Saturday, April 25, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 05



ஆனால் நாங்களே தவறுசெய்து, மாட்டிக்கொண்ட கதையையும் சொல்லத்தானே வேண்டும் ...

அதற்கு ரொம்பத்தூரம் பின்னோக்கிப் போகவேண்டும். எவ்வளவு பின்நோக்கிப் போனாலும் சில நினைவுகள் நினைத்த மாத்திரத்தில், அந்தநாளின் எல்லாத் துல்லியங்களோடும் கண் முன்னே தோற்றம் தருவது வியப்பும் விந்தையும் தருகிறது. மறதி  என்பதே பொய் என்பார் லா .ச .ராமாமிருதம். எல்லாம் மறைந்திருந்து, பாய்வதற்குச் சமயம் பார்த்துக் காத்திருப்பவையே என்று எழுதுவார். அது எத்தனை உண்மை என்பதை அதை வாசித்தபோதே உணர்ந்திருக்கிறேன். இப்போது இந்தத் தொடர்களை எழுதும்போது அனுபவ உண்மையாய் உணர்கிறேன் .

நான் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் "இருந்துவிட்டு" வந்தேன். ஆங்கில இலக்கிய மாணவன். எனக்கு விருப்பமான ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு மட்டும் போவேன். மற்ற நேரமெல்லாம் மரத்தடி மகாராஜா தான். மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எதுவும் எழுதவில்லை."பட்டம்" எதுவும் அப்போது வாங்கி இருக்கவில்லை.எனவே அதை பறக்க விடுகிற வேலையும் இல்லை.. கல்லூரி முடிந்ததும், இரண்டு ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் மதுரைக்கு வந்து பட்டிமன்றங்களில் , வழக்காடு மன்றங்களில் பேச ஆரம்பித்து கொஞ்சம் கையில் காசும் மனசில் சந்தோசமும் புரண்ட நாட்கள் அவை. 

மதுரையில் நமது சபை கூடுகிற இடங்கள் நான்கைந்து இருந்தது. எங்கு போனாலும் என்னை "ஆட்டைக்குச்" சேர்த்துக் கொள்ளுவார்கள்.ஒரு தனியார் கல்லூரியின் மைதானம் , ரயில்வே காலனி மைதானம், எஸ். எஸ்.காலனியில் ஒரு நண்பனின் வீடு, அங்கேயே ஒரு விறகுக்கடையின் கொல்லைப்புறம் ,நாகமலைப் புதுக்கோட்டையில் ஒரு நண்பன் வீட்டு மொட்டைமாடி ,எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தனியார் ரைஸ் மில்லுக்குப் போகிற கல்பாலம் , என ஏகப்பட்ட இடங்கள் சந்திப்புக்கான "பட்டறைகள்". 

அதில் ரயில்வே காலனி சந்திப்பில் எனக்கு அறிமுகமான சங்கர் என்னும் ரயில்வே தொழிலாளி விருதுநகர் ரயில்வே ஊழியர்கள் நடத்திய ஒரு சங்கத்தின் ஆண்டு விழாவில் எங்கள் பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் ." ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது பக்தியா? சேவையா? என்பது தலைப்பு. நான் நடுவர். அணியில் பேசுவதற்கு ஆறு பேர் . அதில் பள்ளிமாணவனாக இருந்த சௌபாவும் ஒரு அணியில் பேசுவான் .

கல்லூரியில் படிக்கிறபோதே, ரயில்வே காலனியில் நடைபெற்ற ஒரு பிள்ளையார்கோயில் நிகழ்வில் நான் நடுவராக இருந்தேன்.பத்தொன்பது வயதில் பொதுமேடை ஒன்றில் நடுவராக இருந்த , மிக இளவயதிலேயே நடுவராகப் பதவி ஏற்ற பெருமை எனக்கு இருந்தது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . இதுபோல நமது புகழை நாமே பாடும் சந்தர்ப்பங்கள் அமைவது அபூர்வம் .அதைப் பயன்படுத்திக் கொள்ளுவது நமது கடமையும் ஆகும் .

அந்த பட்டிமன்றம் கேட்ட அனுபவத்தில் சங்கர் எங்களை விருதுநகர் அழைத்துப் போனார் . மதுரையில் இருந்து விருதுநகருக்கு ஒரு பாசஞ்சர் இரயிலில் பயணம். அங்கு நல்ல உணவு, உபசரிப்பு,பெரிய மேடை, நல்ல கூட்டம் ... எல்லோரும் நன்றாகப் பேசி மிகுந்த அன்பையும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றோம் .பக்தியை விட சேவையே சிறந்தது என்று தீர்ப்புச் சொன்னேன் . பக்தியால் தனிமனிதன் நிறைவு பெறுகிறான். ஆனால் சேவையால் சமுகமே நிறைவு பெறுகிறது என்று எடுத்துரைத்தேன் . அது ஒரு கோவிலுக்கு முன்பாக நடந்தது என்பது இன்னும் உற்சாகம் தந்தது.  திரும்ப மதுரை வரைக்கும் ரயில் பயணம், போகும்போதும் வரும்போதும் எங்களோடு நிறைய ரயில்வே ஊழியர்கள் . டிக்கெட் வாங்க வேண்டாமா என்று புறப்படுகிறபோது கேட்டதை உடன் வந்த ஒரு ரயில்வே ஊழியர் பெரிய அவமானமாக எடுத்துக் கொண்டார் எங்களை அவர்கள் ரயில்வே நிலையத்தின் முன் வாசல் வழியாக ராஜ மரியாதையுடன் அழைத்துக்கொண்டு போனார்கள்.எங்களிடத்தில் யாரும் டிக்கெட் கேட்கவில்லை.ரயில் பயணம் என்பதே உற்சாகமானது... அதிலும் டிக்கெட் இல்லாத ஆனால் மரியாதையுடன் கூடிய ரயில் பயணம் இன்னும் உற்சாகம் தந்தது .ரயில் பயணத்திலும் பாட்டு பேச்சு இலக்கியம் என்று உற்சாகம் கரைபுரண்டது . எல்லோருக்கும் பேசியதற்குச் சம்பளமாக ஐந்து ரூபாயும் , நடுவருக்குப் பத்து ரூபாயும் கொடுத்துச் சிறப்பித்தார்கள். இப்படியாக எங்கள் குழுவின் முதல் வெளியூர்ப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

விருதுநகர் நிகழ்வுக்கு செங்கோட்டையில் இருந்து தோழர் பரமசிவம் வந்திருந்தார் . அவர் அப்போது மண்டபம் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவசரநிலைக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு , கடும் இன்னல்களுக்கு ஆளான தோழர் பரமசிவம் மீண்டும் பணியில் சேர்ந்து இருந்த நேரம் அது .என்னையும் எங்களது பட்டிமன்றக் குழுவையும் தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு அழைக்க விரும்பினார் அவர் . தன்னால் பணம் தரமுடியாது என்றும் ஆனால் நன்கு உணவு தந்து உபசரித்து அனுப்ப முடியும் என்றும் , நாங்கள் செங்கோட்டைக்கு வரவேண்டும் என்றும் மனமுருக அழைத்தார் .

அவரது வேண்டுகோளை எங்கள் குழு ஏற்றுக் கொண்டது. ஊருக்குப் போனதும் அங்கு இருப்பவர்களோடு பேசி எங்களுக்குத் தகவல் தருவதாகச் சொன்னார் பரமசிவம். பரமசிவத்துக்கும் எனக்கும் இடையில் பாலமாக இருந்தார் சங்கர் . 

இப்போது போல எந்தத் தகவல் தொடர்புச்சாதனங்களும் அப்போது இல்லை . லேண்ட் லைன் தொலைபேசிகளும் எங்களில் யாருக்கும் இல்லை. நான் ரயில்வே காலனிக்குப் போன ஒரு தருணத்தில் செங்கோட்டை விழா பற்றிய தகவல் வந்தது. தேதி உறுதியானது . அங்கிருந்த ஒரு அம்மன் கோயில் திருவிழாவில் நாங்கள் பேசப் போகிறோம் என்றும் தகவல் சொன்னார்கள் . 

இனி அணியில் பேசுகிற ஆறு பேருக்கும் தகவல் சொல்ல வேண்டும். அவர்களைக் குறிப்பிட்ட நாளில் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் . பத்திரமாக அழைத்துப்போய் திரும்ப அழைத்து வரவேண்டும் . இந்த வேலை எல்லாம் நடுவர் தான் செய்யவேண்டும் . அப்படி எதுவும் விதிகள் இல்லை என்றாலும் அந்த ஆறு பேருக்கும் தலைவர் என்பதால் அது நடுவரின் கடமையாகவே கருதப்படும் . இதை நடுவர் தனது தேவைக்காகத் தான் செய்கிறார் என்றும் , அது அவரது வேலைதான் என்று கருதுகிற பேச்சாளர்களும் உண்டு . 

நல்லவேளையாக எனது நண்பர்கள் யாரும் அந்த மனநிலையில் இல்லை. எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம். அப்போது சிமிண்ட் ரோட்டில் லேத் பட்டறை வைத்திருந்தவனும் , என் பள்ளித்தோழனுமாகிய ஜெயவீரபாண்டியனுக்கு முதல் தகவல் சொன்னேன் . அவன் வரச் சம்மதித்தான் .

எங்கு போனாலும் எத்தனை கிலோமீட்டர் என்றாலும் சைக்கிள் தான். அதிலும் ஒரே சமயத்தில் இரண்டு பேராகப் போக முடியாது . போலீஸ்காரர்கள் விரட்டிப் பிடிப்பார்கள் . எனவே யாராவது உடன் வந்தாலும் கொஞ்சதூரம் சைக்கிளில் ,கொஞ்சதூரம் நடந்து , கொஞ்சதூரம் ஓடி என்று தான் போகவேண்டிய இடத்துக்குப் போகமுடியும். 

ஜெயவீரபாண்டியனைப் பார்த்து விட்டு சௌபாவைப் பார்க்கப் போகவேண்டும் .போகிற வழியில் இன்னொரு பேச்சாளரைப் பார்த்து அவனுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் பிறகு போகலாம் என்று முடிவு செய்தேன். 

அவனும் என்னோடு சௌபாவைப் பார்க்க வந்தான் . நானும் அவனும் சௌபாவைப் பார்க்க அவன் அப்போது படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்திற்குப் போனோம் . 

என்னோடு வந்தது யார் ?

பள்ளிகூடத்தில் நடந்தது என்ன ? 



அப்புறம் சொல்லுகிறேன் ...


-பாரதி கிருஷ்ணகுமார்

2 comments:

vimalanperali said...

ஞாபகச்சிறகுகள் நன்றாக இருக்கிறது.

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 05
- கல்லூரியில் படிக்கிறபோதே, ரயில்வே காலனியில் நடைபெற்ற ஒரு பிள்ளையார்கோயில் நிகழ்வில் நான் நடுவராக இருந்தேன்.பத்தொன்பது வயதில் பொதுமேடை ஒன்றில் நடுவராக இருந்த , மிக இளவயதிலேயே நடுவராகப் பதவி ஏற்ற பெருமை எனக்கு இருந்தது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . இதுபோல நமது புகழை நாமே பாடும் சந்தர்ப்பங்கள் அமைவது அபூர்வம் .அதைப் பயன்படுத்திக் கொள்ளுவது நமது கடமையும் ஆகும் . - ஆஹா. அருமை. ரசிக்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment