Friday, May 29, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 17

என்.சங்கரய்யா @ N.S 

அம்மா இறந்த இருபத்தி இரண்டாவது நாள் என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது.   

 பின்னாளில் நான் பணிக்குச்சேர்ந்த பாண்டியன் கிராமவங்கியில் , பணியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு சாத்தூரில் நடந்தது .


அதே வேலைக்கான எழுத்துத் தேர்வு, ஓராண்டுக்கு முன்பே  மதுரையில் நடந்து முடிந்திருந்தது. அதில் நான் கலந்துகொண்டதே அம்மாவின் சந்தோசத்திற்காக தான் . எனவே , அம்மாவின் சந்தோசத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்றும் , அதனால் நேர்முகத்தேர்வுக்குப் போகவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டேன். அதனால் போனேன் . ஒரு வருடம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அதை மறந்து போனேன். 



அம்மாவின் மரணத்திற்கு முன்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கி இருந்தேன் . அப்போது கட்சியின் நகரச் செயலாளர் ஆகத் தோழர் எம் . முனியாண்டி இருந்தார். M.M. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட , அருமையான தோழர் . கட்சியின் இளைஞர் பிரிவு அப்போது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி SYF என்று அழைக்கப்பட்டது . அதுவே இன்றைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI. கட்சியில் சேருவது என்பது நானே எடுத்த முடிவு. எனவே,நானாகவே மதுரையில்  மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திற்குப் போனேன். 


நான் நேரே கட்சி அலுவலகம் போய் தோழர் M.M. அவர்களைச் சந்திப்பது என்கிற முடிவை சௌபாவும் , நண்பர் தங்கமாரியும் மட்டுமே அறிந்து இருந்தார்கள் . சௌபாவுக்குத் தோழர் M.M. உடன் நல்ல நெருக்கமும் தோழமையும் இருந்தது . வேறு யார் பரிந்துரையும் இன்றி நீங்கள் நேரே அவரைப் பார்ப்பது நல்ல பயன் தரும் என்று இருவருமே எனக்குச் சொன்னார்கள். அதன்படியே நான் அவரைச் சந்தித்தேன். அது சிறந்த பலனைத் தந்தது .


அதற்குப்பிறகு நானும் சௌபாவும் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டே இருந்தோம் . சந்தித்துக் கொண்டே இருந்தோம் . 


அம்மாவின் இழப்பில் இருந்து என்னை மீட்டு எடுக்க சௌபாவும் , குணசேகரும் ஆற்றிய பங்களிப்பை என் வாழ்நாளின் இறுதிவரை நான் மறக்கமாட்டேன் . இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் என்னோடு இருந்தார்கள் . நான் துன்பக்கேணியில் இருந்து கரையேற இருவரும் தங்கள் கரங்களைத் தந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் இருவரின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க இயலாத , ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்  எனக்கு அமைந்தது. 


எங்கள் சந்திப்பு மையமாகக் கட்சி அலுவலகம் இருந்தது . என்னைச் சந்திக்க வேண்டியே குணசேகர் கட்சி அலுவலகம் வந்து , கட்சிக்காரன் ஆனான் . சௌபா ஏற்கெனவே கட்சியில் இருந்தான். 


கட்சி எங்களை அனுப்பிவைத்த பல நிகழ்ச்சிகளில்,அரசியல் வகுப்புகளில் சில விசயங்களைத் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே இருக்கும் நிலை வந்தது . அது எனக்கே சோர்வும் அலுப்பும் தந்தது.  புதிய செய்திகளைப் பேசவேண்டும் என்கிற விருப்பம் நிறையப் படிக்க வைத்தது . என்றபோதும் , சில செய்திகளைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூழல் இருந்துகொண்டே இருந்தது . சில தோழர்கள், பேசுனதையே எதுக்குப் பேசுறீங்க என்று கேட்டு நிம்மதியை அழித்தார்கள் .  


எத்தனை விதமான களப்பணிகளைச் செய்தபோதும்,பிரச்சாரம் என்பது மிகமிக முக்கியமான களப்பணிகளில் ஒன்று  என்கிற நுண்ணறிவு எனக்கிருந்தது.அதைப் பலரது வாக்குமூலங்களைப் படித்து அறிந்து இருந்தேன்.மேடையில் பேசுவது தவிர, அனைத்துவகையான களப் பணிகளையும் எவ்வித மனத்தடையும் இன்றிச் செய்யும் பண்பும் எனக்கு இயல்பிலேயே வாய்த்து இருந்தது.இதுகுறித்து எனக்குப் பெருமிதங்கள் எப்போதும் உண்டு. 


ஆனபோதும், மனித மனங்களை வெல்லும் மாயக்கலையான மேடைக்கலை குறித்து ஆழ்ந்த அக்கறையும் கவனமும் செலுத்தினேன். எவ்வளவு கூட்டங்கள் பேசினேனோ , அவ்வளவு கூட்டங்கள் கேட்டேன். கலை இலக்கியம் அரசியல் சார்ந்து, பேதமில்லாமல் எல்லா ஆளுமைகளின் உரைகளையும் கேட்டேன்.எஞ்சிய நேரமெல்லாம் படித்தேன்.இந்தக் காலம் முழுவதிலும் துணையாக, நட்பாக , உறவாக வந்து கொண்டே இருந்தான் சௌபா. ஆனால் இந்தக் கூறியது கூறல் பற்றி மட்டும் குழப்பமே நீடித்தது. கூறியது கூறல் குற்றம் என்றார்கள் நான் அறிந்த தமிழ் ஆசிரியர்கள்.


ஒருநாள் மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்தில் நானும் சௌபாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். பிற்பகல் நான்கு மணி இருக்கும். தோழர். சங்கரய்யா உள்ளே வந்தார். வந்ததும் எங்கள் இருவரோடும் உரையாடத் தொடங்கினார் . ஏதோ , பாதியில் நிறுத்திவிட்டுப் போன உரையாடலைத் தொடர்வது போலத் தொடர்ந்தார் . " நெறைய கூட்டங்கள் , வகுப்புகளுக்கு எல்லாம் போறீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லது. நெறையப் படிக்கணும். படிக்கிறத நிறுத்தக்கூடாது"என்று சொல்லிக்கொண்டே போனார். எப்போதும் பேச ஆரம்பித்ததும் குரலை உச்ச ஸ்தாயியில் துவங்கி முடிக்கிறவரை அதே உச்ச ஸ்தாயிலேயே பேசுவது அவரது வழக்கம் . தான் பேசும் எல்லாச் சொற்களுக்கும் சமமான மதிப்புத் தருவது போன்ற பேச்சு அது.


நான் மெதுவாகக் கேட்டேன்," பேசுற விசயத்தையே பேசுறோம்னு தோழர்கள் சொல்லுறாங்க .. அத எப்பிடி தவிர்க்கிறது?" 


N.S.என்று எல்லோரும் இன்றும் மதிப்புடன் அழைக்கும் தோழர் சங்கரய்யா, தான் அமர்ந்த நாற்காலியில் கொஞ்சம் தன்னை இடம் மாற்றி அமர்த்திக் கொண்டார். தலையை சற்று முன்புறமாகச் சாய்த்துக்கொண்டு கண்களுக்குள் பார்த்துப் பேசத் துவங்கினார் .


"நிறையப் படிச்சா , நிறையப் புது விசயங்களைப் பேசிக்கிட்டே இருக்கலாம்.அதுக்காக எல்லாமே புதுசாப் பேச முடியுமா? ஏற்கெனவே இருக்குற சமூகப் பிரச்சனைகளை எப்பிடிப் பேசாம இருக்குறது?தீர்க்கப்படாத பிரச்சனைகளைப் பேசாம இருக்க முடியுமா? அதப் பழைய விஷயம்னு பேசாமவிட்டா என்ன ஆகும் ?அத எப்பிடி தீக்குறது ? அது தீர்ற வரைக்கும் அதப்பத்திப் பேசணுமா இல்லியா? என்ன கதையா சொல்லுறோம்?நேத்து சொன்ன கதைய இன்னைக்குச் சொல்லக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ? எது புதுசு ? எது பழசு ? யாரு தீர்மானிக்குறது?


கேள்விகளாகப் பொரிந்தார் N.S.

ஒவ்வொரு கேள்வியும், ஒரு விடையாக எனக்குப் பாதை திறந்து கொண்டே இருந்தது.

" இல்ல... நம்ம தோழர்கள் சில பேரு"... என்று நான் சொன்னதும் , தனது விரிந்த கையை உயர்த்தி என்னை நிறுத்தச் சொன்னார். ஒரு இளம் புன்னகையுடன் தொடர்ந்தார். "நம்ம தோழர்கள் ஆர்வத்துல , எல்லாக் கூட்டத்துக்கும் வந்துருவாங்க...அவங்க சொல்லுறதப் பொருட்படுத்த வேண்டியதில்ல ..ஏன்னா  பொதுக்கூட்டம் மக்களுக்கானது.. நம்ம தோழர்களுக்கு மட்டுமில்ல.. அரசியல் வகுப்பு எடுக்கும்போது வேணா அவங்க சொல்லுறத நினைவுல வச்சுக்கலாம்... அப்பக் கூட சொல்ல வேண்டிய  விசயங்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கணும் . சோர்வில்லாமச் சொல்லணும் . புதுசாச் சொல்லுறமாதிரி சொல்லணும் . ஒரு பிரச்சனைய அது தீர்ற வரைக்கும் பேசணும். உயிரோட்டத்தோட பேசணும். வறுமை, பசி , வேலையில்லாத் திண்டாட்டம், இதெல்லாம் பழசுன்னு பேசாம இருப்பமா? ஏகாதிபத்திய எதிர்ப்பு , விவசாயிகள் நெசவாளர்கள் பிரச்சனை , மத ஒற்றுமை, தீண்டாமை,மாதர் முன்னேற்றம் ... இப்பிடி எத்தனை இருக்கு .. இதெல்லாம் பழசுன்னு பேசாம இருக்கலாமா ?


இந்த நாட்டுல சுதந்துரத்துக்கான போராட்டம் இருநூறு வருஷம் நடந்துச்சு... இருநூறு வருஷமும் சுதந்திரம் தான் ... அதைத்தான் பாரதியார் "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு"ன்னு பாடினார். ஒரே topic  தான்... bore அடிக்குதுன்னு topic  மாத்திக்கல..மாத்தி இருந்தா சுதந்திரம் கெடச்சு இருக்காது" ன்னு சொல்லி நிறுத்திப் புன்னகைத்தார் ."ஒரே ஊர்ல , அடுத்தடுத்து பேசும்போது வேணா கவனமாப் பேசணும் .. சொன்னதையே சொல்லிப் பேரக் கெடுத்துக்கக் கூடாது.. ஒன்னு விசயத்த மாத்தணும் ... இல்ல ஊர  மாத்தணும். ஏற்கெனவே ஒரு ஊர்ல பேசுன விசயத்த இன்னொரு ஊர்ல பேசும்போது கூட அதப் புதுசாப் பேசுற உணர்வோடப் பேசணும் ... சுதந்திரம் வேணுமுன்னு எப்பப் பேசுனாலும்,சோர்வில்லாமத் தான பேசணும்" ...


அவரது இடது கையில் உட்புறமாக வைத்துக்கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தார் . "வேறென்ன " என்றார். இருவரும் ஒன்றுமில்லை என்பதுபோல எழுந்து நின்றோம். விரைந்து வெளியில் புறப்பட்டுப் போனார். எங்களோடு பேசுவதற்காகவே அவர் வந்துவிட்டுப் போவதாக உணர்ந்தேன். என் மேடைக்கலையின் ஆற்றலை உயர்த்திய பெருமை உணர்ச்சி ஏதும் இன்றி போய்க்கொண்டே இருந்தார் எங்கள் அன்புத் தலைவர் தோழர் N S.                

சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. 

அப்போது சந்தித்தபோது...


என்ன நடந்தது?


அப்புறம் சொல்லுகிறேன்...



-பாரதி கிருஷ்ணகுமார்.




2 comments:

drJeeva said...

Eagerly waiting to hear the continuation... very nice experiences...

Rathnavel Natarajan said...

"நிறையப் படிச்சா , நிறையப் புது விசயங்களைப் பேசிக்கிட்டே இருக்கலாம்.அதுக்காக எல்லாமே புதுசாப் பேச முடியுமா? ஏற்கெனவே இருக்குற சமூகப் பிரச்சனைகளை எப்பிடிப் பேசாம இருக்குறது?தீர்க்கப்படாத பிரச்சனைகளைப் பேசாம இருக்க முடியுமா? அதப் பழைய விஷயம்னு பேசாமவிட்டா என்ன ஆகும் ?அத எப்பிடி தீக்குறது ? அது தீர்ற வரைக்கும் அதப்பத்திப் பேசணுமா இல்லியா? என்ன கதையா சொல்லுறோம்?நேத்து சொன்ன கதைய இன்னைக்குச் சொல்லக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ? எது புதுசு ? எது பழசு ? யாரு தீர்மானிக்குறது? - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment