அந்த அறிவிப்பு வந்த சிலநாட்களில் சௌபா என்னைத்தேடி வந்தான் . அவன் அப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கிய மாணவன் . அவன் பள்ளி மாணவனாக இருந்தபோதே எனக்கு அறிமுகம் .
அந்தக்கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் கூடிய கடிதம் மற்றும் மாணவ நிருபருக்கான விண்ணப்பத்துடனும் வந்தான் .
இந்த நிருபர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாமா என்கிற சந்தேகம் அவனுக்கு இருந்தது . விண்ணப்பிக்க வேண்டும் என்கிற விருப்பமும் இருந்தது .
ஏனெனில் விண்ணப்பிக்குமாறு அவனைத் தூண்டியவர்கள் இருந்தது போலவே , விண்ணப்பித்தால் கிடைக்காது என்று அறிவுரை சொன்னவர்களும் சம எண்ணிக்கையில் இருந்தார்கள் . என்னிடம் ஆலோசனை கேட்பதற்காகவே வந்திருந்தான் .
அது பற்றி நாங்கள் பேசிச் சிரித்த உரையாடல்கள் குறித்து இங்கு எழுதிவிட இயலாது . விண்ணப்பிக்கலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டான் . விகடனுக்கு அனுப்பிய கடிதஉறையில் , விகடன் முகவரியை என்னை எழுதச் சொன்னான் .என் கையெழுத்து அவனுக்கு மிகவும் பிடிக்கும் . விகடன் நிறுவனம் அதை அவன் கையெழுத்தென்று மயங்கி அவனுக்கு வேலைகொடுக்கும் என்றான் . வேலைக்குச் சேர்ந்த உடன் அவன் கையெழுத்தைப் பார்த்து வேலையை எடுக்கும் விகடன் என்றேன் நான் .அந்த ஊர் அஞ்சலகத்தில் இருந்து அந்தக் கடிதம் பதிவுத்தபாலில் போனது.
சில வாரங்களுக்குள் சௌபா மாணவ நிருபரானான் . மிகுந்த புகழ்பெற்ற புலனாய்வுக் கட்டுரைகளை ஜூனியர் விகடனில் சௌபா எழுதினான் . மாணவ நிருபருக்கானப் பணிக்காலம் முடிந்தும் , தொடர்ந்து நிருபராகப் பல ஆண்டுகள் பணி புரிந்தான் .
தனக்கு இருந்த இடதுசாரித் தொடர்புகளை , நட்பு வட்டாரங்களை , இலக்கிய நண்பர்களை, பல்வகை மனிதர்களை திறம்படத் தனது புலனாய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டான் .சமூக அக்கறையும் , சமுக நீதியும் அவனது கட்டுரைகளில் ஆழமாக வெளிப்பட்டது . எங்கு அநீதி நடந்தாலும் சௌபாவைக் கூப்புடுங்க என்று சொல்லுகிற அளவுக்கு மதுரையிலும் , தென் மாவட்டங்களிலும் சௌபா அறியப்பட்டான் .
மிகப் பல்லாண்டு காலமாகத் தமிழகத்தில் பல கிராமங்களில் நடந்துவந்த பெண்குழந்தைகளைப் பிறந்தவுடன் கொலை செய்யும் பெண் சிசுக்கொலை பற்றி முதலில் எழுதி அதை உலகறியச் செய்தவன் அவன் தான் . அந்தக் கட்டுரை அவன் பெயரிலேயே வெளியானது .
சில மிகப்பெரிய குற்றங்களைப் பற்றி அவன் ஆதாரப்பூர்வமாக எழுதியதும் , அது பிரசுரம் ஆகிறபோது , அவனது பாதுகாப்புக் கருதி அந்தக் கட்டுரை அவனது பெயர் இன்றி நமது நிருபர் என்று வெளியானதும், அவன் சொல்லி நான் அறிந்தது மட்டுமல்ல . சில கட்டுரைகளை எனது அருகிலேயே இருந்து அவன் எழுதி இருக்கிறான் என்பதாலும் நான் அதனை அறிவேன் .
ஒருசில கட்டுரைக்கான ஆதாரங்களைத் திரட்டித் தருவதில் எனது பங்களிப்பு இருந்திருக்கிறது . ஆனால் மொத்தமாக ஆய்வு செய்து அதை எழுத்தாக்கும் பணியைச் செய்த பெருமை சௌபாவுக்கே சொந்தமானது .
மதுரை மத்திய சிறைச்சாலையில் நடந்த மிகப்பெரும் ஊழலை " மதுரைச் சிறையில் பெருச்சாளிகள் " என்று எழுதி சிறைத்துறையே சிறைப்பட்ட கட்டுரை அவனது உழைப்பில் உருவானது .
அரசுத் துறையில் , குறிப்பாக வருவாய்த்துறையில் பணியாற்றுகிறவர்கள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக ஆள் பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்று இருந்த எழுதப்படாத ஆணையை , அம்பலப்படுத்தியதும் அவன் தான் .
கொடைக்கானலில் ஒரு சில எஸ்டேட்களில் நடைமுறையில் இருந்த கொத்தடிமைத் தனத்தை , அப்போதிருந்த சப் கலைக்டர் குர்னிகால் சிங் உதவியுடன் வெளிப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு உதவியதும் அவன் தான் .
அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருந்தார் விகடன் ஆசிரியர் அமரர்.பாலசுப்ரமணியன் அவர்கள் என்பதையும் நான் அறிவேன் . இதுகுறித்து சௌபா மிகுந்த நன்றியோடு, அவர்பற்றி என்னிடத்தில் குறிப்பிட்டிருக்கிறான் .
பெரும்பான்மையான வாசகர்கள் ஓடிஓடித் தேடித்தேடிப் படித்த சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் அவனது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அப்போது ஜூனியர் விகடன் வாரமொருமுறை வரும் இதழாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் , அடுத்தவாரம் என்னவென்று வாசகர்களை ஏங்க வைத்த எழுத்துக்குச் சொந்தக்காரன் சௌபா .
ஒவ்வொரு வாரமும் எழுதி அச்சுக்கு அனுப்பவேண்டிய பகுதியை உரிய நேரத்தில் அனுப்பாமல் தாமதமாக அனுப்புவது சௌபாவின் வழக்கம் . பொதுவாகவே தாமதம் அவனது பண்புகளில் ஒன்றாகவே ஆகி விட்டிருந்தது. விகடன் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் . கடைசித் தபாலில் ஆர்.எம்.எஸ் (Railway Mail Service).. இல் போய் அனுப்புவது அவனுக்கு வேடிக்கையான வாடிக்கை . வேண்டுமென்றே திட்டமிட்டு அதைச் செய்வது அவனது நோக்கமல்ல . கடைசி நேரக் கெடுபிடியில் தான் கை தானாக எழுதுகிறது என்பான் என்னிடத்தில் ..
ஒருமுறை விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் சௌபாவிடத்தில் சிரித்துக்கொண்டே " சௌபா ...எம்.ஜி.ஆரை வைச்சுப் படம் எடுத்தப்பக் கூட இவ்ளோ டென்ஷன் இல்ல ... உன்கிட்ட தொடர் எழுதி வாங்குறது அத விடப் பெரிய டென்ஷன் ஆ இருக்கே " என்றார் .
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் குறித்த நேரத்திற்குப் போகாமல் சற்றுத் தாமதமாகப் போகும் பழக்கமுடையவர் என்று அறியப்பட்ட கவியரசு கண்ணதாசன் , தாமதமாக வந்து , பேச ஆரம்பிக்கும்போது " என் மதம் எப்போதும் தாமதம் " என்று சொல்வார். அதைத் தானும் சிரித்தபடி சொல்லும் பழக்கம் சௌபாவுக்கும் இருந்தது. வாசகர்களிடத்தில் பெரும் புகழ் பெற்றது சீவலப்பேரி பாண்டி . பின்னாளில் அது திரைப்படமும் ஆனது .அந்தக் கதை , அந்தத் திரைப்படம் தொடர்பாக வேறு சில நினைவுக்குறிப்புகளும் உண்டு , அதைச் சொல்லும் இடம் இதுவல்ல . பிறகு எப்போதாவது சொல்லுகிறேன் .
நான் சாத்தூரில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில் , எனது தொழிற்சங்கப் பணிகளை முடித்துக்கொண்டு எனது அறைக்குத் திரும்ப இரவு எத்தனை நேரம் ஆகுமென்று சொல்லவே முடியாது . நாள் ஒன்றுக்குப் பதினைந்து முதல் இருபது மணிநேரம் வேலை செய்துகொண்டு இருந்த நாட்கள் அவை. ஒரு நாள் இரவு பதினோரு மணி வாக்கில் தேனீர் அருந்த சங்க அலுவலகத்தில் இருந்து இறங்கி வந்தேன். மூர்க்கமாக அடித்துக்கொண்டே , நான்கைந்து பேரை போலீஸ்காரர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள் . கிருஷ்ணன்கோவில் மேட்டில் இருந்து , முக்குராந்தக்கல் இருந்த போலீஸ் ஸ்டேஷன் இறக்கம் வரை அடித்து இழுத்துக்கொண்டு போனார்கள் .பார்க்கக் கொடுமையாக இருந்தது .
எதற்காக என்று அங்கு நின்ற எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தேன். " ஆத்துப் பாலத்துக்கிட்ட சீட்டாடிக்கிட்டு இருந்த ஆளுகளப் பிடிச்சுட்டுப் போறாங்க . சீட்டாடப் போட்ட காசு , அவன் கையுல பையுல இருந்த காசு எல்லாத்தையும் போலீஸ்காரங்க எடுத்துப்பாங்க . நாளைக்குக் கோர்ட்ல ஆஜர் பண்ணி அபராதமும் போடுவாங்க " என்றார். " அதுக்கு எதுக்கு அடிக்கணும் " என்று கேட்டேன் . "பாம்புக்குப் பல்லு வெளக்குறதுக்கா , வெடுக்குனு கொத்துறதுக்கா ? ... அவன் கையில லத்தியக் குடுத்துட்டு எதுக்கு ஆட்டுறான்னு கேட்டா என்னத்தசொல்ல " என்றபடி போனார் ...
எனக்குப் பதட்டமும் கோபமும் ஒருசேர பற்றிக் கொண்டது . அதிலும் அடி வாங்கிக்கொண்டு போனவர்களில் ஒருவன் என்னைப் பார்த்தது , நான் அவனுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்று தீர்மானிக்க வைத்தது .
இது போன்ற வழக்குகள் குறித்தும் , போலீஸ்காரர்கள் நடத்தை குறித்தும் , பாதிக்கப்பட்ட சிலரிடம் விரிவாக விசாரித்தேன் .
அந்த இரவுக்குள் நான் அறிந்த உண்மைகள் எல்லாவற்றையும் மனதில் திரட்டிக்கொண்டு எனக்கு மிக நெருங்கிய ஒரு வழக்கறிஞரின் இல்லத்திற்கு அதிகாலையிலே போனேன் .
என்ன BK...இந்த நேரத்துல என்றார் வக்கீல் . நடந்தது எல்லாம் சொன்னேன் . பொறுமையாகக் கேட்டுகொண்டார்.
" என்ன செய்யணும் " என்றார் .
அந்த அரெஸ்ட் ஆன ஆளுங்களுக்கு நம்ம ஆஜராகி அவங்களுக்கு நீதி வாங்கித் தரணும் " என்றேன் .
ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரி வக்கீல் சிரித்தார் . "யோவ் ... வக்கீலு .. எதுக்கு சிரிக்குறீர் " என்றேன் .
அவர் சொல்ல ஆரம்பித்தார் .
நான் அதிர்ந்துகொண்டே இருந்தேன்.
வக்கீல் என்ன சொன்னார் ? இதற்கும் சௌபாவுக்கும் என்ன சம்பந்தம் ?
...அப்புறம் சொல்லுகிறேன் .
-பாரதி கிருஷ்ணகுமார் .

2 comments:
சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌந்திரபாண்டியன் என்கிற சௌபா ... 01 -பெரும்பான்மையான வாசகர்கள் ஓடிஓடித் தேடித்தேடிப் படித்த சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் அவனது புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அப்போது ஜூனியர் விகடன் வாரமொருமுறை வரும் இதழாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் , அடுத்தவாரம் என்னவென்று வாசகர்களை ஏங்க வைத்த எழுத்துக்குச் சொந்தக்காரன் சௌபா . எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் சார் அவரைப் பற்றி. நன்றி சார் திரு பாரதி கிருஷ்ணகுமார்
நடையோட்டம் இழுக்குது தோழர்.
Post a Comment