இப்போதெல்லாம் தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன . இது பாராட்டுதலுக்குரியது .ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் அமைப்புகளோ , தனி நபர்களோ இதனை முன்னெடுக்கிறார்கள் .
சில மாவட்டங்களில் , அந்த மாவட்டத்தின் , மாவட்ட ஆட்சித்தலைவர்கள் புத்தக விழாக்களை அரசு விழாவாக நடத்தி விடுகிறார்கள் . அந்த மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்களை அந்தத் திருப்பணியில் இணைத்துக் கொள்கிறார்கள் .அவர்கள் தாங்கள் பொறுப்பில் இருக்கும் காலம் முழுவதும் இதனைத் திறம்படச் செய்து முடிக்கிறார்கள் . அவர்களுக்குப் பிறகு வரும் சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , இந்த நற்பணியைத் தொடர்ந்து செய்து , ஒரு சமூகம் வாசிக்கப் பேருதவி செய்து தருகிறார்கள் .
(வேறு சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வந்ததும் செய்கிற முதல் பணி, புத்தகத் திருவிழாக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் . அது ஒன்றும் அரசின் வேலை இல்லை , என்பதே அவர்கள் கருத்து . "ஒரு நல்ல அரசாங்கம் , தனது மக்கள் அறிவு பெறுவதை ஒருபோதும் விரும்பாது " என்கிற டால்ஸ்டாயின் வாசகத்தைப் படித்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்.)
தனது மக்கள் வாசிக்கவேண்டும் , புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்கிற மேன்மையான எண்ணம்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிலர் புத்தகத் திருவிழாக்களை பெரும் சிறப்போடு நடத்தினார்கள்.
மாவட்டம் முழுவதும், அதில் பங்கேற்கும் வண்ணம் எல்லாத் துறைகளையும் அதில் ஒருங்கிணைத்தார்கள் . மாவட்ட மக்களின் திருவிழாவாக , மக்களை உணரச் செய்தார்கள் . புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் தானும் வந்து , எல்லோரும் பார்க்க புத்தகங்கள் வாங்கினார்கள் . புத்தகத் திருவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கலை இலக்கிய நிகழ்விலும் வந்து இருந்து பங்கேற்று முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் . ஆற்றலும் வாசிப்பும் நேர்மையும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்து, அவர்களைப் புத்தகத் திருவிழாவில் தொண்டர்களாக நிறுத்தினார்கள் . தமது அழைப்பை ஏற்று வந்த பதிப்பகங்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்கிற அக்கறையோடு அன்றாட விற்பனையைக் கண்காணித்தார்கள் . மாவட்டத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் , கல்லூரிகளும் குழந்தைகளைப் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வருவதை அட்டவணை இட்டு உறுதி செய்தார்கள் . இப்படியாக , இன்னும் பல பத்து "வேலைகளை" அவர்கள் செய்ததை நான் அறிவேன் . எல்லாவற்றையும் எழுத இங்கே இடமில்லை .
இப்படியான பணிகளைச் செய்தவர்களில் ஒருவர் , மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று அறியப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு தர்வேஷ் அஹமது இ .ஆ .ப. அவர்கள் . மாவட்டமே கொண்டாடும் வண்ணம் நிகழ்த்தினார் . ஒரே வரியில் சொல்வதானால் , வளர்ந்த வளமான மாவட்டங்களில் கூட நடக்காத புத்தக விற்பனையை பெரம்பலூரில் நடத்திக் காட்டினார் .
புத்தகத் திருவிழாவை ஒட்டி நடந்த கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் .
தான் மாற்றலாகிப் போனபின்னும் புத்தகத் திருவிழா நடக்கும் வண்ணம் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கிய சிறப்பும் திரு .தர்வேஷ் அஹமதுவுக்கு உண்டு.
இத்தகைய சிறப்புடைய பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் ஆறாம் ஆண்டு விழாவில் பேசியது , இந்த உரை .
பாரதி கிருஷ்ணகுமார்
https://youtu.be/8o9MdDd4TIc
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்
https://youtu.be/8o9MdDd4TIc
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்