எந்த மண்ணுக்கு ஒருமுறையேனும் போகவேண்டும் என்று விரும்பினேனோ அந்த மண்ணுக்குப் போய்வரும் வாய்ப்பு வாய்த்தது .
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழாவில் பங்குபெறும் பாக்கியத்தினால் அது நிகழ்ந்தது .
சென்னையில் இருந்து புறப்பட்டு பலாலி விமானநிலையம் போய்ச்சேரும் போது பிற்பகல் பன்னிரண்டு மணி .
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாலுகாத் தலைநகரப் பேருந்து நிலையத்தை விடவும் கொஞ்சம் பெரியது என்று சொல்லிவிட முடியாத விமானநிலையம் .
விமான நிலையத்தைச் சுற்றி , கண்ணுக்குஎட்டிய தூரம் வரை ஒரு குடியிருப்பேனும் இல்லை .
எங்கும் காடுபோல அடர்ந்த மரங்கள் . பாதுகாப்புக் கோபுரங்கள் . முள் வேலிகள் . ராணுவச் சோதனைச்சாவடிகள் .
இராணுவ வீரர்கள் , குடியேற்ற அதிகாரிகள் , காவல் துறையினர் என எல்லோருமே நல்ல தமிழில் பேசினார்கள் .
கண்களைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள் .
நான் திரும்ப வருவதற்கு என்று தீர்மானித்துப் பயணச்சீட்டு போட்டிருந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக எனது விசாவுக்கான அனுமதித் தேதி முடிந்து இருந்தது .
எனவே எனது விசாவை நீட்டித்துத் தருமாறு குடியேற்ற அதிகாரிகளைக் கேட்டேன் .
நீங்கள் ஏன் முதல் நாளே இந்தியா திரும்பக்கூடாது என்று அவர் என்னைக் கேட்டார் .
அன்றைக்கு விமானப் போக்குவரத்து இல்லையே என்றேன் .
விசாவை நீட்டித்துத் தர இசைந்தார் .
ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டார் .
ஒரு முறைக்கு இரண்டு முறை பயணப் பெட்டிகளைத் திறந்து பார்த்துக் கவனமாகப் பரிசோதித்தார்கள் . கெடுபிடிகள் ஏதுமில்லை .
ஒரு சிறிய பாட்டிலில் , கால் வலிக்கென நான் வைத்திருந்த மஞ்சள் நிறமான மருந்துப் பொடியை எடுத்துத் திறந்து பார்த்த ஒரு பெண் காவல் அதிகாரி அது என்னவென்று தனது பெரிய கண்களால் , எனது சிறிய கண்களுக்குள் கேட்டார் .
விரல் நுழைத்து ஒரு சிட்டிகை மருந்தெடுத்து வாயில் போட்டுக்கொண்டு , என் சிறிய கண்களால் , அந்தப் பெரிய கண்களுக்கு விடை அளித்தேன் .
ஒரு வறண்ட புன்னகையைப் பதிலாகத் தந்தார் . அதே பெரிய கண்களால் போகச் சொன்னார் .
விமானம் அரைமணிநேரம் முன்னதாகத் தரை இறங்கியும் , இந்த நடைமுறைகளால் ஒன்றரை மணிநேரம் கழித்தே வெளியே வர முடிந்தது .
அழைக்க வந்தவர்கள் தவித்துப் போனார்கள் .
அதைவிட என்னோடு விமானத்தில் வந்த ஒரு வயதான மூதாட்டி ரொம்பவும் பரிதவித்துப் போனார் .
ஏனெனில் , எடை அதிகமாக இருந்ததால் தனது இரண்டு புடவைகளை எனது பெட்டியில் வைத்துக்கொள்ளுமாறு ஒரு மூதாட்டி, என்னை சென்னை விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டார் .
அப்படி யாராவது விமானப்பயணத்தில் கேட்டுக்கொண்டால் உதவாமல் இருப்பதே நல்லது என்பது பயணிகளுக்குத் தரப்படும் அறிவுரை , ஆலோசனை .
ஏனெனில் , அப்படி வாங்கி வைத்துக்கொள்ளும் பொருட்களில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் இருந்தால் வீண்பழி சுமக்க நேரும் .
தனது பிள்ளைகளின் துணை இல்லாமல் முதன்முறையாக விமானப்பயணம் செய்யும் அவர், தான் கொண்டுவந்த பொருட்களில் கூடுதல் எடை இருந்ததால் செய்யும் வழி தெரியாமல் தவித்துப் போய் இருந்தார் . சென்னையில் , வழி அனுப்ப வந்து வாசலுக்கு வெளியே நின்ற தனது பிள்ளைகளிடம் போய்க் கேட்டுவிட்டு வந்து என்னைக் கேட்டார் .
நான் சம்மதித்தேன் .
இலங்கையில் எனது விசா நீட்டிப்பும் , சுங்கப் பரிசோதனைகளும் முடிகிறவரை அவரும் காத்திருந்து தவித்துப் போனார் . நன்றி சொல்லிவிட்டுப் போகிறபோது "எண்ட பிள்ளைகள் இல்லாமல் இப்பத்தான் தனியா வந்து நிக்குறன் ... நல்ல வேளை அந்த ஆஞ்சநேயர் தான் எனக்குத்துணையா உங்களை அனுப்பி இருக்கார் " என்றார் .
அவருக்கு ஆஞ்சநேயர் நினைவு வந்ததற்கும் , டார்வினுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்தோம் .
ஆம் . என்னோடு தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்களும் வந்திருந்தார் .
பலாலி விமான நிலைய வாசல் வந்தபோது மணி இரண்டை நெருங்கி இருந்தது . ஆனாலும் சூரியன் தலைக்குமேலே தான் நின்றது .
வெயில் . அதே சென்னை வெயில் .
ஒருமுறை சுற்றிப் பார்த்தேன் . பலாலி தான் .
யாழ்ப்பாணம் தான் . இலங்கை தான் . வெயில் மட்டும் தான் அதே வெயில் .
இன்னும் போகணும் ....