அந்த மூவரும் தங்களுக்குள் உரையாடியபடியே எங்களை நோக்கித்தான் வந்தார்கள் .
மூவரில் , இடது ஓரத்தில் நா. முத்துக்குமார் .
அருகில் வந்ததும் மலர்ந்த முகத்தோடு அண்ணே என்றான் . இரண்டு கரங்களையும் கூப்பி வணங்கினான். சௌபா கூப்பிய அவன் கரங்களைத் தன் கையால் பற்றி " தம்பி கவிதை அட்டகாசம் டா ... அதைவிடக் கணையாழிக்குச் சந்தா கொடுத்தது இன்னும் அட்டகாசம் டா " என்று மலர்ந்து மகிழ்ந்து மனமாரப் பாராட்டினான் .
வெட்கப்பட்டானா அல்லது இதை எல்லாம் விரும்பவில்லையா என்பதைக் கண்டறிய இயலாத ஒரு உணர்ச்சியுடன் முத்துக்குமார் ஒரு புன்னகை செய்தான்.
"தம் அடிப்பியா?" என்று கேட்டான் சௌபா. மற்றதெல்லாம் தேவையே இல்லை இதற்குத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி," இடைவெளியே இல்லாமல் அடிப்பேண்ணே" என்று பதில் தந்தான் முத்துக்குமார் .
"எங்க இதெல்லாம் பழக்கமில்லன்னு சொல்லி என்னைப் பயமுறுத்திருவையோன்னு நெனச்சேன் " என்றான் சௌபா . சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான் .
"நீங்க பயப்படாதீங்கண்ணே ... சரக்கும் போடுவேன்" என்றான் முத்துக்குமார் .
எல்லோரும் சிரித்தோம் . களங்கமில்லாமல் கபடமில்லாமல் கலந்து சிரித்தோம் .
சந்தித்த சில நொடிகளுக்குள் ஒருவருக்கொருவர் அன்பினால் இணைந்தோம் . அதற்கு மதுவும் புகைப்பதும் காரணம் அல்ல . அது குறித்த பொய்மையும் போலித்தனமும் இல்லாததே .
நான் சொல்லத் துவங்கினேன் ," தம்பி அந்தக் கவிதைய நான் ஏற்கெனவே படிச்சுட்டேன் . வேலைக்காரி திருடினதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர் என்கிற இடம் தான் அந்தக் கவிதையில் எனக்கு உச்சமான இடம். நமது இழிவான எண்ணம் சகதியாக , சகதியோடு சகதியாக வெளிவரும் அந்த இடம் தான் எனக்குப் பிடித்தமான இடம். அப்பா கடைசி வரை தன் மனதுக்குள் தூர் வாரவேயில்லை என்கிற இறுதிவரிகள் எனக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை . ஏனெனில் பெரும்பாலான அப்பாக்கள் அப்படித்தான் என்பது நான் அறிந்தது தான் . உணர்ந்த உண்மைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்துவதில்லை தானே " என்றேன்.
என் கண்களைப் பார்த்து , என் கண்களுக்குள் பார்த்து நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தான் முத்துக்குமார் . " ஆமாண்ணே .. எனக்கும் ரொம்பப் பிடிச்ச வரி அதுதான் என்றான் . அப்பா மனசுக்குள் தூர் வாரவே இல்லைன்னு எழுதி இருந்தாலும் எனக்கு எங்க அப்பா அப்பிடி இல்ல " என்றான் . தனது கவிதையின் வழியே தன் தந்தையை யாரும் பார்த்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடு பேசினான் .
நான் ஆமோதித்து விட்டு," தம்பி நீ மேடையிலலேயே காச எண்ணிப் பாத்ததும் அடச் சே .. இந்தப் பையன் எதுக்குப் பரிசுப் பணத்த மேடையிலே எண்ணிப் பாக்குறான்னு உன்னப்பத்தி தப்பா நெனச்சேண்டா ... ஆனா பாதிப் பணத்த சந்தாவுக்குக் குடுத்து அசத்தீட்ட... சாரிடா தம்பி" என்று அவன் கரங்களைப் பற்றிக் கொண்டேன் .
"அட ... நீங்க என்னண்ணே சாரில்லாம் கேக்குறீங்க .. நீங்க நெனச்சது தப்பே இல்ல ... அது தான கரெக்ட் ... நீங்க அப்படி நெனச்சது தான் சரி . அப்பிடி எல்லாம் நெனச்சுட்டு உன்னைப் பத்தி தப்பா நெனைக்கலைன்னு சொல்லுறது தான் தப்பு ... உங்க பேச்சு கேக்கத்தாண்ணே நான் வந்தேன் " என்றான் .
எனக்கு வியப்பாகி விட்டது . இவன் எப்போது நம்ம பேச்சைக் கேட்டான் என்பதாக நான் அவனைப் பார்த்தேன் . " அண்ணே ... செங்கல்பட்டு , வேலூர் , சைதாபேட்டை ன்னு நீங்க எங்க பேசுனாலும் பத்து கிலோமீட்டர் , இருபது கிலோமீட்டர்ன்னாலும் சைக்கிள்லயே கூட்டம் கேக்க வந்துருவேண்ணே... நீங்க ரெண்டு மணி மூணு மணிக்கு மேல பேசுவீங்கண்ணே... கேட்டுட்டு வீட்டுக்குப் போக விடிஞ்சுரும்ண்ணே... பல நாட்கள நீங்க தான்ண்ணே விடிய வெச்சுருகீங்க. உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்குண்ணே... எழுதுறது மாதிரியே பேசுறிங்கண்ணே" என்றான் . வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அண்ணே அண்ணே என்று அழைத்து மனமெங்கும் நிறைந்தான் ...
இப்போதும் மனமெங்கும் நிறைந்திருக்கிறான் ...
முதல் சந்திப்பு முடிந்தது.
-பாரதி கிருஷ்ணகுமார் .
8 comments:
பந்தா இல்லாத வெளிப்படையான பேச்சு இருவரிடமும்.வியந்தேன் அருமை. 😊👌👌👌👌
பந்தா இல்லாத வெளிப்படையான பேச்சு இருவரிடமும்.வியந்தேன் அருமை. 😊👌👌👌👌
பந்தா இல்லாத வெளிப்படையான பேச்சு இருவரிடமும். அருமை😊👌
மிகச் சிறப்பு.
" உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்குண்ணே... எழுதுறது மாதிரியே பேசுறிங்கண்ணே" என்றான்...
இதை நானும் உணர்ந்திருக்கிறேன் ஐயா, கம்பன் விழாவிற்கு யாழில் இருந்து கொழும்பிற்கு வர காரணமும் அதே!..
உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்குண்ணே... எழுதுறது மாதிரியே பேசுறிங்கண்ணே" என்றான்
இதுவே எனையும் உங்களை ஈர்க்கக் காரணம் என்பேன் ஐயா.
உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்குண்ணே... எழுதுறது மாதிரியே பேசுறிங்கண்ணே" என்றான்
இதுவே உங்களை நான் மிகவும் நேசிக்கக்காரணம் ஐயா.
இது போலாய் மனதில் விதையூன்றிப்
போகிறவர்கள் அபூர்வம்!
Post a Comment