Tuesday, May 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 13

மாயாண்டி பாரதி - தமிழ் விக்கிப்பீடியா
ஐ.மாயாண்டி பாரதி


எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.


எங்கள் சந்திப்புகளில் இசைக்குப் பெரும் பங்கு இருந்தது.இரவு முழுக்கப் பாட்டும் பேச்சும் கூத்தும் தான். உற்சாகமற்ற இரவாக ஒரு இரவு கூட இருந்ததில்லை.

மதுரை நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு கல்லூரியின் மைதானத்தில் தான் எங்கள் சபை வழக்கமாகக் கூடும். நம்பி யாரும் சபைக்கு வரலாம். சபைக்கு கையில் காசு இருக்கிறவர்கள் தான் வரவேண்டும் என்பதில்லை. புதிதாக நண்பர்களை அழைத்து வந்தால் முறையாக அறிமுகம் செய்துவைத்து விடவேண்டும். நாம் இல்லாதபோது வந்தாலும் உபசரிப்பார்கள். அந்த சபைகளுக்கு நான் பலரை அழைத்துப் போய் இருக்கிறேன் . அதில் சௌபாவும் ஒருவன் . 

ஆரம்பத்தில் சௌபா புகை பிடிக்கமாட்டான். சபையிலோ புகை தான் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். தானும் புகை பிடிக்க விரும்புவதாகச் சொன்னபோது சபை விதிகள் அனுமதிக்காது என்று அவனுக்குச் சொல்லப்பட்டது . அவனுக்கு மட்டுமல்ல . 

புதிதாக, முதன்முறையாகப் புகை பிடிக்கவோ,மது அருந்தவோ அந்தச் சபையில் யாரையும் அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால் சபையில் கன்னி சாமிகளுக்கு அனுமதியில்லை. வேறெங்காவது துவங்கிப் புழங்கிப் பழகியவர்களுக்குத்தான் சபையில் எல்லாம் கிடைக்கும். கன்னி சாமிகள் பார்க்கலாம்.உணவு வந்தால் உண்ணலாம்.

இரவெல்லாம் இசையென்றால்,ஏதோ வெறுமனே சினிமாப் பாட்டு பாடுகிற சபை என்று கருதி விடாதீர்கள்.எந்தப் பாடலைப் பாடினாலும்,பாடலை எழுதிய கவிஞர் ,இசைஅமைப்பாளர்,பாடியோர்,நடித்தோர்,பாடல் இடம்பெற்ற சூழல்,காட்சியமைப்பு என்று எவ்வளவு செய்திகள் சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லிவிட்டுத் தான் பாடுவார்கள்.எல்லாப் பாடகர்களின் குரலையும் போலப் பாடுகிற பாடகர்கள் சபையில் இருந்தார்கள்.தமிழ்த் திரை உலகின் எல்லாக் கவிஞர்களையும் ,மேதைகளையும் அருகிருந்து தரிசித்த இரவுகள் அவை.

பல சமயங்களில் சபை தீவிரமான புத்தக வாசிப்பில் இறங்கிவிடும். ஒருவர் வாசிக்க எல்லோரும் கேட்பார்கள்.ஒருவர் பாடுகிற போதோ,பேசுகிறபோதோ,வாசிக்கிறபோதோ,இடையில் குறுக்கிட்டு யாரும் யாரோடும் பேசமாட்டார்கள்.பேசவேண்டி வந்தாலும் இடையூறு இல்லாமல் சைகை மொழியில் பேசிக்கொள்வார்கள்.ஒரு சபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த சபை.

ரஜினி பாமிதத்தின் இன்றைய இந்தியா என்ற புத்தகத்தை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து உணர்ந்த ஒருவர்,எல்லாப் பிறப்பிலும் ஏகாதிபத்திய எதிப்பாளராக,காலனி ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும் நிராகரிப்பவராக அனைத்துத் தேசிய இன விடுதலை போராட்டங்களையும் ஆதரிப்பவராக மட்டுமே பிறக்க முடியும்.சபையில் எல்லோர் முன்னிலையிலும் சிறப்பாகப் பிழையின்றி வாசிக்க வேண்டும் என்பதற்காக புத்தகத்தை முன்னதாக ஒருமுறை வாசித்துவிட்டு போகிற பழக்கம் எனக்கு இருந்தது.எத்தனை புத்தகங்கள் ! எத்தனை இரவுகள் ! இப்படிதான் எங்கள் வாழ்க்கை விடிந்தது.

என் நண்பர்கள் எல்லோரும் சௌபாவிற்கும் நண்பர்கள் ஆனார்கள்.அவ்வாறே தான் வாழ்ந்த பகுதியில் இருந்த இடதுசாரி இயக்கத் தோழர்கள் பலரை சௌபா எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.அவர்களில் பலர் என்னை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள்.

ஏனெனில்,அவசரநிலைக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.தலைமையில் ஒரு பெரும் கூட்டணி அமைந்திருந்தது.அதில்,மதுரை பாராளுமன்றத்தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.அதன் வேட்பாளர் தோழர் பி. ராமமூர்த்தி.

ஜனதாக் கட்சியின் சார்பில் நாங்கள் தோழர் பி ஆர் க்காகத் தேர்தல் பணி ஆற்றினோம்.மதுரைப் பாராளு மன்றத்தொகுதி முழுவதும் சுற்றினோம்.ஒலிபெருக்கியே இல்லாமல் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசினோம். பெரும்பாலான இடங்களுக்கு மாட்டுவண்டியில் தான் போயிருக்கிறோம். 

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநிலத் தலைவராக இப்போதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.ஜான் மோசஸ்,பெரும் தியாகப்பரம்பரையைச் சேர்ந்த நண்பன் சிதம்பரபாரதி,மதுரையில் இப்போது பிரபலமான வழக்கறிஞர் கவிஞர்.கோ.மணிவண்ணன்,மதுரை கிழக்குத் தொகுதியை சேர்ந்த அருமை நண்பன் கோவர்தனன்,ஆகிய ஜனதாக் கட்சிக்காரர்களைத் தவிர அந்தந்தப் பகுதி CPM தோழர்களும் தான், மாட்டுவண்டியில் சக பயணிகள்.

அந்தப்பயணத்தின் ஒரு பகுதியாக செல்லூர் மீனாம்பாள்புரம்,நரிமேடு ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்ததில் நிறைய அறிமுகங்கள் இருவருக்கும் இருந்தது.

அந்தத் தேர்தலில் இந்திரா தோற்றார்.மதுரையில் பி.ஆர்.தோற்றார்.தோல்விக்குப் பிறகான ஒரு நாளில்,மதுரை மேலமாசி வீதியில் குடியிருந்த அவரது வீட்டுக்கு சௌபா என்னை அழைத்துப் போனான்.இடதுசாரிக் கட்சிக்குள் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருவரை ஒருவர் தோழர் என்று தான் அழைப்பார்கள்.ஆனால் அப்பா என்று அழைத்தபடி அந்த வீட்டுக்குள் போனான் சௌபா.சொந்த வீட்டுக்குள் போவதுபோலப் போனான். நான் தயங்கி உள்ளே போனேன்...உள்ளே இருந்த அவர் சௌபாவை "வாடா... எங்க ஆளையே காணோம் ?" என்று உரிமையோடு அழைத்தார்.என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்."பேரு கிருஷ்ணகுமார்... நாங்க BKன்னு கூப்டுவோம். பெருசுன்னும் கூப்பிடுவோம்." அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் இருந்து தலைதூக்கி அவர் என்னை அண்ணாந்து பார்த்தார். "எனக்குத் தெரியும்.பெருசாத்தான் இருக்காரு... பேச்சும் கேட்ருக்கேன்" என்றார். எனக்கு வியப்பாகிவிட்டது.இருவரையும் அமரச் சொன்னார்.வீட்டிற்குள் திரும்பி, "பசங்க வந்துருக்காங்க.ரெண்டுபேருக்கும் காப்பித் தண்ணி குடு" என்றார்.சௌபா,பேசிகிட்டு இருங்க என்றபடி வீட்டிற்கு உள்ளே போனான்.


அவர் பேச ஆரம்பித்தார்.அவர்,விடுதலைப் போராட்ட வீரர்,பத்திரிகையாளர்.தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி.பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார்.நான் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

தனது பதின்மூன்று ஆண்டுகால சிறை வாசத்தை எந்தப் பம்மாத்தும் இல்லாமல் சொன்னார்."ஏறினா ரயிலு எறங்கினா ஜெயிலு" என்றார்.முதல் சந்திப்பே மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.


பாரதியை,வள்ளுவனை,பாரதிதாசனை,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை,பாவலர் வரதராசனை,அவர் தம்பி இசைஞானி இளையராஜாவை,ஜெயகாந்தனை,ஜீவாவை,ஜானகி அம்மாளை,எனத் தான் அறிந்தவர்களைப் பற்றியும் அவர்களைப் பற்றி நாம் அறியாதவைகளையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.அவரது இறுதிக் காலம் வரையில் இந்தத் தோழமையும் உரையாடலும் நிற்கவே இல்லை.சௌபாவைப் போலவே நானும் அவரை அப்பா என்று தான் எப்போதும் அழைத்தேன். 

இப்படியாக நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனிதர்களைப், புத்தகங்களை அறிமுகம் செய்துகொண்டே இருந்தோம் . 

சௌபாவின் தாயார் என்னை உபசரித்தது போலவே, என் தாயாரும் சௌபாவை உபசரிப்பதுண்டு.யார் வந்தாலும் உபசரிப்பதும் , வயிறார உணவு தருவதும் என் தாயாருக்கு இயல்பாக இருந்த குணம். அம்மா காலமான அன்று , அம்மாவின் உடலைச் சுமந்தது முதல் , இறுதிச் சடங்குக்கான எல்லாப் பணிகளையும் சபை உறுப்பினர்களே செய்தார்கள். அன்றைக்கு என் சபை உறுப்பினர்கள் செய்த வேலையைப் பார்த்த நெருங்கிய உறவினர்கள் அஞ்சித்தான் போனார்கள் . யாரையும் எந்த வேலையும் செய்ய விடாமல், வேலைகளைச் செய்துகொண்டே இருந்தார்கள் . நான் அம்மா இறந்த அதிர்ச்சியில் அழ மறந்து , துளிக்கூட கண்ணீர் இன்றி வறண்டு போயிருந்தேன். 

மதுரையில் எந்த மயானத்திற்குக் கொண்டுபோவது என்பதைக் கூட சபையே முடிவு செய்தது. எங்கள் மதுரை வீட்டில் இருந்து, தத்தனேரி மயானத்திற்குக் குறைந்தது ஆறேழு கிலோமீட்டர் தொலைவு. இப்போதுபோல வாகனவசதிகள் இல்லை. தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். சபை சுமந்தது. தோள் கொடுத்த பலரில் சௌபாவும் இருந்தான் . அவனது இறுதிப் பயணத்திற்குத் தோள் தர இயலாத தூரத்தில் காலம் என்னை நிற்கவைத்து விட்டது . இப்போது இந்த எழுத்தின் வழியாகத் தான் தோள் சுமக்கிறேன்.

எத்தனையோ பயணங்களில் என் தோளில் படுத்துறங்கியவனை , இப்போது நினைவுத் தோளில் சுமக்கிறேன்.

தத்தனேரி மயானத்திற்கு வந்து சேர்ந்தோம், அம்மாவின் அம்மாவும் , என்னோடு பிறந்த ஒரு அக்காவும் சென்னையில் இருந்து வரவேண்டும். அவர்கள் வந்து முகம் பார்க்கிறவரை காத்திருப்பது என்று முடிவு . அவர்கள் சென்னையில் இருந்துவரும் பேருந்தை மறித்து அழைத்துவர ஒரு மூன்று பேர் தல்லாகுளத்திலே நின்றார்கள் . தவறிப் போனால், பெரிய பேருந்து நிலையத்தில் மூன்று பேர். எல்லாமே சபை முடிவு. அக்காவும் , பாட்டியும் வர இரண்டு மணிநேரமாகும் என்று எனக்குச் சொன்னார்கள். அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துப் போனார்கள். புகைக்க, பற்றவைத்த சிகரெட்டை ஒருவன் நீட்டினான். நான் மறுத்தேன். நண்பன் குணசேகரபாண்டியன்... " பெருசு .. பேசாமக் குடிங்க .. உக்காந்து குடிங்க " என்றான். சொந்தக்காரங்க நெறையப் பேரு நிக்குறாங்க என்றேன் . " ஏ மனோகரா .. அங்கபோய் உக்காரு .. எவனாச்சும் வந்தா வரக்கூடாதுன்னு சொல்லு " என்று உத்தரவிட்டார் இரும்புக்கடை தங்கம். நான் புகைக்க ஆரம்பித்தேன். நெஞ்சில் இருந்த அடைப்பு நீங்கியது போன்ற உணர்வு ... யாரோ, ஒரு பெரிய பக்கெட் நிறைய சாராயம் கொண்டு வந்து எல்லோருக்கும் பணிவாகப் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள்." பெரிய சாவு .. எல்லாரும் அந்தம்மா கையால சாப்பிட்டுருக்கோம்.. ஒரு குறையும் இல்லாமச் செய்யணும் என்றார் தங்கமாரி. சௌபா என்னருகில் வந்து அமர்ந்தான் . கலங்கி அழுதான் . சட்டென எல்லோரும் அழுது குமைந்தார்கள். நான் வறண்டு போயிருந்தேன். சட்டென சௌபா சற்றே உரத்த குரலில்," BK... அக்கா வர ரெண்டு மணிநேரமாகும். அது வரைக்கும் நீங்க ஒரு கதை சொல்லுங்க" என்றான். 

(இந்த நிகழ்ச்சி குறித்துப் பல இடங்களில் , பல மேடைகளில் நான் பேசி இருக்கிறேன்.ஆனாலும்...) "கத சொல்லுறதுக்கு நேரம் காலம் இல்லியா என்று யாரோ மறுத்தார்கள். அவர் சொல்லுவாரு .. நீ மூடிக்கிட்டுக் கேளு என்றான் குணசேகரன். எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தார்கள். 

அந்தோன் செக்காவின் "ஆறாவது வார்டு"என்னும் மாபெரும் படைப்பைச் சொல்ல ஆரம்பித்தேன் . சபை ஆழ்ந்து கேட்டது.கதை சொல்லி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. 


அக்காவும் பாட்டியும் வந்து சேர எல்லாம் முடிந்தது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றி ஒரு பின்னிரவில் நானும் சௌபாவும் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் .

"எப்படி BK அவ்வளவு உறுதியாக் கதை சொன்னீங்க?" என்று கேட்டான் சௌபா 

"என்ன தைரியத்துல நீ என்னக் கதை சொல்லச் சொன்ன ?" என்று கேட்டேன் .


சற்று மெளனமாக இருந்துவிட்டு சௌபா சொன்னான்... "அந்தத் துயரத்த எப்படிக் கடந்துபோறதுன்னு தெரியல ... எல்லோருக்கும் துயரம் வரும் போது கடந்துபோக நீங்க வழி சொல்லுவீங்க ... இப்ப உங்க துயரத்த, உங்க உதவி இல்லாமக் கடக்க முடியாதுன்னு தோணுச்சு.. அதான் சொல்லச் சொன்னேன். எவனா இருந்தாலும் இப்ப வேணாம்னு சொல்லி இருப்பான் . நம்ம பசங்க துன்பப்படக் கூடாதுன்னு கத சொன்னீங்க ..." என்றபடி குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினான் . நானும் அழத் துவங்கினேன் .சில நொடிகள் ஓசையின்றி அழுதிருந்தோம்.

சட்டென்று ," எல்லாத்துக்கும் மேல, கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை" என்றான்.

நான் குரலெடுத்து அழத் துவங்கினேன் . அவனும் அழுதுகொண்டே இருந்தான் . அதற்குப்பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமல் அலைபேசிகளை அணைத்துக் கொண்டோம்.

அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருந்தான் ..

அப்போது அங்கு என்ன நடந்தது ?அங்கிருந்து எங்கு போனோம்?
   
                       
அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.     

1 comment:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 13 - சட்டென்று ," எல்லாத்துக்கும் மேல, கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை" என்றான்.

நான் குரலெடுத்து அழத் துவங்கினேன் . அவனும் அழுதுகொண்டே இருந்தான் . அதற்குப்பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமல் அலைபேசிகளை அணைத்துக் கொண்டோம். - அழுது விட்டேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Kumar

Post a Comment