Monday, April 27, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 06


என்னோடு வந்தது யார் ?

பள்ளிகூடத்தில் நடந்தது என்ன ? 


எங்களோடு நிகழ்ச்சியில் பேசும் பாலாவைப் போய்  நான் அழைத்ததும் அவன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்தான் . சௌபாவுக்குத் தகவல் சொல்லப் போகிறேன் என்றதும், தானும் என்னுடன் வருவதாகச் சொன்னான் பாலா .என் சைக்கிளில் பாலா முன்புறம் அமர்ந்துகொள்ள சௌபாவைப் பார்க்கப்போனோம். 

சௌபா அப்போது நகராட்சிப் பள்ளி ஒன்றில் எஸ் எஸ் எல் சி மாணவன் .அப்போதெல்லாம் பள்ளிக்குள் நண்பர்களைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் . பாலா அண்ணன் ஆனான் . நான் தாய்மாமன் ஆனேன். 



நாங்கள் போய்த் தலைமைஆசிரியரைப் பார்த்து அனுமதிபெற்று அவனது வருகைக்காகக் காத்திருந்தோம் . பள்ளியின் வாசலைக் கடந்ததும் இருக்கிற திறந்தவெளியில் , கொதிக்கிற வெயிலில் நானும் பாலாவும் காத்திருந்தோம். காக்கி அரைக்கால் டவுசரோடும் , வெள்ளைச் சட்டையோடும் வாயெல்லாம் பல்லாக , அவனது வழக்கமான இளம் நாட்டிய நடையோடு சௌபா வந்தான் .


செங்கோட்டை நிகழ்ச்சி பற்றிச் சொன்னோம் . எங்கே எப்போது எத்தனை மணிக்கு வருவது என்பதெல்லாம் பாலா அவனுக்குக் குழந்தைக்குச் சொல்லுவது மாதிரி சொன்னான். செங்கோட்டைக்கு எதில போறோம் என்று கேட்டான் . இரயிலில் என்றேன் . சொல்ல முடியாத மகிழ்ச்சி அவனுக்கு ...


தலைப்பு என்னவென்று கேட்டான் . " மனித குல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏற்ற வழிமுறை வன்முறையா ? மென்முறையா ? " 

சூப்பர் என்றான் . நான் எந்தத் தலைப்பில் பேசுகிறேன் என்று கேட்டான். வன்முறையே என்கிற அணியில் பேசவேண்டும் என்றேன்.


இப்ப நான் உங்ககூட வந்துறவா என்றான் . இல்ல நாங்க வேற இடத்துக்குப் போறோம், நீ திரும்ப கிளாசுக்குப் போ என்றேன் . நீங்க எங்க வேணா போங்க என்னைய இப்ப கூட்டிட்டுப் போயிருங்க என்று கெஞ்ச ஆரம்பித்தான் . பாலாவுக்கு அதில் சம்மதமில்லை . நானும் ஒப்புக்கொள்ளவில்லை. 


செங்கோட்டைக்குப் போவதை விடவும் , அப்போதைக்குத் திரும்ப வகுப்புக்குப் போவது அவனுக்குப் பெரும் துன்பமாகி விட்டது. எப்படி எப்படியோ பேசிப் பார்த்தான். நாங்கள் இருவரும் சம்மதிக்கவில்லை." இந்தா நீ கிளாசுக்குப்போ... அண்ணே நம்ம போவோம்ணே" என்றான் பாலா.நாங்கள் புறப்பட்டோம். மிகுந்த கவலையோடு திரும்பிப் போனான் சௌபா. 


பிறகான நாட்களில் அதைப்பற்றி பேசுகிறபோது சௌபா புன்னகையோடும் பொய்யான கோபத்தோடும் சொல்லுவான் " நீங்க வந்து கூப்புட்டதும் அவ்வளவு சந்தோசமாயிருச்சு ...ஆஹா நம்மளைக் கூட்டிட்டு போயிருவானுங்கன்னு தெம்பா வந்தேன்  நீச்ச தெரியாதவனக் கரை ஏத்தீட்டு அவன் மூச்சு வாங்கிட்டு இருக்கும்போதே , திரும்பத் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுப்போன மாதிரித் திரும்ப போகச் சொன்னதும் உசுரே போயுருச்சு ... நொந்து போய் கிளாஸுக்குப் போனா அந்த வாத்தியார் நீ வீட்டுக்குப் போகலையான்னு கேக்குறான் ... அவன் நம்பிக்கையும் போயி என் நம்பிக்கையும் போயி" சொல்லிவிட்டு அதிரச் சிரித்துக்கொண்டே இருப்பான்.


அதவிட போனவங்க மறுபடியும் திரும்ப வந்தீங்க .. அது நினைவுல இருக்கா " என்று கேட்டான் சௌபா. 


நல்லா நெனவுல இருக்கு என்பேன் நான் சிரித்தபடியே  


இதைப் பலமுறை பேசிச் சிரித்து மகிழ்ந்தோம் என்பதால் அப்படியே சித்திரமாக நினைவில் வரையப்பட்டு விட்டது. 


அவன் சொன்னது போலவே நாங்கள் மறுபடியும் திரும்பப் போனோம். ஏனெனில்  ...வெளியில் வந்ததும் பாலா என்னிடத்தில் அண்ணே அவன் கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லாம வந்துட்டோண்ணே என்றான் . என்ன பாலா என்று திகைப்புடன் நான் கேட்டேன் . அவன் செங்கோட்டைக்கு வரும்போது அரை டவுசர் போடாமப் பேண்ட் போட்டுட்டு வரணும்ல ... அதச் சொல்லாம வந்துட்டோம் என்றான் . 


திரும்பவும் போய் அவனை அழைத்தோம் .. சௌபாவுக்கோ நாங்கள் மனம் மாறி அவனை அழைத்துப் போக வந்திருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் உள்ளே போனதும் பாலா விவரம் சொன்னதும் சௌபாவின் முகம் மாறிவிட்டது . 


என்கிட்டே பேண்ட்ஸ் இல்லையே என்றான் .


அதெல்லாம் தெரியாது .. யார் கிட்டயாவது கடன் வாங்கிட்டு வா .. இல்ல வாடகைக்கு எடுத்துட்டு வா .. அதுக்குத்தனியா காசு குடுத்துருவோம் என்றான் பாலா ... என்னண்ணே .. சரிதான என்றான் பாலா . நான் ஆமோதித்தேன் . இருவரும் உடனே புறப்பட்டு விட்டோம்.


செங்கோட்டை போகும் நாள் வந்தது. நான் சௌபா பாலா ஜெயவீரபாண்டியன், கனகசபாபதி, சங்கரநாராயணன் என்று எல்லோரும் மதுரை ரயில்நிலையத்தில் சந்தித்தோம். செங்கோட்டைப் பாசஞ்சரில் பயணம் .

சங்கர் தனது பொறுப்பில் எங்களை அழைத்துச் சென்றார் . அவரோடு இன்னும் இரண்டு ரயில்வே ஊழியர்கள் .

இரயிலில் ஏறியதும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை எங்களிடத்தில் தந்தார் சங்கர். எல்லோருக்கும் அதிர்ச்சி . எல்லாருடைய பெயருக்குப் பின்னாலும் BA BSc BL MA ஏகப்பட்ட பட்டங்கள் . போட்டிருந்த பட்டத்திற்கு தக்கப் படித்தவன் பாலா மட்டும் தான். சௌபாவின் பெயருக்குப் பின்னால் BA ... என் பெயருக்குப் பின்னால் MA... என்ன இருந்தாலும் நடுவர் இல்லையா ? 


"உண்மையில்" படித்தவனுக்குத்தான் கஷ்டம். அவன் படித்ததைத் தவிர வேறு எதையும் போட்டுக்கொள்ள முடியாது . படிக்காதவனுக்கு அந்தச் சிரமமே இல்லை. நான் பிறகு முறையாகப் படித்து பட்டம் வாங்குகிறவரை என் படிப்பும் பட்டமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மன விலாசத்தைப் பொறுத்தது .


இப்படி மெத்தப் படித்த மேதாவிகளாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.


எங்களை வரவேற்க ரயில்நிலையத்திற்கே சில தோழர்களை அனுப்பியும் இருந்தார் பரமசிவம்.மழை பெய்து மண்வாசனை பரவி இருக்க ,மப்பும்மந்தாரமுமாய் செங்கோட்டை மனதைக் கவர்ந்தது.


இரயிலை விட்டு இறங்கி தோழர் பரமசிவத்தின் இல்லத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள்.போகிற வழியில் தேநீர் அருந்த ஒரு கடைக்கு அழைத்துப் போனார்கள் . ஒரு பெரிய கண்ணாடி கிளாஸ் நிறைய தண்ணீரும் கொஞ்சம் பாலும் கலந்த கேரளத்துத் தேநீரை முதன்முறையாகப் பருகினோம்.குடிக்கக் குடிக்க குறையாமல் வந்துகொண்டே இருந்தது.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பசிக்காது என்றான் சௌபா. மதுரைத் தேநீர் அப்படி இல்லை.அடர்த்தியாக,அளவாக,செறிவாக நிறைவாக இருக்கும்.தேநீர் அருந்தியதும் சிகரெட் வாங்கிக்கொடுத்தார்கள்.நடுவரையும் நடுவரோடு வந்த அவர் நண்பரையும் தவிர வேறு யாருக்கும் புகைக்கும் பழக்கம் இல்லை.


ஒரு சிறு பாலத்தைக் கடந்து போகிற போது பாலத்தில் அமர்ந்திருந்த ஒரு வயசாளி எங்களை அழைக்க வந்திருந்தவரைப் பார்த்து "ஏலே... பார்ட்டில்லாம் யாரு ?"என்று பீடி குடித்த படியே அக்கறையோடு விசாரித்தார். "எல்லாம் பட்டிமண்டபம் பேச வந்துருக்காங்க !..." என்றார் இவர்.


"இவனுங்களா? அம்புட்டும் சின்னப் பயலுகளா இருக்கானுக ..."என்று பலங்கொண்ட மட்டும் பீடிப்புகைப் புரையேற சிரித்தார்.


இரவு பட்டிமண்டபத்திற்கு ஊரே திரண்டிருந்தது.


சின்னப் பயலுகள் செங்கோட்டை மண்ணை என்ன செய்தார்கள் ? 


அப்புறம் சொல்லுகிறேன் ...


-பாரதி கிருஷ்ணகுமார்

1 comment:

drJeeva said...

extraordinary writeup

Post a Comment