எங்கள் கல்லூரி வாழ்க்கையில் அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த நண்பர்கள் சேர்ந்து "கவியகம்" என்கிற இலக்கிய அமைப்பை உருவாக்கினோம். அது பாரதி கவிதா மண்டலம் என்கிற பெயரிலும் அறியப்பட்டது.
அதன் உறுப்பினர்களாகிய நாங்களே அனைத்துக் கல்லூரிப் பேச்சுப்போட்டிகளில் பங்கு பெற்றோம் .கல்லூரி முடிந்தபிறகு கவியரங்குகளை நடத்தினோம் .மிகப் பெரும்பான்மையான கவியகத்தின் நிகழ்ச்சிகளைத் துவக்கத்தில், மதுரை காக்காத் தோப்புத் தெருவிற்கு எதிரே இருக்கும் தியாசபிகல் சொசைட்டி கட்டிடத்தின் முகப்பில் தான் நடத்தினோம் . பிறகு பங்கேற்போர் எண்ணிக்கை அதிகமானதும் ராஜாஜி பூங்காவுக்கு இடம் மாறினோம் .
மதுரையில் தல்லாகுளம் நாற்சந்தியில் இருந்து கிழக்காகப் போனால் அந்தச் சாலையின் இறுதியில் வலதுபுறத்தில் ராஜாஜி பூங்கா .அந்தச்சாலை எனக்கு எப்போதும் இப்போதும் அழகும் பொலிவும் ததும்பும் சாலை . என் காதல் நினைவுகளை அந்தச் சாலையில் இருக்கும் எல்லா மரங்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன் . அவைகளின் நிழலுக்கு எல்லையற்ற குளுமை கூடியது அதற்குப்பிறகு தான் .
சாலையின் இறுதியில் காந்தி அருங்காட்சியகம்
மதுரையை ஆண்ட அரசி மங்கம்மாளின் அரண்மனை அது . அதைத்தான் காந்தி மியுஸியம் ஆக்கி இருக்கிறார்கள் .
பூங்காக் கவியரங்கம் என்று தலைப்பிட்டுக் கவியரங்கம் நடத்த ஆரம்பித்தோம் . பத்துப் பதினைந்து பேரோடு துவங்கினோம் . ஆனால் சில வாரங்களிலேயே ஐம்பது அறுபது பேர் எனக் கூட்டம் நெரிய ஆரம்பித்தது .
உளவுப்பிரிவு போலீசாருக்கு உறுத்தி அவர்கள் பூங்காவின் காவலர்களுக்குச் சொல்லிக் கவியரங்குகளை நடத்த அனுமதிக்கவில்லை .
மதுரைக்குள் நடந்த அனைத்து இலக்கிய விழாக்களிலும் பங்குபெற்றுக் களித்தோம் அல்லது கலைத்தோம் .
கல்லூரிகளில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கலக்கினோம் .
எல்லோரும் கவிஞர்களாக இருந்தோம் என்பது சந்தோசமான ஆச்சரியம் .
கோ .மணிவண்ணன் , மணியன் , திருமலைராஜன் , அ.முகமது இக்பால் , உஸ்மான் அலி , கிளாடியஸ் டேவிட் குலோத்துங்கன் , சோமாஸ்கந்தமூர்த்தி, கிருஷ்ணகுமார் ஆகிய நான் என நாங்கள் தான் கவியகத்தின் முதன்மைப் பொறுப்பாளர்கள் . அமைப்பு நடத்திய இலக்கிய நிகழ்வுகளின் எல்லாப் பணிகளையும் நாங்களே இணைந்து செய்தோம் .இதுவன்றி பலப்பல நண்பர்கள் எங்களோடு இணைந்து பயணித்தார்கள் .
பாரதியில் இணைந்தோம் .
பாரதியால் இணைந்தோம் .
இயற்கை எட்டுப்பேரையும் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது .கடந்த 2018 ஆம் ஆண்டு , நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எல்லோரும் மதுரையில் சந்தித்தோம் .
திருமலை மருத்துவமனையில் இருந்தான் ... அதனால் வரவில்லை .
கிளாடியஸ் எங்கோ இங்கிலாந்தில் இருக்கிறான் . தொடர்பு கொள்ள இயலவில்லை .
இக்பால் வருவதாகச் சொன்னான் . ஆனால் வர இயலவில்லை . மற்ற எல்லோரும் வந்திருந்தார்கள் .
நாங்கள் அமைப்பைத் துவங்கிய பிறகு எங்களோடு இணைந்து இயங்கிய எங்களது இளவல்கள் ராஜகோபால் , பாலு , இராச .மதிவாணன் , இளங்கோவன் தாயுமானவர் , ஆகியோரும் சந்திப்புக்கு வந்திருந்தார்கள் .
அந்தக் காலத்திலயே எங்களை அறிந்திருந்த எழுத்தாளர் திரு சுரேஷ்குமார் இந்திரஜித்தும் அந்த சந்திப்புக்கு வந்து சிறப்பித்தார் .
ஒருநாள் முழுவதும் ஒன்றாக இருந்து உண்டு களித்துப் பிரிந்தோம் .
இவ்வளவையும் இப்போது ஏன் சொல்லுகிறேன் என்றால் .... நானும் கவிஞனாக இருந்தேன் என்பதை உங்களுக்குச் சொல்லத்தான் .
3 comments:
//இயற்கை எட்டுப்பேரையும் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது .கடந்த 2018 ஆம் ஆண்டு , நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எல்லோரும் மதுரையில் சந்தித்தோம் //
உண்மையிலே வாழ்த்துக்கள் அது சரி.. நாற்பத்தைந்து ஆண்டுகளில் நீங்கள் அனைவரும் எழுதிய கவிதைகளில் ஆளுக்கொரு பத்து எடுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே?
//இயற்கை எட்டுப்பேரையும் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது .கடந்த 2018 ஆம் ஆண்டு , நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எல்லோரும் மதுரையில் சந்தித்தோம் //
உண்மையிலே வாழ்த்துக்கள் அது சரி.. நாற்பத்தைந்து ஆண்டுகளில் நீங்கள் அனைவரும் எழுதிய கவிதைகளில் ஆளுக்கொரு பத்து எடுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே?
ஆஹா..அருமை.நானும் மதுரைதான் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி...(இதில் இந்திரஜித் மட்டும் எனக்குத் தெரியும் )
Post a Comment