Thursday, May 7, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 11



இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .

அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?...


"ஒரு 630 ரூபாயக் கட்டிட்டு உம் ப்ரெண்ட்ஸக் கூட்டிட்டுப் போ ... சாயங்காலம் நாலு மணிக்குள்ள பணத்தக் கட்டணும்.. இல்லாட்டி உன்னையும்,எல்லாரையும் ரிமாண்ட் பண்ணிக் காலையில கோர்ட்ல ஆஜர் பண்ணிருவேன் " என்றார். 


நான் திகைத்துப் போனேன் . 


சார் .. எதுக்கு சார் இவ்ளோ கேக்குறீங்க என்றேன் .


"No Discussion ... No Arguements Pay the money before 4 pm "  


சொல்லிக்கொண்டே அவர் நடக்க ஆரம்பித்தார் . அவரது வன்மம் எனக்குப்  புரிந்துவிட்டது.நாங்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது அவருக்கு ஒரு குற்றமாகப் படவே இல்லை .அவரே  ஓரிடத்தில் சொன்னார். "ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்குல டிக்கெட் எடுக்காமப் போறானுங்க .. நீங்க போனா மட்டும்  என்ன கொறையுது ... மத்தவங்க எங்க கண்ணுல படாமப் போறாங்க ... நீங்க என்னோட கண்ணுல பட்டுடீங்க ... அதான் டிபரன்ஸ்" ... அவர் கேட்டுக்கொண்ட படி நான் எழுதிக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்பதுதான் அவரது ஒரே கோபம் .அந்தக் கோபமே இத்தனை பெரிய தொகையை அபராதமாகப் போட வைத்தது.


பத்தடி நடந்ததும் நின்று திரும்பிப் பார்த்தார். நான் அவருக்குப் பின்னால் மன்றாடியபடியே வருவேன் என்று எதிர்பார்த்துத் திரும்பினார். நான் நின்ற இடத்திலேயே நின்றது,அவருக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. 


அவருக்குப்பின்னே மன்றாடியபடியே செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. துளிக்கூட இல்லை. ஆனால் நான் அங்கேயே நின்றது,அவ்வளவு பணத்தை எப்படிக் கட்டமுடியும் என்கிற திகைப்பில் தான் ... சில நிமிடங்கள் எதுவும் தோன்றவில்லை.பிற்பகல் மணி ஒன்றை நெருங்கிக்கொண்டு இருந்தது. 


"பையங்க போய் சாப்பிட்டுட்டு வரட்டும்.மத்தத அப்புறம் பேசிக்கலாம்." என்று அங்கிருந்த ஒரு அதிகாரியிடத்தில் சொன்னேன். பையன்கள் சாப்பிடப் போனார்கள் . என்னோடு ஜெயவீரபாண்டியன் மட்டும் இருந்தார் . அவர் ஒருவர் தான் என் வயதுக்காரர் . மற்ற எல்லோரும் வயதில் சிறியவர்கள் . அவர்கள் எல்லோரும் படித்துக்கொண்டும் இருந்தார்கள். நாங்கள் எல்லோருமே எளிய குடும்பத்துப் பையன்கள் தான். இவ்வளவு பணம் கையிருப்பில் வைத்துக்கொள்ளுகிற அளவு வசதியான குடும்பம் எவருக்கும் இல்லை .


அன்றைய மதிப்பில் 630 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.ஒரு பவுன் ஆபரணத் தங்கமே 320-330 ரூபாய்க்குள் தான் இருக்கும். பையன்கள் சாப்பிடப் போன நேரத்தில் நானும் ஜெயவீரபாண்டியனும் ஆலோசித்தோம். முடிவெடுத்தோம். 


உண்மையில் நாங்கள் வருகிற வரையில் பையன்களைப் பிணையாகத்தான் நிறுத்தி வைத்திருந்தார்கள் . அதை நான் உணர்ந்தே இருந்தேன் . எப்படியாவது மாலை நான்கு மணிக்குள் பணம் கொண்டுவந்து கட்டுகிறேன், பையன்கள் போகட்டும் என்று கேட்டேன் . அவர்கள் சம்மதிக்கவில்லை. சம்மதிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்தும் கேட்டேன் . மறுபடியும் கேட்டேன். மறுத்தார்கள். எங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அவர்களிடம் இருந்தது . அதற்குமேலும் எதற்குப் பையன்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்பது என் எண்ணம் . இங்கு யாரும் ஓடிப்போகப் போவதில்லை , முதலிலேயே ஓடிப்போய் இருந்தால் , சங்கரநாராயணன் மட்டும் தான்அகப்பட்டு இருப்பார். எல்லோரும் வெளியில் போய் இருந்தால் , பிறகு அவரை மட்டும் காப்பாற்றுவது எளிதான வேலை தான். ஆனால் நாங்கள் வருகிறவரையில் அவருக்கு நடக்கும் அவமதிப்புகளுக்கு அஞ்சியே யாரும் ஓடவில்லை .பலமுறை கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


இனி பயனில்லை என்றானபோது, ஜெயவீரபாண்டியன் என்னைச் சமாதானம் செய்தார்.  "குமார் .. நேரமாகுது போய் ஆகுற வேலையப் பாப்போம் . நான் நேரா எங்க லேத் பட்டறைக்குப் போயிட்டு அங்க என்ன பணம் இருக்கோ அதை எடுத்துட்டு எங்க வரணும்னு சொல்லுங்க" என்று என்னைவிட நிதானமாக பொறுப்பாகக் கோபமே இல்லாமல் பேசினார் . 


அடுத்து என்ன செய்வது, எப்படிப் பணம் திரட்டுவது என்று என் மனமும் அறிவும் திட்டம் இட்டாலும், கோபம் அடங்கவேயில்லை . அந்த ஆள் என்னிடம் ஒரு இழிவான பேரம் பேசினான் என்பதை விடவும், என்னிடத்தில் அப்படிப் பேசலாம் என்று அவன் நினைக்கிற அளவுதான் நாம் தோற்றம் அளிக்கிறோமா என்பதே கோபத்திற்கான அடிப்படை. என் கோபம் என் மீதே சுழன்றடித்தது.கண்கள் மேலும் சிவந்து பிதுங்க ஆரம்பித்தது . 


ஜெயவீரபாண்டியன் பொறுப்போடு செயல்பட வேண்டியதை உணர்த்தினார் .ரெயில்வே நிலையத்தில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் ஐந்து கிலோமீட்டர் இருக்கும் . வெளியில் வந்து நண்பர் ஒருவர் உதவியுடன் இரண்டு வாடகை சைக்கிள்களில் பறந்தோம் . மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சற்று முன்னதாக புது ராமநாதபுரம் சாலையில் இருந்தது ஜெயவீரபாண்டியனின் லேத் பட்டறை . அவர் பட்டறைக்குப் போனார்.நான் தினமணி திரையரங்க வாசலில் நின்றுகொண்டேன் . ஒரு தேநீர் அருந்திவிட்டு புகை பிடித்தேன். சிந்திக்க வேண்டாமா ? 


அங்கிருந்து நூறு மீட்டரில் எனது வீடு. வீட்டுக்குப் போனேன். அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அவர் விழித்திருந்தாலே எதுவும் நடக்கப்போவதில்லை. இப்போதோ உறங்குகிறார் . அவர் கண் விழிக்க நாலரை அல்லது ஐந்து மணி ஆகிவிடலாம்.அவரை எழுப்பவே முடியாது. எழுப்பவும் கூடாது.அம்மாவின் நினைவு வந்து,அம்மா வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளை விரட்டினேன். அம்மா ஏதோ மீட்டிங்கில் இருந்தாள். ஐந்து மணியாகும் என்று வாசலிலேயே சொல்லிவிட்டார்கள். காதில் வாங்கிக்கொண்டு, கருணையோடு ஏதாவது செய்து கொடுப்பாள். ஆனால் காத்திருக்க இயலாதே ? ...


தினமணி திரையரங்க வாசலுக்கு வந்தேன் . ஜெயவீரபாண்டியன் முன்னூறு ரூபாயுடன் காத்திருந்தார் . நன்றி சொல்லக்கூடத் தோன்றவில்லை. இதுவரை அவனுக்கு நன்றி சொன்னதில்லை. இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது மனமார நன்றி சொல்லத் தோன்றுகிறது. நன்றி நண்பனே நன்றி .


மீதிப் பணத்திற்கு என்ன செய்வது ? குற்றங்கள் குற்றங்களை நோக்கித்தான் வழி நடத்தும். வேறு பாதைகளைக் குற்றங்கள் அறிவதில்லை. மனம் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கியது. 


அப்பா ஒரு வெற்றிகரமான மருந்தாளுனர். (PHARMACIST)எங்கள் பகுதியில் இருந்த சில டாக்டர்களை விடப் பிரபலமானவர். நிறையச் சம்பாதித்தவர். சில மிகப் பெரிய வசதியான குடும்பங்கள் அப்பாவின் வாடிக்கையாளர்கள் . பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள். அந்தக் குடும்பங்களுக்குக் குடும்ப மருத்துவராக அப்பாவே இருந்தார் . அதில் ஒரு குடும்பத்தின் நினைவு வந்தது .அவர்கள் அலங்கார் திரையரங்கத்திற்கு எதிர் வீதியில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது மருந்து கொண்டுபோய்க் கொடுக்கும் வேலையை அப்பா தந்திருக்கிறார். அவர்கள் நினைவு வந்தது. அப்பா அவசரமாக 350 ரூபாய் வாங்கிவரச் சொன்னார் என்று கேட்டேன் . ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் எடுத்துத் தந்தார்கள் .


நான்கு மணிக்குள் ரெயில்வே ஸ்டேஷன் வந்து பணம் கட்டி ரசீது வாங்கிக்கொண்டு , எல்லோரையும் அழைத்துக்கொண்டு ZAM ZAM தேநீர்க் கடையில் சமோசா டீ சாப்பிட்டு விட்டு, மீதமிருக்கிற பணத்தில் எல்லோருக்கும் பேருந்துக்குப் பணம் கொடுத்து விட்டு, நம்மால் யாருக்கும் எந்தத் துன்பமும் இல்லை என்கிற நிம்மதி வந்தது.கோபம் தணிந்தது .


மற்றவர்கள்  எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள் .


குற்ற உணர்ச்சியால் ,நான் வீட்டுக்குப் போகத் தயங்கி, அன்று இரவு மீனாம்பாள்புரத்தில் இருந்த சௌபாவின் வீட்டுக்குப் போனேன் .

(ஜெயவீரபாண்டியன் இன்றும் இப்போதும் அதே லேத் பட்டறையின் உரிமையாளர் . பட்டறை இப்போது அனுப்பானடியில் இருக்கிறது . இன்னும் சைக்கிள் தான் . 

கடுமையான உழைப்பாளி.இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது .

கனகசபாபதி எங்கோ கனராவங்கியில் வேலை பார்த்ததாக சௌபா ஓரிருமுறை சொல்லி இருக்கிறான் . நான் அவரோடு  நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லை. 


சங்கரநாராயணன் என்கிற சங்கர் பின்னாளில் சட்டம் படித்து நீதிபதியான பிறகும் தொடர்பில் இருந்தார். இப்போது இல்லை . காலமாகிவிட்டார் .


தங்கமாரி மதுரையில் எங்கோ இருக்கிறார் . சில ஆண்டுகளுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டது தான் .இப்போது தொடர்பில் இல்லை . 


சௌபா காலமானது, உங்களில் பலர் அறிந்தசெய்தி தான் . மரணம் அடைவதற்கு முன்வரை நானும் அவனும் தொடர்பில் இருந்தோம். 


எங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுக்குத் தானே காரணம் என்று ஒருமுறை நேரில் மன்னிப்புக் கோரியதற்குப் பிறகு, ரெயில்வே சங்கரும்  நானும் இன்றுவரை சந்திக்கவே இல்லை.


தோழர் பரமசிவம் ஒரு நாள் தற்செயலாக மதுரை ரெயில்நிலையத்துக்குப் போகிற பாதையில் சந்தித்தார். சங்கர் தனக்குத் தகவல் சொன்னதாகவும்,நான் பணம் கட்டாமல் அவர் பேரை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் உண்மையாக ஆதங்கப்பட்டார். காட்டிக் கொடுக்க நான் விரும்பவில்லை என்றதும் கண்கள் மினுக்க நன்றி தோழர் என்றார் . அதற்குப்பிறகு அவரைச் சந்திக்க வாய்க்கவில்லை.


பாலா என்கிற பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் படித்து ,இப்போது பணி ஓய்வு பெற்ற பின்னும் ஒரிசாவில் அரசின் சிறப்பு ஆலோசகர் . சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் அதி முக்கிய நூலின் ஆசிரியர் . இன்னும் நிறைய சிறந்த நூல்களின் ஆசிரியர். இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது.)


அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு, நான் எப்போது வீட்டுக்குப் போனேன்?



வீடு எப்படி எதிர் கொண்டது ?



அப்புறம் சொல்லுகிறேன் ...



- பாரதி கிருஷ்ணகுமார்.    


    

1 comment:

drJeeva said...

no words to say... wonderful memories

Post a Comment