Friday, April 24, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 04


நான் ஏற்கெனவே சொன்னதுபோல் அப்போதெல்லாம் ஜூனியர் விகடன் இதழ்,வாரம் ஒருமுறை தான் வந்துகொண்டிருந்தது .
புதன்கிழமை காலை தமிழகத்தின் பிற பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலும் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை  சென்னையில் ரயிலேறும் ஜூனியர்விகடன் இதழ்கள் அதிகாலை நாலரை மணிக்கே மதுரை ரயில்நிலையம் வந்து விடும் . சாத்தூர் வந்து சேரும்போது காலை ஏழரை எட்டு மணியாகி விடும் .ரயில் வரும்நேரம் தான் ஜூனியர் விகடன் வரும் நேரம். ரயில் தாமதமானால் புத்தகமும் தாமதமாகும் . 

சௌபா ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தபிறகு,அதைத்  தவறாமல் படிப்பது பழக்கமாகி இருந்தது . எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைத்துக் கேட்பான் . அல்லது நான் அழைத்துப் பேசவேண்டும் என்று விரும்புவான் .

அன்றைக்கு ரயில் குறித்தநேரத்தில் வந்தது . வந்த சில மணி நேரங்களில் சாத்தூரில் எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது. 

சென்னையில் இதெற்கெனத் தனியாக வால் போஸ்டர்கள் அடித்தது விகடன் . சென்னை உயர்நீதி மன்றத்தைச் சுற்றியும் , உயர்நீதிமன்றத்துக்குப் போகிற எல்லாச் சாலைகளிலும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் . கண்ணைக் கவரும் போஸ்டர்கள் . நீதிபதிகளுக்கு நாட்டு நடப்புத் தெரிய வேண்டுமே !

போஸ்டர்களில் சௌபாவின் குறும்புத் தமிழ் விளையாடியது . இது தான் அந்தக் கட்டுரைக்கு அவன் தந்த தலைப்பு.


"வாங்க மிஸ்டர் நீதிதேவன் 
உக்காருங்க ஒரு கை குறையுது "

ஒட்டுமொத்த மாநில அரசின் நிர்வாகமும் , நீதித்துறையும் புரண்டு படுக்க வேண்டியநிலைமை உருவாகி விட்டது . உயர்நீதி மன்றப் பதிவாளரின் உத்தரவை ஏற்று ஒரு நடவடிக்கைக் குழு சாத்தூர் புறப்பட்டது . 

சாத்தூரில் , அதுவரை நீதிமன்றம் இருப்பதையே அறிந்தும் அறியாத பொதுமக்கள் மெயின் ரோட்டில் கூடிக்கூடி நின்று பேச ஆரம்பித்தார்கள் .

சாத்தூர் பேருந்துநிலையத்திற்கு தெற்கேயுள்ள ஒரு அகலமான தெருவின் வழியாகத்தான் பேருந்துகள் பேருந்து  நிலையத்திற்குள் செல்லும் . அந்தச்சாலை நேரே கொஞ்சதூரம் கிழக்காக ஓடி ரயில்வே பீடர் ரோட்டில் போய்ச்சேரும். அந்த அகலமான தெருவுக்குத் தென்புறத்தில் மெயின் ரோட்டில் மேற்குப்பார்த்து நான் பணியாற்றிய பாண்டியன் கிராமவங்கிக் கிளை இருந்தது . வங்கிக்கிளைக்கு நேர் எதிரில் பெருந்தலைவர் காமராஜரின் சிலையும் , எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியும் இருந்தது .  கிளையின் வாசலில் ஒருபுறம் ஒரு பெரிய வேப்பமரமும் , இன்னொருபுறம் அடர்ந்து நிழல் தரும் புங்கைமரம் ஒன்றும் இருந்தன . 

அந்தப் புங்கைமரத்தடியில் இருசக்கர சைக்கிள்களை வாடகைக்குத் தரும் ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை இருந்தது.அந்தக்கடைவாசலில் நிற்கும் சைக்கிள்களில் தான் அமர்வது வழக்கம் . சைக்கிள் இல்லாவிட்டால் சைக்கிள் கடைக்காரரின் மரப்பெட்டி தான் இருக்கை.அருகில் ஒரு கரும்புச்சாறு விற்கும் வண்டி . 

"கோர்ட்லயே சீட்டாடுனா?"
என்ன அக்குறும்பு? 

ஊரு பேரே கெட்டுப்போச்சு!

அட... அங்க மட்டும் தான் ஆடுறாங்களா என்னக்கேட்டு இருந்தா,இன்னும் பத்து இடம் காட்டி இருப்பேன் ...

ஊருக்கெல்லாம் அபராதம் போட்டானுக இப்ப என்ன செய்யுவானுங்க ...

அம்புட்டுப் பயலுக்கும் சீட்டைக் கிழிக்கணும் ... 

கவர்மெண்டு வேலை குடுத்தா ... கோர்ட்டயே கோமணத்துல வச்சுக் கட்டச் சொல்லுது ... வக்காளி

சீட்டாடுறத போட்டோ எடுத்துப் போட்டானுங்களே... எப்பிடிய்யா 

இங்கனையே இருக்கோம் நமக்குத் தெரியல... கசவாளிப் பயலுக .....

என்று காலையில் புத்தகம் வந்ததில் இருந்தே ஊர் முழுக்க அதே பேச்சாக இருந்தது. மேலே சொன்னதெல்லாம் சைக்கிள்கடை வாசலில் இருந்து கேட்ட கருத்துக் கணிப்புகள் .

போட்டோவுக்குப் போஸ் கொடுத்த நீதிமன்றப் பணியாளர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும்போது அவர்களின் முகங்கள் தெளிவாகத் தெரியாதவண்ணம் அச்சிட்டு அவர்களின் தனிமனித மாண்புக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டது விகடன்.

அந்த நீதி மன்றத்தில், நீதி மன்றத்திற்குப் பொறுப்பான அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரே சமயத்தில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் சிலருக்குப் பதவி உயர்வு கிடைத்தது என்றார்கள் . இந்த நிகழ்வை முன்வைத்து நீதித்துறையில் பலமாற்றங்கள் கொண்டு வந்தார்கள். எப்படியோ இந்தப் பிரச்சனையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் கலைத்துப்போட்டு கலைத்துப்போட்டு ரொம்ப காலம் ஆடிக்கொண்டே இருந்தார்கள் என்பது மட்டும் எங்கள் கவனத்திற்கு வந்துகொண்டே இருந்தது. 

உயர்நீதிமன்ற அதிகாரிகள் விகடன் அலுவலகத்திற்குப் போய் அந்தப் புகைப்படங்களைத் தரவேண்டும் என்றும், கட்டுரையை எழுதிய நிருபரை விசாரிக்கவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்கள். விகடன் ஆசிரியர் அதற்குச் சம்மதிக்கவில்லை.இதுபோலத் தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது என்பது மட்டுமே எங்கள் விருப்பம் . யாரையும் பலிகடாவாக்க நாங்கள் தயாரில்லை என்பதை உறுதிபடச் சொல்லிவிட்டார் . நீதித்துறை அதிகாரிகள் எவ்வளவு மிரட்டியும் அவர் அசைந்தே கொடுக்கவில்லை. அதுதான் விகடனின் அதன் ஆசிரியரின் தனிப்பெருமை என்று சௌபா பிறகு என்னிடத்தில் சொன்னான்.

இப்படியாகப் பிறர் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் ஆட்களாக நானும் சௌபாவும் ஆகி இருந்தோம்.

நான் தொழிற்சங்கத்தில் எங்கள் நிர்வாகத்திற்கு எதிராகப் பலவிதமான போராட்டங்களை நடத்திக்கொண்டு இருந்தேன். தொழிற்சங்க உணர்வுகளே குற்றம் என்று கருதிய ஒரு நிர்வாகத்திற்கு எதிராக , அதற்கு எப்போதும் ஆதரவாக இருந்த ஒரு உதவாக்கரை தொழிற்சங்கத் தலைமைக்கு எதிராகத் தனிமனிதனாக நான் துவங்கிய போராட்டம் பெருந்திரள் போராட்டங்களாக மாறிக்கொண்டு இருந்த நாட்கள் அவை . அந்த வரலாறு தனியே ஒரு நீண்ட ஒற்றையடிப்பாதையாக என் கண் முன்னே நீண்டு கிடக்கிறது . அந்தப் பாதையில் நடந்த காலடித்தடங்கள் அழியவே இல்லை. அந்தப் பாதையில் நான் மீண்டும் ஒருமுறை நடக்கத்தான் போகிறேன் . அது கிடக்கட்டும் .

நான் தொழிற்சங்கத்திலும், சௌபா பத்திரிக்கை உலகிலும் அதிகாரத்திற்கும் அநீதிக்கும் எதிராகப் போராடிக்கொண்டு இருந்தோம் .

ஆனால் நாங்களே தவறுசெய்து, மாட்டிக்கொண்ட கதையையும் சொல்லத்தானே வேண்டும் ...


அப்புறம் சொல்லுகிறேன் ...


பாரதி கிருஷ்ணகுமார்  


3 comments:

Karthic Nagarajan said...

Arumai Anbu Anna.

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 04
- போஸ்டர்களில் சௌபாவின் குறும்புத் தமிழ் விளையாடியது . இது தான் அந்தக் கட்டுரைக்கு அவன் தந்த தலைப்பு.


"வாங்க மிஸ்டர் நீதிதேவன்
உக்காருங்க ஒரு கை குறையுது "- அற்புதமான மனிதரை இழந்து விட்டோம். காலத்தின் கோலம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

drJeeva said...

very interesting...

Post a Comment