Monday, January 30, 2017

Subramanian Ramakrishnan

Subramanian Ramakrishnan

Bharathi Krishnakumar. நன்றி
அருமை தோழர் எவ்வளவு நுனுக்கமான பேச்சு.
______________________
கம்பன் பெயரில் ஒரு பல்கலை.
புதுக்கோட்டையில் உருவாக வேண்டும்
பாரதி கிருஷ்ணகுமார் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜூலை 24-
கம்பன் பெயரில் புதுக்கோட்டையில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்றார் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன்கழக விழாவில் அவர் ஆற்றிய உரை:காப்பியங்கள் எழுதியவர்கள் யாரும் சொந்தக் கற்பனையிலிருந்து எழுதவில்லை. வரலாற்றின் பின்னணியில் இருந்துதான் எழுதியுள்ளனர். மாபெரும் மனிதர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பழக்கம் தமிழனுக்கு இருந்ததில்லை. வள்ளுவன், இளங்கோ, கம்பன் போன்ற மாபெரும் ஆளுமைகள் எப்பொழுது பிறந்தார்கள், எப்பொழுது மறைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.சிறந்த வாசிப்பாளனாகவும், மறுஉருவாக்கம் செய்யும்தொழில்நுட்பம் தெரிந்தவனாகவும் இருப்பவன் மட்டுமே மொழிபெயர்ப்பாளனாக முடியும். வள்ளுவனை அறியாமல் ஒருபோதும் கம்பன் ராமாயணத்தை படைத்து இருக்கமாட்டான். மூலநூலிலும் சிறந்தது என்ற தகுதியை கம்பராமாயணம் பெற்றிருக்கிறது. ராம காதையை ராமாவதாரம் என்று கம்பன் மாற்றியிருப்பான். அவதாரம் என்பது தெய்வ நிலையிலிருந்து அறிவும், அறியாமையும் மண்டிக்கிடக்கும் பூமிக்கு மனித உருவில் இறங்கி வருவது.வந்தது பரம்பொருள்தான் என்றாலும் மாய மானுக்கும் நல்ல மானுக்கும் வித்தியாசம் தெரியாதவனாகத்தான் ராமன் படைக்கப்பட்டிருக்கிறான். வால்மீகி ராமாயணத்தில் ராமனுக்கு வேறு மனைவிகளும் உண்டு. ஆனால், இங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உயர்த்திப்பிடிக்கிறான் கம்பன். இந்த இடத்திலிருந்துதான் ஒரு கதையை காப்பியமாக நகர்த்திச் செல்கிறான் கம்பன்.மூல மொழியில் இருந்ததை நீக்கி ராமனையும், சீதையையும் சைவமாக மாற்றுகிறான்.இங்கே கம்பன் வேறுமொழியில் மொழி பெயர்க்கப்படவில்லையே என சிலர் ஆதங்கப்பட்டனர். கம்பனை அவ்வளவு எளிதில் மொழி பெயர்த்துவிட முடியாது. அவ்வளவு அழகுணர்ச்சியும், சொற்செட்டும் நிரம்ப கதை, கவிதை, நாடகம் எனமூன்றையும் குழைத்துப்படைத்துள்ள ஒரு காப்பியத்தை வேற்று மொழியில்அப்படியே மொழிபெயர்த்துவிட முடியாது. கம்பனை பருக வேண்டுமானால் தமிழ்வழியாகத்தான் முடியும். அய்யோ என்ற அவச்சொல்லைக்கூட அழகுணர்ச்சியின் உச்சத்தில் வைத்து பாடியிருப்பான் கம்பன். அவனது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் விளையாடலாம். காப்பியத்தில் ஒருஆண் இன்னொரு ஆணின் அழகை புகழ்ந்தது கம்பனைத்தவிர வேறு யாரும் இல்லை.அனைத்து கதாபாத்திரங்களையும் தூய தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளதோடு, இதுவரை யாரும் பயன்படுத்தாத நுட்பங்களையும், சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறான்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குழந்தை திருமணத்திற்கு எதிராக கம்பன் இருந்திருக்கிறார். ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய வயது வந்த பிறகுதான் திருமணம் என்பதை உறுதிப்படுத்தி யிருக்கிறான். கண்களை நேருக்கு நேர் பார்த்து காதலிக்க விட்டு இருக்கிறான். இறைவனையே மனிதனாக படைத்து இருக்கிறான். முதலில் பார்த்தான். பிறகு கேட்டான் என ஒளிக்கு பிறகுதான் ஒலி வந்து சேரும்என்ற அறிவியல் நுட்பத்தை அப்போதே கம்பன் தந்திருக்கிறான்.எதிர் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பது கம்பனைத்தவிர வேறு யாரும் இல்லை. ராவணனை அவ்வளவு புகழ்ந்திருப்பான். சீதையை எதுவுமே செய்யாத ராவணனுக்கு இவ்வளவு கெட்ட பெயரா என பட்டிமன்றம் நடத்த வைத்திருக்கிறான். நீதிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதில் சற்றும் குறையாமல் நட்புக்கும், சகோதர பாசத்திற்கும் தந்திருப்பான்.கம்பனை சிலர் விமர்சனம் செய்யலாம். கதாபாத்திரங்கள் அறிவியலுக்கு புறம்பானது என்று கூறலாம். ராமாயணம் ஒரு கதை. கதையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அது படைப்பாளனின் உரிமை.அதிலிருந்து நமக்கு என்னகிடைக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். கம்பன் எளிதில் கடந்துவிடுகிற நதி அல்ல. அவன்அடர்ந்த பெருங்காடு. அதிலிருந்து எடுத்துக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.இங்கே ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். கம்பன் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் புதுக்கோட்டையில் உருவாக வேண்டும். அதில், கம்பன்தொடர்பான அத்தனை ஆய்வுகளையும், நூல்களையும், சொற்பொழிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும். வருகின்ற தலைமுறை கம்பன் குறித்த அத்தனை தரவுகளையும் இங்கே பெறலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு பாரதி கிருஷ்ணகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.