Wednesday, May 6, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 10






அவர் புன்னகைத்தவாறே எனக்கு அருகில் வந்தமர்ந்து இரகசியம் சொல்லுகிற குரலில், சொல்ல ஆரம்பித்தார் .

" நல்ல குடும்பத்துப் பசங்களாத் தெரியிறீங்க சமயத்துல சில ஜட்ஜுங்க அபராதமே போடாம நேரா ரெண்டு மாசம் ஜெயில்னு போட்டுருவானுங்க ... எதுவேணா நடக்கும் . உங்களால மொத்தக் குடும்பத்துக்கும் கெட்ட பேரு ... அதனால "... 


சொல்லுங்க சார் என்று மீண்டும் பணிவாகக் கேட்டேன் .என் முன்கோபத்தால் இருக்கிற நிலைமையைச் சிறிது  கூடச்  சீர்குலைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.


கடந்த காலங்களில் முன் கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன். நிறையப்  பெற்றும் இருக்கிறேன் .பல இடங்களில் இந்தக் கோபம் தான் சுயமரியாதை அடிபடாமல் காத்திருக்கிறது . எனவே எனது கோபத்தின் மீது எனக்கு ஒரு மதிப்பு இருந்தது . யாராவது கால ஓங்கி  மிதிச்சுட்டா, தள்ளுய்யா என்று சொல்லுவது கோபமா என்று கோபப்பட்டிருக்கிறேன் . கோபக்காரன் என்கிற அவப்பெயர் எனக்கு ஏற்கெனவே இருந்தது . அதைவிட மோசமாகக், கோபம் வந்ததும் முட்டைக் கண்கள் சிவந்து காட்டிக் கொடுத்துவிடும் . கோபத்தை மறைக்கும் திறமையும் ஆற்றலும் இல்லாதிருந்தது . அவர் பேசப்பேச எனக்குக் கோபம் தான் வந்தது . சொல்லுங்க சார் என்றேன் மீண்டும் பொய்யான பணிவுடன் ...


அடிப்படையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது குற்றம் . சட்டப்படி நாம் தண்டனைக்குரியவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இருக்கவில்லை .எத்தனை நட்பும் தோழமையும் இருந்தபோதும், பயணச்சீட்டு வேண்டுமென்று கேட்டுப் பெற்று இருக்க வேண்டும். எல்லாம் என் தவறு ; என் குற்றம் . 


தண்டிக்கப்படுவது குறித்தோ , சிறைச்சாலைக்குப் போவது பற்றியோ எனக்கு எந்த மனத்தடையும் இல்லை . என் கவலையெல்லாம் என்னை நம்பிவந்த மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் . அதற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. எனவே பொறுமை பொறுமை என்று உள்ளுக்குள் நானே பெருங்குரலில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
அவர் என் மனதைப் படித்துக்கொண்டே இருந்தார் .



நான் அவரைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். குற்றங்களைத் தடுப்பதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தனக்கு மட்டுமேயான கடமை என்கிற அதீத உணர்வு அவருக்கு உண்டாகி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதன் விபரீத நீட்சியாக எல்லோரையும் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் , நடத்துவதும் அவரது இயல்பாகவே மாறி இருந்தது. அது அவரது முகத்தின் தசைகளைப் பாறாங்கற்களாக மாற்றி இருந்தது. அவரது கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே சுழன்று கொண்டிருந்தன. தான் மிகுந்த நேர்மையானவன் என்பதை எல்லோரும் உணரவேண்டும், தனக்கு முன்பே அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்னும் பேரவா அவருக்குள் தளும்பிக்கொண்டே இருந்ததை என்னால் உணர முடிந்தது. நன்றாக மழுங்கச் சிரைத்து இருந்தார். அவரது நாசிக்கும் மேல் உதட்டுக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு சதசதப்பான அட்டைப் பூச்சியின் அருவருப்போடு மின்னிக்கொண்டிருந்தது . அவரது இரண்டு காது மடல்களிலும் கரேலென்று ரோமங்கள் அடர்ந்திருந்தன.உண்மையில் அவருக்குப் பெரிய மீசை வைக்கும் விருப்பம் இருந்திருக்க வேண்டும் . ஆனால் அவரது சாதியோ அல்லது குடும்பமோ அதற்குத் தடையாக இருந்திருக்க வேண்டும். அந்தத் தடையை மீறித் தனக்கொரு மீசை வைத்துக் கொள்ளும் துணிவு இல்லாதவராகவே அவர் இருந்தார் . எனவே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அவர் தனது இடது கையால் அடர்ந்த தனது இடது புருவத்தின் நுனியைத் திருகிகொண்டே இருந்தார். என் 22 வயதிற்கு , இப்படியான ஒரு மனிதனை , ஒரு முகத்தை நான் அன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்த்தேன். அதற்குப் பிறகான வாழ்வில் அது போல நிறைய முகங்களை நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். இப்படியான ஆட்கள் தங்கள் விசுவாசத்தைத்,தங்களுக்கு மேலிருக்கும் ஆட்களிடம் நிரூபிக்க எந்தக் குற்றத்தையும் , குற்ற உணர்ச்சி இல்லாமல் , அதையும் கடமை போலக் கருதிச் செயல்படுகிறவர்கள். எனக்கு மட்டும் ஓவியம் வரையும் திறன் இருந்தால், இப்போது கூட , வஞ்சகத்தை நேர்மையாகக் காட்டமுயன்ற அந்த முகத்தை வரைந்து விட முடியும். அது ஒரு மறந்து போகிற முகமல்ல. 

அவர்  பேச ஆரம்பித்தார் . கண்ணோடு கண் பார்க்காமல் , நடுவாந்திரமாக எங்கோ பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் . " இப்பவே உன்னையும் உன்னோட ப்ரெண்ட்ஸயும் அனுப்பிடறேன். எந்தக் கேசும் போடல. உங்களுக்கு இப்பவே சாப்பாடும் வாங்கித்தரச் சொல்லுறேன் ... என்ன சம்மதமா?" 
நான் அதற்குப்பிறகு அவர் என்ன சொல்லுவார் என்பதை ஊகிக்க முடியாமல் தவித்தேன். 
இந்த டிக்கெட் வாங்காம போற புத்தி உங்கள்ள யாருக்குமே இருக்காதுன்னு எனக்குத் தெரியும். என் கண்ணுலபடாம பகவான் உங்களை அனுப்பி இருக்கணும் . அவர் என்னையும் சோதிக்கிறார் .. உங்களையும் சோதிக்கிறார் ... எதுக்கு வள வள ன்னு பேசிகிட்டே இருக்கணும். நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சா போதும். மதுரைல இருந்து செங்கோட்டைக்கும் , செங்கோட்டைல இருந்து மதுரைக்கும் டிக்கெட் இல்லாம பரமசிவம் தான் கூட்டிட்டுப் போனார்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு , நீங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க .. அந்த விருதுநகர் சங்கரும் எங்க கூட இருந்தார்னு சேத்து எழுதுவோம் . எல்லாமே உண்மை தான .. பொய் சொல்லலியே... என்ன நடந்ததோ அத எழுதிக்குடுங்க ... நீங்களே எழுதுங்க .. all are poets all are speakers and all are brilliant boys...  என்ன நான் சொல்லுறது" என்று தன் சகாக்களைப் பார்த்தார் . கோழியைத் தன்னோடு நட்பாக விளையாடக் கூப்பிடும் நரியின் தந்திரம்.



அதில் ஒருவர், " yes ... thats the truth ... எப்பவுமே உண்மையப் பேசீட்டா .. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று வழிமொழிந்தார். 

நான் தயங்காமல், தடுமாற்றமில்லாமல் சொன்னேன். " சார் .. நாங்க டிக்கெட் எடுக்காததுக்கும் அவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது . நாங்க அவசரத்துல எடுக்கல ... நீங்க கேக்குற மாதிரி எல்லாம் எந்தக் காலத்துலயும் எழுத முடியாது. அவங்க எங்களுக்கு டிக்கெட்டுக்கு சாப்பாட்டுக்கு ன்னு எல்லாத்துக்கும் பணம் குடுத்தாங்க ... அவங்களை இதுல சம்பந்தப் படுத்தாதீங்க நீங்க சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க" என்றேன் . என்னை மீறி என் கோபம் என் கண்களின் வழியே கசிந்தது. 

மறு நொடியே " அப்ப அபராதம் கட்டுங்க இல்ல ஜெயிலுக்குப் போங்க .. எனக்கு என்ன? ஏதோ படிச்ச பசங்க.. உதவி செய்யலாமேன்னு சொன்னேன் ... நீ அவ்வளவு ரோஷக்காரன்னா காசைக் கட்டிட்டுப் போ "

காசைக் கட்டுனதும் விட்டுருவீங்களா?

அப்புறம் ... உங்களை வச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணப் போறோம் ?

எவ்வளவு கட்டணும்?

இந்தா ... இப்ப சொல்லுறேன் ... பில் புக் போல இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எண்களாக எழுதினார் .அவருடன் இருந்த ஒருவரிடம் எனக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசினார் . இரண்டு பேரும் வாக்குவாதம் செய்து கொண்டார்கள் . மீண்டும் ஏதோ எண்களாக எழுதினார். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன் . எனக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் . இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .
அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?

அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார்    

1 comment:

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 10 - அடிப்படையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது குற்றம் . சட்டப்படி நாம் தண்டனைக்குரியவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இருக்கவில்லை .எத்தனை நட்பும் தோழமையும் இருந்தபோதும், பயணச்சீட்டு வேண்டுமென்று கேட்டுப் பெற்று இருக்க வேண்டும். எல்லாம் என் தவறு ; என் குற்றம் . நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சா போதும். மதுரைல இருந்து செங்கோட்டைக்கும் , செங்கோட்டைல இருந்து மதுரைக்கும் டிக்கெட் இல்லாம பரமசிவம் தான் கூட்டிட்டுப் போனார்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு , நீங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க .. அந்த விருதுநகர் சங்கரும் எங்க கூட இருந்தார்னு சேத்து எழுதுவோம் . எல்லாமே உண்மை தான .. பொய் சொல்லலியே... என்ன நடந்ததோ அத எழுதிக்குடுங்க ...-நரித்தனம் - எனக்கும் இதே மாதிரி BSNL இல் ஏற்பட்டது - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment