Tuesday, December 24, 2019

பொன்மாலைப்பொழுது நிகழ்வு / அண்ணா நூற்றாண்டு நூலகம் /கற்க கற்க / பாரதி கிருஷ்ணகுமார்

அண்ணா நூற்றாண்டு நூலகமும் , பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்திய தொடர் நிகழ்வே " பொன் மாலைப் பொழுது ". அந்தத் தொடர் நிகழ்வின் ஐந்தாவது அமர்வில் உரையாற்றும் வாய்ப்பை அளித்த பெருமக்களுக்கு எனது நன்றியும் வணக்கமும் . குறித்த நேரத்தில் நிகழ்வைத் தொடங்கினார்கள் . தகுதியும் , வாசிப்பும் , கொண்ட பார்வையாளர்கள் அரங்கை நிறைத்தார்கள் . இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் . இலக்கியம் மட்டுமன்றி பல்துறை சார்ந்த பெருமக்கள் பேச அழைக்கப்பட வேண்டும் . ஒரு நூலகத்தில் வாசிப்பு மட்டுமின்றி , உரையாடலும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் . கற்றலும் , கேட்டலும் வேறு வேறு அல்ல . இன்னும் சொல்லப்போனால் இத்தகைய உரையாடல்கள் ஒருவரை வாசிப்பின் பக்கங்களுக்குள் ஈர்க்கும் . கேட்பது , கற்பதின் சிறப்பை உணர்த்தும் . கற்க வைக்கும் . "கற்றலிற் கேட்டலே நன்று" என்று அவ்வை பாடியதன் பொருள் இதுவன்றி வேறில்லை . மாறாகக், கேட்பது கற்பதை விடச் சிறந்தது எனப் பொருள் கொள்ளுதல் பிழையானது . கேட்கிறவன் , தானே கற்கவும் தொடங்கிவிடுவான் என்பதை அவ்வை அறிந்திருந்தாள். ஒரு நூலகம் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் ஆனது . எனவே , ஏதேனும் ஒரு பொருள்பற்றி , ஏதேனும் ஒரு துறை சார்ந்து , தகுதி வாய்ந்த ஒருவர் உரையாடிக்கொண்டே இருக்கவேண்டும் . அது கேட்டார் பிணிக்க, கேளாரும் வேட்ப நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் . கேட்கிறவர்கள் , தாமே கற்கிறவர்கள் ஆவார்கள் . நான் அப்படித்தான் புத்தகங்களின் உலகத்திற்குள் அழைத்து வரப்பெற்றேன் . பாரதி கிருஷ்ணகுமார்


https://youtu.be/xr0mrrpFQoc

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்