Thursday, February 10, 2011

குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள்


எப்போதும் , ஒருவர் அறிமுகமாகிற போது , அன்றி நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிற போது உரையாடலைத் துவங்க கேள்விகளைத் தான் நம்பி இருக்கிறோம் நாம் . இந்தக் கேள்விகளின் நோக்கம் உரையாடலைத் தொடர்வது மட்டுமல்ல . அவரை , அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் , வாய்ப்பிருந்தால் ரகசியங்களையும் அறிந்து கொள்ளுகிற அவசர அவசியம் தான் . ஆனால் நாம் உணர்வதில்லை அந்தக் கேள்விகள், உள்ளுக்குள் அறுத்துக் குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள் என்பதை.சிலர் எந்த உள் நோக்கமும் இன்றி இந்தக் கேள்விகளைக் கேட்டு வைக்க , பலர் திட்டமிட்டே, கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .

எப்படியெல்லாம் கேட்டு விடுகிறார்கள் . வேலை கிடைக்காமல் வெறுத்துப் போய் , வெம்பிப் போய் அலைகிறவர்களிடம்,"இப்ப என்ன பண்ணுற ? .. எங்க வேல பாக்குற? "
திருமணம் ஆகாமல், பொருத்தமான இடம் அமையாமல் அவதிப்படும் ஆட்களிடம் ,"எப்பம் கல்யாணம் ? கல்யாணச் சோறு எப்பப் போடுவ ? ". திருமணமாகிக் குழந்தை பிறக்காமல் மனதாலும் உடம்பாலும் தவமிருக்கிறவர்களிடம் , "எதுவும் புழு பூச்சி இருக்கா? எத்தினி குழைந்தங்க ?" என்று கூசாமல் கேட்டு வைக்கிறோம்/வைக்கிறார்கள்.
பத்துப் பன்னிரெண்டு வருடமாக வாய்ப்புத் தேடிப் போராடுகிற ஒரு உதவி இயக்குனரிடம்,"எப்பம் தனியா படம் பண்ணுவ ? எவன் எவனோ பண்றான் . நீ என்ன பண்ற? "
எத்தனை கேள்விகள்? ? ?

தன் சொந்த சாதி , மதம், பிறப்பு குறித்து ஏதோ குற்ற உணர்ச்சியோ , தாழ்வு மனப்பான்மையோ , ஒருவருக்கு இருக்கலாம் என்பதை உணராமல்,"நீங்க என்ன ஆளுங்க?..என்ன சாதி ? அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க ? " என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்டு விடுகிறார்கள். பிக் பாக்கெட் அடிக்கிறவன் விரல்களுக்கு நடுவில் வைத்திருக்கும் கூர்மையான பிளேடால் நமது பையை அறுத்து நம் பொருளைக் கவர்ந்து போவது போல. ஒவ்வொரு கேள்வியும் இதயத்தின் அடிப்பகுதியை அறுத்து குருதி கொப்புளிக்க வைக்கிறது . பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் குருதி அடி வயிற்றில் இறங்கி உறைந்து கெட்டி தட்டி நின்று விடுகிறது . " ஏதாவது விசேஷம் இருக்கா ? .. என்னமாவது தகவல் உண்டா ? .... என்பதான நாசூக்கான கேள்விகளும் கூட இதில் அடங்கி விடும் . ஒரு கல்யாண வீட்டில் , நண்பரொருவர் எதிரில் வந்த ஒரு பெரியவரை, அன்புடன் , "நல்லா இருக்கீங்களா ? " என்று கேட்டதும் பெரியவர் முகம் சிவந்து , " நல்லா இருக்குறவங்களப் பாத்து எதுக்கு இப்பிடிக் கேக்குற ? என்றார்.
பிறகு எப்படிப் பேசுவது ... என்ன பேசுவது ... எங்கே துவங்குவது என்று பலருக்குத் தோன்றும் . எந்த வகையிலும் காயம் உண்டாக்காத கேள்விகள் இருந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மனம் திறக்கிற வரை காத்திருக்கத் தான் வேண்டும் .

 ஒரு குழந்தை தன் தாய் மொழியைத் தடையின்றிப் பேச மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம் . ஆனால், அதை முறையாகப் பேசி விட வாழ்நாள் முழுவதும் போராட வேண்டி இருக்கிறது..எல்லாச் சந்திப்புகளிலும், உரையாடல்களிலும் சக மனிதர்களுடைய இதயத்தை அறுத்து விடாத சொற்களை எனது மொழி எனக்குத் தர வேண்டும் என்று தவமிருக்கிறேன்.

Wednesday, February 9, 2011

நீங்க எந்த ஊரு..?


எனது அலுவலகத்தில் இருந்து, தேநீர் குடிக்க எப்போதும் ஒரு கிலோமீட்டர் தூரம் போய், ஒரு குறிப்பிட்ட கடையில் தேநீர் அருந்துவது தான் வழக்கம். இன்று மாலையும் நானும், எனது எடிட்டர் அருள் முருகனும் தேநீர் அருந்தப் போனோம். காலையில் இருந்து வேலை பார்த்துக்கொண்டே இருந்தாலும், களைப்பு இல்லாத உற்சாகத்துடன் தான் இருந்தோம். வழியில், மிக நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்க, "BK டீ சாப்பிடப் போலாமா" என்று கூப்பிட்டார். அதற்குத்தான் போகிறோம் என்றதும் அவரும், அவருடன் வந்த நண்பரும் சேர்ந்து நான்கு பேராகப் போனோம்.

டீக்கடையில், டீ மாஸ்டரைப் பார்த்ததும் வணக்கம் சொல்வது எனது வழக்கம். சிறந்த தேநீர் தருகிறார் என்பதால், முந்திக்கொண்டு முதல் வணக்கம் சொல்லிவிடுவேன். மாஸ்டர் முகம் நிறைந்த புன்னகையோடு எங்களுக்கு தேநீர் கொடுத்தார்.

நண்பர் அவரது நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார். நான் அருளை அவருக்கு அறிமுகம் செயவித்தேன். அறிமுகமான அந்தப் புதிய மனிதனிடம், "நீங்க எந்த ஊரு என்றேன்".

"தெரியாது" என்றார் புன்னகையுடன்

நான் கேட்டது, சந்தடியில் அவருக்குக் கேட்கவில்லையோ என்று கருதி மீண்டும் நீங்க எந்த ஊரு என்று கேட்டேன்.

மீண்டும், "தெரியாது" என்றார்

நண்பர் அவரைப் பார்த்து, "ஏய் எந்த ஊருன்னு கேக்குறாருப்பா" என்றார்.

அப்போதும் தெரியாது என்றே பதில் வந்தது

"ஏன்... எந்த ஊருன்னு சொல்ல விரும்பலையா..?" என்று கேட்டேன்.

அந்த மனிதன் நண்பரின் காதருகே போய் ஏதோ சொன்னார், நண்பரின் முகம் மாறியது. எனக்குப் புதிராக இருந்தது. அதற்குள் தேநீர் சாப்பிட்டு முடித்திருந்தோம். யாருக்கு என்ன சிகரெட்டு வேண்டும் என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்கு போனார் அந்த மனிதர். நண்பர் மெல்லிய குரலில் என்னிடம் சொன்னார், "அவர் ஒரு அநாதை இல்லத்துல வளந்தவரு... அப்பா அம்மா யாருன்னு தெரியாது... அதனால எந்த ஊருன்னும் தெரியாதுன்னு"

அந்த மனிதர் சிகரெட்டுடன் திரும்பி வந்தார். மெளனமாகப் புகைத்தோம். புறப்பட்டோம்.

அந்தப் புதிய மனிதரிடம் சொன்னேன், "இனிமே யாராவது எந்த ஊருன்னு கேட்டா, மதுரைன்னு சொல்லுங்க... அதுதான் என் ஊரு... இனிமே அதுதான் நம்ம ஊரு..."

"thanks sir" என்றார் அவர் சந்தோஷமாக.

நான் அலுவலகம் திரும்பினேன். நெருக்கடியான போக்குவரத்தில் எப்படி வந்தோம் என்பது நினைவிலேயே இல்லை. அலுவலகம் திரும்பியும் இன்னும் வழக்கமான வேலை செய்யும் மனநிலைக்கு நாங்கள் இருவருமே திரும்பவில்லை.

நினைவெல்லாம், "நீங்க எந்த ஊரு...?" என்கிற கேள்வியிலேயே நிலைத்து நிற்கிறது...

நாஞ்சில் நாடன்

 தமிழினி பதிப்பகம் நடத்திய நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தது. பிப்ரவரி நான்காம் தேதி மாலை. பேராசிரியர் அ. மார்க்ஸ், மூத்த கவிஞன் சமயவேல், எழுத்தாளர் ஷாஜகான், நான், என நான்கு பேர் பேசினோம். நாஞ்சில் ஏற்புரை சொன்னார். அரங்கம் நிறைந்த கூட்டம் தான்.

"எச்சம்" "யாம் உண்பேம்" என்னும் நாஞ்சில் நாடனின் இரண்டு மகத்தான சிறுகதைகளை அரங்கில் குறிப்பிட்டேன். என் மொழியில் அந்த கதைகளைச் சொன்னேன். பார்வையாளர்களும், நாஞ்சில் நாடனும் ஒரு சேரக் கண் கலங்கினார்கள். "நீங்க பேசும்போது கண்ணு கலங்கிடிச்சு" என்று கூட்டம் முடிந்ததும் நாஞ்சில் சொன்னார். நாஞ்சில் எனக்களித்த விருதாக, இந்த வார்த்தைகளைப் போற்றுவேன்.

எப்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டாலும், எங்கிருந்தேனும் ஒரு எதிர்ப்பு வரும். பகிரங்க எதிர்ப்பு இல்லாவிட்டாலும், உள்ளுக்குள்ளேனும் ஒரு கூட்டம் வருந்திக் கண்ணீர் வடிக்கும். பரிசு பெறுகிறவர் குறித்த விவாதம் இல்லாவிட்டாலும், இந்த தொகுப்புக்குத் தந்திருக்கக் கூடாது என்கிற முணுமுணுப்பாவது இருக்கும். எதுவும் இல்லை இந்தமுறை. இது நாஞ்சில் நாடனின் ஆளுமையையும், தமிழ் வாசகப்பரப்பின் மேன்மையையும் எனக்கு ஒரு சேர உணர்த்துகிறது. எத்தனை விருதுக்கும் தகுதி உடையவர் நாஞ்சில்.

எனினும், அரசு சார்ந்த அல்லது அறியப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்குப் பிறகு, படைப்பாளியை கொண்டாடுவது பொதுப்புத்தியில் இருக்கும் பொறுப்பின்மை தான். தனக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டபோது, "எனக்கு விருது கொடுத்து சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக்  கொண்டது" என்றார் ஜெயகாந்தன். "An award has been granted to me by Sakithya Academy, which has no sakithya" என்றாராம் க.நா.சு. பிறகு ஏன் விருது வாங்கினீர்கள் என்று கேட்டபோது, விருதுடன் இணைந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயை எப்படி விட்டுக்கொடுப்பது என்று சொன்னதாக ஒரு தகவல் என் காதிற்கு வந்து எனக்குள் கிடக்கிறது. நாஞ்சிலுக்கு விருது கொடுத்தது அகாடமிக்குப் பெருமையா இல்லை நாஞ்சிலுக்குப் பெருமையா என்று என்னைக் கேட்டால், தனது எழுத்தாற்றலால் நாஞ்சில், சாகித்ய அகாடமியை வென்றிருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. ஒற்றையாக, ஊர் சுற்றி, ஊர் சுற்றி, நொம்பலப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, பிறர் துயர் கண்டு துடித்த ஒரு மனிதன் தன் விரல்களால் வென்றிருகிறான்.

அங்கேயே இன்னொன்றையும் குறிப்பிட்டேன் "இப்படித்தான் ஊர் ஊராக இனி கூப்பிடுவார்கள், துண்டு போடுவார்கள், பரிசு கொடுப்பார்கள், பாராட்டுவார்கள், எல்லாம் நடக்கும். இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு பிறகு. எல்லாம் ஓய்ந்து விடும். நீங்கள் நிம்மதியாக எப்போதும் போல் எழுதப் போய் விடலாம்" என்றேன். மௌனமாக, ஒரு புன்னகையோடு அதை ஆமோதித்தார் நாஞ்சில்.

நாம் அப்படித்தானே எப்போதும் செய்கிறோம்.
பேய்க்கூச்சல் அல்லது மயான அமைதி.