சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை வன்முறையே என்று தீர்ப்புச் சொன்னேன். அதெப்படி வன்முறையை நியாயப்படுத்த முடியும்?
என்ன சொன்னேன்?
இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்த மாபெரும் தேசவிடுதலைப் போராட்டங்களின் நீண்ட வரலாற்றை வரிசைப்படுத்தினேன் . காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுதலை அடைந்த நாடுகளின் வீர வரலாற்றை விளக்கிச் சொன்னேன் . வன்முறையற்ற போராட்ட வழிமுறையை மகாத்மாகாந்தி தேர்ந்தெடுத்து இருந்தபோதும் அது ஆங்கிலேய அரசின் வன்முறைமிக்க அடக்குமுறைகளைக் குறைக்கவில்லை என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தேன். இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி நடந்த வீரமும் தீரமும் மிக்க போராட்டக் களங்களைப் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினேன் .
தீர்ப்பின் இறுதிவரிகளுக்கு வருமுன்னர், தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு நான் அஹிம்சையை போதிக்க மாட்டேன் என்ற மகாத்மாவின் வார்த்தைகளை எடுத்துரைத்தேன் . தற்காப்புக்காக மேற்கொள்ளப்படும் தாக்குதலை வன்முறைக்குற்றமாக சட்டமே கருதுவதில்லை என்பதையும் சொன்னேன் .
நிறைவாகச் சொன்னேன் ," தன்னிலும் வலிமை கொண்டது எனத் தெரிந்தும் , தன்னிலும் மிக உயரம் பறக்கும் வல்லமை கொண்டது என உணர்ந்தும் , தன்னிலும் கூரிய நகங்களும் அலகும் உண்டென்பதை அறிந்தும் ... தன் குஞ்சைக் கவர்ந்து போகவரும் ஒரு கழுகுக்கு எதிராகப் பிடரி மயிர் சிலிர்க்க , உடம்பிலுள்ள ரோமமெல்லாம் எழுந்துநிற்க , தன்னால் இயன்றவரை பறந்து தாக்குகிறதே ஒரு பெட்டைக்கோழி , ஒரு தாய்க்கோழி ... தன் குஞ்சைக் காக்க முயல்கிறதே அது வன்முறையா ?
வன்முறையா சொல்லுங்கள் என்று கூடியிருந்த அந்த எளிய மக்களிடம் கேட்டேன். அங்கும் இங்குமாக இல்லை இல்லை என்று பல குரல்கள் .
ஆம் இல்லை .. அது வன்முறை அல்ல .. தாய்மை ... அந்தத் தாய்மை வன்முறை என்றால் அந்த வன்முறை நாடெங்கும் பரவட்டும் என்றேன் .
கூட்டம் பெரும் ஆரவாரம் செய்து , சிலிர்த்து ஆர்ப்பரித்தது .நீண்ட கரவொலி அடங்கும் தருணத்தில் மக்களின் சிக்கல்களைத் தீர்க்க, ஏற்ற வழிமுறை வன்முறை என்று தீர்ப்பளித்தேன் .
இப்போது இதனை எழுதும்போது மீள நினைத்துப் பார்க்கிறேன் . நாங்கள் இணைந்து ஒரு தரமான அறிவார்ந்த நிகழ்வை வழங்கி இருக்கிறோம் . இந்தத் தீர்ப்பின் கடைசி வரிகளை வாய்ப்புக் கிடைக்கிற எப்போதெல்லாம் சௌபா எனக்குத் திரும்பச் சொல்லுவான் . சொல்லும் தருணங்களில் என் கைகளைப்பிடித்துக் கொள்ளுவான் . அவன் நினைவூட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக அதை நான் திரும்ப ஒருமுறை சிறப்பாகப் பயன்படுத்தினேன்.
2007 ஆம் ஆண்டு "என்று தணியும்?" என்றொரு ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கினேன் . கும்பகோணம் பள்ளியொன்றில் நடந்த தீ விபத்துக்குப் பின்னே, மறைத்தும் ஒளித்தும் வைக்கப்பட்ட உண்மைகளைப்பேசும் அந்த ஆவணத்திரைப்படம் இந்த வரிகளுடன் தான் நிறைவுறும் .
அன்று எங்களைப் பாராட்டாதவர்களே இல்லை . நிகழ்ச்சி நடந்த இடத்தைவிட்டு வருவதற்கே அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. எல்லோரும் வாழ்த்தினார்கள் . எங்க ஊருக்கு வாங்க என்று இரண்டொருவர் அழைத்தார்கள் . அதையெல்லாம் திரு.பரமசிவத்திடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டோம் .
தாங்கமுடியாத , எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தது தோழர் பரமசிவம் தான். இரயில் போகிற ஊருக்கெல்லாம் உங்களை அழைத்துப் போவேன் என்றார் . விருதுநகர் நிகழ்ச்சியை விட செங்கோட்டை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது அவருக்கு இன்னும் மகிழ்ச்சி . ஆனால் இனிமேல் எந்த ஊருக்கு அழைத்துப் போனாலும் அங்கு உள்ளவர்களிடம் பேசி நல்ல சம்பளம் வாங்கித்தருவதாகவும் சொன்னார் . இந்தக் கடைசிவரி எங்கள் எல்லோருக்கும் பிடித்த வரி என்று அவரிடம் சொன்னோம் . எப்போதும் இல்லாதபடி உரத்த குரலில் சிரித்து நான் வாங்கித் தர்ரேன் தோழர் என்று மீண்டும் சொன்னார் . இப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவோ எல்லையோ இல்லை .
நல்ல உணவு . நாட்டுக் கோழிக்கறிக் குழம்பு . பக்கத்தில் இருந்து பார்த்துப்பார்த்துப் பரிமாறினார்கள் . எல்லோரும் உணவு உண்ட பிறகும், எங்களைச்சுற்றி அமர்ந்து பேசிகொண்டே இருந்தார்கள் . இரவு ஒரு மணிவரைக்கும் சபை நீடித்தது .
காலை முதல் ரயிலுக்குப் புறப்பட்டோம் . காலை உணவெல்லாம் முடித்து , நிறையப் பேர் வந்து வழியனுப்ப ரயில் ஏறினோம் . எங்களை அழைத்துவந்த திரு சங்கரும் அவரது இரண்டு நண்பர்களும் எங்களோடு துணைக்கு வந்தார்கள் . மீண்டும் பாட்டு கவிதை இலக்கியம் என்று சபை இரயிலில் களைகட்டியது .
விருதுநகர் வந்ததும் சங்கரும் அவரோடு வந்த மற்றவர்களும் இறங்கிக் கொண்டார்கள் . அவர்கள் எல்லோருமே விருதுநகரில் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள்.
நீங்கள் மதுரையில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொன்னார்கள் . நாங்களும் உற்சாகமாக ஒப்புக் கொண்டோம் . அவர்களுக்கு விடை கொடுத்தோம் .
மதுரை வந்தது . ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்றது . மதிய உணவுக்கான நேரம் நெருங்கி விட்டதால் எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடப்போவது என்று முடிவு செய்தோம். சங்கரநாராயணன் மட்டும் தான் சாப்பிடவரவில்லை என்றும் , அவசரமாக வீட்டுக்குப் போவதாகவும் சொன்னான் . எல்லோரும் வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை . அவனுக்கு ஏதோ அவசரம் . எனவே படிகளில் ஏறிப் போவதற்குக் கூடக் காத்திராமல் தண்டவாளங்களுக்குள் இறங்கி முதலாவது பிளாட்பாரத்தில் சென்று ஏறினான் . ஏறிக் கொண்டிருந்த அவனுக்கு உதவிசெய்வதற்காக இருவர் அவனை நோக்கி விரைந்து வந்தார்கள் . அவனுக்கு உதவினார்கள் , அவனும் அவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள் . சங்கர் எங்களைநோக்கித் தன் கைகளைக் காட்டினான் . அந்த இருவரில் ஒருவர் சிரித்த முகத்துடன் , எங்களை வருமாறு அழைத்தார். எல்லாரும் வாங்க என்று அழைத்தார் . எல்லோரும் அங்கு போனதும் , செங்கோட்டை பட்டிமன்றத்துக்குப் போயிட்டு வரீங்களா என்று கைகளை நீட்டினார் .
நமது புகழ் அதற்குள் மதுரை வரைக்கும் பரவிவிட்ட மகிழ்ச்சியில் கைகளை நீட்டினேன் .
என் கைகளைப் பற்றிக்கொண்டு , புன்னகையை மறைத்துக்கொண்டு , அவர் கேட்டார் , " டிக்கெட் எங்க ?" ...
ஒரே கணத்தில், அவர் கை குலுக்கவில்லை என்பதும் , கைகளைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் ஒருசேர புத்தியில் மின்சாரமாகப் பாய்ந்தது .
அப்புறம் சொல்லுகிறேன் ...
... பாரதி கிருஷ்ணகுமார்
3 comments:
பிச்சுட்டிங்க பி.கே.
நான் கேட்காத கதையாயிற்றே... காத்திருக்கிறேன்
அருமை சார்
Post a Comment