Saturday, December 21, 2019

எனக்கு இல்லையா கல்வி ? - ஆவணத்திரைப்படம்

இது எனது மூன்றாவது ஆவணத்திரைப்படம்.

எனக்கு இல்லையா கல்வி ? என்பது இதன் தலைப்பு மட்டுமல்ல ; அது கல்வி மறுக்கப்பட்டவர்களின் குரல் . 

இதனை உருவாக்கும் நல்வாய்ப்பை ,மதுரையில் இருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் எனக்கு வழங்கியது . மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் , எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நீண்டகால நண்பர் திரு . ஹென்றி திபேன் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் .சம கல்வி உரிமைக்கான மக்கள் இயக்கத்திற்காக , மனித உரிமைக்கல்வி நிறுவனம் இதனைத் தயாரித்தது .

இந்த ஆவணத்திரைப்படத்தை உருவாக்க தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களுக்கு பயணப்பட்டோம் .
கடுமையான உழைப்பை , இந்தப்படம் எங்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது .

என்னோடு பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இத் தருணத்தில் எனது அன்பும் , வாழ்த்தும் .


தமிழகத்தின் தகுதிமிக்க மாபெரும் கல்வியாளர்கள் தங்கள் வாக்குமூலங்களை இதில் பதிவு செய்துள்ளனர் . ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் எனப் பலர், தங்கள் வாக்குமூலங்களைத் தந்துள்ளனர் . வாக்குமூலம் தர மறுத்து ஓடி ஒளிந்த பெருமக்களும் உண்டு.

எல்லோருக்கும் சமமான தரமான கட்டணமற்ற கல்வி தருகிறவரை , இந்திய சுதந்திரம் முழுமை பெறாது . பெறவே பெறாது . எந்த கிரகத்திற்குப் போனாலும் குழந்தைகளுக்குக் கல்வி மறுத்த பாவம் போகாது . எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நிலைமை நீடிப்பது தேசிய அவமானம் . கேவலம் . இழிவு . 


இன்றைய அரசியல் சூழலும் , மத்திய மாநில ஆட்சியாளர்களும் கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லோருக்குமான கல்வி என்பதைச் சீரழிக்கிறது , சீர்குலைக்கிறது , சிதைக்கிறது .

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஆவணத்திரைப்படம் இன்று மேலும் , மென்மேலும் பொருத்தமுடையதாக இருப்பது எங்களது சிறப்பல்ல ; அரசின் இழிவு . இப்போது இதனை இணையத்தில் பதிவேற்ற அனுமதி தந்தமைக்காக திரு . ஹென்றிக்கு மீண்டும் நன்றி .

இந்தியாவில் எடுக்கப்பட்ட கல்வி தொடர்பான ஆவணத்திரைப்படங்களில் இது சிறந்த , தகுதியான திரைப்படம் என்பார் , பேராசிரியர் ச.மாடசாமி . அவரது இந்த மதிப்பீட்டிற்கு உரியவன் ஆனேன் என்கிற பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு .


பாரதி கிருஷ்ணகுமார் .






இந்த இணைப்பில் படத்தைப் பார்க்கலாம்.