Saturday, April 11, 2020

ஒரு கனவு கரையேறுகிறது - பாரதி கிருஷ்ணகுமார்

ஏப்ரல் எட்டாம் தேதி பிற்பகல் தனிமை குறித்து ஒரு சிறிய பதிவை முகநூலில் எனது பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். நிறைய எதிர் வினைகள். யாருடைய கருத்துடனும் நான் முரண்படவில்லை . அவரவர்கள் தங்கள் தங்கள் அனுபவம் புரிதல் சார்ந்து எழுதி இருந்தார்கள். எனவே அதில் முரண்பட ஏதுமில்லை . 

திரு.குமாரதாசன் கந்தையா எழுதிய ஒரு சிறு பதிவு நீண்ட உரையாடல் ஆகி, அந்த உரையாடலே,தனிப் பதிவாக வந்தது. அதனைத் தனிப் பதிவாகப் போடுமாறு என் நண்பர் சென்னைத் தமிழன் தந்த யோசனையால் அது நிகழ்ந்தது. அந்த உரையாடலில் ஜெயகாந்தன் இடம் பெற்றதும், அன்று தான் ஜெயகாந்தன் நினைவு நாள் என்பதும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் நிகழ்ந்தவை.இயல்பாக நடக்கும் எதற்கும் ஒரு அழகு,வசீகரம் தானாகவே கூடிவிடுகிறது.


அப்படித் திட்டமிடாமல் நடந்த இன்னொரு அழகு பற்றி இதனை எழுதுகிறேன். என் பதிவிற்கு எதிர் வினையாய் தனிமை பற்றி தான் எழுதிய ஒரு கவிதையைத் தம்பி திருக்குமரன் பதிவிட்டு இருந்தார்.
பொருளும் ஓசையும் பிணைந்த மரபுக்கவிதை.கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள் சிலர் . பொய் ஒருபோதும் அழகானதில்லை. உண்மை தான் அழகு. அலங்காரம் ஏதும் இன்றியே மிளிரும் அழகு உண்மை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தமும் சாரமும் இணைந்து வாசித்த கவிதை. ஓசையும் பொருளும் கலந்து கலந்து பிரிக்க இயலாது இயங்குவதே கவிதை . இரட்டை நாதஸ்வர இசை போலக் கலந்து வந்த கவிதை. சாரையும் நாகமுமாய்ப் பிணைந்து வந்த கவிதை. வாசிக்கும்போது எல்லாப் புலன்களையும் இன்புறச் செய்த கவிதை . செவி நுகர் கனியென வாய்த்த கவிதை. அன்பெனும் தனிமை என்பது கவிதைக்கான தலைப்பு.

இவையெல்லாம் அந்தக் கவிதை எனக்குத்தந்த மெய்ப்பாடுகள் . மேனி சிலிர்த்து மெய் விதிர்த்து நான் பெற்ற அனுபவம் இது. ஒரு சொல் கூட மிகையாகாது. அந்தக் கவிதையினை நீங்கள் வாசிக்கிறபோது அது உங்களுக்கு எந்தப் பரவசத்தையும் தராது போகலாம் .எதற்கு எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனது ரசனையை நீங்கள் நிந்திக்கலாம். அல்லது என்னிலும் பெரும் வாசிப்பு இன்பத்தை இந்தக் கவிதை உங்களுக்குத் தரலாம். 

மழை எல்லோருக்கும் ஒன்று தான் . ஆனால் நிலமும் கலமும் எல்லோருக்கும் வேறு வேறு தானே . 

என் உணர்வுகளுக்கு கவிதை மட்டுமல்லாது கவிஞனும் காரணமாக இருக்கலாம்.இந்தக் கவிதையை எழுதிய திருக்குமரன் திருச்செல்வத்தை நான் சந்தித்தது இல்லை. நான்கைந்து முறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். ஈழத் தமிழன். விடுதலைப்போரில் பங்குபெற்ற போராளி.முன்னாள் போராளி என்று சொல்ல என் எழுத்து இடம் கொடுக்கவில்லை.கவிஞன் . எழுத்தாளன் . ஊடகத்துறையில் பணியாற்றியவன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவன் . சூழலியலில் அக்கறை கொண்டவன்.
ஐந்து நூல்கள் எழுதியவன் .

  • திருக்குமரன் கவிதைகள்(கரிகணன்      பதிப்பகம் 2004)
  • விழுங்கப்பட்ட விதைகள்(முதல் பதிப்பு 2011:உயிரெழுத்துப் பதிப்பகம் , இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்) 


  • தனித்திருத்தல்(உயிரெழுத்துப் பதிப்பகம் 2014)
  • விடைபெறும் வேளை(யாவரும் பதிப்பகம் 2019)
  • சேதுக்கால்வாய்த் திட்டம்- இராணுவ , அரசியல் , பொருளாதார சூழலியல் நோக்கு ஆய்வு நூல் (பிரம்மா பதிப்பகம் 2006).


இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு ( அதை இறுதி யுத்தம் என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை. வென்றவர்களுக்கு அது இறுதி யுத்தமாக இருக்கலாம் . வென்றவர்களுக்குச் சில உரிமைகள் உண்டு தானே ) அங்கிருந்து புலம்பெயர்ந்து அயல் தேசம் ஒன்றில் அகதியாக வாழ்கிறவன். 

இடைப்பட்ட ஆண்டுகளில் இலங்கை இந்தியா லண்டன் அயர்லாந்து எனப் பல நாடுகளில் தடுப்புக்காவலில் சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தனிமையில் இருந்தவன் .

அதிலும் இலங்கை மற்றும்  இந்தியாவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் , குற்றச்சாட்டே இன்றி , அந்த நாட்டின் சட்டங்களுக்கு முரணாக , சட்டவிரோதமாகத் தடுப்புக்காவலில் ரகசியச் சிறைகளில் இருந்தவன்.தன் பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கும் ஒரே மகன் . ஆனால் .... 

ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் எழுதியதுபோலக் குரங்கு கிழித்த தலையணை போலக் குடும்பம் சிதறிக் கிடக்கிறது . அவனோ பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தனிமையில் . அவன் எழுதி இருக்கிறான் அன்பெனும் தனிமை என்னும் கவிதை .

இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு உயிரெழுத்துப் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்த அவனது விழுங்கப்பட்ட விதைகள் என்னும் நூலை காலம் சென்ற எனது நண்பன் சௌபா எனக்கு வாங்கித் தந்தான் (அவனது இயற்பெயர் சௌந்திரபாண்டியன். ஜூனியர் விகடன் இதழுக்கு மாணவ நிருபராகத் தேர்வு செய்யப்பட்டதும் என்ன புனைப்பெயரில் எழுதுவது என்று என்னிடம் ஆலோசனை கேட்டான் .நான் உன்னை எப்போதும் அழைக்கும் சௌபா என்கிற பெயரிலேயே எழுது என்றேன்) .மரபுக் கவிதை எழுதும் ஆற்றல் சௌபாவுக்கு உண்டு . சொன்ன மாத்திரத்தில்,இருந்த இடத்தில் எழுதுவான். பலமான பரிந்துரையோடு அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தான் .யாரென்று தெரியாமலே அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். சில மாதங்கள் கழித்து நானும் சௌபாவும் சந்தித்தபோது அந்தப் புத்தகம் பற்றி பேச்சு வந்தது. நான் அதன் ஓசை நயம் , பொருட் சிறப்பு இவைகளைப் பற்றி சொன்னதும் , தம்பி கிட்ட பேசுறீங்களா என்றான் சௌபா. பேசுகிறேன் என்றேன். அரை மணிநேர முயற்சிக்குப் பிறகு திருக்குமரனுடன் முதன்முறையாக அலைபேசியில் பேசினேன். சிறிது நேரம் தான் பேசினோம் . எல்லாம் கவிதை மொழி இலக்கியம் குறித்த உரையாடல் .

பின்னும் சில மாதங்களுக்குப் பிறகு சௌபா அலைபேசியில் அழைத்தான். திருக்குமரனுக்கு ஒரு விருப்பம் அதை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். என்னது என்றேன் . அவனது மரபுக் கவிதைகளை நான் எனது குரலில் வாசித்துக் கேட்கவேண்டும் என்று திருக்குமரன் விரும்புவதாகச் சொன்னான். என் குரலிலா என்றேன். ஆம் .. உங்கள் குரலில் தான் என்றான் சௌபா . என் குரல் பழைய தகர டப்பாவைத் தார் ரோட்டில் போட்டு இழுப்பது மாதிரி இருக்குமே என்றேன் . அதெல்லாம் இல்லை ... நீங்கள் வாசித்தே ஆகவேண்டும் என்றான். எனக்கு எந்த மனத்தடையும் இல்லை . என் குரல் தான் எனக்குத் தடை என்றேன் . உங்கள் குரல் தான் அவனுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்றான். வெறும் ஒலிப்பதிவாக மட்டும் அனுப்புவது இருவருக்கும்  சம்மதம் இல்லை. எனவே நான் வாசிக்க அதைக் காட்சிப்படுத்தித் தம்பி திருக்குமரனுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தோம் . முடிவு அமலாகவில்லை . பலமுறை திட்டமிட்டும் அது நடைபெறவே இல்லை . ஆண்டுகள் பல கடந்து போயின. திருக்குமரன் தொடர்பில் இல்லாது போனான். சௌபா மரணித்துப் போனான் . எனக்கு மட்டும் அவ்வப்போது அல்லது எப்போதாவது  திருக்குமரனுக்கு அவனது ஒரு கவிதையையாவது வாசித்துக் கொடுத்து இருக்கலாமே என்று ஒரு நினைவு வந்து உறுத்தும் .அந்தக் கணம் தான் அந்த உறுத்தல் நிற்கும் , மீண்டும் அன்றாட வாழ்க்கை என்னும் சகதிக்கு வாழ்க்கை திரும்பிக் கொண்டு விடும் .

இப்போது அந்தக் கனவு கரை ஏறுகிறது .ஆம்.


என் முக நூலில் திருக்குமரன் பதிவிட்ட அன்பெனும் தனிமை என்னும் கவிதையை அன்புத் தம்பித் திருக்குமரனுக்காக இப்போது வாசிக்கிறேன் .கரகரத்த குரலில் தான் வாசிக்கிறேன் ...

திருக்குமரனுக்காக வாசிக்கிறேன் .
சௌபாவுக்குச் சமர்ப்பிக்கிறேன் ...

நான் இந்தியாவில் 
திருக்குமரன் அயல் நாடொன்றில்  
சௌபா விண்ணகத்தில்...

மூவரும் தனிமையில்...
அன்பெனும் தனிமை.


 திருச்செல்வம் திருக்குமரன்





 சௌபா 




இந்த இணைப்பில் கவிதையைக் கேட்கலாம் :
https://youtu.be/HyPtUoMQTI8


-பாரதி கிருஷ்ணகுமார் .


1 comment:

திரு.திருக்குமரன் said...

என் மகிழ்வை எந்த வார்த்தைகளால் சொல்வதென எனக்குத் தெரியவில்லை, அண்ணன் செளபா அவர்கள் இந்த நேரத்தில் எம்மிடம் இல்லாமற் போனதன் வலியை நான் முழுமையாக உணர்கிறேன்,
என் இருப்பு நிறைந்தது மிக்க நன்றி
என்றும் அன்புடன் - திருக்குமரன்

Post a Comment