அப்போதும் அந்த அரங்கில் முத்துக்குமார் இருந்தது எனக்குத் தெரியாது.
சுஜாதாவைப் பேச அழைத்தார்கள்.
சுஜாதா எப்போதும் மென்மையான குரலில் பேசுகிற பழக்கம் உடையவர். தனக்குப் பேசவராது என்று நம்புகிற சிலரில் அவரும் ஒருவர். ஆனால் நன்றாகப் பேசுகிறவர் தான் என்பது எனது எண்ணம்.நன்கு சிந்திக்கிற எல்லோருமே நன்கு பேசி விடவும் முடியும். இது அசலான உண்மை.
உடல் மொழியோடு , ஏற்ற இறக்கங்களோடு பேசுகிறவர்கள் தான் சிறந்த பேச்சாளர்கள் என்றொரு மூட நம்பிக்கைத் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவுகிறது என்பதை நானறிவேன்.சொல்லும் திறன் மட்டுமே சிறந்த பேச்சாகி விடாது . உடல் மொழியில் எந்த மாற்றமும் இல்லாது, அளவான பாவம் சேர்த்து அற்புதமாகப் பேசும் பலரை நானறிவேன் .
சுஜாதா பேச ஆரம்பித்தார். தனது புதுடில்லி வாழ்வும் அதனால் தனக்குக் கணையாழியோடு நிகழ்ந்த அறிமுகம் உறவு என்று விரிவாகப் பேச ஆரம்பித்தார் . தனக்கு கணையாழி தந்த சுதந்திரம் தான் தனது தொடக்ககால எழுத்துக்குப் பெரும் பலம் சேர்த்தது என்றார். ஸ்ரீரெங்கம் . எஸ் . ஆர் என்ற பெயரில் கணையாழியில் தான் எழுதிவந்த கடைசிப்பக்கம் குறித்துப் பேசினார். எதைப் பற்றி வேண்டும் என்றாலும் தான் எழுதலாம் என்பது தனக்கு , தனது ஆரம்பகால எழுத்துகளுக்குப் பேருதவி செய்ததைப் பற்றி பெருமிதமும் நன்றியும் ததும்பக் குறிப்பிட்டார் .
இந்தத் தருணத்தில் உங்களோடு நான் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . பொதுவாக ஒரு பத்திரிகையை வாங்குகிறவர்கள் அதை முதல் பக்கத்தில் இருந்துதான் படித்துக் கொண்டு போவார்கள். அது தான் பொது இயல்பு . நானெல்லாம் அப்படித்தான். நானறிந்த பலரும் அப்படித்தான். மிகச் சில விதிவிலக்குகள் உண்டு. முதல் பக்கத்தைப் பார்த்துவிட்டு உடனே தாங்கள் தொடர்ந்து படிக்கும் தொடர்/ பகுதி இருக்கும் பக்கத்திற்கு ஓடுகிற வாசகர்கள் உண்டு . ஆனால் கணையாழி வந்தால் முதலில் படிப்பது கடைசிப்பக்கம் தான் என்ற போதையை தன் எழுத்தால் உருவாக்கி வைத்திருந்தார் சுஜாதா. மிகப் பரபரப்பாக இலக்கிய வாசகர்கள் பேசுகிற பகுதியாக கடைசிப்பக்கம் இருந்தது. சுஜாதாவை நேசிக்காதவர்கள் கூட ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை அது .
கடைசிப்பக்கம் பற்றி பேசிவிட்டு கவிதைகளின் பக்கம் வந்தார் சுஜாதா . புதுக்கவிதைகளுக்குக் கணையாழி உருவாக்கித் தந்த பரந்த மேடை பற்றி விரிவாகப் பேசினார். தமிழில் எழுதிக்கொண்டு இருக்கும் சில மிக முக்கியமான படைப்பாளிகளது படைப்புகள் கனையாழியில் இடம் பெற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மிக முக்கியமாக, பல நூற்றுக்கணக்கான இளம் படைப்பாளிகளுக்கு கணையாழி இடம் தந்து சிறப்பித்ததைப் பெரும் பங்களிப்பு என்று சொன்னார் . உதாரணமாக அந்த மாதம் கணையாழியில் வந்த ஒரு கவிஞரின் கவிதை தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் , தன் மனதை அசைத்த கவிதை என்றும் குறிப்பிட்டார் . கையில் இருந்த கணையாழியைப் புரட்டி அந்தக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் . அதுவரை மெல்லிய குரலில் பேசிக்கொண்டு இருந்த சுஜாதாவின் குரல் உயர்ந்தது. விடை தெரிந்த கேள்விக்குச் சொல்லுகிற பதிலை உரக்கச் சொல்லுவது போல, தன் குழந்தையின் பெருமையை மற்றவர்களுக்குச் சொல்லுகிறபோது பெருமிதம் கொள்ளுகிற ஒரு தாயின் குரல் உயர்வது போல .. சுஜாதாவின் குரல் மேலே ஏறி வந்தது. அந்த அரங்கில் இருந்த எல்லோருக்கும் கேட்கிற அளவுக்குக் குரல் விரிந்து வந்தது. அவருக்கு ஒன்றும் மெல்லிய குரல் இல்லை என்று அவரே உணர்ந்த தருணம் அது ... அதன் தலைப்பைத் துல்லியமாக வாசித்தார் .
இது தான் அந்தக் கவிதை ...
தூர்
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”
அந்தக் கவிதையை வாசித்துவிட்டுச் சொன்னார். கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன். இதை எழுதியவர் யாரென்று எனக்குத் தெரியாது . நா . முத்துக்குமார் என்பவர் எழுதி இருக்கிறார் என்றார் .
கவிதையை சுஜாதா வாசித்து முடித்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பிக் கவிதையைக் கொண்டாடியது .அதே கணத்தில் அரங்கின் மையப் பகுதியில் ஏதோ சலசலப்பு . வலது கையை உயர்த்தியபடி மெலிந்த சற்றே உயரமான ஒரு இளைஞன் கூட்டத்திற்குள் எழுந்து நின்றான். எவர் என்று தெரியவில்லை . கூட்டத்தில் இருந்து ஒரு குரல் " அவர் தான் முத்துக்குமார் " என்றது . மொத்த அரங்கமும் அவனைத் தான் பார்த்தது . கவிதைக்குத் தந்ததை விடவும் கூடுதல் கரவொலியும் அங்கீகாரமும் தந்து கவிஞனைக் கொண்டாடியது கூட்டம்.
அந்தக் கவிதையை நன் ஏற்கெனவே வாசித்து அதன் சிறப்பை உணர்ந்து இருந்தேன் . எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . கவிதையும் கவிஞனும் ஒருசேரத் தரிசனம் காட்டுவது எப்போதும் எல்லோருக்கும் வாய்க்கும் வரமல்ல .
சுஜாதா அவனை மேடைக்கு அழைத்தார் .நான் அமர்ந்து இருந்த பக்கமாக மேடை ஏறி வந்தான் நா . முத்துக்குமார் . கொஞ்சம் சுருண்ட ஆனால் படிந்த தலைமுடி . மெலிந்த தேகம் . ஒட்டிய கன்னங்கள் . எதையும் கூர்ந்து பார்க்காமல் அலைந்து திரியும் கண்கள் ஒரு பத்து நாட்கள் சவரம் செய்யாத இளந்தாடி .
என் இருக்கையில் இருந்து எழுந்து அவனிடம் என் கையை நீட்டினேன். இருவரும் கை குலுக்கிக் கொண்டோம் . அவனது கரம் இளம் சூட்டோடு இருந்தது . பதட்டமில்லாமல் இருந்தான் . அது தான் நான் அவனை முதலில் பார்த்தது .
அரங்கம் குதூகலமாய் இருந்தது . கூட்டத்தில் இருந்து ஒருவர்
அந்தக் கவிதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகச் சொன்னார் .
பணம் கொடுத்தவரே மேடைக்கு வந்தாரா அல்லது பணம் மட்டும்
மேடைக்கு வந்ததா என்று தெரியவில்லை .
நான் அவனை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன் . யாரோ
அவனுக்கு அந்த ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்கள் . எல்லாமே
நூறு ரூபாய் நோட்டுகள் என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது .
சிறிய புன்னகையோடு அந்தப் பணத்தை வாங்கிய முத்துக்குமார்
அங்கேயே மேடையிலேயே அந்தப் பணத்தை எண்ண
ஆரம்பித்தான். எனக்கு சங்கடமாகி விட்டது .இந்தப் பையன்
இங்கேயே இந்தப் பணத்தை எண்ணுவதைத் தவிர்த்து இருக்கலாமே
என்று எண்ணிக் கொண்டேன் .மீண்டும் எண்ண ஆரம்பித்தான் .
எனக்கு அதிர்ச்சியாகி விட்டது ....
ஆனால்...
மற்றது ... பிறகு ...
-பாரதி கிருஷ்ணகுமார்
No comments:
Post a Comment