Monday, May 18, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 15


கலைச்செல்வி: படித்துறை
(திருப்புவனம் அல்ல) 

அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.

நானும் சௌபாவும் குணசேகரும் ஒன்றாக இருந்தோம்  . கொஞ்சம் தயங்கித் தாமதித்துக் கரையேறினோம்  . அப்பாவும் நெருங்கிய உறவினர்களும் கொஞ்சம் முன்னால் நடக்க, தலைகள் மறைந்ததும் எங்களைப் படித்துறைப் படிக்கட்டுகளில் உட்காரச் சொன்னான் குணசேகர். கொஞ்சம் நடுத்தர வயதில் இருந்த அந்தப் பிராமணரின் கைகளைப் பிடித்து "நீரும் உக்காரும் சேர்ந்து போகலாம் "என்று அவரையும் உட்காரவைத்தான் . அவர் அச்சத்துடன் அமைதியாக அமர்ந்து கொண்டார் .அதுபோல எதையாவது செய்துகொண்டே இருப்பது அவனுக்குப் பழக்கம்.  நீங்கள் கற்பனை கூடச் செய்துவிட முடியாத ஒன்றை , இயல்பாகச் செய்வது அவனது பண்புகளில் ஒன்று. எதுக்கு? என்றேன் நான் . அந்த ஆளு இங்க இருந்தா நம்மளத் தேட மாட்டாங்க என்று அவருக்கும் கேட்கிற சத்தத்தில் சொன்னான் . சிகரெட் பாக்கெட்டைத் திறந்து,  எனக்கும் அவனுக்கும் சேர்த்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்து , இரண்டையும் தன் வாயில் வைத்துப் பற்ற வைத்தான் . சௌபா இந்தக் காட்சியை சபையில் பலமுறை  பார்த்திருக்கிறான். அந்த பிராமணர் திகைத்துப் போனார் . அக்கம்பக்கம் இருந்த ஒன்றிரண்டு பேர்களும் திகைத்து, மெல்லிதாகச் சிரித்துக்கொண்டே போனார்கள் . பற்ற வைத்ததும் ஒன்றை எடுத்து எனக்குத் தந்தான் . நாங்கள் இருவரும் புகைக்க ஆரம்பித்தோம் . ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் அந்தப் பிராமணரிடத்திலும் , சிகரெட் பாக்கெட்டை நீட்டினான் . அவர் இரண்டு கரங்களையும் குவித்துத் தலைதாழ்த்திக் குணசேகரைக் கும்பிட்டார் . சேகர் அதேபோல் திரும்பக் கும்பிட்டான் . அதில் கேலியோ , பகடியோ எதுவும் இல்லை . நான் ஆழ்ந்து புகைபிடிக்கத் தொடங்கி இருந்தேன். ஆறு கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது . என் மனம் போலவே ...

" நான் சொல்றேன்னு தப்ப நெனச்சுக்காதீங்கோ ... உங்க தாயாருக்கு நல்ல கொடுப்பினை இருக்கு ... புண்ணியாத்மா " என்றார் அந்தப் பிராமணர். 

அம்மா மாபெரும் புண்ணியாத்மா என்பதை நானறிவேன் . யார் எப்போது வந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வயிறார உணவு படைத்தவள் அம்மா . சமைப்பதில் மட்டுமல்ல . பக்கத்தில் நின்று பார்த்துப்பார்த்துப் பரிமாறுவதில் அம்மா நுட்பமான மனுஷி . குறைவாகக் கிள்ளிக் கிள்ளி  வைக்காமல், ரொம்பத் தள்ளித் தள்ளி முகத்தில் அடித்து விடாமல் , பரிமாறுகிற கலை அவள் கைகள் மட்டுமே அறிந்த அனுபவ நுட்பம் . நேற்றுக் கூட அனுப்பானடியில் இருந்து கீழத்தெரு முழுவதும்  திரண்டு அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தது . கீழத்தெரு ஊர்த்தலைவர் இருளாண்டி , அம்மாவின் உடலுக்கு முன்னால் இரண்டு கைகளையும் நீட்டி , " அன்னலெட்சுமி அன்னலெட்சுமி " என்று கூவி அரற்றி அழுதது கண் முன்னே வந்தது . இந்தப் பிராமணர் என்ன சொல்லுகிறார் என்று அறிய அவர் முகம் பார்த்தேன் . சௌபா எனக்கு மிகஅருகில் நெருங்கி அமர்ந்து அவர் சொல்லுவதைக் கேட்கத் தொடங்கினான்.

அவர் தொடர்ந்தார் ," நல்ல வசதி இருக்கிறவா அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போய் கங்கையில கரைப்பா ... இல்ல இப்படியே ராமேஸ்வரம் போய் அக்கினி தீர்த்தக் கடல்ல கரைப்பா... ரொம்ப ஏழைப்பட்டவா  , மயானத்துக்குப் பக்கத்துலயே ஏதாவது குளம் குட்டைன்னு பாத்துக் கரைச்சுப்பா ... நம்மள மாதிரி மிடில் கிளாஸ்ல இருக்குறவா , கொஞ்சம் நுட்பமானவா இங்க தான் வருவா ... எத்தனை தூரம் வைகை ஓடி வர்றா ... ஆனா இங்க கரைச்சாத்தான் விஷேசம் " என்று நிறுத்தினார் . நாங்கள் மூவரும் அவரையே பார்த்தோம் .

"இந்த எடத்துக்கு என்ன பேரு ? திருப்புவனம் ... ஒரு காலத்துல இந்த இடம் எல்லாம் பெரிய காடு . பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து இருந்த படித்துறைன்னு எங்க பாட்டனார் சொல்லி இருக்கார் .. இப்ப சும்மா பேருக்கு நாலு மரம் நிக்குது , வனம் ன்னாலே காடு தான ... அதுலயும் வெறும் வனமில்ல கேட்டுக்கோங்க .. திருப்புவனம் ... அதாவது இந்த உலகத்துக்கு வந்த எல்லா ஜீவனும் ஒரு நாள் பகவான் கிட்டத் திரும்பப் போய்டறது. அது தானே நியதி .. ஆனா பாருங்கோ .. சில ஆத்மாக்கள் அந்தக் கர்ம காலம் முடியாம பூமியில அலஞ்சுட்டுத் தான் , அப்புறமா பகவான்கிட்ட போறது ... அது சாந்தி ஆகாமத் திரிஞ்சுட்டுத்தான் போகும் . அப்படித் திரியப்பிடாதுன்னு தான் இந்த சாஸ்திரம் சடங்கு எல்லாம் நம்மப் பெரியவா உண்டு பண்ணி இருக்கா ... இதுல ஒரு விஷேசம் என்னன்னா " என்று நிறுத்தினார் . 

சேகர் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பதட்டம்  எனக்கு இருந்தது . ஏனெனில்  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது எங்கள் எல்லோருக்குமான அனுபவம் . அந்த பிராமணருக்கு நல்லநேரம் . வழக்கத்திற்கு மாறான அமைதியோடு சேகர் இருந்தான் .

"இந்த இடம் தான் விஷேசம் .. சாதாரண வனமில்லே .. திருப்புவனம் ... இந்த லோகத்துக்கு வர்ற எல்லா ஆத்மாக்களையும் திருப்பி அனுப்புற வனம் .. அதுனாலதான் இந்த எடத்துக்கு திருப்புவனம் னு பேரு .. அது மட்டுமில்ல . இந்த எடத்தப் புஷ்பவனத்துக் காசின்னும் சொல்லுவா ... இங்க அஸ்தியைக் கரைச்சுட்டா அந்த ஆத்மா அப்பவே பகவான்கிட்ட போயிடுறது ... திரும்பாது அலையாது .. சாந்தி ஆயுடறது " என்றபடியே எழுந்து கொண்டார் . " வாங்கோ போலாம் " என்றபடியே எங்களுக்காகக் காத்திராமல் நடந்துபோக ஆரம்பித்தார் . 

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது . நான் இந்த வார்த்தைகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை . நான் சௌபாவைத் திரும்பிப் பார்த்தேன் . அவனது கண்களில் ஒரு சிறிய கலக்கம் இருந்தது . 

நான் சௌபாவிடமும் , சேகரிடமும் சொன்னேன் .

என்ன சொன்னேன் ?


அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார். 


1 comment:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 15 - "இந்த இடம் தான் விஷேசம் .. சாதாரண வனமில்லே .. திருப்புவனம் ... இந்த லோகத்துக்கு வர்ற எல்லா ஆத்மாக்களையும் திருப்பி அனுப்புற வனம் .. அதுனாலதான் இந்த எடத்துக்கு திருப்புவனம் னு பேரு .. அது மட்டுமில்ல . இந்த எடத்தப் புஷ்பவனத்துக் காசின்னும் சொல்லுவா ... இங்க அஸ்தியைக் கரைச்சுட்டா அந்த ஆத்மா அப்பவே பகவான்கிட்ட போயிடுறது ... திரும்பாது அலையாது .. சாந்தி ஆயுடறது " என்றபடியே எழுந்து கொண்டார் . " வாங்கோ போலாம் " என்றபடியே எங்களுக்காகக் காத்திராமல் நடந்துபோக ஆரம்பித்தார் . - மிகவும் நெகிழ வைத்த செய்தி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment