விடைகளற்ற வினாக்களும்
வினாக்களற்ற விடைகளும்
பொருதி,வீழ்ந்து,
துடிக்குமொரு போர்க்களத்தில்,
புறமுதுகில் குத்துப்பட்டு
மரணித்துக் கிடக்கிறேன் நான்.
களத்தில் எனைத் தேடி வந்து,
புறமுதுகின் காயம் பார்த்து,
புறமுதுகு கொண்டானோ மகனெனக் கருதி,
பருத்துச் சரிந்து,
பழுத்த மாம்பழமெனக் கனிந்த,
எனக்கு அமுதூட்டிய,
உன் மார்பகங்களை,
அவசரப்பட்டு
அறுத்துக்கொண்டு விடாதே அம்மா.
இறந்த பின்னும் உன்னோடு பேசும்
என் சொற்களைக் கேள்.
இது எதிரிகளின் வெற்றியன்று.
கோழைகள் நிகழ்த்திய துரோகம்.
என்னோடிருந்தவனின் ரேகை கத்தியின் பிடியில் காணக் கிடைக்கும் அம்மா..
ஆழமான காயம் முதுகில் கொண்டும்,
வீரனாகத்தான் இறந்திருக்கிறேன்.
வீரனாகவே இருந்திருக்கிறேன்.
இந்தக் களம் வேறு.
காலம் வேறு.
காயங்களும் வேறு.
யுகங்களைக் கடந்தும்
நீ மட்டும்
எப்போதும்
அம்மாவாகவே இருக்கிறாய்.
-ப்ரகலாதன்.
(பாரதி கிருஷ்ணகுமார்)
3 comments:
U r the poet ... extraordinary poem... !
ஆழமான காயம் முதுகில் கொண்டும்,
வீரனாகத்தான் இறந்திருக்கிறேன்.
வீரனாகவே இருந்திருக்கிறேன்.
இந்தக் களம் வேறு.
காலம் வேறு.
காயங்களும் வேறு.
- அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
அற்புதம்..ஆம் யுகங்கள் கடந்தும் அம்மா மட்டும் அம்மாவாகவே..
Post a Comment