ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரி வக்கீல் சிரித்தார் . அவர் எப்போதும் அப்படித்தான் சிரிப்பார் . அவரது சிரிப்பு அவரை அறியாதவர்களுக்கு மிகையையாகத் தெரியும் . ஆனால் அசலான அழகான பூத்து மலர்ந்து மணக்கிற சிரிப்புக்குச் சொந்தமானவர் .
"யோவ் ... வக்கீலு .. எதுக்கு சிரிக்குறீர் " என்றேன் .
உம்ம பிரெண்ட்ஸ் இல்லாட்டி பேங்க் ஸ்டாப் யாராவது மாட்டி கிட்டான்களா என்று கேட்டார் வக்கீல் .
அதெல்லாம் இல்ல ... அவங்க அடி வாங்குனதப் பாக்கப் பொறுக்கல . அது மட்டுமில்ல அவங்க பணத்தைல்லாம் போலீஸ் எடுத்துட்டு அபராதமும் கட்டச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டேன் . அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும் " என்றேன்.
ஒரு மாசத்துக்கு இந்த மாதிரி ஏகப்பட்ட கேஸ் வரும்னு தெரியுமா ? சாத்தூர் சுத்து வட்டாரத்துல பிடிக்கிற எல்லாக் கேசும் இந்தக் கோர்ட்டுக்குத் தான் வரும் . எல்லாக் கேசுக்கும் நம்ம உதவி செய்ய முடியுமா? சீட்டு விளையாடுனியான்னு ஓபன் கோர்ட்ல கேட்டதும் அவனுங்க ஒத்துக்குவாங்க ... அபராதம் போடுவாரு ஜட்ஜ் அவனுங்க கட்டிட்டுப் போய்டுவானுங்க ... இதுல நம்ம என்ன செய்யுறதுன்னு சொல்லும் " என்றார் .
நேத்து மாட்டுனவங்கள மட்டும் காப்பாத்த முடியுமா ? என்றேன் .
வக்கீல் மீண்டும் பலமாகச் சிரித்தார் . "சொல்லும் ... உமக்குத் தெரிஞ்ச ஆளு அதுல இருக்கா " என்றார் .
"அட .. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அதுல இல்லீங்க .. அதுல நேத்து ஒருத்தன் அடிவாங்கிக் கிட்டே என்னப்பாத்துக்கிட்டே போனான் .. அவனுக்கு உதவணும்னு ஏதோ தோணுது ... முடிஞ்சா செய்யுங்கன்னு" சொன்னபடியே எழுந்தேன்.
அது ஒண்ணும் பெரிசில்ல .. ஸ்டேஷன்ல பேசி விடச் சொல்லிருவோம் ... இதை எல்லாம் தடுக்கணும் காப்பாத்தணும் ன்னு வர்றீங்க ... கோர்டுக்கு உள்ளேயே சீட்டாடுறத என்ன செய்யுவீங்க? என்றார் .
என்னது கோர்ட்டுக்கு உள்ளேயா ?, ... என்று திகைத்தேன்.
ஆமா ... ஜட்ஜ் சீட்டுக்குக் கீழ , காந்தி படத்துக்குக் கீழ காசு வச்சு வெளையாடுறது நடந்துக்கிட்டே இருக்கு ... எல்லா ஞாயித்துக்கிழமையும் சீட்டுக் கச்சேரி நடக்கும் , திங்கக்கிழமை சீட்டாடுனதுக்காக மத்தவங்களுக்கு அதே கோர்ட்ல அபராதம் போடுவாரு ஜட்ஜு ... இதுக்கென்ன செய்வீரு ? இதெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமா ? என்றபடி அவர் இருக்கையை விட்டு எழுந்தார் .
உக்காருங்க ... அத நிறுத்தணும். அவ்வளவு தான ... நான் ஒரு ஆள வரச் சொல்லுறேன் ... நிறுத்திருவோம் என்றேன் .
யாரு ? என்றார் வக்கீல் .
"சௌபா" என்றேன் . அவருக்கு ஒரே சொல்லில் எல்லாம் புரிந்து விட்டது. இருவருமே மனம்விட்டுச் சிரித்துக்கொண்டோம் .
மதுரையில் இருந்த சௌபாவுக்குத் தகவல் சொன்னேன். ஒரு சனிக்கிழமை மாலையே வந்துவிடுமாறு சொல்லி அனுப்பினேன் . வழக்கம்போல சாவகாசமாகவும் , தாமதமாகவும் பின்னிரவில் சௌபாவும் புகைப்படக்கலைஞர் கனகசபாபதியும் என் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள் .
எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன் . காலையில் வக்கீலைப் பார்த்து மற்ற விஷயங்களைப்பற்றி பேசிக்கொள்வது என்று முடிவு செய்தோம் .
காலையில் மூவரும் வக்கீலைப் பார்த்தோம் . கோர்ட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுப்பது என்று முடிவானது .
கோர்ட்டுக்குள் எப்படி நுழைவது ? எப்படி நிதானமாகப் புகைப்படம் எடுப்பது ? அவர்கள் தடுத்தால் என்ன செய்வது ? அனுமதியின்றி நீதிமன்றத்திற்குள் நுழைந்த குற்றத்திற்காக இவர்களைக் கைது செய்தால் என்னாவது ?
எல்லாவற்றையும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தோம் .
நேரே நீதிமன்றத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் ...
அப்புறம் சொல்லுகிறேன் ..
- பாரதி கிருஷ்ணகுமார் .
1 comment:
சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 02 -கோர்டுக்கு உள்ளேயே சீட்டாடுறத என்ன செய்யுவீங்க? என்றார் .
என்னது கோர்ட்டுக்கு உள்ளேயா ?, ... என்று திகைத்தேன் - அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
Post a Comment