வாடகைக்கு எடுத்துட்டு வா .. அதுக்குத்தனியா காசு குடுத்துருவோம் என்றான் பாலா ... என்னண்ணே .. சரிதான என்றான் பாலா . நான் ஆமோதித்தேன் . இருவரும் உடனே புறப்பட்டு விட்டோம்.


செங்கோட்டை போகும் நாள் வந்தது. நான் சௌபா பாலா ஜெயவீரபாண்டியன், கனகசபாபதி, சங்கரநாராயணன் என்று எல்லோரும் மதுரை ரயில்நிலையத்தில் சந்தித்தோம். செங்கோட்டைப் பாசஞ்சரில் பயணம் .

சங்கர் தனது பொறுப்பில் எங்களை அழைத்துச் சென்றார் . அவரோடு இன்னும் இரண்டு ரயில்வே ஊழியர்கள் .

இரயிலில் ஏறியதும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை எங்களிடத்தில் தந்தார் சங்கர். எல்லோருக்கும் அதிர்ச்சி . எல்லாருடைய பெயருக்குப் பின்னாலும் BA BSc BL MA ஏகப்பட்ட பட்டங்கள் . போட்டிருந்த பட்டத்திற்கு தக்கப் படித்தவன் பாலா மட்டும் தான். சௌபாவின் பெயருக்குப் பின்னால் BA ... என் பெயருக்குப் பின்னால் MA... என்ன இருந்தாலும் நடுவர் இல்லையா ? 


"உண்மையில்" படித்தவனுக்குத்தான் கஷ்டம். அவன் படித்ததைத் தவிர வேறு எதையும் போட்டுக்கொள்ள முடியாது . படிக்காதவனுக்கு அந்தச் சிரமமே இல்லை. நான் பிறகு முறையாகப் படித்து பட்டம் வாங்குகிறவரை என் படிப்பும் பட்டமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மன விலாசத்தைப் பொறுத்தது .


இப்படி மெத்தப் படித்த மேதாவிகளாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.


எங்களை வரவேற்க ரயில்நிலையத்திற்கே சில தோழர்களை அனுப்பியும் இருந்தார் பரமசிவம்.மழை பெய்து மண்வாசனை பரவி இருக்க ,மப்பும்மந்தாரமுமாய் செங்கோட்டை மனதைக் கவர்ந்தது.


இரயிலை விட்டு இறங்கி தோழர் பரமசிவத்தின் இல்லத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள்.போகிற வழியில் தேநீர் அருந்த ஒரு கடைக்கு அழைத்துப் போனார்கள் . ஒரு பெரிய கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீரும் கொஞ்சம் பாலும் கலந்த கேரளத்துத் தேநீரை முதன்முறையாகப் பருகினோம்.குடிக்கக் குடிக்க குறையாமல் வந்துகொண்டே இருந்தது.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பசிக்காது என்றான் சௌபா. மதுரைத் தேநீர் அப்படி இல்லை.அடர்த்தியாக,அளவாக,செறிவாக நிறைவாக இருக்கும்.தேநீர் அருந்தியதும் சிகரெட் வாங்கிக்கொடுத்தார்கள்.நடுவரையும் நடுவரோடு வந்த அவர் நண்பரையும் தவிர வேறு யாருக்கும் புகைக்கும் பழக்கம் இல்லை.


ஒரு சிறு பாலத்தைக் கடந்து போகிற போது பாலத்தில் அமர்ந்திருந்த ஒரு வயசாளி எங்களை அழைக்க வந்திருந்தவரைப் பார்த்து "ஏலே... பார்ட்டில்லாம் யாரு ?"என்று பீடி குடித்த படியே அக்கறையோடு விசாரித்தார். "எல்லாம் பட்டிமண்டபம் பேச வந்துருக்காங்க !..." என்றார் இவர்.


"இவனுங்களா? அம்புட்டும் சின்னப் பயலுகளா இருக்கானுக ..."என்று பலங்கொண்ட மட்டும் பீடிப்புகைப் புரையேற சிரித்தார்.


இரவு பட்டிமண்டபத்திற்கு ஊரே திரண்டிருந்தது.


சின்னப் பயலுகள் செங்கோட்டை மண்ணை என்ன செய்தார்கள் ? 


அப்புறம் சொல்லுகிறேன் ...


-பாரதி கிருஷ்ணகுமார்

Sunday, April 26, 2020

அருப்புக்கோட்டையும் , போஸ்பாண்டியனும் , பாரதி கிருஷ்ணகுமாரும்- உலகப் புத்தக தினம்



2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நண்பனும் தோழனுமான போஸ்பாண்டியன் என்னைத் தொலைபேசியில் அழைத்தான் . எப்போதும், எங்களில் யார் அழைத்தாலும் வணக்கம் என்ற வார்த்தைக்குப் பிறகு இரண்டு பேரும் மனமாரச் சிரித்துக் கொள்ளுவோம் .சில நொடிகள் நீடிக்கும் சிரிப்பு . நல்ல சிரிப்பு . புன்னகை அல்ல . சிரிப்பு . எந்தக் காரணமும் தேவைப்படாத சிரிப்பு. உரையாடல் துவங்குவதற்கு முன்பாக இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவது அந்தச் சிரிப்பு தான். புதிதாகப் பார்க்கிறபோது சிலருக்கு அல்லது பலருக்குப் புரியாத சிரிப்பு. அந்த நாள் முழுவதும் நீரோடை போலக் கூடவே நடைபோட்டு வருகிற சிரிப்பு. சிரித்து முடித்ததும் உரையாடத்துவங்கினோம். அவன் என்னை அருப்புக் கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்தான். அவன் புதிதாகத் துவங்கிய பாரதி புத்தகாலய புத்தகக் கடையைத் திறந்து வைத்து , புத்தகத்திருவிழாவையும் துவக்கிவைக்க வேண்டும் என அழைத்தான். எனக்கு மாளாத வியப்பு . இதில் வியந்து போக என்ன இருக்கிறது ? என்று உங்களில் பலர் நினைக்கலாம் . நீ தான் நிறைய புத்தகத் திருவிழாக்களுக்குப் போகிறாயே ... இதில் உனக்கென்ன வியப்பு என்றும் கேட்கலாம் . உண்மை தான் . அப்படி நீங்கள் நினைத்தால் கேட்டால் தவறில்லை . ஆனால் எனது வியப்புக்கு வேறு காரணங்கள் உண்டு. அதை இப்போது இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை . பிறகு எப்போதாவது யாராவது நினைவூட்டினால் சொல்லுகிறேன் . போஸ் என்னையா அழைக்கிறீர்கள்? என்று மீண்டும் வியப்புடன் கேட்டேன் . ஆமாம் BK ..உங்களைத்தான் அழைக்கிறேன் . நீங்கள் தான் வரவேண்டும் என்றான் உறுதியான குரலில்... நான் மௌனமாக இருந்தேன். "BK' என்று அழைத்தான். நான் தயக்கமாக ஆனால் மிகுந்த மகிழ்ச்சியாக "வருகிறேன்"என்றேன். போஸ் தொடர்ந்து பேசினான் .... இந்த ஆண்டு மட்டுமல்ல.. இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தக தினத்திற்கு நீங்கள் அருப்புக்கோட்டையில் தான் இருக்கவேண்டும் . நீங்கள் தான் புத்தகத் திருவிழாவைத் துவக்கிவைக்க வேண்டும் என்றான் . 2017, 2018, 2019 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஏப்ரல் 23 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் தான் இருக்கிறேன் . யார் என்ன பொருள் கொடுத்தாலும் , எந்த நாட்டுக்கு அழைத்தாலும் போவதைத் தவிர்த்து அருப்புக்கோட்டைக்குத் தான் போகிறேன் . பழைய பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைக்கிறேன். தனியொரு மனிதனாக போஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கு , அவன் செய்யும் திருப்பணிக்கு அவனோடு , அவனருகில் நிற்கிறேன் . ஏன் ? 2017 ஆம் ஆண்டு அவன் அழைத்தபோது நான் தயங்கினேன் என்று முதலில் சொன்னேன் .. என் தயக்கத்தை போஸ் உடைத்தான் . அன்பு ததும்பும் சொற்களால் உடைத்தான். கண்களில் கண்ணீர் பெருகி உடைத்து ஓட என் தயக்கத்தை உடைத்தான் .. ஆஅம் ... ஆஆம் ..போஸ் சொன்னான். BK .. நீங்க வரணும் .. நீங்க தான் வரீங்க ... நான் உயிரோட இருக்கிறவரைக்கும் என்றான் ... நாம் உயிரோட இருக்கிறவரைக்கும் என்றேன் நான் . ***** எல்லாவற்றிலும் மண்ணள்ளிப் போட்ட கரோனா புத்தகத் திருவிழாவையும் நடக்காமல் செய்து விட்டது. என் நண்பன் போஸ் மறக்காமல், " இந்த ஆண்டு எதுவும் செய்ய இயலாது .. எனவே நீங்கள் ஒரு செய்தியை மட்டும் பதிவு செய்து எங்கள் அருப்புக்கோட்டை மக்களுக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டான் . இதோ ... உலகில் உள்ள எல்லோருக்குமான எனது உலகப் புத்தக நாள் செய்தியும் , வாழ்த்தும் ... சிறப்பாக அருப்புக்கோட்டை மக்களுக்கு... மிகச் சிறப்பாக உனக்கு .. கண் கலங்குகிறது நண்பனே ... திரையில் எழுத்தும் கலங்குகிறது ... ஆனபோதும் எதிர்காலம் துல்லியமாகத் தெரிகிறது. என்றும் தோழமையுடன் , பாரதி கிருஷ்ணகுமார் .



இந்த இணைப்பில் உலகப் புத்தக தின வாழ்த்து :
https://youtu.be/3a9tC1lUrBw


தோழர் . போஸ்பாண்டியன்

Saturday, April 25, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 05



ஆனால் நாங்களே தவறுசெய்து, மாட்டிக்கொண்ட கதையையும் சொல்லத்தானே வேண்டும் ...

அதற்கு ரொம்பத்தூரம் பின்னோக்கிப் போகவேண்டும். எவ்வளவு பின்நோக்கிப் போனாலும் சில நினைவுகள் நினைத்த மாத்திரத்தில், அந்தநாளின் எல்லாத் துல்லியங்களோடும் கண் முன்னே தோற்றம் தருவது வியப்பும் விந்தையும் தருகிறது. மறதி  என்பதே பொய் என்பார் லா .ச .ராமாமிருதம். எல்லாம் மறைந்திருந்து, பாய்வதற்குச் சமயம் பார்த்துக் காத்திருப்பவையே என்று எழுதுவார். அது எத்தனை உண்மை என்பதை அதை வாசித்தபோதே உணர்ந்திருக்கிறேன். இப்போது இந்தத் தொடர்களை எழுதும்போது அனுபவ உண்மையாய் உணர்கிறேன் .

நான் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் "இருந்துவிட்டு" வந்தேன். ஆங்கில இலக்கிய மாணவன். எனக்கு விருப்பமான ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு மட்டும் போவேன். மற்ற நேரமெல்லாம் மரத்தடி மகாராஜா தான். மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எதுவும் எழுதவில்லை."பட்டம்" எதுவும் அப்போது வாங்கி இருக்கவில்லை.எனவே அதை பறக்க விடுகிற வேலையும் இல்லை.. கல்லூரி முடிந்ததும், இரண்டு ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து பட்டிமன்றங்களில் , வழக்காடு மன்றங்களில் பேச ஆரம்பித்து கொஞ்சம் கையில் காசும் மனசில் சந்தோசமும் புரண்ட நாட்கள் அவை. 

மதுரையில் நமது சபை கூடுகிற இடங்கள் நான்கைந்து இருந்தது. எங்கு போனாலும் என்னை "ஆட்டைக்குச்" சேர்த்துக் கொள்ளுவார்கள்.ஒரு தனியார் கல்லூரியின் மைதானம் , ரயில்வே காலனி மைதானம், எஸ். எஸ்.காலனியில் ஒரு நண்பனின் வீடு, அங்கேயே ஒரு விறகுக்கடையின் கொல்லைப்புறம் ,நாகமலைப் புதுக்கோட்டையில் ஒரு நண்பன் வீட்டு மொட்டைமாடி ,எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தனியார் ரைஸ் மில்லுக்குப் போகிற கல்பாலம் , என ஏகப்பட்ட இடங்கள் சந்திப்புக்கான "பட்டறைகள்". 

அதில் ரயில்வே காலனி சந்திப்பில் எனக்கு அறிமுகமான சங்கர் என்னும் ரயில்வே தொழிலாளி விருதுநகர் ரயில்வே ஊழியர்கள் நடத்திய ஒரு சங்கத்தின் ஆண்டு விழாவில் எங்கள் பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் ." ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது பக்தியா? சேவையா? என்பது தலைப்பு. நான் நடுவர். அணியில் பேசுவதற்கு ஆறு பேர் . அதில் பள்ளிமாணவனாக இருந்த சௌபாவும் ஒரு அணியில் பேசுவான் .

கல்லூரியில் படிக்கிறபோதே, ரயில்வே காலனியில் நடைபெற்ற ஒரு பிள்ளையார்கோயில் நிகழ்வில் நான் நடுவராக இருந்தேன்.பத்தொன்பது வயதில் பொதுமேடை ஒன்றில் நடுவராக இருந்த , மிக இளவயதிலேயே நடுவராகப் பதவி ஏற்ற பெருமை எனக்கு இருந்தது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . இதுபோல நமது புகழை நாமே பாடும் சந்தர்ப்பங்கள் அமைவது அபூர்வம் .அதைப் பயன்படுத்திக் கொள்ளுவது நமது கடமையும் ஆகும் .

அந்த பட்டிமன்றம் கேட்ட அனுபவத்தில் சங்கர் எங்களை விருதுநகர் அழைத்துப் போனார் . மதுரையில் இருந்து விருதுநகருக்கு ஒரு பாசஞ்சர் இரயிலில் பயணம். அங்கு நல்ல உணவு, உபசரிப்பு,பெரிய மேடை, நல்ல கூட்டம் ... எல்லோரும் நன்றாகப் பேசி மிகுந்த அன்பையும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றோம் .பக்தியை விட சேவையே சிறந்தது என்று தீர்ப்புச் சொன்னேன் . பக்தியால் தனிமனிதன் நிறைவு பெறுகிறான். ஆனால் சேவையால் சமுகமே நிறைவு பெறுகிறது என்று எடுத்துரைத்தேன் . அது ஒரு கோவிலுக்கு முன்பாக நடந்தது என்பது இன்னும் உற்சாகம் தந்தது.  திரும்ப மதுரை வரைக்கும் ரயில் பயணம், போகும்போதும் வரும்போதும் எங்களோடு நிறைய ரயில்வே ஊழியர்கள் . டிக்கெட் வாங்க வேண்டாமா என்று புறப்படுகிறபோது கேட்டதை உடன் வந்த ஒரு ரயில்வே ஊழியர் பெரிய அவமானமாக எடுத்துக் கொண்டார் எங்களை அவர்கள் ரயில்வே நிலையத்தின் முன் வாசல் வழியாக ராஜ மரியாதையுடன் அழைத்துக்கொண்டு போனார்கள்.எங்களிடத்தில் யாரும் டிக்கெட் கேட்கவில்லை.ரயில் பயணம் என்பதே உற்சாகமானது... அதிலும் டிக்கெட் இல்லாத ஆனால் மரியாதையுடன் கூடிய ரயில் பயணம் இன்னும் உற்சாகம் தந்தது .ரயில் பயணத்திலும் பாட்டு பேச்சு இலக்கியம் என்று உற்சாகம் கரைபுரண்டது . எல்லோருக்கும் பேசியதற்குச் சம்பளமாக ஐந்து ரூபாயும் , நடுவருக்குப் பத்து ரூபாயும் கொடுத்துச் சிறப்பித்தார்கள். இப்படியாக எங்கள் குழுவின் முதல் வெளியூர்ப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

விருதுநகர் நிகழ்வுக்கு செங்கோட்டையில் இருந்து தோழர் பரமசிவம் வந்திருந்தார் . அவர் அப்போது மண்டபம் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவசரநிலைக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு , கடும் இன்னல்களுக்கு ஆளான தோழர் பரமசிவம் மீண்டும் பணியில் சேர்ந்து இருந்த நேரம் அது .என்னையும் எங்களது பட்டிமன்றக் குழுவையும் தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு அழைக்க விரும்பினார் அவர் . தன்னால் பணம் தரமுடியாது என்றும் ஆனால் நன்கு உணவு தந்து உபசரித்து அனுப்ப முடியும் என்றும் , நாங்கள் செங்கோட்டைக்கு வரவேண்டும் என்றும் மனமுருக அழைத்தார் .

அவரது வேண்டுகோளை எங்கள் குழு ஏற்றுக் கொண்டது. ஊருக்குப் போனதும் அங்கு இருப்பவர்களோடு பேசி எங்களுக்குத் தகவல் தருவதாகச் சொன்னார் பரமசிவம். பரமசிவத்துக்கும் எனக்கும் இடையில் பாலமாக இருந்தார் சங்கர் . 

இப்போது போல எந்தத் தகவல் தொடர்புச்சாதனங்களும் அப்போது இல்லை . லேண்ட் லைன் தொலைபேசிகளும் எங்களில் யாருக்கும் இல்லை. நான் ரயில்வே காலனிக்குப் போன ஒரு தருணத்தில் செங்கோட்டை விழா பற்றிய தகவல் வந்தது. தேதி உறுதியானது . அங்கிருந்த ஒரு அம்மன் கோயில் திருவிழாவில் நாங்கள் பேசப் போகிறோம் என்றும் தகவல் சொன்னார்கள் . 

இனி அணியில் பேசுகிற ஆறு பேருக்கும் தகவல் சொல்ல வேண்டும். அவர்களைக் குறிப்பிட்ட நாளில் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் . பத்திரமாக அழைத்துப்போய் திரும்ப அழைத்து வரவேண்டும் . இந்த வேலை எல்லாம் நடுவர் தான் செய்யவேண்டும் . அப்படி எதுவும் விதிகள் இல்லை என்றாலும் அந்த ஆறு பேருக்கும் தலைவர் என்பதால் அது நடுவரின் கடமையாகவே கருதப்படும் . இதை நடுவர் தனது தேவைக்காகத் தான் செய்கிறார் என்றும் , அது அவரது வேலைதான் என்று கருதுகிற பேச்சாளர்களும் உண்டு . 

நல்லவேளையாக எனது நண்பர்கள் யாரும் அந்த மனநிலையில் இல்லை. எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம். அப்போது சிமிண்ட் ரோட்டில் லேத் பட்டறை வைத்திருந்தவனும் , என் பள்ளித்தோழனுமாகிய ஜெயவீரபாண்டியனுக்கு முதல் தகவல் சொன்னேன் . அவன் வரச் சம்மதித்தான் .

எங்கு போனாலும் எத்தனை கிலோமீட்டர் என்றாலும் சைக்கிள் தான். அதிலும் ஒரே சமயத்தில் இரண்டு பேராகப் போக முடியாது . போலீஸ்காரர்கள் விரட்டிப் பிடிப்பார்கள் . எனவே யாராவது உடன் வந்தாலும் கொஞ்சதூரம் சைக்கிளில் ,கொஞ்சதூரம் நடந்து , கொஞ்சதூரம் ஓடி என்று தான் போகவேண்டிய இடத்துக்குப் போகமுடியும். 

ஜெயவீரபாண்டியனைப் பார்த்து விட்டு சௌபாவைப் பார்க்கப் போகவேண்டும் .போகிற வழியில் இன்னொரு பேச்சாளரைப் பார்த்து அவனுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் பிறகு போகலாம் என்று முடிவு செய்தேன். 

அவனும் என்னோடு சௌபாவைப் பார்க்க வந்தான் . நானும் அவனும் சௌபாவைப் பார்க்க அவன் அப்போது படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்திற்குப் போனோம் . 

என்னோடு வந்தது யார் ?

பள்ளிகூடத்தில் நடந்தது என்ன ? 



அப்புறம் சொல்லுகிறேன் ...


-பாரதி கிருஷ்ணகுமார்

Friday, April 24, 2020

சுதந்திர புருஷன் – ஜெயகாந்தன்


அவர் காலமானதும் உயிர்மை இதழில் நான் எழுதிய கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறேன்.இன்று அவருக்குப் பிறந்தநாள்.நினைவு நாளுக்கு எழுதியது பிறந்த நாளுக்கும் பொருந்துகிறது.அதுதான் ஜே.கே.அவரைப் பற்றி எழுத எனக்கு நிறைய இருக்கிறது.இது தொடக்கம்.


சுதந்திர புருஷன் – ஜே.கே


அவரைச் சந்திப்பது பற்றி, அவருடன் தொலைபேசியில் முன்னதாகப் பேசி நேரம் குறித்துக் கொண்டு போவது நல்லது.
யாராக இருந்தாலும், அவருக்கு உவப்பில்லாத தருணத்தில் வந்தால், சந்திக்க மறுத்து விடுவார்.

அவரது வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, அவரை அப்போதே சந்திக்க விரும்பிய அவரது தீவிர வாசகர் ஒருவரை, “மறுநாள் சந்திக்கலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அவரோ மறுநாள் தான் ஊருக்குப் போவதாகவும், அன்றே பார்த்துவிட்டுப் போக விரும்புவதாகவும் சொன்னதை ஜே.கே ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு நிமிடம்” என்று கேட்ட போதும் சம்மதிக்கவில்லை. “மாடிப் படியில் வந்து நில்லுங்கள்... ஒரு கும்பிடு போட்டு விட்டு போகிறேன்” என்று அவர் கேட்டதைக் கோபமாக மறுத்துத் தொலைபேசியைத் துண்டித்தார் ஜே.கே.

அப்போது அவர் “சபையில்” தனது நண்பர்களுடன் தீவிரமான உரையாடலில் இருந்தார். அது குறித்து, அல்லது அந்த உரையாடல் குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை, அன்றைக்கு “சபையில்” நானும் இருந்தேன். திருக்குறளின் சிறப்பு குறித்து, நான் அறிந்த எந்தப் பண்டிதனும் சொல்லாத அற்புதமான நுட்பங்களை ஜே.கே. விவரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆழ்ந்த மௌனமான பெருமூச்சுக்குப் பிறகு ஜே.கே. சொன்னார், “ஒரு எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் என்ன உறவு..? படிப்பதா..? பார்ப்பதா..?.. நான் சந்திக்கவே முடியாதுன்னு கூடச் சொல்லல... நாளைக்கு வரச்சொன்னேன்... அவருக்கு நாளைக்கு வேலை இருக்காம்? ....த்தா... எனக்கு இன்னைக்கு வேலை இருக்காதா... என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.”

அட்டகாசமாக,கம்பீரமாக, சந்தோஷமாக, பொங்கப் பொங்க, குலுங்கிக் குலுங்கி சிரிப்பார். மேஜையைத் தட்டிக்கொள்வார். ஒரு ஆண் சிங்கத்தின் பிடரி போல, அவர் சிரிக்கிறபோது அவர் தலைமுடி ஆடிச் சிலிர்க்கும். எந்த ஒரு அங்க அசைவையும் வலிந்து திட்டமிட்டு ஒருபோதும் ஜே.கே. செய்து நான் பார்த்ததில்லை. அவர் பேசுவதற்கு இசைவான உடலசைவே அவரிடம் எப்போதும் வெளிப்பட்டது . மிகையாக சுண்டு விரலைக்கூட அசைக்க மாட்டார் .
அவரது புன்னகையோ வசீகரமானது. புன்னகைக்கிற தருணங்களில் அவர் கண் சிமிட்டிக் கொண்டே பேசுவது பரவசம் தருகிற அனுபவம்.

அவரது எழுத்தின் வழியே, அவரை அறிந்தவர்கள் எல்லோரும் சிறப்புடையவர்கள் தான். ஆனால்,அவர் பேசுவதை, அருகில் இருந்து கேட்கப் பெற்றவர்கள் மேலும் சிறப்புடையவர்கள்.
முன்னதாகத் தொலைபேசியில் அழைத்து, அவரது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு நானும், நண்பர் சௌபாவும் அவரைச் சந்திக்க அவரது கே.கே. நகர் வீட்டுக்கு போனோம்.

மாலை ஐந்து மணிக்கு வரச்சொல்லி இருந்தார். வீடு சென்று அழைப்பு மணியை அழுத்தினேன். அவரே வந்து, கதவைத் திறந்து “வாங்கோ” என்றார். தன்னைச் சந்திக்க வருகிற எல்லோரையும் பார்த்த மாத்திரத்தில் அன்பும், கனிவும் ததும்புகிற குரலில் “வாங்கோ” என்றழைப்பது ஜே.கே. வுக்கு வழக்கமாய் இருந்தது. சபையில் அவ்வப்போது வந்து சேருகிற தனது நண்பர்களை மனமார அழைக்க, ஜே.கே. எப்போதும் பயன்படுத்துகிற சொல் “வாங்கோ”. பலமுறை கேட்டிருக்கிறேன் அருகில் இருந்து. பெசன்ட் நகர் மயானத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போன போது கூட, “வாங்கோ” என்கிற அவரது குரல் எனக்குக் கேட்கத்தான் செய்தது. அப்படிக் கூப்பிடுவார்... அவரால் மட்டுமே அப்படிக் கூப்பிட முடியுமென்று, நாம் உணரும் படி அழைப்பார்.

மேல் சட்டை போடாமல், லுங்கியை மார்புக்கும், வயிற்றுக்கும் நடுவாக ஏற்றிக் கட்டி இருந்தார். மெல்லிய புன்னகையுடன் மீண்டும் “வாங்கோ” என்றார். வீட்டின் முன்னறையில் இருந்த நாற்காலிகளைக் காண்பித்து “உக்காருங்கோ” என்றார். “வந்துர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தார். துண்டில் முகத்தை துடைத்தபடியே வந்தார். முகம் துடைத்த, துண்டைத் தோளில்  போட்டுக்கொண்டு, “சொல்லுங்கோ” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான “சமூகம் என்பது நாலுபேர்” என்னும் குறு நாவலைத் திரைப்படமாக எடுக்க அவரது அனுமதியை வேண்டினேன். ஒரு கணம் உற்றுப் பார்த்தார் “டெலிவிஷனுக்கா..? இல்லை சினிமாவுக்கா..?” என்று கேட்டார். “சினிமா” என்றேன்.

screen play ரெடி பண்ணிட்டு வாங்கோ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

தேநீர் வரவழைத்து கொடுத்தார். மீசையை எப்போதும் போல் முறுக்கி விட்டுக் கொண்டே இருந்தார். எதற்காக வந்தோமோ, அந்த வேலை முடிந்தது. மொத்தமும் மூன்று நிமிடத்தில் முடிந்துபோனது. அவருடன் இன்னும் கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்கிற எனது விருப்பம் காரணமாக, “வீட்ல இருக்குற தென்னை மரத்துல தேங்காயைத் திருட ஒருத்தன் வீட்டுக்கு வந்ததைப் பத்தி, “தென்னை மரங்கள்” ன்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்களே ஜே.கே.... அது இந்த வீடா ? ” என்று கேட்டேன். “ஆமாம்... இந்த வீடு தான்” என்று மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டார்... அந்தக் கட்டுரையை எல்லோரும் அறிய வேண்டுமென்பதற்காக அதை அப்படியே கீழே தருகிறேன்.
...

“ மணிக்கணக்காக தென்னை மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். மயிலின் தோகை மாதிரி சில சமயங்களில் அவை சிலிர்க்கும். மந்தகாசத் தென்றலில், சிட்டுக்குருவிகளுக்கு ஊஞ்சல் கட்டித் தாலாட்டும். புயற்காற்று வந்து விட்டால் தலைவிரித்து நின்று ஆடும். மாரிக்காலத்தில் மழை ஓய்ந்த பின்னர் சரம் சரமாக முத்துக்கட்டி நின்று... நிலாக் காலமும் சேர்ந்துவிட்டால் ஜகஜ்ஜாலம் காட்டி ஜொலிக்கும்..!

அந்தத் தென்னை மரங்கள் எனக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை அண்டை வீட்டில் இருந்தாலும் போதும்; ஆற்றங்கரை மணலில் நின்றிருந்தாலும் போதும்; தொடு வானத்துக்கு விளிம்பு கட்டி ஊருக்கு வெளியே தோப்பாக குவிந்திருந்தாலும் அழகாய்த் தான் இருக்கும்.
பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்கள் பக்கத்திலேயே வேண்டும் என்பது பாரதியாரின் கனவு. எனக்கு அப்படி ஏதும் ஏக்கங்கள் இருந்ததில்லை. ஆனாலும் ஒரு ஏழெட்டுத் தென்னை மரங்கள் என்னைத்தேடி வந்து, என்னைச் சுற்றிலும் நிலைபெற்று, எங்கள் வீட்டை சுற்றி ஒரே அழகு தான் போங்கள்... மட்டையும்... செத்தையும்... பன்னாடையும்... பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்பு நான் புதுவீடு கட்டிக் குடியேறியிருக்கிறேன் என்று தெரிந்த, என் நண்பருக்குத் தெரிந்த நண்பரொருவர் இன்றுவரை அவர் பெயரோ, முகமோ எனக்குத் தெரியாது – வேதாரண்யத்துக்காரர்... வாசகராய் இருத்தல் வேண்டும்... ஒரு பத்துத் தென்னங் கன்றுகளை ரயில் மூலம் அனுப்பியிருந்தார்.

கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வருகிற அளவுக்கு ஒரு பத்து பன்னிரெண்டு தென்னங்கன்றுகள். ஒரு நண்பர் மூலம் தகவலும் அனுப்பியிருந்தார்; “ நட்டு வைத்து மரமாக வளரும் வரை நாள் தோறும் தண்ணீர் ஊற்றுங்கள் போதும், ‘உப்பு வைக்கிறேன் புளி வைக்கிறேன்’ என்று யாராவது வந்தால் கிட்டே சேர்க்காதீர்கள்.” அது போலவே இந்த மரங்களை நட்டு வைத்துத் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டது. ஒரு நாள் கூட நான் அந்தக் காரியத்தைச் செய்ததில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு, “ இந்த மரங்களையா நான் என் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு வந்தேன்..! ” என்று பிரமிக்கும் அளவுக்குச் செழித்து வளர்ந்து, பாளை வெடித்துச் சிலிர்த்துக் குலை குலையாய்க் காய்த்துத் தள்ள ஆரம்பித்து விட்டன. அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டியதுதான்... எனக்கு மரம் ஏறத் தெரியாதே..! நம் ஊர் பக்கத்தில் என்றால் அதற்கென்றே சில பேர் திரிவார்கள். இங்கே யாரையும் காணோம். நானும் பலரிடம், “தேங்காய் அறுப்பதற்கு யாராவது ஆள் கிடைப்பார்களா..?..” என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் நள்ளிரவில்  அவர் வந்தார், எப்படி வந்தார் என்று தெரியவில்லை. மரத்தின் மீதிருந்து தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்தார். சின்ன வயதிலிருந்தே எனக்குத் திருடர்களைப் பற்றிய பயம் கிடையாது. அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணம்.

எனவே மாடி அறை ஜன்னலைத் திறந்து, அவரிடம் அன்பாகப் பேசினேன். அவரை நான் “திருடன்” என்று நினைப்பதாக என்னை அவர் சந்தேகித்துக் குதித்து ஓடி விட்டால் எனக்குத் தானே நஷ்டம்..?

“என்னய்யா பகலெல்லாம் தேடினேன். கிடைக்கவில்லை, நல்ல வேளை.! இப்பொழுதாவது வந்தீரே. இருக்கிற காய்களையேல்லாம் பறித்துப் போடும், உமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு போம்”...
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தேன். அந்த மரத்துக்குக் கீழ் நான்கைந்து குலைகள் பறித்துப் போடப்பட்டிருந்தன. பறித்துப் போட்டவன் தனது கூலியை எடுத்துக் கொண்டு போயிருப்பான் அல்லவா..?
ஜன்னல் வழியாகத் தெரியும் தென்னை மரத்தின் பசிய ஓலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்கும் அவற்றுக்கும் உள்ள சொந்தம்..!
...

“அந்த இரவில், அந்தக் கணத்தில் எப்படிப் பதட்டமின்றி உங்களால் அப்படிக் கையாள வேண்டுமென்று தோன்றியது..?” என்று கேட்டேன்.
என்னை உற்றுப் பார்த்தார்.
“பதட்டப்பட்டு என்ன பயன் ? அவன் பதட்டப்பட்டு அவ்வளவு உயரத்துல, தென்னை மரத்துல இருந்து கீழே விழுந்துட்டா ? அது இன்னும் பெரிய திருட்டாயிடாதா..?...” என்று கேட்டு சிரித்தார்...
கனத்த கண்ணாடிக்குள் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. சட்டென்று தலையைக் குனிந்து, உதடுகளை மடித்து ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார். கைகள் மீசை மீது விளையாடிக் கொண்டிருந்தது. சில நொடிகள் அப்படியே இருந்தார். நாங்கள் இருவரும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தோம். இத்தகையான மௌனத்தில் அடிக்கடி அவர் அமிழ்ந்து, மூழ்கிய பின் விஸ்தாரமாகப் பேசுவதை நான் பல முறை தரிசித்திருக்கிறேன். சட்டென்று தலையை நிமிர்த்தி, தலையை இட வலமாக அசைத்தார். தோளில் கிடந்த தலை முடி புரண்டது. முன்னே விழுந்த தலைமுடியை, இடது கையால் பின்னுக்குத் தள்ளிக் கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து, நெற்றியில் பூத்திருந்த வியர்வையை அழுத்தத் துடைத்துக் கொண்டார். இருவரையும் ஒருசேரப் பார்த்தார்.

கண்கள் மேலும் சிவப்பாகி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“திருலோக சீதாராம் தெரியுமா..?” என்றார்.
“தெரியும்” என்றேன்.
மீண்டும் சில நொடிகள்... தலை குனிந்து, உதடுகள் மடித்து, ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார்.

“தஞ்சாவூர்ல தான் இருந்தார்... ரொம்பக் கஷ்ட ஜீவனம்... திருச்சியில தான் அவர் பொண்ணு எடுத்தது... அதனால மனைவியையும், குழந்தையையும் கொண்டு போய் திருச்சியில விட்டுட்டா, அவங்களாவது சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட மாட்டாங்களேன்னு... திருச்சியில, மாமனார் வூட்ல கொண்டு போய் விடணும்னு முடிவு பண்ணாரு... கொண்டுபோய் விட்ட இடத்துல “நீங்க மட்டும் தஞ்சாவூர் போய் என்ன பண்ண போறிங்க..? எங்க கூடவே  இருந்துருங்கன்னு மாமனார் சொன்னதை ஏத்துக்கல”... ரோஷக்காரர்.
“வேற வழி இல்லாமத் தான் இவங்களையே கொண்டாந்து விடுறேன்

கொஞ்ச நாள்ல திரும்ப வந்து கூட்டிக்கிறேன்னு சொல்லிட்டு, ராத் தங்கிட்டு காலையில தஞ்சாவூருக்கு வந்தா... அவரு வீட்டு வாசல்ல, வீட்டைச் சுத்தி ஒரே கூட்டம். என்னன்னு கேட்டா... அவர் வீட்டுல, பின் பக்கத்துச் சுவர்ல யாரோ கன்னக்குழி போட்டு உள்ளே போய்த் திருடி இருக்காங்க... ஜனங்கல்லாம் பதறிட்டு நிக்குதுங்க... கூட்டத்தை விலக்கிட்டு, பின் பக்கச் சுவரில், கன்னம் போட்ட துவாரத்துக்குப் பக்கத்துல வந்து நின்னு பாத்துட்டு, அங்கேயே உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டாரு திருலோக சீத்தாராம்..."
மீண்டும் சில நொடிகள் மௌனம்...
மெலிதாக, சத்தம் வருகிற மாதிரி சிரித்துக் கொண்டார் ஜே.கே... தொடர்ந்தார்.
"ஏதோ பெருசாக் களவு போயிருச்சுன்னு தான் கவிஞன் அழுகுறான்னு ஊர்ல இருக்கவன்லாம் நினைச்சுக்கிட்டான்..." சற்றே சப்தமாக சிரித்துக் கொண்டார் ஜே.கே.
"அழுதவர சமாதானப்படுத்தி, சுத்தி இருந்தவன்லாம் கேட்டப்ப திருலோக சீத்தாராம் சொன்னாராம்... "நானே ஏழை... திருட வந்தவனுக்குப் பசியாறிட்டுப் போக ஒரு பருக்கைச் சோறு கூட இல்லாத வீட்டுக்குத் திருட வந்திருக்கான்னா...
அவன் எவ்வளவு பெரிய ஏழையா இருப்பான்னு நினைச்சு அழுதேன்னாராம்”...
“அதுக்கு முன்னால இதெல்லாம் என்ன ?” என்றார்.
சட்டென்று உரையாடலை நிறுத்திய மௌனத்தில் ஆழ்ந்து, ஒளிரும் கண்களுடன் எங்களைப் பார்த்தார்.
நாங்கள் விடைபெற்றுக்கொண்டோம்.
வாசலில் வந்து நின்று கொண்டு நான் சொன்னேன்
“இரண்டு மாசத்துல screenplay ரெடி பண்ணிட்டு வர்றேன் ஜே.கே.”...

“வாங்கோ”... “போன் பண்ணிட்டு வாங்கோ” என்றார்.
இருவரும் கை கூப்பி வணங்கினோம்.
திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டார்...

நான்கைந்து அடிகள் நடந்த பின்னர், திரும்பிப் பார்த்தேன். கதவு திறந்திருந்தது. ஜே.கே. அங்கேயில்லை.
...
இரண்டு மாதங்கள் கழித்து திரைக் கதையை முழுவதுமாக எழுதி எடுத்துக் கொண்டு, தொலைபேசியில் சம்மதம் பெற்று அவரைப் போய்ப் பார்த்தேன்.
மாடியில் இருந்தார் வணங்கினேன்.
“வாங்கோ” என்றார்.
"screenplay ரெடி பண்ணிட்டேன்" என்றேன்
"உம்" என்றார்
"எங்கேயாவது இரண்டுநாள் discussionக்குப் போகணும்... நீங்க வரணும் ஜே.கே." என்று விண்ணப்பித்தேன்..
"போலாமே... ஏற்காடு போலாம்" என்றார்.
ஏற்காடு நல்லா இருக்குமா?" என்றேன்
"யாருக்குத் தெரியும்?" என்றார்... எனக்கு விளங்கவில்லை
"நான் போனதில்லை... அதனால அங்க போகலாம்னேன்" என்றார்.
அவரே, "நாலு நாள் போய் இருக்கலாம்" என்றார். ஜே.கே.
கலை இயக்குனர் ஜே.கே. என்கிற ஜெயக்குமார், இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர், கவிஞர். பரிணாமன், ஒளிப்பதிவாளர் wide-angle ரவிசங்கர், நான் என ஆறு பேருமாக ஏற்காடு போய்ச் சேர்ந்தோம்.
மூன்று அறைகளில், அறைக்கு இருவராகத் தங்கினோம். ஜே.கேவும், கவிஞர் பரிணாமனும் ஒரு அறையில் தங்கினார்கள். போய்ச் சேர்ந்த அன்று காலை 10 மணிக்கு அவரது அறையில் ஒன்று கூடினோம்.
கட்டிலின் மையத்தில் காலைச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். புகை சுழன்றது! அறையெங்கும் புகை பரவி அறைக்கதவைக் கடந்து ஏரியின் மீதும் பரவியது.

எந்த இடத்திலும், எந்த ஊரிலும் அச்சமின்றி தயக்கமின்றி தன் நண்பர்களுடன் சிலும்பியில், டெமோவைப் போடுவார். எத்தனை முறை போட்டாலும் ஒரு சொல் கூடப் பிழையின்றி, தடுமாற்றமின்றி, குழப்பமின்றி பேசிக் கொண்டிருப்பார். சமயங்களில், சபையில் எல்லோரும் சரிந்த பின்னரும், எப்போதும் விழித்திருக்கிற பிரக்ஞை தான் ஜே.கே...

“என்னை பார்த்து, நான் தான் செட்டியார்... இந்தப் படத்தோட producer…  shot by shot எனக்குப் படத்தச் சொல்லுங்க” என்றார்.

குறுநாவலின் இறுதிக்காட்சியில் நான் சில மாற்றங்கள் செய்திருந்தேன்.... அவர் எப்படி எதிர்வினையாற்றுவாரோ என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. எனினும் முழுத் திரைக் கதையையும் நான் செய்த மாற்றங்களுடனே சொன்னேன், சொல்வதற்கு நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்... குறுக்கிடவேயில்லை. மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.
சில நொடிகள் மௌனமாகவே இருந்தது சபை.
நான் பதட்டமாக இருந்தேன்.
“நல்லா இருக்கு” என்றார்...
dialogues  நீங்களே எழுதிக்கங்க” என்றார்.
“பெரும்பாலும் உங்க dialogues தான் use பண்ணப்போறேன்

சில இடங்கள்ல மட்டும் நான் எழுதிக்குவேன்" என்றேன்
"உம்... செய்ங்கோ" என்றார்
"உரையாடல் என்று டைட்டில் போடுற இடத்துல உங்க பேரைப் போட்டு, அதுக்குக் கீழ எம்பேரையும் போட்டுக்குவேன்" என்றேன்
மெலிதாகப் புன்னகைத்தார். "செய்ங்கோ" என்றார்.
அந்தத் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு காட்சிக்கென கவிஞர். பரிணாமன் எழுதிய பாடல் ஒன்றைப் பற்றிச் சொன்னேன்.. வியப்போடு பரிணாமனைப் பார்த்தார்.
கதையின் மையக் கதாபாத்திரங்களான முத்துவேலருக்கும், சுகுணாவுக்கும் இடையிலான காட்சியில் இடம் பெறும் பாடல் என்றேன்.
"அவங்களே பாடுறாங்களா?" என்று கோபமாகக் கேட்டார். நான் அவசரமாக மறுத்து, "இல்ல... montage song... song ஐ throw பண்றோம்... lip movement கிடையாது" என்றேன். பாடலை படிக்கச் சொன்னார். பரிணாமன் பாடினார். "எச்சில் படாத முத்தங்களை எனக்குத் தருவாயா?" என்று துவங்கும் அந்தப் பாடலை ஜே.கே. ரொம்பவே ரசித்தார்.

“சரி வந்த வேல முடிஞ்சது... எப்பவுமே வேலைய முடிச்சுத் தூக்கி வச்சிரணும்” என்றார் ஜே.கே.
“அப்ப இன்னைக்கே புறப்பட்டுறலாமா ? ” என்று கேட்டார் பரிணாமன்.
“எதுக்குய்யா ?” நாலுநாள் இருந்துட்டுப் போகலாம் என்றார்.
இருந்த நான்கு நாட்களும் அந்தக் கதையின் உள்ளிருக்கும் ஊற்றுக்கண்களைத் திறந்து வைத்துக் கொண்டேயிருந்தார்.
குடும்பம், சமூகம், காதல், திருமணம், மனித உறவுகள் குறித்த அவரது எல்லையற்ற, கரை காண முடியாத சிந்தனையின் வீச்சில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தோம்,
சென்னை திரும்பிய சில நாட்களுக்குப் பின், தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை அவரிடம் தந்தேன். எவ்வளவு என்று கேட்கவில்லை, எண்ணிப் பார்க்கவில்லை... அப்படியே மேசை மீது வாங்கி வைத்துக் கொண்டார். அது அங்கேயே ரொம்ப நேரம் கிடந்தது.
...
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, உங்க பேர்ல ஒப்பந்தம் type  அடிச்சிட்டு வாங்க... கையெழுத்து போட்டுறலாம்” என்றார்...
என் பெயருக்கே ஒப்பந்தம் தயாரானது. கையெழுத்திட்டார்.
ஆனால், திரைப்படமாகும் முயற்சி தொடரவில்லை...
அவரிடம் போய்த் தயக்கத்துடன் சொன்னேன்.
"So what... நடக்கும் போது நடக்கட்டும்... என்னைக்காவது நீங்க எடுங்க..
எல்லாக் கனவுகளும் மெய்ப்படும்" என்றார்...
வலது கையை உயர்த்தி...
தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டேன்..
அந்த வாழ்த்துக்கள் என்னிடம் எப்போதும் இருக்கும்.
...
தமிழகத்தின் வரலாற்றில் இலக்கியம், அரசியல், சினிமா, எழுத்து, பேச்சு என்று எல்லாத் துறையிலும் வென்ற, ஒளிர்ந்த ஒரு மனிதன் ஜே.கே. மட்டும் தான்.
அந்த மனிதன், தன் வீட்டில், தனக்கும் தன் நண்பர்களுக்குமாக உருவாக்கிய உலகம் ஒப்பற்றது.
அது அறிவும், ஞானமும், செருக்கும், சத்தியமும் ஒளிர்ந்த சபையாக இருந்தது.
அவரது ஞானச்செருக்கு கூட அவரது தனித்த சிறப்பன்று: பட்டினத்தார், கம்பர், பாரதி என்று நீண்ட கவி மரபில் இருந்த
தொடர்ச்சியே எனினும், நாம் நம் காலத்தில் கண்டு கேட்டு, வாசித்து, வியந்த, மனிதன், ஜே.கே.
நம் காலத்து அறிவுலகின் பேரழகுகளில் ஒருவர் ஜே.கே...

சீறுவோர்க்குச் சீறும், நேர்படப் பேசும் கம்பீரம்.
எந்த அதிகாரத்திற்க்கும் எப்போதும் மண்டியிடாத சுதந்திரம்.
தனக்குச் சரியென்று பட்டதை உரத்துப் பேசும் சங்கநாதம்.
கம்பனை, பாரதியை, வள்ளுவனை, வாசித்துணர்ந்த அறிவாற்றல்.
கனிவும் அன்பும் தோழமையும் ததும்பும் அற்புதம்...
தர்க்கத்தின் எல்லைகளை மீறிச் சதிராடும் வாக்குச் சாதுர்யம்...
உண்மையும் சத்தியமுமான மனிதன் ஜே.கே...

...


அந்த நான்கு நாள் உரையாடலின்போது ஒருமுறை சொன்னார்.
“உண்மை சுடும்”... (இது அவர் சிறுகதை ஒன்றின் தலைப்பு)
உண்மை சுடும் என்றால் எல்லோரும் தொடமுடியாது என்றாகாதோ..? உண்மை சுடாதென்றால் அது உயிர் அற்றது என்றாகிவிடாதோ..?
உண்மை சுடும்...
எல்லோரையும் அல்ல...
பொய்யர்களை...” என்றார்
ஜே.கே. பேசி எவ்வளவோ கேட்டிருந்தும் இதுதான் இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.
உங்களோடு இருந்த கணங்கள் குளிர்ச்சியானவை ஜே.கே.
ஏனெனில், அவை உண்மையானவை..

-பாரதி கிருஷ்ணகுமார்.