எல்லாவற்றையும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தோம் .
நேரே நீதிமன்றத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
சாத்தூர் நகரத்தில் வகிடு எடுத்தது மாதிரி ஓடும் மெயின் ரோட்டில் ஆத்துப்பாலம் பக்கமிருந்து வந்தால் முக்குராந்தக்கல் தாண்டியதும் இரண்டு புறமும் ஒன்றிரண்டு கடைகளைக் கடந்ததும் வலது பக்கம் தலைமைத் தபால்நிலையம். நேர் எதிரே சாத்தூர் காவல் நிலையம்.
இடது புறமாகவே பார்த்துக் கொண்டு போனால் காவல் நிலையம் , தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் , அரசு பொது மருத்துவமனை ... இவைகளைக் கடந்ததும் தென்வடல்புதுத் தெருவுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு மெல்லிய நீண்ட சந்து. நாலு பேர் கைகோர்த்துக்கொண்டு நடந்தால் சாலை மறியல் நடத்தி விடலாம் . அப்படி மெலிந்த சந்து. அதையும் கடந்தால் பொதுப்பணித்துறை அலுவலகம்,நீதிமன்றம். பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் நீதிமன்றத்தின் முன்புதான் சாத்தூர் நகர வாடகைக்கார்கள் நிறுத்தி இருப்பார்கள்.
நீதிமன்றம் வந்ததும் என்னை வெளியே ஒரு வாடகைக்காரில் உட்காரச் சொல்லி விட்டார்கள்.அப்போது நான் பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்.பாண்டியன் கிராமவங்கியின் தலைமை அலுவலகம் சாத்தூரில் இருந்தது.(அந்த காலத்தில் சாத்தூர் தான் ஊர். சாத்தூருக்கு வடக்கே இருந்த விருதுநகரை விருதுபட்டி என்று தான் சொல்லுவார்கள்.சாத்தூருக்கு தெற்கே இருந்தது கோவில்பட்டி . இரண்டுமே பட்டிகள் .சாத்தூர் தான் ஊர்.)
வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்ததால் , சாத்தூரில் இருந்த பிற அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் தொழிற்ச்சங்கங்களோடு எனக்கு நெருக்கமான நட்பும் தோழமையும் கூடியிருந்தது .எனவே எனது பிரபலம் இந்த வேலைக்குத் தடையாக இருக்குமென்பதால் என்னை ஒரு வாடகைக் காருக்குள் உட்காரச் சொல்லி இருந்தார்கள் . வாடகைக் கார் ஓட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லோரையும் நான் அறிவேன் . நான் அமர்ந்த காரின் பின்னிருக்கையிலேயே சௌபாவும் கனகசபாபதியும் அமர்ந்து கொண்டார்கள் .
உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்துவர ஒருவரை அனுப்பினோம்.அவர் போய் வந்து "சீட்டுக் கச்சேரி துவங்கி உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது.ஒரு ஏழெட்டுப் பேருக்கு மேல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் " என்று சொல்லிவிட்டு தன் கடமையை முடித்து விட்டுப் போனார்.அவருக்கு அந்தப் பணி மட்டுமே தரப்பட்டிருந்தது.
அடுத்தவரை உள்ளே அனுப்பினோம்.அவருக்கு இட்ட பணி கொஞ்சம் கடினமானது தான்.அவர் உள்ளே சென்று சீட்டாடிக் கொண்டு இருப்பவர்களோடு பேசவேண்டும்.நாங்கள் சொன்னதுபோலப் பேச வேண்டும்.சந்தேகம் வராதபடி பேசவேண்டும் .பேசி முடித்த பிறகு அவர் வெளியே வந்துவிடாமல்,எங்களுக்கு தான் பேசி முடித்துவிட்டதை எங்களுக்கு உணர்த்த வேண்டும் .அவர் உணர்த்துவதை நாங்கள் உணர்ந்துகொள்ள எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
அவர் உள்ளே போய் அவர்களோடு பேச ஆரம்பித்தார்.
"ஏப்பா ... கோர்ட்டுலையே சீட்டு ஆடுறீகளே? உங்கள போலீஸ் புடிக்காதா?"
"எங்கள எவன் பிடிக்கிறான்? எப்பிடிப் பிடிப்பான் ?"
"நீங்க சீட்டு ஆடிக்கிட்டு இருக்கறத போட்டோ எடுத்தா போச்சு..."
"இங்க உள்ள வந்து எவன் போட்டோ எடுக்குறான்?"
"எவனோ ஒருத்தன் போட்டோ எடுக்க வந்துட்டா அவ்ளோ பேரும் ஓடிருவீகல்ல ?"
"எவன்யா உள்ள வந்து தைய்ரியமா எடுக்குறவன் ?"
"இப்போ ஒருத்தன் வந்து எடுக்கப் போறான்.சும்மா உங்கள அரட்டுறதுக்காகவே போட்டோ எடுப்பான் .ஆனா அந்தக் கேமராவுல பிலிமே கிடையாது.சும்மா ப்ளாஷ் லைட் மட்டுந்தான் இருக்கும்.நீங்க தைரியமா உக்காந்துருவீகளா இல்ல தெறிச்சு ஒடுவீகலான்னு பாப்போம்."என்றார்
"ஏய்! வரச் சொல்லு யா ... பாப்போம் ." என்று சீட்டாடிகள் ஒரே குரலில் அழைத்தார்கள் .
எங்களுக்கு சமிக்ஞை வந்தது.
சௌபாவும் கனகசபாபதியும் நீதிமன்றத்திற்குள் நடந்து போனார்கள்...
ஏற்கெனவே சென்றவர் நடத்திய உரையாடல் பயன் தந்தது. சீட்டாடிகள் சௌபாவையும் கனகசபாபதியையும் மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்கள் .
கனகசபாபதியின் கேமரா இயங்க ஆரம்பித்தது ...
எல்லாக் கோணங்களிலும் படம் பிடித்தார் . சீட்டாடிகள் போஸ் கொடுத்தார்கள் .சீட்டாட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருவர் கட்டிலிருந்து சீட்டு எடுத்துகொண்டே "நல்லா எடுங்க" என்று மகிழ்ச்சியோடு உற்சாகப்படுத்தினார் . அவருக்குக் கட்டிலிருந்து ஜோக்கர் வந்திருக்க வேண்டும்.
போதுமான புகைப்படங்கள் எடுத்த பிறகு இருவரும் வெளியே வந்தார்கள் .அரை மணி நேரம் கழித்து வக்கீல் வந்தார் .எங்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு போனார்.நாங்கள் போஸ்ட் ஆபீசுக்குப் பக்கத்தில் இருந்த தேவி மெஸ்ஸில் சாப்பிடப் போனோம். அந்தக் கடையில் சாப்பிடுவது சௌபாவுக்கு மிகவும் விருப்பமானது.எனக்கும் தான் .
நான் ஏற்கெனவே சொன்னதுபோல் அப்போதெல்லாம் ஜூனியர் விகடன் இதழ்,வாரம் ஒருமுறை தான் வந்துகொண்டிருந்தது .அந்த வாரம் ஜூனியர் விகடனில் இந்தச் செய்தி அட்டைப்படச் செய்தியாகப் (Cover Story) பிரசுரம் ஆகி இருந்தது .
அந்தச் செய்திக்கு சௌபா என்ன தலைப்புக் கொடுத்தார் ? அதில்தான் சௌபாவின் சொல்லும் திறம் சுடர்விட்டுப் பிரகாசித்தது..
அப்புறம் சொல்கிறேன் ...
-பாரதி கிருஷ்ணகுமார்
No comments:
Post a Comment