Friday, May 15, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 14

தத்தளிக்கும் தத்தனேரி மயானத்திற்கு ...
தத்தனேரி மயானம்,மதுரை.




அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருப்பதாகச் சொல்லி இருந்தான் . 

தத்தனேரி பொது மயானம். மதுரையின் மிகப்பெரிய மயானம் . அது பற்றி ஆனந்த  விகடனில் ஒரு சிறப்புக்கட்டுரையை சௌபா எழுதி இருக்கிறான் . சிறந்த கட்டுரை . அந்த வருடம் எனக்கு நினைவில்லை . ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்ததும் நான் சௌபாவுடன் பேசினேன் என்பது நினைவில் இருக்கிறது . 2003 ஆம் ஆண்டு சுதந்திரதின சிறப்பிதழுக்காக சௌபா அதை எழுதினார் என்று இந்தத் தொடரின் முந்தைய பதிவில் தம்பி இளங்கோவன் அன்பன் பதிவிட்டு இருக்கிறார் . அந்தக் கட்டுரையைப்  படித்ததும் , நான் சௌபாவோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்போது சொல்லுவது பொருத்தமானது.


பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறபோதே, நான் காதலில் நின்றேன் . விழுந்தேன் என்று சொல்லுவது எனக்குச் சம்மதமில்லை . "You should not fall in love ; You must stand in love "  என்று யாரோ எனக்கு எப்போதோ சொன்னதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் .


"அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே ?

முன்பு மாமுனிவர் தமை வென்றவில் 
முன்னர் ஏழைக் குழந்தை என் செய்வனே ?"
என்று பாரதியார் தன் பிள்ளைக் காதல் பற்றிப் பாடுகிறார்.

காதல் உடலுக்குத் தருகிற பரவசம் முக்கியமே இல்லை . அது மனதுக்குள்ளும் அறிவிற்குள்ளும் நிகழ்த்துகிற  ரசவாதமே அற்புதமானது. அது எல்லாக் கருப்பு வெள்ளைப் படங்களையும் வண்ணமுறச்  செய்து விடுகிறது . எல்லா வண்ணப் படங்களையும் ஓவியங்களாக்கி விடுகிறது . ஒரு அரைவட்டமான வானவில் தலைக்குமேல் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வில் முதன்முறையாக இரவு பகலாகி , பகல் இரவாகும். ஒரு பூந்தூறல் நீங்கள் போகிற பாதை எங்கும் எப்போதும் பொழிந்து கொண்டே இருக்கும் . களங்கமற்ற அந்த இளம் உயிர்களின் பார்வையின் பரிசுத்தம் பற்றி மட்டுமே பத்துப் பக்கங்கள் எழுதலாம்.


அப்போது எங்கள் வீடு மதுரையின் தென்கரையில் இருந்தது . நாங்கள் இருவரும் பள்ளி முடித்து கல்லூரிக்கு வந்திருந்தோம். ஆற்றைக் கடந்து வடகரைக்கு வந்தால் நான் படித்த அமெரிக்கன் கல்லூரி . வடகரையிலேயே, மேற்கு நோக்கி ஏழு கிலோமீட்டர் போனால் அவள் படித்த கல்லூரி . அவள் வீடும் வடகரையில் இருந்தது. காலையில் சந்திக்க இயலாது . எனவே மாலையில் கல்லூரி முடிந்ததும் சைக்கிள் பறக்கும் . ஆற்றின் வடகரை வழியாக , தத்தனேரி மயானத்தைக் கடந்து தான் அந்தப் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் . செல்லூர் சாலை இளம்பிள்ளை வாதம் பிடித்த கால்போல , ஓரிடத்தில் வலதுபுறமாக  வளைந்து , ரெயில்வே கேட்டில் முட்டி நிற்கும் . அங்கிருந்து லேசாக மேடேறும் சாலையின் வலதுபுறத்து முதல் வாசல் தத்தனேரி மயானம். இப்போது போல மின்மயானமோ , உயர்ந்த புகைபோக்கிகளோ அப்போது இல்லை .  பொது மயானம் என்றதும் எல்லாமே பொது என்று மயங்கி விடாதீர்கள் . சாதி வாரியாகத்தான் பிணம் எரிப்பார்கள் . சாதிப்பிணம் எப்போதும் உயிர்த்திருந்த மயானம் தான் அது . " வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "... என்று ,மருதகாசி என்னும் மாபெரும் கவிஞன்   எழுதிய கவிதையைப் பொய்யாக்கிய போலிகள் நாம். தன்தரையில் தான் பிணங்களை எரிப்பார்கள் .அந்தப் புகையும் தரையோடு தரையாகத்தான் பரவிக்கொண்டே இருக்கும்.  சுடலையில் இருந்து வரும் நிணம் கருகும் நாற்றம் கடந்து போக இயலாதது . எனவே ரெயில்வே கேட் வந்ததும் சட்டைக் காலர் மூக்குவரை உயர்ந்துவிடும் . மூக்கு மார்பு வரைக்கும் புதைத்துக்  கொள்ளும் . இல்லாத வேகத்தில் விரைந்து கடந்து போய்விடுவேன் . ரெயில்வே கேட் மூடிவிட்டால் இன்னும் கொடுமை . சைக்கிளைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கடந்து ஓடுவேன் . சைக்கிளைத் தூக்க முடியுமா என்று காதல் அனுபவம் இல்லாதவர்களே கேட்பார்கள். அருவருப்போடும் அவசரத்தோடும் மயானத்தைக் கடந்து போவேன். இங்கும் , நிண வாடையின் அருகிலேயே மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்கிற வியப்போடும் தான் திரும்பிவருவேன் .


அங்கு போனதும் , காத்திருக்கும் அவளைப் பார்ப்பதும் , அவள் பேருந்தில் ஏறுகிறவரை காத்திருந்து , பார்த்திருந்து , பேருந்து புறப்பட்டதும் திரும்பிவிடுவேன் . ஒரு வார்த்தை பேச இயலாது . யாராவது மாணவி யாராவது ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தால், அதைக் கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு உடனே கொண்டுசேர்க்கும் பெண் உளவாளிகள் நிறைய நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் மாணவிகளிடையே பரப்பப்பட்டு இருந்தது . எனவே நாங்கள் பேசுவதற்கு வேறு இடத்தைத் தேர்வு செய்கிறவரை நயனபாஷை தான் . அதுபோதாதா? காதலுக்கு மொழி எதற்கு? மொழிக்கும் முந்தைய காதலுக்கு மொழி எதற்கு ?

அப்படியாகக் கடந்து போகவும் வரவும் நான் கஷ்டப்பட்ட , அருவருத்த தத்தனேரி மயானம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தேன். முதல்நாள் தான் அம்மாவை அங்கு எரியூட்டி இருந்தது. இரண்டாம் நாள் பாலூத்தும் சடங்கு.எங்கள் வாகனம் மூடிக்கிடந்த ரெயில்வே கேட்டில்நின்றது.

காற்றில் நிணவாடை மிதந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏதும் துர்நாற்றமில்லை. காற்றில் அம்மாவின் வாசனையைத் தேடித் தவித்தது நாசி . ஜாதிப்பூவும் மஞ்சளும் குங்குமமும் தனது வியர்வையும் கலந்த வாசனையில் இருந்து வேறு ஒரு வாசனைக்கு அம்மா மாறி இருக்கிறாள் என்பதை உணர்ந்த நொடியில் ஆழ்ந்து சுவாசிக்கத் தொடங்கினேன் . என் மார்புக்கூடு முழுவதும் அந்த நறுமணத்தை நிரப்பிக் கொள்ளத் தவித்தேன். அந்நியமான உடலாக இருந்தால் துர்நாற்றமாகவும் , அந்நியோன்யமான உடலாக இருந்தால் நறுமணமாகவும் மாறும் விந்தையை அன்றைக்குத்தான் உணர்ந்தேன். ஏனோ அறிவெங்கும் வெட்க உணர்ச்சி பரவிக் குமைந்தேன் .

மார்புக்கூடு விரிந்தது . பலமுறை பலமுறை சுவாசித்து மார்பெங்கும் அந்தப் புகையின் நறுமணத்தை நிறைத்தேன். அதற்குப்பிறகு இன்றுவரை தத்தனேரி மயானத்தை விரைந்து கடந்ததே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே மயானத்தில் தான் அப்பாவும் எரியூட்டப்பட்டார்.

இப்போதெல்லாம் சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் வந்தால் , திண்டுக்கல் தாண்டியதும் எழுந்துகொள்ளுவேன். மதுரை வரக் காத்திருப்பேன். மதுரையைத்  தொடுவதற்கு முன்னால் வைகை ஆற்றுப்பாலத்திற்கு சற்று முன்னதாக  ரயிலின் மேற்குப்பக்க கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு நின்று கொள்ளுவேன். தொலைவில் மின்னொளியில் தத்தனேரி மயானம் ஜொலிக்கும். மின்னொளியை எப்போதும் புகைசூழ்ந்து இருப்பதாகவே எனக்குத் தெரியும். மணம் மாறிய அம்மாவின் புகை;அப்பாவின் புகை. மின்விளக்கிற்கு இடது புறத்தில் , சற்றுத் தொலைவில் நவீன மின்மயானத்தின் கருத்த உயர்ந்த புகைபோக்கி . தலையில் இடி விழுந்த பனைமரம் போல நிற்கும். மேற்கில் இருந்து ரெயில் மீது மோதும் காற்றை நிறையச் சுவாசித்து நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொள்ளுவேன். அந்த மணம் அற்புதமானது.

வெந்து சாம்பலாகி இருந்தாள் அம்மா . முதல்நாள் பார்த்தபோது உணர்ந்தேன் .. இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம் என்று ...
இப்போது உணர்ந்தேன் .. எல்லா அதிகாரமும் ஒருநாள் சாம்பலாகும் என்று......

பாலூத்தி , நீராத்தி மண் கலயத்தில் அம்மாவைச் சேகரித்துக்கொண்டு திருப்புவனம் போனோம்.சௌபா , முரளி , குணசேகர் என மூன்று பேர் உடன் வந்தது நினைவில் இருக்கிறது . நாற்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பின் இதனை எழுதுகிறபோது நடந்தது எல்லாம் காட்சியாக விரிகிறது . உடன் வந்த வேறு சிலர் பற்றியும் எனக்கு நினைவிருக்கிறது . ஆனால் மனக் கண்ணில் விரியும் காட்சிப்படலத்தில் அவர்கள் ஏனில்லை ? எவ்வளவு வலிந்து முயன்று தேடிப் பார்த்தாலும் அவர்கள் தென்படாமல் இருப்பது எதனால் ? நினைவாற்றலுக்குள் இந்தப் பாகுபாடு எப்படி நிகழ்கிறது ? புரியவேயில்லை... 

வைகையில் தண்ணீர் முழங்காலளவு ஓடிக்கொண்டிருந்தது.அங்கு அதற்கான இடத்தில் அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.குளித்துக் கரையேறியதும் கூட வந்த பிராமணர் சொன்னது கேட்டு நான் திகைத்தேன்.அதிர்ந்தேன்.

அவர் என்ன சொன்னார் ?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.   

2 comments:

Karthic Nagarajan said...

Padam Paarpadhu Pial Ulladhu Anna, Kaarthukondu Irukkiraen.

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 14 - பொது மயானம் என்றதும் எல்லாமே பொது என்று மயங்கி விடாதீர்கள் . சாதி வாரியாகத்தான் பிணம் எரிப்பார்கள் . சாதிப்பிணம் எப்போதும் உயிர்த்திருந்த மயானம் தான் அது . " வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "... என்று ,மருதகாசி என்னும் மாபெரும் கவிஞன் எழுதிய கவிதையைப் பொய்யாக்கிய போலிகள் நாம் - நிஜம் சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment