Wednesday, March 11, 2020

யாழ்ப்பாணம் கம்பன் விழா 2020




எந்த மண்ணுக்கு ஒருமுறையேனும் போகவேண்டும் என்று விரும்பினேனோ அந்த மண்ணுக்குப் போய்வரும் வாய்ப்பு வாய்த்தது .

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழாவில் பங்குபெறும் பாக்கியத்தினால் அது நிகழ்ந்தது .

சென்னையில் இருந்து புறப்பட்டு பலாலி விமானநிலையம் போய்ச்சேரும் போது பிற்பகல் பன்னிரண்டு மணி .

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாலுகாத் தலைநகரப் பேருந்து நிலையத்தை விடவும் கொஞ்சம் பெரியது என்று சொல்லிவிட முடியாத விமானநிலையம் .

விமான நிலையத்தைச் சுற்றி , கண்ணுக்குஎட்டிய தூரம் வரை ஒரு குடியிருப்பேனும் இல்லை .

எங்கும் காடுபோல அடர்ந்த மரங்கள் . பாதுகாப்புக் கோபுரங்கள் . முள் வேலிகள் . ராணுவச் சோதனைச்சாவடிகள் .
இராணுவ வீரர்கள் , குடியேற்ற அதிகாரிகள் , காவல் துறையினர் என எல்லோருமே நல்ல தமிழில் பேசினார்கள் .
கண்களைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள் .

நான் திரும்ப வருவதற்கு என்று தீர்மானித்துப் பயணச்சீட்டு போட்டிருந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக எனது விசாவுக்கான அனுமதித் தேதி முடிந்து இருந்தது .

எனவே எனது விசாவை நீட்டித்துத் தருமாறு குடியேற்ற அதிகாரிகளைக் கேட்டேன் .
நீங்கள் ஏன் முதல் நாளே இந்தியா திரும்பக்கூடாது என்று அவர் என்னைக் கேட்டார் .
அன்றைக்கு விமானப் போக்குவரத்து இல்லையே என்றேன் .
விசாவை நீட்டித்துத் தர இசைந்தார் .

ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டார் .

ஒரு முறைக்கு இரண்டு முறை பயணப் பெட்டிகளைத் திறந்து பார்த்துக் கவனமாகப் பரிசோதித்தார்கள் . கெடுபிடிகள் ஏதுமில்லை .

ஒரு சிறிய பாட்டிலில் , கால் வலிக்கென நான் வைத்திருந்த மஞ்சள் நிறமான மருந்துப் பொடியை எடுத்துத் திறந்து பார்த்த ஒரு பெண் காவல் அதிகாரி அது என்னவென்று தனது பெரிய கண்களால் , எனது சிறிய கண்களுக்குள் கேட்டார் .
விரல் நுழைத்து ஒரு சிட்டிகை மருந்தெடுத்து வாயில் போட்டுக்கொண்டு , என் சிறிய கண்களால் , அந்தப் பெரிய கண்களுக்கு விடை அளித்தேன் .

ஒரு வறண்ட புன்னகையைப் பதிலாகத் தந்தார் . அதே பெரிய கண்களால் போகச் சொன்னார் .

விமானம் அரைமணிநேரம் முன்னதாகத் தரை இறங்கியும் , இந்த நடைமுறைகளால் ஒன்றரை மணிநேரம் கழித்தே வெளியே வர முடிந்தது .

அழைக்க வந்தவர்கள் தவித்துப் போனார்கள் .


அதைவிட என்னோடு விமானத்தில் வந்த ஒரு வயதான மூதாட்டி ரொம்பவும் பரிதவித்துப் போனார் .

ஏனெனில் , எடை அதிகமாக இருந்ததால் தனது இரண்டு புடவைகளை எனது பெட்டியில் வைத்துக்கொள்ளுமாறு ஒரு மூதாட்டி, என்னை சென்னை விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டார் .

அப்படி யாராவது விமானப்பயணத்தில் கேட்டுக்கொண்டால் உதவாமல் இருப்பதே நல்லது என்பது பயணிகளுக்குத் தரப்படும் அறிவுரை , ஆலோசனை .
ஏனெனில் , அப்படி வாங்கி வைத்துக்கொள்ளும் பொருட்களில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் இருந்தால் வீண்பழி சுமக்க நேரும் .

தனது பிள்ளைகளின் துணை இல்லாமல் முதன்முறையாக விமானப்பயணம் செய்யும் அவர்,  தான் கொண்டுவந்த பொருட்களில் கூடுதல் எடை இருந்ததால் செய்யும் வழி தெரியாமல் தவித்துப் போய் இருந்தார் . சென்னையில் , வழி அனுப்ப வந்து வாசலுக்கு வெளியே நின்ற தனது பிள்ளைகளிடம் போய்க் கேட்டுவிட்டு வந்து என்னைக் கேட்டார் .

நான் சம்மதித்தேன் .

இலங்கையில் எனது விசா நீட்டிப்பும் , சுங்கப் பரிசோதனைகளும் முடிகிறவரை அவரும் காத்திருந்து தவித்துப் போனார் . நன்றி சொல்லிவிட்டுப் போகிறபோது "எண்ட பிள்ளைகள் இல்லாமல் இப்பத்தான் தனியா வந்து நிக்குறன் ... நல்ல வேளை அந்த ஆஞ்சநேயர் தான் எனக்குத்துணையா உங்களை அனுப்பி இருக்கார் " என்றார் .

அவருக்கு ஆஞ்சநேயர் நினைவு வந்ததற்கும் , டார்வினுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்தோம் .

ஆம் . என்னோடு தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்களும் வந்திருந்தார் .

பலாலி விமான நிலைய வாசல் வந்தபோது மணி இரண்டை நெருங்கி இருந்தது . ஆனாலும் சூரியன் தலைக்குமேலே தான்  நின்றது .

வெயில் . அதே சென்னை வெயில் .

ஒருமுறை சுற்றிப் பார்த்தேன் . பலாலி தான் .
யாழ்ப்பாணம் தான் . இலங்கை தான் . வெயில் மட்டும் தான் அதே வெயில் .



இன்னும் போகணும் ....










Saturday, February 22, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நிறைவு நாள்


 கோலகலமான நாள் .

அரங்கம் நிரம்பி வழிய , அரங்கிற்கு வெளியிலும் அதே அளவு மக்கள் கூட்டம் .

இலங்கையின் பொது வாழ்வில் பங்களித்த பெரு  மக்களுக்கு விருதும் பாராட்டும் வழங்கப்பெற்றது .

வாழ்நாள்  சாதனைக்கான கம்பன் புகழ் விருது பெற்றார் திரு எஸ் . பி . பாலசுப்ரமணியம் .

ஏற்புரையில் எஸ். பி .பி சொன்னார் . " எனது இசையின் மீது ஆணை . இதனை விட மதிப்பும் சிறப்பும் வாய்ந்த பாராட்டு எனக்கு எப்போதும் , என் வாழ்நாளில் கிடைத்ததில்லை ."

இருந்த நாட்கள் எல்லாம் கம்பனோடு ... கம்பனை நேசிக்கிறவர்களோடு, கம்பனை வாசிக்கிறவர்களோடு, கம்பனைக் கேட்கிறவர்களோடு இன்பமாய்க் கழிந்தது .

ஐந்து நாட்களும் இனிய சுவையான உணவு தந்தார்கள் .
ஒரு கோப்பைத் தேநீர் கூடக் கடைக்குச் சென்று குடிக்கிற தேவை இல்லை என்னும் அளவுக்கு பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள் .

உணவு சுவை பெறுவது உப்பு இனிப்பு கசப்பு புளிப்பு  என்பதான அறுசுவைகளால் அல்ல .

அன்பு , உபசரிப்பு என்னும் இரண்டே சுவைகளால் தான் உயிர் பெறுகிறது .

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் .

சில நாட்களில் கம்பவாரிதியே உணவு  பரிமாறிய  அழகும் வாய்த்தது .


நிறைவாகச் சொல்ல விரும்புகிறேன் .

எல்லாம் கம்பவாரிதியின் செயல் திறன் . எல்லோரையும் இசைவாக
இயக்கும் ஆளுமை . எப்போதும் அரங்கத்தின் ஓரத்தில் , ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , தன்னைத்தானே மறைத்துக்கொண்டு , மற்றவர்களுக்கு மேடை அமைத்து அழகு பார்த்துக் கொண்டே இருந்தார் .
அபாரமான துறவு நிலை .

பாராட்டுவதும் , போற்றுவதும் நமது பண்பு .

இத்தனைக்கும் நடுவில், அவரை ஈன்ற அருமை அன்னை மறைந்து பன்னிரண்டு நாட்களே ஆகி இருந்தது .
துறவியே ஆனாலும் தாய் மறைந்த துயரத்தைக் கடக்க இயலுமா ? .... ஒருபோதும் ஆகாது .

துன்பம் தொண்டைக்குழியில் இருக்க , செய்யவேண்டிய பணிகள் பற்றி மட்டுமே பேசுவது துறவு நிலை தான் .

அங்கு விழாவில் இது பற்றி எல்லாம் பேச இயலவில்லை .
நேரிலும் அதிகம் பேசிக்கொள்ள  வாய்க்கவில்லை .

இந்தியா புறப்படும்போது தான் இரண்டு நிமிடங்கள் துக்கம் விசாரித்துக் கொண்டேன் . மரபாக அல்ல . மனமார .

இதை நீங்கள் படிப்பீர்களா இல்லையா எனக்குத் தெரியாது கம்பவாரிதி .

ஆனால், உங்கள் அறிவு, புலமை, கல்வி ,மேதமை, இவைகளை விடவும் நான் வியந்து போற்ற விரும்புவது மனிதர்களை ஒருங்கிணைக்கும் உங்கள் ஆற்றல் .

கம்பனை அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றிக் கொடுத்த கொடை .


வணங்குகிறேன் ஜெயராஜ் .

Thursday, February 20, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நான்காம் நாள்

திங்கட்கிழமை . வேலை நாள் .

என்றபோதும் அரங்கம் நிறைந்தது .

அறத்தின் ஆறு என்பது பொதுத் தலைப்பு .

அறுவர் பேசினோம் .

அது கம்பன் காலத்து அறம் மட்டுமல்ல , என்றைக்கும் மாறாத , இன்றைக்கும் பயனளிக்கும் அறங்கள் .

எனக்களித்த தலைப்பில் என் பங்களிப்பைச் செய்தேன் .

கற்றறிந்த சபை களிப்புடன் வாழ்த்தியது .

மாலை அமர்வுகள் மேலும் பொலிவுடன் , திறம்பட நடந்தன .

அறிந்து உணர்ந்து ரசிக்கும் பார்வையாளர்கள் நம்மை மேலும் திறன் கொள்ளச் செய்கிறார்கள் .

நமது பொறுப்பை நமக்கு உணர்த்துகிறார்கள் .



....ஐந்தாம் நாள்



Wednesday, February 19, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... மூன்றாம் நாள்

இனிதே துவங்கியது மூன்றாம் நாள் நிகழ்வுகள் .

காலை ஒன்பதரை மணிக்கே அரங்கம் நிறைந்து இருந்தது .

ஒரு  ஞாயிறு காலை குறித்த நேரத்தில் விழா துவங்குவதையும் , கேட்போர் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே குழுமி இருந்ததும் வியப்பு அளிக்கும் உண்மைகள் என்பதை தமிழ்நாட்டில் ஒப்புக்கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன் .

இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பதைத் தனியே சொல்லுவது அவசியமில்லை .

கவிநய அரங்கிற்குத் தலைமை ஏற்று , சிறந்ததொரு உரை நிகழ்த்தினார் திருமதி . பாரதி பாஸ்கர் .

தொடர்ந்து நான்கு ஆளுமைகள் , அழகிய விதத்தில் தங்கள் தலைப்புகளில் கம்பனைச் சாறு பிழிந்து சுவை சேர்த்தார்கள் .

இறுதியாக என் முறை வந்தது .

ஏறக்குறைய உணவு இடைவேளை நெருங்கிக்கொண்டு இருந்தது .

கம்பனில் காதல் என்பது தலைப்பு ...

கம்பனே காதலால் தான் காப்பியம் படைத்தான் என்று துவங்கினேன் .

ஆசை பற்றி அறையலுற்றேன் என்று கம்பன் அவையடக்கத்தில் பாடுவதும் அது தானே ....

உணவு இடைவேளை கடந்தும் பேசும் அனுமதி கிடைத்தது .

எமது மொழியின் மீதும் , கம்பனின் மீதும் கொண்ட காதலால் அரங்கம் கசிந்துருகி நின்றது .

எல்லோரும் காதலாகி இருந்தோம் .

வேறு பணிகள் காரணமாக நான் மாலை நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை .


... நான்காம் நாள்


Tuesday, February 18, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... இரண்டாம் நாள்

இரண்டாம்  நாள் நிகழ்வுகள் , குறித்த நேரத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கியது . நடுவராகப் பொறுப்பேற்று திறம்பட அவையை வழி நடத்தினார் வழக்கறிஞர் திருமதி .கே . சுமதி .

சுழலும் சொற்போரில் பங்கேற்ற பெரும்பான்மையோர் இளைஞர்கள் .
அடுத்த தலைமுறைக்குக் கம்பனைக் கைமாற்றிக் கொடுத்தது தான் இலங்கைக் கம்பன் கழகம் செய்த மகத்தான சாதனை .

அந்த சாதனை ,தமிழ் மணம் ததும்பிக் கிடைத்த நாள் .

இரண்டாம் நாள் எனக்கு ஏதும் உரையாற்றும் பணிகள் இல்லை .
ஆனாலும் , நான் எங்கும் ஊர் சுற்றப் போகாமல் அனைவரது உரைகளையும் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தேன் .

எப்போதும் கற்றலிற் கேட்டலே நன்று .



.... மூன்றாம் நாள் 

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... முதல் நாள்



 அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகள் ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது .

விழா நான்கு நாட்கள் நடைபெற்றது .

ஜனவரி முப்பத்தொன்றாம் நாள் மாலை விழா மங்கலத்துடன் விழா துவங்கியது .

இலங்கையின் சமூக வாழ்வில் , பல்வேறு துறைகளில் பங்களித்த பெருமக்களுக்கு விருது வழங்கிச் சிறப்புச் செய்தார்கள் .

ஏற்றமிகு இளைஞர் விருது பெற்றார் தம்பி தீபச்செல்வன் .
விழா மேடையில் அவருக்கு அருகில் அமரும் இனிய வாய்ப்பு அமைந்தது .

நிறைவாக முதல் நூலும் முதன்மை நூலும் என்கிற தலைப்பில் எழிலுரை நிகழ்த்தும் பெரும்பேறு வாய்த்தது .

மிகப்பெரிய அரங்கம் . நிரம்பி இருந்தது .

ஒவ்வொரு சொல்லையும் கேட்டு ,உணர்ந்து ,அறிந்து ... ஆரவாரம் செய்து அங்கீகாரம் செய்தார்கள் .

இலங்கைத் தமிழர்கள் உரையாடுவதில் மட்டுமல்ல .... உணர்ந்து கொண்டாடுவதிலும் தமிழ் மொழிக்குப் பெருமிதம் சேர்க்கிறார்கள் .

அரங்கத்தில் சரிக்கு சமமாகப் பெண்களும் , அதனிலும் சிறப்பாக இளையோரும் திரண்டிருந்தார்கள் .

விழா மேடையில் , அரங்கப் பணிகளைச் செய்து கொண்டிருந்தது முற்றிலும்  முப்பது வயதிற்கும் குறைவான இளையோரே ...

அவர்கள் அனைவருமே கம்பனை வாசிக்கிறவர்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது . நாம் பேசுகிற போது அவர்கள் அதனை அவதானிக்கும் முறை நமக்கு , நமது பொறுப்பை உணர்த்துகிறது .


... இரண்டாம் நாள்



Thursday, February 13, 2020

வடகரை நாவல் வெளியீட்டின் போது ....


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை புத்தகக் கண்காட்சியில் .... திரு . இராஜேந்திரன் இ.ஆ.ப எழுதிய வடகரை நாவல்  வெளியீட்டு நிகழ்வில் ..

Wednesday, February 12, 2020

பேராசிரியர் .பாரதி புத்திரன்


கோவையில் இயங்கி வரும் " பாரதி பாசறை " 2019 ஆம் ஆண்டிற்கான பாரதி விருதுக்கு உரியவராக பேராசிரியர் . பாரதி புத்திரன் அவர்களைத் தேர்வு செய்தது .

மகாகவியை ஒரு தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுத்த பெருந்தகை . விருதால் பெருமையும் , விருதுக்குப் பெருமையும் தந்தவர் .
தகுதி மிக்க பண்பாளர் .

உலகமெங்கும் இயங்கும் பாரதிக்கான இலக்கிய அமைப்புகள் , அவரை அழைத்து மகாகவி பாரதி பற்றி அவர் குழைந்து காதலாகிக் கசிந்து உருகுவதைத் தரிசிக்க வேண்டும் . 

விருது பெறும் நிகழ்வுக்காக கோவை வந்த பாரதி புத்திரனுடன் பாரதி அன்பர்கள் .




ஒரு முன்கதை

2003 ஆம் ஆண்டு அவர் எழுதிய " தம்பி நான் எது செய்வேனடா " என்னும் நூலை ஒரு பின்னிரவில் முழுமையாக வாசித்தேன் .


வாசித்து முடித்ததும் , அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் .


"மகாகவி பாரதிக்கு  ஆண் வாரிசு இல்லை என்ற குறை உன்னால் தீர்ந்தது" என்ற வரிகளோடு அந்தக் கடிதம் நிறைவுறும் .







Wednesday, January 22, 2020

சென்னைக் கம்பன் கழகம்

சென்னைக் கம்பன் கழகம்  நடத்திய விருது வழங்கும் விழாவில் , படைப்பிலக்கிய விருது பெற்றபோது .... 






சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி இரண்டு

 சமூக நல்லிணக்கப் பேரவை 



 நாவல் என்னை ஈர்த்தது .

எழுத்தெண்ணிப் படித்தேன் .இந்தப் படைப்பு கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்று ஸபிக்கு சொன்னேன் . அதனால் தான் உங்களுக்கு அனுப்பினேன் என்றார் .

தான் தலைமை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் "சமூக நல்லிணக்கப் பேரவை  " என்னும் அமைப்பின் மூலம் நாவலுக்கான அறிமுகக் கூட்டத்தை நடத்தினார் .

அரங்கம் நிறைந்த கூட்டம் . அரங்கில் பேசிய எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள் . அந்த நாவலுக்கு என்று நடந்த முதல் நிகழ்வு என்கிற பெருமையை நாங்கள் அனைவரும் பெற்றோம் .

தேனி இந்து நாடார் உறவின்முறைக் கல்விக்கூடங்களின் பொதுச்செயலாளர் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு .டி . ராஜ்மோகன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார் . அழைப்பிதழைப் பார்த்தால் அறிந்து கொள்வீர்கள் . பல் துறை சார்ந்த பெருமக்கள் திரளாகப் பங்கேற்று பெருமை சேர்த்தார்கள் .

இப்போது நிறைய விருதுகளையும் , பரிசுகளையும் இந்தப் படைப்பு பெற்றிருக்கிறது .

வாங்கி வாசியுங்கள் . ஒரு வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும் பாங்கை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் .

படைப்பும் , படைப்பாளர்களும் கொண்டாடப்படுவது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்யும் .

சமூக நல்லிணக்கப் பேரவையும் , அதன் அழைப்பை ஏற்றுத் திரளாக வந்த பெருமக்களையும் நான் வாழ்த்துகிறேன் .




 https://youtu.be/7apCj6R0MQ8
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .

Thursday, January 16, 2020

சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி ஒன்று

எப்போதும் நான் "ஸபி" என்று அன்பு பொங்க அழைக்கும் முகமது ஸபிக்கும் எனக்கும் முப்பது ஆண்டு கால நட்பு .

தொண்ணூறுகளின் இறுதியில், தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின்  கலைஇரவு நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்தேன் . தேனி பேருந்து நிலையத்திற்கு அருகில் , பங்களாமேட்டில் மதுரைக்குப் போகிற சாலையை அடைத்துப் பெரிய மேடை போட்டிருந்தார்கள் .

பின்னிரவில் பேசத் துவங்கினேன் .  " கோபுரங்களும் குப்பைமேடுகளும் " என்பது நான் தந்த தலைப்பு . இலக்கியத்தில் எது கோபுரமாக உயர்ந்து நிற்கிறது , எது குப்பைமேடாகச் சிறுத்துக் கிடக்கிறது என்பது அன்றைய பேச்சின் சாரம் . ஒரு மணி நேரம் இருபது நிமிடம் பேசி இருப்பேன் .

பேசி முடித்துப் பெருகிய வியர்வையோடு மேடைக்குப் பின்புறம் சென்று அமர்ந்தேன் . தோழர்கள் மனம் திறந்து பாராட்டிக்கொண்டு இருந்தார்கள் .
எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் .

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு , ஒரு தேநீர் குடிக்க எழுந்து போனேன் . விழா மேடைக்கு வலதுபுறம் இருந்த கடைக்குப் போனேன் . அங்கும் பலரும் என் பேச்சைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

சிவந்த , மெலிந்த தோற்றம் கொண்ட ஒருவர் என் கரங்களைப்பற்றி எனக்குப் பாராட்டுகள் சொன்னார் . என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் . நான் சம்மதித்தேன் . புகைப்படம் எடுக்கவும் , உரையாடவும்  வசதியாக மேடைக்கு எதிர்ப்புறமாக மேற்கு நோக்கி நகர்ந்தோம் . அவர் தான் பேசிக்கொண்டே இருந்தார் . ஏதோ அவசர வேலை இருப்பது போலவும் , உடனே புறப்பட்டுப் போகப்போகிறவர் போலவும் விரைந்து பேசினார் . தந்தி அடிப்பது போல ஒரு படபடப்போடு பேசினார் . ஆனால் அப்படி ஏதுமில்லை . நீண்டநேரம் பேசினார் . புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .பேருந்து நிலையத்திற்கு அருகில் மூடிஇருந்த ஒரு கடை வாசலில் நின்று
படமெடுத்துக் கொண்டோம் .  அவரது நண்பர் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார் .


எனக்கு இந்தப் புகைப்படம் அனுப்புவீர்களா என்று கேட்டேன் . அனுப்புவதாக உறுதி தந்தார் . அவர் கையில் இருந்த ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எனது அலுவலக முகவரியை எழுதிக் கொடுத்தேன் . பத்து நாட்களுக்குப் பிறகு நானும் அவரும் சேர்ந்து இருக்கும் அந்தப் புகைப்படம் எனக்கு வந்தது .

அன்றிலிருந்து இன்று வரை சேர்ந்து இருக்கிறோம் . வாழ்வில் நிறைய இழப்புகளை , துன்பங்களை , இருவருமே  சந்தித்து இருக்கிறோம் . இருவரும் , ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் . ஒருவருக்கொருவர் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் . கற்போடு இருக்கிறது எங்கள் நட்பு .

அன்றாடம் சந்திப்பதில்லை . அன்றாடம் பேசிக்கொள்வதும் இல்லை . ஆனால் இருவரும் எப்போதும் அருகிலேயே இருக்கிறோம் .


சில மாதங்களுக்கு முன் , ஒருநாள் அலைபேசியில் அழைத்து சுளுந்தீ நாவல் படித்து விட்டீர்களா என்று ஸபி கேட்டார் . அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்றேன் .

உடனே அனுப்புகிறேன் . அந்த நூலுக்கு ஒரு அறிமுக விழா வைக்க வேண்டும் என்றார் . அவ்வளவு முக்கியமான படைப்பா  என்று கேட்டேன் . ஆம் என்றார் .
புத்தகம் அனுப்புங்கள் என்றேன் . வாசிக்காமல் எந்தப் புத்தகம் தொடர்பான ,எந்த விழாவுக்கும் நான் போவதில்லை  என்று அவருக்குத் தெரியும் .

சில நாட்களில் புத்தகம் வந்தது. வாசிக்கத் துவங்கினேன் .

.... தொடரும்
 


அன்பு நண்பன் ஸபி .










Thursday, January 9, 2020

பணியிடைப் புகைப்படம்



 வாச்சாத்தி ஆவணத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த சமயம் , சாலையோர மூங்கில் புதர்களைப் படம் பிடிக்க எண்ணி , ஒரு மலைப்பாதையின் வளைவில் நின்று பணியாற்றிக்கொண்டிருந்த போதும் ... 

ஏலகிரி மலையில் , பராமரிக்கப் படாத ஒரு பூங்காவில் வேலைகளைத் திட்டமிட்ட போதும் ...









Wednesday, January 8, 2020

தம்பி தாணப்பன் எழுதிய முகநூல் பதிவு

 கீழே உள்ள புகைப்படம் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் போனபோது எடுத்த புகைப்படம் . அதில் நீலச்சட்டை அணிந்திருப்பது தம்பி தாணப்பன் .

Tuesday, January 7, 2020

ஒரு வேலை நிறுத்தமும் , ஒரு பிரசுரமும் ....

ஒரு முன்னுரை 

அப்போது நான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்களின் சங்கத்தில் பொதுச்செயலாளர்பொறுப்பில் இருந்தேன் . எங்கள் சங்க அலுவலகம் , அந்தப் பகுதியில் இயங்கிய அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைகிற , இயங்குகிற சந்திப்பு மையம் ஆக இருந்தது . அது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலம் . அது பற்றி தனியே எழுதும் எண்ணம் இருக்கிறது . அதில் ஒன்றை , ஒரு கணத்தை , மேனாள் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவராக இருந்த தோழர் . பாலசுப்ரமணியம் முகநூலில் பதிவு செய்திருக்கிறார் . 
தோழர் . வீரகடம்பு அதை எனக்கு அனுப்பி இருந்தார் . 

இதை வாசித்ததும் , கொஞ்சம் முரட்டுத்தனமாக, நான் நடந்து கொண்டது போல சிலருக்குத் தோன்றலாம் . ஆனால் அது ஒரு தோற்றமே . உண்மையில் , ஒன்றைப் புதிதாகவும் , சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்கிற நமது உறுதியைச் சிலர் பிடிவாதம் என்று மொழிப்பெயர்ப்பு செய்து கொள்ளுகிறார்கள் . நாம்  நினைத்தது போலத்தான் எல்லாமே நடக்கவேண்டும் என்று நாம்  நினைப்பதாகப்  பொருள் கொள்ளுகிறார்கள் . அவர்கள் , மாற்றங்களை விரும்பாத , அல்லது மாற்றங்களால் ஒருவர் அங்கீகாரம் பெறுவதைக் கண்டு அஞ்சுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் . 


உண்மையில் பெரும்பான்மையான தோழர்கள் மாற்றங்களை நேசிக்கிறார்கள் . அதனை உளமார விரும்புகிறார்கள் . அங்கீகரிக்கிறார்கள் . பெரும் திரளாக நம்முடன் அணி வகுக்கிறார்கள் . நமது கூட்டு பேர உரிமையின் வலிமையை உயர்த்துகிறார்கள் . அவர்களே , தாங்கள் தேர்வு செய்த சங்கத் தலைவர்களைக் காப்பாற்றுகிறார்கள் .


எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் , அப்போது பெய்த மழையில் புறப்பட்டு வரும் மண் வாசனை போல அதை  வெளிப்படுத்துகிறார்கள் . நினைவின் பூக்களில் இருந்து மகரந்தங்களைக் காற்றில் மிதக்க விடுகிறார்கள் . அதன் நறுமணம் உண்மையின் நறுமணம் . தோழமையின் நறுமணம் . 

இதை மறந்தவர்களும் உண்டு . மறைக்கிறவர்களும் உண்டு .இவர்கள்தான் எல்லாப் பூக்களையும் மலடாக்கி  விட முயல்கிறார்கள் . சமயங்களில் ஓரளவு வெற்றியும் பெற்று விடுகிறார்கள் .


ஆனால் , அன்பின் மகரந்தங்களால் பூக்கள் பூப்பதும் , கனிவதும் , விதைகள் மண்ணோடு கலப்பதும் , மீண்டும் பூப்பதும் நடந்துகொண்டே தானிருக்கும் .


அப்படி , முப்பது ஆண்டுகளுக்குப் பின் , தோழர் பாலுவின் நினைவில் பூத்த பூ .இந்த நினைவுக் குறிப்பு . நம் தோழமை மணம் பரப்புகிறது பாலு ... மனமார்ந்த நன்றி .

நிறைய எழுதுங்கள் .






சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துப் பறந்த காலத்தின் சுவடுகள்..... 
➖➖➖➖➖➖➖➖
அன்றைய காலகட்டத்தில் மாநில செயற்குழு நடந்து முடிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு போராட்ட முடிவு இருக்கும்.

மாவட்டத்தில் அந்த இயக்கத்திற்கான தயாரிப்பு வேலைகளில் உற்சாகமாக இறங்கி விடுவோம்.

ஆனால்... . தோழர்.பாலுச்சாமி செய்து வந்த பல வேலைகளில் ஒரே ஒரு வேலையை மட்டும் யாரும் செய்ய முன்வர மாட்டார்கள். அது நோட்டீஸ் எழுதுவது.

அது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்காக வட்ட அளவில் வாயிற் கூட்டங்கள் நடத்துவது என்ற மாநில செயற்குழு முடிவு .


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கூட்டத்தில் சிறப்புரையாற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை அழைப்பதென முடிவு செய்திருந்தோம்.

ஆனால்.. நோட்டீஸ் எழுத வேண்டுமே.. தோழர்.பாலுச்சாமியிடம் ஓடினேன்.
அவர்... "வட்டக் கிளைக்கு எல்லாம் நான் எழுதித் தர முடியாது, வட்டத் தலைவர் நீயே சங்கத்தில இருக்கிற பழைய மாடல பாத்து எழுதிக்கோ "என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு வந்து பழைய நோட்டீஸை தேடி எடுத்து அப்படியே காப்பி அடித்தேன்.

அது A 4 சைஸில் நான்கு பக்கம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் தோழர்.பாலுச்சாமியிடம் காட்டி சரியாக இருக்கிறதா என்று கேட்டேன்.

அவர், அதை கையில் கூட வாங்கவில்லை.. போய் தோழர்.கிருஷ்ணகுமாரிடம் காட்டி அவர் பெயரை போடறதுக்கு பெர்மிசன் வாங்கிட்டு பிரஸ்ல கொடுத்து விடு என்றார்.


தோழர்.கிருஷ்ணகுமாரிடம் போய் நோட்டீஸை காட்டி அவர் பெயர் போட அனுமதி கேட்டேன்.

அவர் என் கையில் இருக்கும் பேப்பரை வாங்கி இது என்ன? என்று கேட்டார். ..

நோட்டீஸ் என்றேன்...

அவர் ஒன்றுமே சொல்லாமல் அதை அப்படியே கசக்கி கீழே போட்டுவிட்டு போயி வேற எழுதிட்டு வாங்க தோழர் என்றார்.

நான் கீழே கசக்கிபோட்ட பேப்பரை எடுக்கப் போனேன்.

ஆனால், அவர் அதை எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு சென்று புதிதாக எழுதினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் எழுத முடியவில்லை.

தோழர். கிருஷ்ணகுமாரிடம் கொண்டு போய் காட்டினேன். அவர் அதையும் கசக்கி கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வேறு எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.

இப்படியே ஐந்து முறை அலைய வைத்தார்.
ஐந்தாவது முறை நான் எழுதிக் கொண்டு போன நோட்டீஸ் 1 x 8 சைஸில் ஒரு பக்கம் இருந்தது.

அதைக் கையில் வாங்கிய அவர் நான் எழுதிய பக்கத்தை பேனாவால் அடித்து விட்டு அந்த பேப்பரின் பின் பக்கத்தில் 1 x 16 சைஸில் நோட்டீஸ் எழுதிக் கொடுத்தார்... 

➖➖➖➖➖➖➖➖
செப்- 6, 1990, அகில இந்திய வேலை நிறுத்தம்..



நமக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்?
விளக்க வருகிறார் .... பாரதி கிருஷ்ணகுமார்


நாள் :      இடம்: மாவட்ட ஆட்சியரகம்,
எல்லாரும் வாங்க, விருதுநகர் கிளை.
➖➖➖➖➖➖➖➖

நான் அதை ஒரு மாதிரியாகப் பார்த்து இது போதுமா தோழரே.. என்று கேட்டேன்.

போய் இதை அச்சடித்து விநியோகம் செய்து விட்டு என்ன ரெஸ்பான்ஸ் ன்னு வந்து சொல்லுங்க என்றார்.

நோட்டீஸ் அளவோ உள்ளங்கை அளவு ...
அதில் இருப்பதோ ஆறே .. ஆறு வரிகள் மட்டும்.... இதை, யார் படிப்பார்கள் என்ற சந்தேகத்தோடு விநியோகித்தோம்.

என்ன ஆச்சரியம்..
அந்த நோட்டீஸை ஒருவர் கூட கீழே போடாமல் திரும்பத் திரும்ப படித்தார்கள்...

தோழர்.கிருஷ்ணகுமாரை பார்த்து நடந்ததைச் சொன்னோம். அப்போது சொன்னார்...
" தோழர்களே... நோட்டீ ஸோ.. புத்தகமோ கையில் எடுத்தால் கீழே வைக்காமல் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்... என்ன பேசப்போகிறார்கள் என்பதைக் கேட்க கூட்டத்திற்கு போக வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும்...

அதை விடுத்து பக்கம், பக்கமாக எழுதினால் ... சலிப்பு ஏற்பட்டு படிக்காமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் ...

ஒரு வேளை முழுவதுமாக படித்து முடித்தார்கள் என்றால்... இதைத் தானே பேசப் போகிறார்கள் என்று கூட்டத்திற்கே வரமாட்டார்கள்... என்றார்.


என்ன ஆச்சரியம்.. அன்றைய கூட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டீஸ் எழுத அன்று தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.

இரா.பாலசுப்பிரமணியன், முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

Friday, January 3, 2020

kumaragurubarar - bharathi krishnakumar - குமரகுருபரர் - பாரதி கிருஷ்ணகுமார்

என் மனம் கவர்ந்த படைப்பாளிகளில் ஒருவர் குமரகுருபரர்.அவரது நீதி நெறி விளக்கம் ஒரு ஒப்பற்ற படைப்பு . அதன் ஈற்றடிகளில் நான் மயங்கி இருக்கிறேன் . அவரைப் பற்றியும் ,அவரது படைப்புகள் பற்றியும் நண்பர்களிடம் நிறையப்பேசி இருக்கிறேன் . ஆனால் , ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என்பதாக மட்டுமே என்னை அறிந்தவர்களும் , அதாக மட்டுமே என்னை அறிமுகப்படுத்த விரும்பியவர்களும் ,கம்பனை, குமரகுருபரரை, அருட்பிரகாச வள்ளலாரை, கண்ணதாசனைப் பற்றி நான் பேச மாட்டேன் என்று தாங்களே நம்பினார்கள் .விரும்பினார்கள் . சிலர் அதை ஒரு செய்தியாகவே எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் . கம்பனைப் பற்றி பேசுமாறு இராஜபாளையம் கம்பன் கழகம் வாய்ப்பளித்தது. குமரகுருபரரைப் பற்றி பேசும் வாய்ப்பை திருப்பூர் தமிழ்ச் சங்கம் தந்தது. ஒரு தனிப்பட்ட உரையாடலில் நான் குமரகுருபரரின் பாடல் ஒன்றை மேற்கோளாகச் சொன்னதும் மகிழ்ந்து போனார் திருப்பூர் தமிழ்ச் சங்க செயலாளர், ஆடிட்டர் திரு. லோகநாதன். அதன் விளைவே இந்த உரை. திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.

https://youtu.be/ZAOVq5h6c7E
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் . 

Saturday, December 28, 2019

பாரதி விழாவில் ...

கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி விழாவில் ...

Thursday, December 26, 2019

பாரதி கிருஷ்ணகுமார் | உயிர்மை சுஜாதா விருதுகள் 2019 | Bharathi Krishnakumar speech

ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , சில மாதங்கள் எங்கும் போக இயலாத சூழலில் கிடந்தேன் . வருவாய்க்கான வழிகள் எல்லாம் அடைபட்டுக்கிடக்க , மருத்துவச் செலவுகள் அடைபடாமல் போய்க்கொண்டிருந்தது . இப்படியொரு விபத்தில் சிக்குவதும் , அதன் பிறகு அதனினும் துன்பமான மருத்துவச் செலவுகளில் அகப்படுவதும் முதன்முறை அன்று . மூன்றாவது முறை . விபத்தில் அகப்பட்டதை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை . அருகில் இருந்து அறிந்து கொண்டவர்கள் தவிர மற்றவர்களுக்குச் சொல்லவில்லை .நிகழ்ச்சிகளுக்கு யாராவது அழைத்தாலும் , வர இயலாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தேன் . மனுஷ் அழைத்தார் . சுஜாதா விருது வழங்கும் விழாவிற்கு .... இயலாது என்றேன் . ஏனென்றார் . தயக்கத்துடன் உடல்நிலை குறித்துச் சொன்னேன் . அவரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளாமைக்குக் கடிந்து கொண்டார் . எத்தனை வசதி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் . விழாவிற்கு வந்து விடுங்கள் என்றார் . தயங்கினேன் . ஏனெனில் இடது கையில் போட்டிருந்த கட்டு கழற்றப்படாமல் இருந்தது . என் தயக்கத்தை தகர்த்தார் . நீங்கள் தான் சுஜாதாவைப் பற்றி பேச வேண்டும் என்றார் . என் பேச்சு அவருக்கு எத்தனை முக்கியம் என்று சொன்னார் . நான் வெட்கப்படும் அளவுக்கு என்னைப் புகழ்ந்தார் . வெட்கம் தந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன் . பல மாதங்களுக்குப் பிறகு எனக்கும் ஒரு நடை எங்காவது போகவேண்டும் என்றிருந்தது . மனுஷ்யபுத்திரன் அதை சாத்தியப்படுத்தினார் . சுஜாதா எங்கள் இருவருக்கும் இடையில் காரணமாய் இருந்தார் . மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றி . நிழலிலேயே கிடந்த உடலும் மனமும் வெயில் குடித்த நாள் அது. உள்ளுக்குள் ரொம்ப வெப்பமாக இருந்தது . பேசப்பேச, உடம்பு குளிர்ந்துகொண்டே இருந்தது .மறக்க முடியாத நாட்களில் ஒன்று .


பாரதி கிருஷ்ணகுமார்.

https://youtu.be/1eGNazC3h5E

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் . 

அந்த அரபிக் கடலோரம் ...

மஸ்கட் .... ஓமன் நாட்டின் தலைநகரம் .
அங்கு , அரபிக்கடலின் மேற்குக் கரையில்

Wednesday, December 25, 2019

உருவி எடுக்கப்பட்ட கனவு - நூல் வெளியீடு - மதுரை

 அன்பு நண்பரும் , தோழருமான திரு . சென்றாயன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது .

திருப்பரங்குன்றத்தில் , பதினாறு கால் மண்டபத்திற்கு அருகில் நடந்தது . அன்று பேசிய பேச்சின் பதிவு எனக்கு வந்து சேரவில்லை .
புகைப்படங்கள் மட்டுமே சான்றாக நிற்கின்றன .


பாரதி கிருஷ்ணகுமார்.

பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை | கரன் கார்க்கி | மரப்பாலம் Bharathi Krishnakumar speech

எல்லோருக்கும் , இப்போதும் சொல்ல விரும்புகிறேன் .
"மரப்பாலம்" மகத்தான படைப்பு . வாங்கிப் படியுங்கள் . பாரதி கிருஷ்ணகுமார் .

https://youtu.be/QuiN4NNG8mA

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .

பாரதி கிருஷ்ணகுமார் | கன்னிமரா நூலகம் | Bharathi Krishnakumar |

கன்னிமரா நூலகம் நடத்திய நூலகவார விழாவில் , ஒருநாள் பேச அழைத்தார்கள். அரங்கில் கூடிஇருந்தவர்களில் பெரும்பான்மையோர் , வழக்கமாக கன்னிமராவுக்கு வாசிக்க வருகிறவர்கள் . எனவே இயல்பாகவே தேர்ந்த ரசனையோடு இருந்தார்கள் . அத்தகைய பெருமக்களின் முன்பு பேசக்கிடைத்த வாய்ப்பு ஒரு வரம் . கன்னிமரா நூலக நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும் . பாரதி கிருஷ்ணகுமார் .

https://youtu.be/Ukpel3cVSTg

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்

Tuesday, December 24, 2019

பாரதி கிருஷ்ணகுமார் | பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி | Bharathi KrishnaKumar

இப்போதெல்லாம் தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன . இது பாராட்டுதலுக்குரியது .ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் அமைப்புகளோ , தனி நபர்களோ இதனை முன்னெடுக்கிறார்கள் . சில மாவட்டங்களில் , அந்த மாவட்டத்தின் , மாவட்ட ஆட்சித்தலைவர்கள் புத்தக விழாக்களை அரசு விழாவாக நடத்தி விடுகிறார்கள் . அந்த மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்களை அந்தத் திருப்பணியில் இணைத்துக் கொள்கிறார்கள் .அவர்கள் தாங்கள் பொறுப்பில் இருக்கும் காலம் முழுவதும் இதனைத் திறம்படச் செய்து முடிக்கிறார்கள் . அவர்களுக்குப் பிறகு வரும் சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , இந்த நற்பணியைத் தொடர்ந்து செய்து , ஒரு சமூகம் வாசிக்கப் பேருதவி செய்து தருகிறார்கள் . (வேறு சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வந்ததும் செய்கிற முதல் பணி, புத்தகத் திருவிழாக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் . அது ஒன்றும் அரசின் வேலை இல்லை , என்பதே அவர்கள் கருத்து . "ஒரு நல்ல அரசாங்கம் , தனது மக்கள் அறிவு பெறுவதை ஒருபோதும் விரும்பாது " என்கிற டால்ஸ்டாயின் வாசகத்தைப் படித்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்.) தனது மக்கள் வாசிக்கவேண்டும் , புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்கிற மேன்மையான எண்ணம்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிலர் புத்தகத் திருவிழாக்களை பெரும் சிறப்போடு நடத்தினார்கள். மாவட்டம் முழுவதும், அதில் பங்கேற்கும் வண்ணம் எல்லாத் துறைகளையும் அதில் ஒருங்கிணைத்தார்கள் . மாவட்ட மக்களின் திருவிழாவாக , மக்களை உணரச் செய்தார்கள் . புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் தானும் வந்து , எல்லோரும் பார்க்க புத்தகங்கள் வாங்கினார்கள் . புத்தகத் திருவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கலை இலக்கிய நிகழ்விலும் வந்து இருந்து பங்கேற்று முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் . ஆற்றலும் வாசிப்பும் நேர்மையும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்து, அவர்களைப் புத்தகத் திருவிழாவில் தொண்டர்களாக நிறுத்தினார்கள் . தமது அழைப்பை ஏற்று வந்த பதிப்பகங்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்கிற அக்கறையோடு அன்றாட விற்பனையைக் கண்காணித்தார்கள் . மாவட்டத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் , கல்லூரிகளும் குழந்தைகளைப் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வருவதை அட்டவணை இட்டு உறுதி செய்தார்கள் . இப்படியாக , இன்னும் பல பத்து "வேலைகளை" அவர்கள் செய்ததை நான் அறிவேன் . எல்லாவற்றையும் எழுத இங்கே இடமில்லை . இப்படியான பணிகளைச் செய்தவர்களில் ஒருவர் , மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று அறியப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு தர்வேஷ் அஹமது இ .ஆ .ப. அவர்கள் . மாவட்டமே கொண்டாடும் வண்ணம் நிகழ்த்தினார் . ஒரே வரியில் சொல்வதானால் , வளர்ந்த வளமான மாவட்டங்களில் கூட நடக்காத புத்தக விற்பனையை பெரம்பலூரில் நடத்திக் காட்டினார் . புத்தகத் திருவிழாவை ஒட்டி நடந்த கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் . தான் மாற்றலாகிப் போனபின்னும் புத்தகத் திருவிழா நடக்கும் வண்ணம் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கிய சிறப்பும் திரு .தர்வேஷ் அஹமதுவுக்கு உண்டு. இத்தகைய சிறப்புடைய பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் ஆறாம் ஆண்டு விழாவில் பேசியது , இந்த உரை . பாரதி கிருஷ்ணகுமார்


https://youtu.be/8o9MdDd4TIc

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்

பொன்மாலைப்பொழுது நிகழ்வு / அண்ணா நூற்றாண்டு நூலகம் /கற்க கற்க / பாரதி கிருஷ்ணகுமார்

அண்ணா நூற்றாண்டு நூலகமும் , பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்திய தொடர் நிகழ்வே " பொன் மாலைப் பொழுது ". அந்தத் தொடர் நிகழ்வின் ஐந்தாவது அமர்வில் உரையாற்றும் வாய்ப்பை அளித்த பெருமக்களுக்கு எனது நன்றியும் வணக்கமும் . குறித்த நேரத்தில் நிகழ்வைத் தொடங்கினார்கள் . தகுதியும் , வாசிப்பும் , கொண்ட பார்வையாளர்கள் அரங்கை நிறைத்தார்கள் . இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் . இலக்கியம் மட்டுமன்றி பல்துறை சார்ந்த பெருமக்கள் பேச அழைக்கப்பட வேண்டும் . ஒரு நூலகத்தில் வாசிப்பு மட்டுமின்றி , உரையாடலும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் . கற்றலும் , கேட்டலும் வேறு வேறு அல்ல . இன்னும் சொல்லப்போனால் இத்தகைய உரையாடல்கள் ஒருவரை வாசிப்பின் பக்கங்களுக்குள் ஈர்க்கும் . கேட்பது , கற்பதின் சிறப்பை உணர்த்தும் . கற்க வைக்கும் . "கற்றலிற் கேட்டலே நன்று" என்று அவ்வை பாடியதன் பொருள் இதுவன்றி வேறில்லை . மாறாகக், கேட்பது கற்பதை விடச் சிறந்தது எனப் பொருள் கொள்ளுதல் பிழையானது . கேட்கிறவன் , தானே கற்கவும் தொடங்கிவிடுவான் என்பதை அவ்வை அறிந்திருந்தாள். ஒரு நூலகம் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் ஆனது . எனவே , ஏதேனும் ஒரு பொருள்பற்றி , ஏதேனும் ஒரு துறை சார்ந்து , தகுதி வாய்ந்த ஒருவர் உரையாடிக்கொண்டே இருக்கவேண்டும் . அது கேட்டார் பிணிக்க, கேளாரும் வேட்ப நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் . கேட்கிறவர்கள் , தாமே கற்கிறவர்கள் ஆவார்கள் . நான் அப்படித்தான் புத்தகங்களின் உலகத்திற்குள் அழைத்து வரப்பெற்றேன் . பாரதி கிருஷ்ணகுமார்


https://youtu.be/xr0mrrpFQoc

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் 

Saturday, December 21, 2019

எனக்கு இல்லையா கல்வி ? - ஆவணத்திரைப்படம்

இது எனது மூன்றாவது ஆவணத்திரைப்படம்.

எனக்கு இல்லையா கல்வி ? என்பது இதன் தலைப்பு மட்டுமல்ல ; அது கல்வி மறுக்கப்பட்டவர்களின் குரல் . 

இதனை உருவாக்கும் நல்வாய்ப்பை ,மதுரையில் இருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் எனக்கு வழங்கியது . மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் , எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நீண்டகால நண்பர் திரு . ஹென்றி திபேன் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் .சம கல்வி உரிமைக்கான மக்கள் இயக்கத்திற்காக , மனித உரிமைக்கல்வி நிறுவனம் இதனைத் தயாரித்தது .

இந்த ஆவணத்திரைப்படத்தை உருவாக்க தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களுக்கு பயணப்பட்டோம் .
கடுமையான உழைப்பை , இந்தப்படம் எங்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது .

என்னோடு பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இத் தருணத்தில் எனது அன்பும் , வாழ்த்தும் .


தமிழகத்தின் தகுதிமிக்க மாபெரும் கல்வியாளர்கள் தங்கள் வாக்குமூலங்களை இதில் பதிவு செய்துள்ளனர் . ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் எனப் பலர், தங்கள் வாக்குமூலங்களைத் தந்துள்ளனர் . வாக்குமூலம் தர மறுத்து ஓடி ஒளிந்த பெருமக்களும் உண்டு.

எல்லோருக்கும் சமமான தரமான கட்டணமற்ற கல்வி தருகிறவரை , இந்திய சுதந்திரம் முழுமை பெறாது . பெறவே பெறாது . எந்த கிரகத்திற்குப் போனாலும் குழந்தைகளுக்குக் கல்வி மறுத்த பாவம் போகாது . எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நிலைமை நீடிப்பது தேசிய அவமானம் . கேவலம் . இழிவு . 


இன்றைய அரசியல் சூழலும் , மத்திய மாநில ஆட்சியாளர்களும் கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லோருக்குமான கல்வி என்பதைச் சீரழிக்கிறது , சீர்குலைக்கிறது , சிதைக்கிறது .

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஆவணத்திரைப்படம் இன்று மேலும் , மென்மேலும் பொருத்தமுடையதாக இருப்பது எங்களது சிறப்பல்ல ; அரசின் இழிவு . இப்போது இதனை இணையத்தில் பதிவேற்ற அனுமதி தந்தமைக்காக திரு . ஹென்றிக்கு மீண்டும் நன்றி .

இந்தியாவில் எடுக்கப்பட்ட கல்வி தொடர்பான ஆவணத்திரைப்படங்களில் இது சிறந்த , தகுதியான திரைப்படம் என்பார் , பேராசிரியர் ச.மாடசாமி . அவரது இந்த மதிப்பீட்டிற்கு உரியவன் ஆனேன் என்கிற பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு .


பாரதி கிருஷ்ணகுமார் .






இந்த இணைப்பில் படத்தைப் பார்க்கலாம்.



Friday, December 20, 2019

பாரதி விழா | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Vizha | Bharathi Krishnakumar

பாரதி விழா | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Vizha | Bharathi Krishnakumar
பாரதி பாசறையும், பன்னாரி தொழிற்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய பாரதி விழா.

சத்தியமங்கலத்தில் உள்ள அந்தக் கல்லூரியின் வளாகத்தில் விழா நடைபெற்றது.
திறந்தவெளி அரங்கில் இரண்டாயிரம் மாணவர்கள்.
வகுப்பறைகளில் இரண்டாயிரம் மாணவர்கள்.
அவர்களோ, தொலைக்காட்சி பெட்டிகளில் காண வழிவகை செய்யப்பட்டிருந்தது.

நான்காயிரம் பேர் கேட்ட விழா.
மறக்கமுடியாத விழா.
ஒவ்வொரு சொல்லையும் உற்றுக் கேட்டார்கள்.
மஹா கவிக்கு மரியாதை செய்தார்கள் மாணவர்கள்.
அதனாலேயே பெருமையுற்றார்கள்.




இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார்

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar

போர் மனிதர்களை அழிக்கிறது.
அனாதைகள் ஆக்குகிறது.
அகதிகளாக விரட்டியடிக்கிறது.
ஊனப்படுத்துகிறது.
உறவுகளைப் பிய்த்து எறிகிறது.
பிறந்த மண்ணை அப்பால் ஒரு நிலமாக்கிவிடுகிறது.
மனிதர்கள் புலம்பெயர்கிறார்கள்.
நினைவுகள் புலம் பெயர்வதில்லை.







இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

மறுவாசிப்பில் தொ.மு.சி ரகுநாதன் | பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை

இலக்கிய வீதி அமைப்பும், பாரதீய வித்யா பவனும் இணைந்து நடத்திய தொடர் சொற்பொழிவில் ஒரு மாதம் தொ.மு.சி யைப் பற்றி பேசும் வாய்ப்பை இலக்கிய வீதி இனியவன் தந்தார்.

இனியவன் என்பது புனைப் பெயரே இல்லை, இயற்பெயர் என்று கருதும் அளவிற்கு இனியவர்.

இலக்கியத்திற்கு இன்றும் அவர் ஆற்றும் பணி வணக்கத்திற்குரியது.

இலக்கிய வீதி இனியவன் எனக்கு, தந்தைக்கு ஒப்பானவர்.
இது தந்தை, மகனுக்கு அவையத்து முந்தி இருக்கத் தந்த வாய்ப்பு.






இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

எஸ் ராமகிருஷ்ணன் | உண்டாட்டு | பாரதி கிருஷ்ணகுமார்

எஸ் ராமகிருஷ்ணன் | உண்டாட்டு | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
வென்று வரும் வீரனுக்கு ஊர்மக்கள் கூடித்தரும் விழா , களியாட்டம் , கொண்டாட்டமே "உண்டாட்டு".
சாஹித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு திருவண்ணாமலையில் அன்பு நண்பன் பவாவின் முன்னெடுப்பில் நிகழ்ந்தது "உண்டாட்டு".
கூடிக் களித்தோம் கொண்டாடினோம்.
எம்மில் ஒருவன் வென்றது எமது வெற்றி.






இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.