Friday, April 24, 2020

ப்ரகலாதன் கவிதைகள் 01

என்ற போதும் ...


உறக்கமின்மையின்
சாத்தான்கள்
என் படுக்கையறையை
ஆக்கிரமித்தன.

அகன்ற, அழுக்கான,
தடித்த பற்களால்
அறையின் இருளைத்
தின்றதொரு சாத்தான் .
அது உண்ணும் ஓசை
இடியோசையாய்.

நீண்டு, கருத்து ,
ஈரம் பிசுபிசுத்த நாக்கினால்
அறையின் வண்ணங்களை
நக்கித்தின்றது மற்றொன்று.
வண்ணங்களை விழுங்குமோசை
தகரக் கூரையில் விழும்
ஆலங்கட்டி மழையாயிருந்தது.

படுக்கையறையெங்கும்
சேமித்து வைத்திருந்த
நறுமணங்களையெல்லாம்
பருத்து விடைத்த நாசியால்
உறிஞ்சி எடுத்ததொரு சாத்தான்.
அது உருவாக்கிய ஓசை
முகத்தின் தசைகளை திருப்பும்
பெருங்காற்றென முழங்கியது.

சிவந்து, ஊதிப்பொங்கிய கண்களால்
என் படுக்கையை உற்றுப்பார்த்த
சாத்தானின் கண்களில் இருந்து
பெரு மின்னல்களாய்
அழிவுண்டாக்கும் பேரொளி
பெருகிக்கொண்டே இருந்தது.

என்ற போதும்
என்றான போதும்
எப்போதும் போல்
ஆழ்ந்துறங்கினேன்
நான்.


-ப்ரகலாதன்

(பாரதி கிருஷ்ணகுமார் )

No comments:

Post a Comment