அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு நான் எப்போது வீட்டுக்குப் போனேன் ?
சௌபா வீட்டிற்கு எப்படிப் போகவேண்டும் ?
மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவிற்கு அழகர்கோவிலில் இருந்து வரும் கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டோமா மதுரைக்கு வந்தோமா என்று வந்துவிட மாட்டார் . வழிநெடுக பலநூறு இடங்களில் இறங்கி நின்று மாலை மரியாதை வாங்கிகொண்டு தான் வருவார் . அப்படிக் கள்ளழகர் நின்று இருந்து போகும் இடங்களுக்கு மண்டகப்படி என்று பெயர். மைசூர் மண்டகப்படி, தளவாய் மண்டகப்படி என்று அதிலும் பலதரப்பட்ட மண்டகப்படிகள் உண்டு.அஃதே போல நாங்கள்,எந்தப் பாதையில் நடந்து வந்தாலும் , வழிநெடுக மண்டகப்படிகள் இருக்கும். மதுரையில் எனது வீட்டுக்குப் போகிற பாதையிலும் ஏராளம் மண்டகப்படிகள் . மண்டகப்படிகளுக்கு ஏற்ப மாலை மரியாதை மாறிக்கொண்டே இருக்கும்.உபசரிப்பும், உற்சாகமும் எல்லா மண்டகப்படிகளுக்கும் பொது நடைமுறை. அரசியல் சினிமா ஆன்மிகம் இலக்கியம் என்று வகைவகையான மண்டகப்படிகள்.இரவெல்லாம் தங்கி இருந்து உரையாடி, இளைப்பாறி அதிகாலைத் தேநீரோடு அனுப்பி வைக்கும் மண்டபப்படிகளும் உண்டு ...
சௌபா அப்போதே இந்திய மாணவர் சங்க உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.நான் ஜனதா கட்சி.பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரசில் இருந்து ஜனதாவுக்கு வந்தவன்.கட்சி மாறி வரவில்லை.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தான் ஜனதா கட்சியாக ஆகியிருந்தது.அந்த அரசியல் வரலாறு பிறகு பேசிக்கொள்ளலாம்.
கையில் காசுபணம் புழக்கமாக இருந்தால் நகரப்பேருந்தில் ஏறி வருவோம் . ஆனால் எந்தப் பக்கம் வந்தாலும் ஒரு நடை நடந்து தான் ஆகணும். ஆனையூர் ,குலமங்கலம் பேருந்துகளில் ஏறினால் வெங்கிடாசலபதி திரையரங்க வாசலில் இறங்கி கிழக்காக நடந்தால் மீனாம்பாள்புரம். நரிமேட்டில் இறங்கி வந்தால் சின்ன சொக்கிகுளம் வழியாக, மேற்கு நோக்கி நடக்க மீனாம்பாள்புரம்.
செல்லூர் கண்மாய் , தாமரைக் கண்மாய் , பீபிகுளம் கண்மாய் என்று பெரும் நீர்நிலைகள் . வயக்காடுகள். மாலை ஆறுமணியானால் அமைதியும் குளிரும் அரவணைத்துக் கொள்ளுகிற பசுமை.
எப்போது போனாலும் அன்போடு உபசரிக்கற பண்பு சௌபாவின் தாயாருக்கு உண்டு.கையில் காசிருந்தால் வீட்டுக்குச் சாப்பிட வரமாட்டார்கள் என்பது அவர்கள் அறிந்த உண்மை. சாப்பிடக் கடைதேடிப் போவதில் எங்கள் அளவுக்குத் தீவிரமாக உழைத்தவர்கள் யாரும் இல்லை . பசிக்கும் , கைப் பணத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த கடையைத் தேர்வு செய்து சாப்பிடப்போவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிட்ட கடைகள் , உணவு வகைகள் பற்றி எழுதினால் , அது தனிப் புத்தகம். அதிலும் மதுரையின் தனிச் சிறப்பு இரவுநேரக் கடைகள். எத்தனை வகைவகையான உணவுகள். உறங்காத நகரம் என்று அழைத்தது துளிக்கூட பொய்யில்லை. இப்போது போனால் அப்படியில்லை. இரவு பதினோரு மணிக்குள் போலீஸ்காரர்கள் மதுரையை லத்தியால் அடித்து உறங்கவைத்து விடுகிறார்கள். இதை மாநிலம் முழுவதும் போலீஸ்காரர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள் .அதிலும் ,ஒரு ஜீப்பில் ஒருவர் அமர்ந்துகொண்டு கடை அல்லது கடைக்காரரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருமையில் மிரட்டியபடி "ஊர்வலம்" வர, திருடர்கள் போலக் கடைக்காரர்கள் விளக்குகளை அணைத்துக் கடைகளை மூடி .. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அழகைக் காணச் சகிக்கவில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து, பின்னிரவில் இறங்கி வந்தால், போரூர் வரைக் குடிக்கத் தண்ணீர் தர ஒரு கடை கூட இல்லை. இரவு குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரியது என்று உலகின் இரண்டாவது பெரியகாவல்துறை கருதுகிறது. எனக்கு இது வியப்பளிக்கிறது . இதுபற்றி வர்த்தக சங்கங்களும் , வியாபாரிகளின் சங்கங்களும் , இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் மௌனம் சாதிப்பது இன்னும் கூடுதல் வியப்பு .இதனால் குற்றங்கள் குறைந்து போயிருப்பதாகவும் கருத இடமில்லை. சங்கிலி அறுக்கிற சகோதரர்கள் இரவு வரை காத்திருப்பதில்லை. இரவு நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்தால், குற்றங்கள் குறையும் என்பதுதானே இயற்கையான நடைமுறை . சிறு குறு தொழில் செய்து பிழைக்கிற சாலையோர வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு என்ன சட்டம் ஒழுங்கு? எல்லோரும் உறங்கப்போய் விட்டால் குற்றம் செய்கிறவர்களுக்குக் கொண்டாட்டம் தானே? இதில் யாருக்கும் யாருக்கும் கூட்டணி ? யாரை யார் காப்பாற்றுகிறார்கள்? கடைகள் திறந்திருக்க , வணிகம் நடக்க , பொதுமக்கள் புழங்க இருக்கும் போது தானே சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வேலை? எல்லாவற்றையும் மூடிவிட்டால் என்ன வேலை ? யாருக்கு வேலை?
இப்படித்தான்... எதையோ சொல்லவந்து எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன்.நீங்களும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.பிறகு சொல்ல வந்ததை எப்போது சொல்லி முடிப்பது?
சௌபா வீடு சின்ன ஓட்டு வீடு . நாங்கள் எப்போதும் படுப்பது சக்கரைச் செட்டியார் படிப்பகம் தான் . இரவெல்லாம் பாட்டு , பேச்சு , படிப்பு என்றுதான் கழியும். சந்திக்கிற நாட்களில் இரவு மூன்று மணிக்கு படுக்கப் போனால் அது சீக்கிரம் படுத்த நாளாக இருக்கும் .
காளியப்பன் என்றொரு தோழர் நன்கு பாடுவார். நானும் பாடுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சொல்லி விடத்தான் வேண்டும். சைக்கிள் கடை செல்வராஜ் வந்து சேர்ந்து கொள்ளுவார். எப்படியும் நாலைந்து பேர் கூடி விடுவார்கள். இரண்டு மூன்று மணிக்கொருதரம்,பத்து நிமிடம் சைக்கிளில் சுற்றினால் சூடான இட்லி, தோசை , பொங்கல்,ஆம்லெட், தேநீர் ,பருத்திப்பால்,சிகரெட் என்று எல்லாம் கிடைக்கும். இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது . திங்கிற சோற்றில் மண்ணள்ளிப்போட்டு விட்டு மக்களை ஆளுகிறார்களாம்...!
எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.
அந்தப் பகலாகிய இரவுகளில், ஒரு இரவு ஒருவரைச் சந்திக்க என்னை அழைத்துப் போனான்.
அவருடனான சந்திப்பு என் வாழ்க்கையில் மிக மிக மதிப்பும் சிறப்பும் மிக்கது.
அவர்... ?
அப்புறம் சொல்லுகிறேன்...
-பாரதி கிருஷ்ணகுமார்.
2 comments:
சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 12 - சாப்பிடக் கடைதேடிப் போவதில் எங்கள் அளவுக்குத் தீவிரமாக உழைத்தவர்கள் யாரும் இல்லை . பசிக்கும் , கைப் பணத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த கடையைத் தேர்வு செய்து சாப்பிடப்போவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிட்ட கடைகள் , உணவு வகைகள் பற்றி எழுதினால் , அது தனிப் புத்தகம். அதிலும் மதுரையின் தனிச் சிறப்பு இரவுநேரக் கடைகள். எத்தனை வகைவகையான உணவுகள். உறங்காத நகரம் என்று அழைத்தது துளிக்கூட பொய்யில்லை. - அருமை சார். எங்கள் அப்பா சொல்வார்கள். உண்டவன் உரம் செய்வான் என்பார்கள். நன்கு சாப்பிடுபவன் நன்கு வேலை செய்வான் என்பார்கள் - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடருங்கள் சார். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 12 - சாப்பிடக் கடைதேடிப் போவதில் எங்கள் அளவுக்குத் தீவிரமாக உழைத்தவர்கள் யாரும் இல்லை . பசிக்கும் , கைப் பணத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த கடையைத் தேர்வு செய்து சாப்பிடப்போவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிட்ட கடைகள் , உணவு வகைகள் பற்றி எழுதினால் , அது தனிப் புத்தகம். அதிலும் மதுரையின் தனிச் சிறப்பு இரவுநேரக் கடைகள். எத்தனை வகைவகையான உணவுகள். உறங்காத நகரம் என்று அழைத்தது துளிக்கூட பொய்யில்லை. - அருமை சார். எங்கள் அப்பா சொல்வார்கள். உண்டவன் உரம் செய்வான் என்பார்கள். நன்கு சாப்பிடுபவன் நன்கு வேலை செய்வான் என்பார்கள் - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடருங்கள் சார். நன்றி சார் திரு Bharathi Krishnakumar
Post a Comment