Courtesy: THE HINDU |
ஒரே கணத்தில், அவர் கை குலுக்கவில்லை என்பதும் , கைகளைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் ஒருசேரப் புத்தியில் மின்சாரமாகப் பாய்ந்தது .
அவர்கள் இப்போது இருவர் இல்லை . நால்வர் . ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடத்தில் விசாரித்தார்கள் . அவர்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது . செங்கோட்டையில் ஒரு பட்டிமண்டபம் . இந்தச் 'சமூகவிரோதிகள்' டிக்கெட் எடுக்காமல் அங்கு போய்ப் பேசிவிட்டு, மறுபடியும் டிக்கெட் எடுக்காமல் திரும்பி இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கொண்டார்கள் .
மதுரை வரைக்கும் வருமாறு சங்கரைக் கேட்டிருக்க வேண்டும் . அல்லது விருதுநகரில் இறங்கிப் பேருந்தில் வந்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் விருதுநகரில் இருந்து மதுரை வரைக்குமாவது டிக்கெட் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்க வேண்டும் . இதில் எதையும் செய்யவில்லை . ரயில்வே ஊழியர்கள் இரயிலில் போவது மாதிரி நாமும் போகமுடியும் என்று கருதியதும் மயங்கியதும் நான் செய்த பிழைகள் . எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னதால் நான் இதைப்பற்றி யோசிக்கத் தவறி இருந்தேன். அதுதான் என் வாழ்வில் நான் செய்த முதலும் கடைசியுமான தவறு . இப்போது பையன்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடக்கூடாது .பையன்களைக் குறை சொல்லுதற்கு எதுவும் இல்லை . அவர்கள் என்னை நம்பி என் அழைப்பை ஏற்று வந்தவர்கள் . நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் . விஷயம் வெளியில் தெரிந்தால் பெரும் மானக்கேடாகும் என்பதும், உள்ளுக்குள் பெரும் உறுத்தலாகிப் பெருகிக்கொண்டே போனது . பதட்டமின்றி இதை அணுகவேண்டும் என்றும் , பையன்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இதை முடிக்க வேண்டும் என்றும் தான் யோசித்துக்கொண்டே இருந்தேன் . அப்படி ஏதும் பாதிப்பு வந்தால் அதை நாம் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் செய்துகொண்டேன் .
அவர்கள் வழக்கமான டிக்கெட் பரிசோதகர்கள் இல்லையென்றும் , அவர்கள் எப்போதாவது வருகிற ஸ்பெஷல் ஸ்குவார்ட் என்றும் அவர்களே அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் .
ஏன் டிக்கெட் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு ," நாங்கள் சற்று தாமதமாக வந்தோம் . இரயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு விட்டதால் , அந்த அவசரத்தில் நாங்கள் டிக்கெட் எடுக்கவில்லை" என்றும் சொன்னோம் . இதைத் தான் எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தோம் .
அப்படியானால் போகும் போது எத்தனை டிக்கெட் எடுத்தீர்கள் ? மொத்தக் கட்டணம் எவ்வளவு ? ஒரு ஆளுக்குக் கட்டணம் எவ்வளவு ? என்று கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியவில்லை ... ஓ போகும்போதும் ட்ரைன் கிளம்பி , அவசரத்துல டிக்கெட் எடுக்க முடியாமப் போச்சா ? என்றார் அவர்களில் ஒருவர் .
" நீங்க போகும் போதும் டிக்கெட் எடுக்கல .. வரும் போதும் டிக்கெட் எடுக்கல ... சரிதான " என்றார் இன்னொருவர் .
"எக்கச்சக்கமா அபராதம் கட்டணும் .. இல்ல ஜெயிலுக்குப் போகணும் ரெண்டுல ஒன்னு தான் ... இன்னைக்கு ரிமாண்ட் பண்ணிட்டு நாளைக்கு மார்னிங் கோர்ட்ல ஆஜர் படுத்தீருவேன் ... ஆனா எல்லாமே ஸ்டுடண்ட்ஸ் ஆ இருக்கீங்க .. இதோட உங்க லைப் முடிஞ்சுரும் ... யாரும் எந்த வேலைக்கும் போகமுடியாது ... நான் நெனச்சா எவனும் இதுக்கு மேல படிக்கவே முடியாது " என்று உரத்த குரலில் மிரட்ட ஆரம்பித்தார் .
நான் மெதுவாகப் பையன்களைப் பார்த்தேன் . எவனும் எதற்கும் அஞ்சியது போலத் தடயம் கூட இல்லை . சொல்லப்போனால் சௌபா உற்சாகமாக இருந்தான் . எங்கள் தரப்பில் இருந்து ஒன்றும் பெரிதாக அசைவில்லை என்று தெரிந்துகொண்டோ , அல்லது வேறு உள் நோக்கத்திலோ அவர் வேறு ஒரு யோசனையைச் சொன்னார் .
" உங்களைப் பாத்தா நல்ல, கெட்டிக்காரப் பையங்கன்னு தெரியுது ... பட்டிமண்டபம் எல்லாம் பேசுறீங்கன்னா அறிவான பையன்களாத்தான் இருக்கணும் ... நீங்க இந்தத் தப்ப செய்யுற பையங்க மாதிரியும் இல்ல .. அதனால உங்க எல்லாத்தையும் விட்டுர்றேன் . நீங்க இப்பவே போகலாம் . உங்க மேல எந்தக் கேசும் போட மாட்டோம் .
எல்லோருக்கும் பசிக்கும் .. நானே கூட்டிட்டுப்போய் சாப்பாடு வாங்கித் தந்துட்டு , எங்க ஜீப்புலயே உங்க எல்லாத்தையும் வீட்டுல கொண்டுபோய் இறக்கி விட்டுர்றேன் " என்றார் .
எனக்கு அவரது இந்தத் திடீர் மாற்றம் சந்தோசம் தரவில்லை , மாறாகச் சந்தேகமே வந்தது . ஆனாலும் எப்படியாவது தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் அவரைப் பார்த்து மெதுவாக "சார்" என்றேன் .
"ஓ கே வா?"என்றார் .
"சொல்லுங்க சார்" என்றேன்.
"ஏன்னா எம் பையன் வயசு தான் உங்களுக்கும் ... உங்களுக்குக் கெடுதல் பண்ண மனசு வரல ... ஒரு தடவ கேஸ் புக் ஆகி , கோர்ட்ல கூண்டுல ஏறி நின்னு பெனால்டி கட்டிட்டா அவ்ளோ தான் ... லைப் ஏ முடிஞ்சுது " என்றார் .
"சொல்லுங்க சார்" என்றேன் மீண்டும் ...
அவர் புன்னகைத்தவாறே எனக்கு அருகில் வந்தமர்ந்து இரகசியம் சொல்லுகிற குரலில், சொல்ல ஆரம்பித்தார் ...
அப்புறம் சொல்லுகிறேன்...
-பாரதி கிருஷ்ணகுமார்.
1 comment:
ஆஹா. அருமை. எதிர்பார்க்கிறேன். நன்றி சார்
Post a Comment