Monday, January 30, 2017

Pattabi Raman

Pattabi Raman
உணர்வோடு ஒட்டிய
பாரதி கிருஷ்ணகுமார்!
உணர்ச்சிகளை இசையாக்கலாம் - ஆனால் எழுத்தாக்குவது சிரமமான பணி!
உணர்ச்சி உருண்டையா நீட்டமா எனத் தெரிந்தால் அதை ஓவியமாக்கிப் பார்க்கலாம்.
பாரதி கிருஷ்ணகுமார் நேற்று சிங்கை தமிழ் எழுத்தாளர் கழக 'உரையரங்'கில் உணர்வுகளோடு ஒன்றிணைந்தார்..உணர்ச்சிக் குரலோனின் தொடக்கமே ஒரு அமைதியான ஆனால் ஆழமான பாய்ச்சல்! நற்கவிஞன் கிப்ரான் அதற்குக் கை கொடுத்தார்.
மொழி, சத்தியத்தின் குரல் என்ற அடி நாதத்தை உணர்த்த வந்த இப் பேச்சாளன், பெண் விடுதலை வேண்டும் - தமிழ் எங்கள் உயிர்- மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ எனக் கேட்ட தமிழ், வேறு யாருக்கும் இல்லாத் தமிழின் தனிச் சிறப்பு என கட்டுக் கடங்காக் குதிரையில் கடிவாளம் இல்லாமல் சவாரி செய்தான். கிப்ரானின் கவிச் சொற்களை உணர்வோடு எடுத்து இயம்பிய இவரின் தொடக்கமே அருமை! பெற்ற குழந்தையைப் பக்கத்தில் போட்டுக் கொண்டு இஷ்டம்போல்கட்டி மகிழும் தாய் போல, இவர் தன் ஆருயிர் கவிஞன் பாரதியை இடம் கிடைத்த போதெல்லாம் அள்ளி அணைத்து மகிழ்ந்தார்.
"இள வயது மரணம்-இறுதி ஊர்வலம்-மூதாட்டி ஒருத்தி சடலத்திற்கு ஒன்றிலிருந்து ஆறு வரை சொல்லி பூத் தெளிக்கிறாள் அதற்கு என்ன அர்த்தம்? இறந்த இளைஞனின் இளம் மனைவிக்கு ஆறு மாத சூல்! கூடி இருந்தோருக்கு அதை உணர்த்தி, வாழவிருக்கும் இளம் பெண்ணின் எதிர் காலத்தை அந்த சவ மேடையில் உருவாக்குகிறாள். இது தமிழ்ப் பரம்பரைக்கே உள்ள - தமிழுக்கே உள்ள தனி அக்கறை!"
இறுதியில் சொல்லி கிருஷ்ணகுமார் விடை பெற்ற பேச்சுக் காட்சி இது ! அதைத் தான் நான் முதலாவதாக ஆக்குகிறேன். பாரதி கிருஷ்ணகுமாருக்கு ஆரம்பமும், நடுவும், இறுதியும் ஒன்று தான். உணர்ச்சி ஓலங்களை இடம் பார்த்தல்ல- இடைவிடாது எழுப்பத தெரிந்தவர். அவை தன்- பிரவாகத்தில் தானாக வந்ததா? எதுவானாலும் அது மிகச் சிறந்த அப்பியாசம்!
மண் பயனுற வேண்டும் என்பது தான் தலைப்பு. ' 'கடலலை வேகத்தில் கடலையழித்த தமிழ்' என்றெல்லாம் பேசியவர் இந்த பாரதி. இவர் சொல்கிறார்:
மொழியால் மண் பயனுற்றது.மொழி இருந்ததால் தான் உலகின் அண்டசராசரங்களுக்கும் பெயர்கள் கிடைத்தன.மொழி இல்லாத ஒரே காரணத்தால் தான் விலங்கினங்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றன. நாம் மட்டுமே ஆறறிவு கண்டோம்.
இன்று தாய் மொழியை (தவறில்லாமல்) எழுதவும், படிக்கவும் புதிய தலைமுறை தயாராக வேண்டும். வல்லினமெல்லின வேறுபாடுகளை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறையை மொழிச் சுத்தமாகத் தயாரிக்கும் எழுத்தாளர் கழகங்கள் நமக்கு நிறையத் தேவை.
இறைவனையே பல்லாண்டு வாழ்க என்ற மொழி தமிழ் மட்டுமே. இறைவனை எழுத்தில் படைத்தவன் கம்பன். ராமாயணப் பாத்திரங்களை வால்மீகியிலிருந்தும் மாறுபட்ட பாத்திரங்களை கம்பன் நிர்ணயிக்கிறான்.ராமனை சைவனா, அசைவனா என்று அவன்தான் முடிவு எடுக்கிறான்.
இல்லறத்தையும் துறவறத்தையும் ஒரு சேரப் பாடியது தமிழ் தான். ஈடு இணையற்ற திருக்குறளுக்கு உலகில் வேறென்ன இருக்கிறது!
அறம் பேசிய மொழி-பூமியை வணங்கிய மொழி-உலகை நினைத்த மொழி ...தமிழ்.. தமிழ்!
ஆற்று நீர் கடலுக்குச் செல்வதை அவசியப்பப்டுத்தியவர்கள் நாம். இன்றேல் உப்புக் குவியலில் கடல் வாழ் இனங்கள் செத்து மடிந்திருக்குமே!
வானம் சுருங்கினால் தானம் சுருங்கும்!
கொல்லையிலிருந்த மாமரம் என் அம்மா தின்று போட்ட விதையின் உருவாக்கம்-ஆகவே இந்த மரம் என் அக்காவாகிறாள். நம் காதலை சகோதரியின் பார்வையில் நடத்த மாட்டேன் எனச சொல்லும் சங்க காலப் பெண்ணை-பாடலை- இங்கே நடமாட விடுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
பூமி வெப்பம் உலகை பருவக் கோளாறுகளில் சிக்க வைக்கக் காத்திருக்கிறது. அதைக் காக்க வேண்டும்.
தூக்கணாங் குருவிகள் தூங்காப் பணி செய்து கட்டும் கூடுகளில் பாம்புகள் போவதில்லை. குஞ்சினங்கள் கூட்டில் தடுமாறாமல் வசிக்க, மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து, விளக்காக இருத்தி வைக்கும் ஆற்றல் குருவிக்கு!.
ஆமைகளின் பிரசவ காலத்தைப் பார்த்தறிந்து, கடலோடிகள் தங்கள் திசை நோக்கிய காலம் நம்முடையாதாக இருந்தது. கலங்களில் திரவியம் சேர்க்க சென்றபோது தேவாங்குகளை எடுத்துச் சென்றவன் தமிழன். தேவாங்குகளின் திசைத் திருப்புகளை வைத்துப் பல காதங்களைக் கடந்தவன் நம் மூத்த பரம்பரை.
வைகை மணலை வழிபாட்டுக்கு எடுத்து வரச் செய்யும் தாய், வேலை முடிந்ததும் அம மண்ணை மீண்டும் ஆற்றிலே கிடக்கச் செய்கிறாள்..ஏன்? நதி நீர்த் தாயின் மேலாடை அந்த மண்.
மண்ணும், மக்களும் வாழ, மொழி, சத்தியத்தின் குரலாக விளங்க வேண்டும்.
நேற்றைய உரையரங்கத்தில் பேச்சுக் கலைஞன் பாரதி கிருஷ்ணகுமார், உணர்ச்சிக் கொப்பளிப்புகளுடன் மொழியைத் தொட்டார்-இனத்தைத் தொட்டார்-இன்றைய நம்மையும் தொட்டார். --ஏ.பி.ராமன்.
குறிப்பு: பாரதி கிருஷ்ணகுமாரை எப்படித் தொடுவீர்கள் என்று நேற்றிலிருந்து என்னிடம் என் அன்பிற்குரிய நண்பர்கள் ஆர்வமுடன் கேட்ட வண்ணம் இருந்தனர். 'காத்திருக்கிறோம்' எனப் பலர் சொன்னதும் உண்டு. அவர் சொன்னதைத் தான் நான் எடுத்துச் சொல்லப் போகிறேன்/ நானா மூளையைக் குடைந்து சொற் சிலம்பங்களை வீசப் போகிறேன்?ஆனாலும் யோசிக்க வைத்தார். அதனால் தான் நேற்றிரவு அதை ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாகத் தூங்கி விட்டேன்.-
- ஏ.பி.ஆர்.

No comments:

Post a Comment