Wednesday, January 22, 2020

சென்னைக் கம்பன் கழகம்

சென்னைக் கம்பன் கழகம்  நடத்திய விருது வழங்கும் விழாவில் , படைப்பிலக்கிய விருது பெற்றபோது .... 


சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி இரண்டு

 சமூக நல்லிணக்கப் பேரவை  நாவல் என்னை ஈர்த்தது .

எழுத்தெண்ணிப் படித்தேன் .இந்தப் படைப்பு கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்று ஸபிக்கு சொன்னேன் . அதனால் தான் உங்களுக்கு அனுப்பினேன் என்றார் .

தான் தலைமை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் "சமூக நல்லிணக்கப் பேரவை  " என்னும் அமைப்பின் மூலம் நாவலுக்கான அறிமுகக் கூட்டத்தை நடத்தினார் .

அரங்கம் நிறைந்த கூட்டம் . அரங்கில் பேசிய எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள் . அந்த நாவலுக்கு என்று நடந்த முதல் நிகழ்வு என்கிற பெருமையை நாங்கள் அனைவரும் பெற்றோம் .

தேனி இந்து நாடார் உறவின்முறைக் கல்விக்கூடங்களின் பொதுச்செயலாளர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு .டி . ராஜ்மோகன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார் . அழைப்பிதழைப் பார்த்தால் அறிந்து கொள்வீர்கள் . பல் துறை சார்ந்த பெருமக்கள் திரளாகப் பங்கேற்று பெருமை சேர்த்தார்கள் .

இப்போது நிறைய விருதுகளையும் , பரிசுகளையும் இந்தப் படைப்பு பெற்றிருக்கிறது .

வாங்கி வாசியுங்கள் . ஒரு வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும் பாங்கை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் .

படைப்பும் , படைப்பாளர்களும் கொண்டாடப்படுவது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்யும் .

சமூக நல்லிணக்கப் பேரவையும் , அதன் அழைப்பை ஏற்றுத் திரளாக வந்த பெருமக்களையும் நான் வாழ்த்துகிறேன் .
 https://youtu.be/7apCj6R0MQ8
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .

Thursday, January 16, 2020

சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி ஒன்று

எப்போதும் நான் "ஸபி" என்று அன்பு பொங்க அழைக்கும் முகமது ஸபிக்கும் எனக்கும் முப்பது ஆண்டு கால நட்பு .

தொண்ணூறுகளின் இறுதியில், தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின்  கலைஇரவு நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்தேன் . தேனி பேருந்து நிலையத்திற்கு அருகில் , பங்களாமேட்டில் மதுரைக்குப் போகிற சாலையை அடைத்துப் பெரிய மேடை போட்டிருந்தார்கள் .

பின்னிரவில் பேசத் துவங்கினேன் .  " கோபுரங்களும் குப்பைமேடுகளும் " என்பது நான் தந்த தலைப்பு . இலக்கியத்தில் எது கோபுரமாக உயர்ந்து நிற்கிறது , எது குப்பைமேடாகச் சிறுத்துக் கிடக்கிறது என்பது அன்றைய பேச்சின் சாரம் . ஒரு மணி நேரம் இருபது நிமிடம் பேசி இருப்பேன் .

பேசி முடித்துப் பெருகிய வியர்வையோடு மேடைக்குப் பின்புறம் சென்று அமர்ந்தேன் . தோழர்கள் மனம் திறந்து பாராட்டிக்கொண்டு இருந்தார்கள் .
எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் .

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு , ஒரு தேநீர் குடிக்க எழுந்து போனேன் . விழா மேடைக்கு வலதுபுறம் இருந்த கடைக்குப் போனேன் . அங்கும் பலரும் என் பேச்சைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

சிவந்த , மெலிந்த தோற்றம் கொண்ட ஒருவர் என் கரங்களைப்பற்றி எனக்குப் பாராட்டுகள் சொன்னார் . என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் . நான் சம்மதித்தேன் . புகைப்படம் எடுக்கவும் , உரையாடவும்  வசதியாக மேடைக்கு எதிர்ப்புறமாக மேற்கு நோக்கி நகர்ந்தோம் . அவர் தான் பேசிக்கொண்டே இருந்தார் . ஏதோ அவசர வேலை இருப்பது போலவும் , உடனே புறப்பட்டுப் போகப்போகிறவர் போலவும் விரைந்து பேசினார் . தந்தி அடிப்பது போல ஒரு படபடப்போடு பேசினார் . ஆனால் அப்படி ஏதுமில்லை . நீண்டநேரம் பேசினார் . புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .பேருந்து நிலையத்திற்கு அருகில் மூடிஇருந்த ஒரு கடை வாசலில் நின்று
படமெடுத்துக் கொண்டோம் .  அவரது நண்பர் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார் .


எனக்கு இந்தப் புகைப்படம் அனுப்புவீர்களா என்று கேட்டேன் . அனுப்புவதாக உறுதி தந்தார் . அவர் கையில் இருந்த ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எனது அலுவலக முகவரியை எழுதிக் கொடுத்தேன் . பத்து நாட்களுக்குப் பிறகு நானும் அவரும் சேர்ந்து இருக்கும் அந்தப் புகைப்படம் எனக்கு வந்தது .

அன்றிலிருந்து இன்று வரை சேர்ந்து இருக்கிறோம் . வாழ்வில் நிறைய இழப்புகளை , துன்பங்களை , இருவருமே  சந்தித்து இருக்கிறோம் . இருவரும் , ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் . ஒருவருக்கொருவர் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் . கற்போடு இருக்கிறது எங்கள் நட்பு .

அன்றாடம் சந்திப்பதில்லை . அன்றாடம் பேசிக்கொள்வதும் இல்லை . ஆனால் இருவரும் எப்போதும் அருகிலேயே இருக்கிறோம் .


சில மாதங்களுக்கு முன் , ஒருநாள் அலைபேசியில் அழைத்து சுளுந்தீ நாவல் படித்து விட்டீர்களா என்று ஸபி கேட்டார் . அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்றேன் .

உடனே அனுப்புகிறேன் . அந்த நூலுக்கு ஒரு அறிமுக விழா வைக்க வேண்டும் என்றார் . அவ்வளவு முக்கியமான படைப்பா  என்று கேட்டேன் . ஆம் என்றார் .
புத்தகம் அனுப்புங்கள் என்றேன் . வாசிக்காமல் எந்தப் புத்தகம் தொடர்பான ,எந்த விழாவுக்கும் நான் போவதில்லை  என்று அவருக்குத் தெரியும் .

சில நாட்களில் புத்தகம் வந்தது. வாசிக்கத் துவங்கினேன் .

.... தொடரும்
 


அன்பு நண்பன் ஸபி .


Thursday, January 9, 2020

பணியிடைப் புகைப்படம் வாச்சாத்தி ஆவணத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த சமயம் , சாலையோர மூங்கில் புதர்களைப் படம் பிடிக்க எண்ணி , ஒரு மலைப்பாதையின் வளைவில் நின்று பணியாற்றிக்கொண்டிருந்த போதும் ... 

ஏலகிரி மலையில் , பராமரிக்கப் படாத ஒரு பூங்காவில் வேலைகளைத் திட்டமிட்ட போதும் ...

Wednesday, January 8, 2020

தம்பி தாணப்பன் எழுதிய முகநூல் பதிவு

 கீழே உள்ள புகைப்படம் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் போனபோது எடுத்த புகைப்படம் . அதில் நீலச்சட்டை அணிந்திருப்பது தம்பி தாணப்பன் .

Tuesday, January 7, 2020

ஒரு வேலை நிறுத்தமும் , ஒரு பிரசுரமும் ....

ஒரு முன்னுரை 

அப்போது நான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்களின் சங்கத்தில் பொதுச்செயலாளர்பொறுப்பில் இருந்தேன் . எங்கள் சங்க அலுவலகம் , அந்தப் பகுதியில் இயங்கிய அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைகிற , இயங்குகிற சந்திப்பு மையம் ஆக இருந்தது . அது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலம் . அது பற்றி தனியே எழுதும் எண்ணம் இருக்கிறது . அதில் ஒன்றை , ஒரு கணத்தை , மேனாள் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவராக இருந்த தோழர் . பாலசுப்ரமணியம் முகநூலில் பதிவு செய்திருக்கிறார் . 
தோழர் . வீரகடம்பு அதை எனக்கு அனுப்பி இருந்தார் . 

இதை வாசித்ததும் , கொஞ்சம் முரட்டுத்தனமாக, நான் நடந்து கொண்டது போல சிலருக்குத் தோன்றலாம் . ஆனால் அது ஒரு தோற்றமே . உண்மையில் , ஒன்றைப் புதிதாகவும் , சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்கிற நமது உறுதியைச் சிலர் பிடிவாதம் என்று மொழிப்பெயர்ப்பு செய்து கொள்ளுகிறார்கள் . நாம்  நினைத்தது போலத்தான் எல்லாமே நடக்கவேண்டும் என்று நாம்  நினைப்பதாகப்  பொருள் கொள்ளுகிறார்கள் . அவர்கள் , மாற்றங்களை விரும்பாத , அல்லது மாற்றங்களால் ஒருவர் அங்கீகாரம் பெறுவதைக் கண்டு அஞ்சுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் . 


உண்மையில் பெரும்பான்மையான தோழர்கள் மாற்றங்களை நேசிக்கிறார்கள் . அதனை உளமார விரும்புகிறார்கள் . அங்கீகரிக்கிறார்கள் . பெரும் திரளாக நம்முடன் அணி வகுக்கிறார்கள் . நமது கூட்டு பேர உரிமையின் வலிமையை உயர்த்துகிறார்கள் . அவர்களே , தாங்கள் தேர்வு செய்த சங்கத் தலைவர்களைக் காப்பாற்றுகிறார்கள் .


எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் , அப்போது பெய்த மழையில் புறப்பட்டு வரும் மண் வாசனை போல அதை  வெளிப்படுத்துகிறார்கள் . நினைவின் பூக்களில் இருந்து மகரந்தங்களைக் காற்றில் மிதக்க விடுகிறார்கள் . அதன் நறுமணம் உண்மையின் நறுமணம் . தோழமையின் நறுமணம் . 

இதை மறந்தவர்களும் உண்டு . மறைக்கிறவர்களும் உண்டு .இவர்கள்தான் எல்லாப் பூக்களையும் மலடாக்கி  விட முயல்கிறார்கள் . சமயங்களில் ஓரளவு வெற்றியும் பெற்று விடுகிறார்கள் .


ஆனால் , அன்பின் மகரந்தங்களால் பூக்கள் பூப்பதும் , கனிவதும் , விதைகள் மண்ணோடு கலப்பதும் , மீண்டும் பூப்பதும் நடந்துகொண்டே தானிருக்கும் .


அப்படி , முப்பது ஆண்டுகளுக்குப் பின் , தோழர் பாலுவின் நினைவில் பூத்த பூ .இந்த நினைவுக் குறிப்பு . நம் தோழமை மணம் பரப்புகிறது பாலு ... மனமார்ந்த நன்றி .

நிறைய எழுதுங்கள் .


சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துப் பறந்த காலத்தின் சுவடுகள்..... 
➖➖➖➖➖➖➖➖
அன்றைய காலகட்டத்தில் மாநில செயற்குழு நடந்து முடிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு போராட்ட முடிவு இருக்கும்.

மாவட்டத்தில் அந்த இயக்கத்திற்கான தயாரிப்பு வேலைகளில் உற்சாகமாக இறங்கி விடுவோம்.

ஆனால்... . தோழர்.பாலுச்சாமி செய்து வந்த பல வேலைகளில் ஒரே ஒரு வேலையை மட்டும் யாரும் செய்ய முன்வர மாட்டார்கள். அது நோட்டீஸ் எழுதுவது.

அது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்காக வட்ட அளவில் வாயிற் கூட்டங்கள் நடத்துவது என்ற மாநில செயற்குழு முடிவு .


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கூட்டத்தில் சிறப்புரையாற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை அழைப்பதென முடிவு செய்திருந்தோம்.

ஆனால்.. நோட்டீஸ் எழுத வேண்டுமே.. தோழர்.பாலுச்சாமியிடம் ஓடினேன்.
அவர்... "வட்டக் கிளைக்கு எல்லாம் நான் எழுதித் தர முடியாது, வட்டத் தலைவர் நீயே சங்கத்தில இருக்கிற பழைய மாடல பாத்து எழுதிக்கோ "என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு வந்து பழைய நோட்டீஸை தேடி எடுத்து அப்படியே காப்பி அடித்தேன்.

அது A 4 சைஸில் நான்கு பக்கம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் தோழர்.பாலுச்சாமியிடம் காட்டி சரியாக இருக்கிறதா என்று கேட்டேன்.

அவர், அதை கையில் கூட வாங்கவில்லை.. போய் தோழர்.கிருஷ்ணகுமாரிடம் காட்டி அவர் பெயரை போடறதுக்கு பெர்மிசன் வாங்கிட்டு பிரஸ்ல கொடுத்து விடு என்றார்.


தோழர்.கிருஷ்ணகுமாரிடம் போய் நோட்டீஸை காட்டி அவர் பெயர் போட அனுமதி கேட்டேன்.

அவர் என் கையில் இருக்கும் பேப்பரை வாங்கி இது என்ன? என்று கேட்டார். ..

நோட்டீஸ் என்றேன்...

அவர் ஒன்றுமே சொல்லாமல் அதை அப்படியே கசக்கி கீழே போட்டுவிட்டு போயி வேற எழுதிட்டு வாங்க தோழர் என்றார்.

நான் கீழே கசக்கிபோட்ட பேப்பரை எடுக்கப் போனேன்.

ஆனால், அவர் அதை எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு சென்று புதிதாக எழுதினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் எழுத முடியவில்லை.

தோழர். கிருஷ்ணகுமாரிடம் கொண்டு போய் காட்டினேன். அவர் அதையும் கசக்கி கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வேறு எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.

இப்படியே ஐந்து முறை அலைய வைத்தார்.
ஐந்தாவது முறை நான் எழுதிக் கொண்டு போன நோட்டீஸ் 1 x 8 சைஸில் ஒரு பக்கம் இருந்தது.

அதைக் கையில் வாங்கிய அவர் நான் எழுதிய பக்கத்தை பேனாவால் அடித்து விட்டு அந்த பேப்பரின் பின் பக்கத்தில் 1 x 16 சைஸில் நோட்டீஸ் எழுதிக் கொடுத்தார்... 

➖➖➖➖➖➖➖➖
செப்- 6, 1990, அகில இந்திய வேலை நிறுத்தம்..நமக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்?
விளக்க வருகிறார் .... பாரதி கிருஷ்ணகுமார்


நாள் :      இடம்: மாவட்ட ஆட்சியரகம்,
எல்லாரும் வாங்க, விருதுநகர் கிளை.
➖➖➖➖➖➖➖➖

நான் அதை ஒரு மாதிரியாகப் பார்த்து இது போதுமா தோழரே.. என்று கேட்டேன்.

போய் இதை அச்சடித்து விநியோகம் செய்து விட்டு என்ன ரெஸ்பான்ஸ் ன்னு வந்து சொல்லுங்க என்றார்.

நோட்டீஸ் அளவோ உள்ளங்கை அளவு ...
அதில் இருப்பதோ ஆறே .. ஆறு வரிகள் மட்டும்.... இதை, யார் படிப்பார்கள் என்ற சந்தேகத்தோடு விநியோகித்தோம்.

என்ன ஆச்சரியம்..
அந்த நோட்டீஸை ஒருவர் கூட கீழே போடாமல் திரும்பத் திரும்ப படித்தார்கள்...

தோழர்.கிருஷ்ணகுமாரை பார்த்து நடந்ததைச் சொன்னோம். அப்போது சொன்னார்...
" தோழர்களே... நோட்டீ ஸோ.. புத்தகமோ கையில் எடுத்தால் கீழே வைக்காமல் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்... என்ன பேசப்போகிறார்கள் என்பதைக் கேட்க கூட்டத்திற்கு போக வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும்...

அதை விடுத்து பக்கம், பக்கமாக எழுதினால் ... சலிப்பு ஏற்பட்டு படிக்காமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் ...

ஒரு வேளை முழுவதுமாக படித்து முடித்தார்கள் என்றால்... இதைத் தானே பேசப் போகிறார்கள் என்று கூட்டத்திற்கே வரமாட்டார்கள்... என்றார்.


என்ன ஆச்சரியம்.. அன்றைய கூட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டீஸ் எழுத அன்று தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.

இரா.பாலசுப்பிரமணியன், முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

Friday, January 3, 2020

kumaragurubarar - bharathi krishnakumar - குமரகுருபரர் - பாரதி கிருஷ்ணகுமார்

என் மனம் கவர்ந்த படைப்பாளிகளில் ஒருவர் குமரகுருபரர்.அவரது நீதி நெறி விளக்கம் ஒரு ஒப்பற்ற படைப்பு . அதன் ஈற்றடிகளில் நான் மயங்கி இருக்கிறேன் . அவரைப் பற்றியும் ,அவரது படைப்புகள் பற்றியும் நண்பர்களிடம் நிறையப்பேசி இருக்கிறேன் . ஆனால் , ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என்பதாக மட்டுமே என்னை அறிந்தவர்களும் , அதாக மட்டுமே என்னை அறிமுகப்படுத்த விரும்பியவர்களும் ,கம்பனை, குமரகுருபரரை, அருட்பிரகாச வள்ளலாரை, கண்ணதாசனைப் பற்றி நான் பேச மாட்டேன் என்று தாங்களே நம்பினார்கள் .விரும்பினார்கள் . சிலர் அதை ஒரு செய்தியாகவே எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் . கம்பனைப் பற்றி பேசுமாறு இராஜபாளையம் கம்பன் கழகம் வாய்ப்பளித்தது. குமரகுருபரரைப் பற்றி பேசும் வாய்ப்பை திருப்பூர் தமிழ்ச் சங்கம் தந்தது. ஒரு தனிப்பட்ட உரையாடலில் நான் குமரகுருபரரின் பாடல் ஒன்றை மேற்கோளாகச் சொன்னதும் மகிழ்ந்து போனார் திருப்பூர் தமிழ்ச் சங்க செயலாளர், ஆடிட்டர் திரு. லோகநாதன். அதன் விளைவே இந்த உரை. திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.

https://youtu.be/ZAOVq5h6c7E
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .