Tuesday, May 5, 2020

ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு நாள் - TNGEA - AIRRBEA - PGBEA



Srivaikuntam Vaikuntanatha Vishnu Temple


ஐந்து நாட்களுக்கு முன், கிராமவங்கி ஊழியர்களுக்கு வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிய நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். 1990 ஏப்ரல் 30 அன்று ஹைதராபாத்தில் , அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் நான் இருந்தது பற்றியும் எழுதி இருந்தேன். அப்போது நான்,எங்கள் அகிலஇந்திய சங்கத்தில் துணைப்பொதுச்செயலாளர் ஆகப் பொறுப்பு வகித்தேன். அது ஒருபோதும் பதவி அல்ல;பொறுப்பு. 

1981 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி பாண்டியன் கிராமவங்கியில் பணிக்குச் சேர்ந்த நாளில் இருந்தே,அன்றிலிருந்தே நான் எனது தொழிற்சங்கப் பணிகளைத் துவக்கி இருந்தேன். கிராமவங்கி ஊழியர்களுக்கு அந்தக் கிராமவங்கி இயங்கும் மாநிலத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு என்ன ஊதியமோ அதுவே அவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

எனவே மாநில அரசு ஊழியர்களின் போராட்டங்களை நான் கவனமாக அவதானித்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் சில மாநிலங்களில், மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியங்களைப் பெறத்துவங்கி இருந்தனர். நல்ல கணிசமான ஊதிய உயர்வாக அது அமைந்தது. அந்த மாநிலத்தில் இருந்த கிராமவங்கி ஊழியர்களும் ஊதிய உயர்வு பெற்றனர் .

தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்கும் சூழலே இல்லாமல் இருந்தது. அப்போதிருந்த அரசு அலுவலர் ஒன்றியம் போர்க்குணமின்றி கிடந்தது.ஏறக்குறைய,நான் உறுப்பினராக இருந்த பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருந்தது. 

1984ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி பழைய அரசு அலுவலர் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் TNGEA பிறந்தது.(இன்று அதன் அமைப்பு தினம் என்பது ஒரு தற்செயலான ஆனால் மிகப் பொருத்தமான நிகழ்வு.) நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் . அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற எங்கள் சங்கத் தேர்தலில் PGBEA நான் அதிக வாக்குகள் பெற்று பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனேன். 

அப்போது திரு எம் ஜி இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் . அரசு ஊழியர்கள் சங்கமும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் . எனது வங்கித் தொழிற்சங்கப் பணிகளுக்குத் தந்த அதே முக்கியத்துவத்தை அரசுஊழியர் ஆசிரியர் போராட்டங்களுக்கும் தந்தேன் . அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பு மாநிலமெங்கும் நடத்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளுக்காக மாநிலமெங்கும் பயணம் செய்தேன். மாவட்டத் தலைநகர்கள், தாலுகாத் தலைநகர்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் என்று என்னை அழைத்துக்கொண்டே இருந்தார்கள் . விடுமுறை எதுவும் இல்லாமல் பெரும் ஊதிய இழப்புடன் பயணித்துக்கொண்டே இருந்தேன்.

நான் பணியாற்றிய சாத்தூரில் அந்தப் போராட்டம் வெல்வதற்கு என்னால் ஆன அனைத்துப் பணிகளையும் முன்னெடுத்துச் செய்தேன் . அதெல்லாம் தனியே எழுதவேண்டிய, வீரம் செறிந்த போராட்ட நாட்கள்.இங்கு இடம் காணாது... 

எங்கள் சங்கத்தில், நான் எங்கள் சங்கவேலைகளைப் பார்க்காமல் , மற்ற சங்கங்களின் வேலைகளைப் பார்ப்பதாக சில நிர்வாகிகள் அலுத்துக்கொண்டார்கள். அவர்கள் எப்போதும் சங்க வேலைகளைப் பார்க்கிற பழக்கம் எதுவும் இல்லாதவர்கள். "குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க முயலும் ஆனால் தோற்றுக்கொண்டே இருக்கும் புலவர்கள் எல்லாச் சபைகளிலும் இருப்பார்கள் தானே."

அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய வேலைநிறுத்தம் மறியல் போராட்டமாகத் தீவிரம் அடைந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பட்டார்கள். ஒரு தீபாவளி அன்றைக்குக் கூடப் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள். அலுவலகம் முடிந்தபிறகு ஒரு மணிநேரம் சங்கப்பணிகளுக்கு செலவிட மறுக்கும் உத்தம புருசர்கள் , உத்தமப் பெண்மணிகள் எல்லோரும் இந்த வரலாற்றை எல்லாம் படித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுவது நல்லது. இப்போது உண்ணுகிற சோற்றில் இருக்கிற உப்பு பலரது கண்ணீரும் வியர்வையும் தந்தது என்று தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. எப்போதுமே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரிந்து சாப்பிடுவது நல்லது தானே ...

போராட்டம் வெற்றி பெற்று 01.01.1986 முதல் மாநில அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றார்கள்.அதுவும் அரசாணை வந்து அமலுக்கு வந்தபோது 1988 ஆகி விட்டிருந்தது . மாநில அரசு பெற்ற ஊதிய உயர்வை கிராமவங்கி ஊழியர்களும் பெற்றார்கள்.நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி அங்கே வாழைக்கும் பொசிந்தது போல ....

புதிய ஊதியத்தை அமலாக்குவதில் எந்தத் தாமதமும் பாண்டியன் கிராமவங்கி நிர்வாகம் செய்து விடாமல் பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கம் பார்த்துக்கொண்டது. 

இந்தப் போராட்ட காலத்து உறவும் தோழமையும் இன்றும் இப்போதும் நீடித்து நிலைக்கிறது.

1990 ஏப்ரல் 30 கிராமவங்கி ஊழியர்களுக்கான டிரிப்யூனல் தீர்ப்பு வந்தது பற்றிய எனது பதிவிற்குப் பலர் எதிர்வினை ஆற்றினார்கள் . நான் எதிர்பார்த்ததுபோலவே சிலர் கள்ளமௌனம் சாதித்து அவர்களைப் பற்றிய என் மதிப்பீடு மாறாமல் காத்துக்கொண்டார்கள். சிலர் தோழமையுடன் தங்கள் உணர்வுகளைப் பதிவிட்டார்கள்.தனது பதிவின் மூலம் ,அதில் ஒரு பக்கத்தை எடுத்துப் புரட்டிப் போட்டார் தோழர் ரஹ்மத்துல்லாஹ் என்ற கடையநல்லூர் பென்சி. ஆம். வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்ற பின்னும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்துடனான தோழமை தொடர்ந்தது. 

1991 ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்ட தங்களது வட்டக்கிளைகளில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவுறுத்தியது. அதில் பலவற்றில் நான் பங்கு பெற்றேன்`. வாழ்த்துரை சிறப்புரை கருத்துரை என்று ஏதாவது ஒரு பெயரில் பேச அழைக்கப்பட்டேன். அதில் ஒன்று TNGEA வின் ஸ்ரீவைகுண்டம் வட்டக்கிளை மாநாடு. முதல் மாநாடு . மாநாடு , பேரணி , பொதுக்கூட்டம் என விரிவாக நடத்தினார்கள். முறையாக அழைப்பு வந்தது. நானும் ஒப்புக்கொண்டேன். 

எங்கள் சங்கத்தின் தென்காசி வட்டாரத்தில் பணிபுரிந்த தோழர் ஜி எஸ் கண்ணன் தென்திருப்பேரைக்காரர். அவர் தகவல் தெரிந்து என்னோடு ஸ்ரீவைகுண்டம் வருவதாகச் சொன்னார் . முதல்நாள் மாலையே திருநெல்வேலியில் சந்தித்தோம். இரவு தங்கிவிட்டு அதிகாலையில் ஸ்ரீவைகுண்டம் புறப்பட்டோம் . மாலையில் போனால் போதாதா என்று கேட்டேன். ஊரைப் பார்க்க வேண்டாமா என்றார் கண்ணன் . 

ஊருக்குள் போவதற்கு முன்னாலேயே ஒரு நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம் . இறங்கியதும் ஒரு கடையில் தேநீர் குடித்துவிட்டுப் புகை பிடித்தோம். "அப்பிடியே மெதுவா லெப்ட்ல மேல மரத்துல பாருங்க BK " என்றார் கண்ணன்.பார்த்தேன் . சிறிய கரிய சாக்குப்பைகளைக் காயப்போட்டது போல நூற்றுக்கணக்கான வவ்வால்கள் ... ஒன்றிரண்டு அசைந்துகொண்டும் , பல அசைவற்றும் ... ஒரு மரமல்ல .. வரிசையாக மரங்கள்.மலைத்துப்போகிற எண்ணிக்கையில் தொங்கிக்கொண்டு இருந்தன . நான் வியந்து மகிழ்ந்தேன் . "இவைகள் மாலையில் புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று , அங்குள்ள பழத் தோட்டங்களில் உணவருந்திவிட்டு அதிகாலைக்குள் திரும்பிவிடுவதாகவும்" சொன்னார் .இவைகளின் இருப்பைக் காப்பதற்காக இங்கு யாரும் பட்டாசுகளோ, வாண வேடிக்கைகளோ செய்வதில்லை என்றும் அவைகளை வேட்டையாட யாரையும் அனுமதிப்பதில்லை என்றும் சொன்னார் . என் மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டுக் கண்ணன் சொன்னார் . " நீங்க சந்தோசப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும்... இன்னும் இருக்கு காட்டுறேன்" என்று நடக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரம், கொஞ்ச தூரம் நடந்தோம். ஒரு அகலமான வீதியில் கொண்டுவந்து நிறுத்தினார். காலை மணி எட்டரை இருக்கும் . அந்தத் தெருவின் பெயர் எனக்கு நினைவில்லை . அப்போதும் கேட்டுவைத்துக் கொள்ளவில்லை . ஒரு டீக்கடை வாசலில் நின்று மீண்டுமொரு தேநீர் , மீண்டுமொரு சிகரெட் ...இங்க என்ன கண்ணா என்றேன். பொறுங்க வந்த உடனே பாக்க முடியுமா எல்லாத்தையும் என்றார் ... வெய்ட் பண்ணிப் பாருங்க என்றார் . நான் காத்திருந்தேன். பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு , அந்தத் தெருவின் கடைசிப்பக்கம் கைகாட்டி அங்க பாருங்க என்றார் கண்ணன். மடித்துக்கட்டிய வேஷ்டியும், கை வைத்த  பனியனுமாக ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். அதிலென்ன இருக்கிறது? என்பது போலப் பார்த்தேன்.பாருங்க என்றார். வந்தவர் மணியடித்துக்கொண்டே வர எங்கிருந்தோ பல பத்துக் காகங்கள் அவர் தலைக்குமேல் கரைந்தபடி வட்டமிட்டன . ஒன்றிரண்டு அவர் சைக்கிள் கேரியரில் , ஹாண்டில்பாரில் , அவர் தோளில் வந்து அமர்வதும் , பறப்பதும் , கரைவதும் காணக் கண் கோடி வேண்டும். மற்றப் பறவைகள் போலல்ல காகங்கள். அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை . "காக்கை நோக்கறியும்" என்றொரு பழமொழியே உண்டு. அவர் எந்தப் பெருமித உணர்ச்சியும் இல்லாமல் "சிவனே" என்று சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தார் . நாங்கள் தேநீர் அருந்திய கடைக்கு எதிரே தான் சைக்கிளைக் கொண்டுவந்து நிறுத்தினார். செல்லமாக அவைகளைக் கடிந்துகொண்டே , அவைகளோடு பேசிக்கொண்டே கடையைத் திறந்தார் . சேவுக்கடை . கடைக்குள் சென்று ஒரு பெரிய தட்டு நிறைய எல்லாம் கலந்து கொண்டுவந்து போட்டார். கடையில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் அதை இறைத்தார். அவைகள் உண்ண ஆரம்பித்தன. அவர் கடைக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டு தனது வேலைகளில் மூழ்கிப் போனார். நான் வியப்பும் மகிழ்ச்சியும் குதூகலமும் கொண்டேன்.என்னைப் பார்த்துக் கண்ணன் மகிழ்ந்தார் . என் வாழ்நாளில் அதுபோலக் கூட்டமாகக் காகங்கள் ஒரு மனிதனோடு நெருங்கி உறவாடியதை வேறு எப்போதும் எங்கும் பார்க்கக் கூடவில்லை .

காலை உணவுக்குப் பிறகு பெருமாள் கோவிலுக்குப் போனோம் . மிக மிக 
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூய்மையான திருக்கோவில். திருத்துழாய் மணம் கமழும் ஆலயம் . மூலவர் வைகுந்தநாதர் என்றழைக்கப்படும் கள்ளபிரான் . பாண்டியன் கிராமவங்கியின் முதல் சேர்மன் திரு டி ஆர்  கள்ளபிரான் . நான் கண்ணனைப் பார்த்தேன் . அவர்கள் குடும்பம் இந்தக் கோவிலுக்கு ரொம்ப நெருக்கமான குடும்பம் என்கிற தகவலைச் சொன்னார். 

அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றென்றும் , நவ திருப்பதிகளில் ஒன்று என்றும் சொன்னார். இடதுசாரி முற்போக்கு எண்ணமும் தீவிர தொழிற்சங்க ஈடுபாடும் கொண்ட கண்ணன் அந்தக் கோவில் குறித்த எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தார். அது ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருத்தலம் என்பதையும் , நம்மாழ்வாரின் நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களையும் பாடிக் காட்டினார். வியந்து போனேன். அந்தக் கோவிலில் எல்லோருக்கும் அவரைத் தெரிந்து இருந்தது. எப்படி கண்ணா என்று கேட்டபோது தனது ஊரான தென்திருப்பேரை நவ திருப்பதிகளில் ஒன்று எனவும் , எனவே எல்லோரையும் எல்லோரும் அறிந்திருப்பது வழமையான ஒன்றே என்றார். 

பிறகு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துப் போனார். அவரது நண்பரின் இல்லத்தில் ஓய்வு எடுத்து , மாலையில் நதி நீராடிவிட்டு பொதுக்கூட்டம் நடக்கிற இடத்துக்கு வந்தோம். பேரெழுச்சியுடன் ஊர்வலம் வந்து சேர்ந்தது . தோழர்கள் என்னை உற்சாகமாக வரவேற்றார்கள். முதலில் ஊர்வலம் பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் , பல விதத்தில் போராடி , பல காரணங்களைச் சொல்லி அனுமதி பெற்றதாகவும் சொன்னார்கள் . அதில் ஒரு காரணம் , ஒரு அகில இந்தியத் தலைவர் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் . அழைப்பிதழிலும் அகில இந்திய சம்மேளனம் என்று போட்டிருப்பதைக் காட்டினார்கள் . எல்லோரும் சிரித்துக்கொண்டோம். அகில இந்தியப் பொறுப்பில் இருந்தேன் என்றாலும், மற்றவர்களுக்கு இந்தியாவில் வேறு எங்கோ இருந்து வந்தவனைப் போல ஒரு தோற்றம் உருவாகி இருந்திருக்கலாம். 

எல்லாம் குறித்த நேரத்தில் நடத்திக்கொண்டு இருந்தார்கள் தோழர்கள். ஊர்வலம் வந்து சேர்ந்ததும் பொதுக்கூட்டம் துவங்கியது. முன்னதாக இருவர் மட்டுமே பேசினார்கள் . அளவாகப் பேசினார்கள் . தோழர் BK பேசவேண்டும் என்பதற்காக நாங்கள் அளவாகப் பேசுகிறோம் என்றார்கள் . சொன்னபடியே செய்தார்கள் . பல இடங்களில் உள்ளூர்க்காரர்கள் ஒன்பது பேர் பேசி , இரவு மணி பத்தாகி , வந்த கூட்டத்தில் பெரும்பகுதி போனபிறகு தான் பேச அழைப்பார்கள் . அப்படி எதுவும் நடக்காமல் மாலை ஆறு ஆறேகால் மணிக்கெல்லாம் பேச அழைத்துவிட்டார்கள் . நானும் மிகுந்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் ஆகி, மொத்தக் கூட்டமும் என்னோடு கைகோர்த்துக்கொண்டு இருக்கும்போது .... நான் பேசும் ஒலிபெருக்கி ஓசையையும் கடந்து , பள்ளிவாசலில் இருந்து மாலைநேர மஹரிப் தொழுகைக்கான பாங்கு ஒலிக்கும் ஓசை கேட்டது . ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பேச்சை நிறுத்தினேன் . "அழைப்பு முடியட்டும்" என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பி அமைதியாக அமர்ந்துகொண்டேன். கூட்டத்தில் அமர்ந்திருந்த தோழர்கள் பிரார்த்தனை செய்வதுபோல அமைதி காத்து அந்த நிமிடங்களைப் பேரழகு உடையதாக உயர்த்தினார்கள் . 

தொழுகைக்கான அழைப்பு முடிந்தது . நான் விட்டஇடத்தில் இருந்து பேச்சைத் துவக்கவில்லை . தோழர்களின் அழகான அமைதிகாத்த பண்பில் இருந்து பேச்சைத் துவங்கினேன் . பாப்ரி மசூதியை இடித்துவிட்டு இராமர் கோவில் கட்ட, மத வெறியர்கள் செங்கல் சேகரித்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை . இப்போது மிகப்பெரிய இடதுசாரி என்று தன்னைக்காட்டிக் கொண்டிருக்கும் ஒருவரே செங்கல் சேகரித்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை . மதச்சார்பின்மைக்கும் வளர்ச்சிக்கும் உள்ள உறவை , ஒற்றுமையின் விலைமதிப்பற்ற வலிமையை விரிவாக விளக்கிப் பேசினேன் .

அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தவைகளையும் இணைத்துப் பேசினேன் . பி வி நரசிம்ம ராவ் பிரதமராக ,மன்மோகன் சிங் நிதியமைச்சராக வந்த பட்ஜெட் அது . தாராளமயம் தன் வலது காலை எடுத்துவைத்த முதல் பட்ஜெட். அதைப்பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது ?

கூட்டம் முடிந்தது. தோழர் ரஹமதுல்லாஹ் பயணச் செலவுக்கு என்று இருநூறு ரூபாய் கொடுத்தார் . எதுக்கு இவ்வளவு என்று கேட்டபோது, புத்தகம் வாங்க வச்சுக்கங்க என்றார் . மறக்க முடியாத சொற்கள் . மறக்க முடியாத குரல். தோழர்கள் பாராட்டிக்கொண்டு இருக்கும்போதே கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் வந்தார் . மிகமிகத் தூய்மையாக , நல்ல சுகந்தமான அத்தர் மணத்தோடு வந்தார் . "நான் தொழுகைக்குப் போகும்போது பாத்தேன்... பாங்கு சத்தம் கேட்டதும் பேசுறத நிறுத்தீட்டுப் போய் உக்காந்துட்டீக உங்களுக்கு நன்றி சொல்லனும்னு இம்புட்டு நேரம் நின்னேன் ... நல்லாப் பேசுனீங்க ... எல்லா ஊருக்கும்போய் பேசுங்க .. அல்லாஹ் உங்களுக்குத் துணையா கூடவே இருப்பாரு" என்று இரண்டு கைகளையும் நீட்டினார் . நானோ வியர்த்து,நனைந்து, களைத்துப் போயிருந்தேன் .எனவே தயங்கினேன். அவர் பொருட்படுத்தவில்லை . மனமார இரண்டு கைகளாலும் என்னை முழுவதுமாக மார்போடு அரவணைத்தார் .அதே கணம் அவரது கைகள் என் முதுகில் செல்லமாகத் தட்டிக்கொண்டே இருந்தன . 


எனக்கு முன்னே , நான் பார்க்க பார்க்கக் கேட்கும் கைதட்டல்களை விட , அந்த முதுகில் தட்டிய கைகள் தான் , அந்தப் பேரோசை தான் என்னை இன்னும் பேசவைத்துக் கொண்டே இருக்கிறது ...






மேலும் நான்கு சிறு குறிப்புகள் :       

1. கூட்டம் முடிந்ததும் ஒரு நல்லகடைக்குச் சாப்பிட அழைத்துப் போனார்கள். கடையின் பெயர் நினைவில்லை . மண் பானைச் சமையல் என்ற போர்டு இருந்தது . சாப்பாடு அற்புதம்.

2 . கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரி , கூட்டம் முடிந்த பிறகு நீங்க எந்த ஊரு என்று கேட்டார் .. சாத்தூர் என்றேன் ... இல்ல நீங்க இப்ப எங்க இருந்து வந்தீங்கன்னு கேக்கேன் . என்றார் . சாத்தூர் என்றேன். சாத்தூர் ஆ .. சாத்தூர் ஆ என்று முனகிக்கொண்டே போனார் .

3. தோழர் ஜி எஸ் கண்ணன் இப்போது அமரராகி விட்டார் . அவருக்கு இந்த நினைவுக் குறிப்பை அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன் .

4.இறுதியாக , முக்கியமாக ... 

ஒரு சின்ன நோட்டீசைப் பத்திரமாக வைத்திருந்து ( 13 அக்டோபர் 1991) அதை ஒரு பதிவுக்குப் பின்னூட்டமாகப் போட்டு எல்லாவற்றையும் நினைவூட்டிய ஹாஜியார் ரஹமதுல்லாவுக்கு , ஒரு அன்பும் தோழமையும் மிக்க ஸ்பெஷல் ஸலாம். அல்ஹம்துலில்லாஹ்.  


-பாரதி கிருஷ்ணகுமார்.

2 comments:

Rathnavel Natarajan said...

ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு நாள் - TNGEA - AIRRBEA - PGBEA - தொழிற்சங்கப் பதிவென நினைத்தேன். எவ்வள்வு உயிரோட்டமான தகவல்கள். வவ்வால் இலங்கைக்குச் சென்று வருவது, ஒருவர் காகங்களுக்கு உணவு பகிர்வது, அல்லா கோவில் பாங்குச் சத்தத்துக்காக உரையை நிறுத்தி திரும்ப ஆரம்பித்தது, நன்றி சொல்ல வந்த இஸ்லாமிய பெரியவர், எங்கள் இனிய நண்பர் திரு கடையநல்லூர் பென்ஸி - அற்புதம் சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

கணேஷ்.எம். said...

எனது ஊர் என் நான் இன்றளவும் நினத்திருக்கும் ஸ்ரீவையின் வாசனையை மீண்டும் நுகர வைத்த தோழருக்கு நன்றி !!உங்களுக்கு மட்டும் எப்படி எல்லோர் மனதையும் உடனே3 தொட வாய்க்கிறது

Post a Comment