Monday, April 13, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி நான்கு -பாரதி கிருஷ்ணகுமார்




ஒருபோதும் அந்தப் பணத்தை மேடையிலேயே அவன் எண்ணிப்பார்த்து இருக்கக் கூடாது .அவன் முதல் முறை எண்ணிப்பார்த்தபோதே எனக்கு சங்கடமாகி விட்டது .

தனது தந்தை கடைசிவரை மனதுக்குள் தூர் எடுக்கவேயில்லை என்று எழுதிய இவனும் மனதுக்குள் தூர் எடுக்காமல் தான் இருக்கிறானோ என்று தோன்றிய கணத்தில் , எண்ணி முடித்த பணத்தை மீண்டும் எண்ணத்தொடங்கினான் முத்துக்குமார் .

எனக்கு இன்னும் வெறுப்பாகி விட்டது. எழுதுகிறவர்கள் எல்லோரும் தங்கள் எழுத்தைப் போலவே உயர்வாக இருப்பதில்லை என்பதை நான் எனது அனுபவத்தில் கண்டு உணர்ந்து கசந்து போயிருந்த நாட்கள் அவை . அடச் சே ... இவனும் அப்படியான ஆள் தான் போலிருக்கிறது என்று மனதுக்குள் குமைந்துகொண்டிருந்த கணத்தில், இரண்டாவது முறை எண்ணிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு, எண்ணிய பணத்தில் இருந்து கொஞ்சப் பணத்தை எடுத்து... கொடுத்தவர் கையில்கொடுத்து அவரிடம் ஏதோ சொன்னான். அவர் புன்னகைத்தார் . என்ன பேசிக்கொண்டார்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. மீதம் இருந்த பணத்தைப் பைக்குள் வைத்தபடி முத்துக்குமார் மேடையில் இருந்து இறங்கிப் போனான் . கடந்துபோகும் போது என் முகம் பார்த்து மெல்லிய புன்னகையைத் தட்டிவிட்டுப் போனான் .நானும் ஒரு வறண்ட புன்னகையைத் திருப்பி அனுப்பினேன்.

சில நொடிகளில் யாரோ மேடையில் உரத்தகுரலில் அறிவித்தார்கள். "தனக்குப் பரிசாக வந்த பணத்தில் இருந்து கணையாழிக்கு ஓராண்டுச் சந்தாவாக ருபாய் ஐநூறைத் திரு . நா . முத்துக்குமார் தந்திருக்கிறார் ... என்று ...

அரங்கம் மீண்டும் அதிர்ந்து கரவொலி தந்து முத்துக்குமாரைப் பாராட்டியது . நானும் மகிழ்ந்து என்னை மறந்து தலை சாய்த்து கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்தேன். தசரா அறக்கட்டளை வாங்கிய கணையாழிக்கு முதல் சந்தா தந்த பெருமை நா. முத்துக்குமாருக்குத் தான் சேரும் . 

1995 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த நிகழ்ச்சி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. கஸ்தூரிரெங்கனுக்குப் பிறகு தசரா அறக்கட்டளை நடத்தத் தொடங்கிய கணையாழிக்கு திரு மா இராஜேந்திரன் ஆசிரியர் ஆனார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கணையாழி இதழில் இதைப்பற்றி எழுதியும் இருந்தார். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவரே ஆசிரியராக இருந்து சிறப்பித்தும் வருகிறார் . (இடையில் சில ஆண்டுகள் அவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகப் பொறுப்பு வகித்தபோது மட்டும் வேறு யாரிடமோ அந்தப் பொறுப்பு தரப்பட்டது.)

நா . முத்துக்குமாரின் இந்தச் செயல் அரங்கில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம். எனக்குக் குற்றஉணர்வு வந்து விட்டது. எப்போதாவது சந்தித்தால் இது பற்றி அவனிடம் பேசி அவனிடத்தில் மன்னிப்புக்கோர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கணையாழியின் வளர்ச்சியில் அக்கறை இருப்பதாகப் பேசத் தெரிந்த நமக்கு , தரமானது என்றால் கூவிக் கூவி விற்றுத் தருவதாக வீரம் பேசிய நமக்கு மேடைக்கு வருவதற்கு முன்னமே ஒரு சந்தா கொடுக்கத் தெரியவில்லையே என்கிற கூச்சம் வந்து விட்டது .அவன் பணத்தை எண்ணிப் பார்ப்பது நாகரீகம் அற்றது என்று எண்ணத் தெரிந்த நமக்கு , அவன் எதற்காக எண்ணிப் பார்க்கிறான் என்று , எண்ணிப் பார்க்கத் தெரியவில்லையே என்று வெட்கமாகி விட்டது.

நாம் காணுகிற காட்சிக்குப் பின்னே , கண்டதும் அந்தக் கணமே  நமது அறிவு நமக்கு ஒரு அர்த்தத்தை தந்து விடுகிறது . எத்தனை கட்டுப்படுத்தினாலும் இந்த உடனடி முடிவுகளுக்குப் போவதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படியான போதனா முறையும் வாழ்க்கை முறையும் தான் நம்மை உருவாக்கி இருக்கிறது. ஆனால் நமது சிந்தனை முறையும் , கற்பிதங்களும் மிக மிகப் பிழையானவை என்று வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதிலும் நம்மினும் இளைய மனிதர்களும் , எளிய மனிதர்களும் தான் நமக்குக் கற்றுக்கொடுக்கிற ஆசான்கள். அப்படி நான் நிறையக் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் நான் சிறிதேனும் தூய்மை பெறுகிறேன். 

என்னைப்பற்றி நீ என்ன நினைத்தாய் ... நான் என்ன செய்தேன் என்று பார் என்று என்னிடம் நா. முத்துக்குமார் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தான் . மேடை விட்டு இறங்கும்போது அவன் உதிர்த்த புன்னகைக்கு அதுவே பொருள் என்று நானே அர்த்தம் கொண்டேன் . இப்போது அந்தப் புன்னகை மேலும் பொலிவு கொண்டதாக இருந்தது .

அப்புறம் விழாமேடையில் நடந்த, நடந்து கொண்டிருந்தவைகளுக்குள் கவனம் திரும்பிக் கொண்டது . கூட்டத்தில் அவனைத் தேடினேன் . எங்கிருந்து எழுந்து வந்தானோ அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். பிறகு நான் அவனை மறந்து, நிகழ்ச்சிக்குள் போயிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து நானும் சௌபாவும் அரங்கிற்கு வெளியே வரத் துவங்கினோம் . சௌபா எனது பேச்சைப் பாராட்டிப் பாராட்டி அகம் மிக மகிழ்ந்து கொண்டே வந்தான் . வழக்கமான இலக்கியக் கூட்டங்களில் நடப்பது போலவே சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள் . நானும் சௌபாவும் எந்தக் குழுவிலும் சிக்காமல் வாசலை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம் . முகம் தெரியாத பலர் கைகளைப்பிடித்து அவரவர்க்கு விருப்பமான சொற்களால் பாராட்டிக் கொண்டே இருந்தார்கள். நானும் நன்றி சொல்லிக்கொண்டே ஆனால் நகர்ந்து கொண்டே இருந்தேன் .

விடுதி அறைக்குப் போவதைவிடவும் மூன்று மணிநேரம் புகை பிடிக்காமல் இருந்தோம் என்பதுதான் எனக்கும் சௌபாவுக்கும் மிகப்பெரிய தியாகமாக இருந்தது . எங்கள் விரைவுக்கும் அதைவிட வேறு காரணங்கள் இல்லை . இந்த விசயத்தில் நானாவது கொஞ்சம் கூடுதல் நேரம் தியாகம் செய்யும் பக்குவம் பெற்று இருந்தேன் . சௌபா அதற்கு மேலும் தியாகம் செய்ய இயலாத நிலைமைக்கு ஆளாகி இருந்தான்.

கொஞ்சம் யார் கண்ணிலும் படாத தூரத்தில் , பட்டாலும் பரவாயில்லை என்கிற தூரத்தில் போய்  நின்றுகொண்டோம் . படபடப்பாகப் பையில் இருந்து வில்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டோம் . 


மற்ற நேரங்களில் நம்மைச்சுற்றி எப்போதும் எல்லோரும் இருக்கவேண்டும் என்று கருதுகிற மனது இந்தமாதிரித் தருணங்களில் நமக்கான தனிமையை எல்லோரும் தரவேண்டும் என்று ஆசைப்படுவது விநோதமானது .

எங்கள் தனிமையைக் குலைக்கவென்றே ஒன்றிரண்டு பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். முற்றிலும் புதியவர்கள் வயதில் இளையவர்கள் என்றால் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டியதில்லை . கொஞ்சம் யாராவது பெரிய ஆட்கள் என்றால் என்னசெய்வது என்ற திகைப்பு எனக்கும் சௌபாவுக்கும். 

மூன்று பேர் எங்களைநோக்கி வந்தார்கள்.

அந்த மூவரும் தங்களுக்குள் உரையாடியபடியே எங்களை நோக்கித்தான் வந்தார்கள் .

மூவரில் , இடது ஓரத்தில் நா. முத்துக்குமார் ...



மற்றது ... மேலும் 





2 comments:

Unknown said...

Oru Novel padippathu pol irukkirathu..aduththa pathivu eppothu enru aenga vaikkirathu.


Rathnavel Natarajan said...

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி நான்கு -பாரதி கிருஷ்ணகுமார் - சில நொடிகளில் யாரோ மேடையில் உரத்தகுரலில் அறிவித்தார்கள். "தனக்குப் பரிசாக வந்த பணத்தில் இருந்து கணையாழிக்கு ஓராண்டுச் சந்தாவாக ருபாய் ஐநூறைத் திரு . நா . முத்துக்குமார் தந்திருக்கிறார் ... என்று ... - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment